தியாக‌ங்க‌ளின் மேல் ஏறி நிற்கும் வெற்றிக‌ள்!

 

வாசிப்பு என‌க்கு உன்ன‌த‌மான‌ ஒரு நிக‌ழ்வு என்ற‌ த‌த்துவ‌த்தோடெல்லாம் அறிமுக‌மாக‌வில்லை. மொழியின் சுவையே நான் புத்த‌க‌ங்க‌ளைத் தேடிப்போக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அதிர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌ என‌க்கு லுனாஸில் இருந்த‌ புத்த‌க‌க் க‌டையிலேயே வேலை கிடைக்க‌ சாண்டில்ய‌ன், க‌ல்கி, அகில‌ன், நா.பார்த்த‌சார‌தி, மு.வ‌ர‌த‌ராச‌ன், த‌மிழ்வாண‌ன், சுஜாதா, பால‌குமார‌ன், ஜெய‌காந்த‌ன், சிவ‌ச‌ங்க‌ரி, வாஸ‌ந்தி, வைர‌முத்து போன்றோரின் நாவ‌ல்க‌ளைத் தொட‌ர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த‌து. நான் ப‌ணியாற்றிய‌ நான்கு மாத‌க் கால‌த்தில் நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நாவ‌ல்க‌ளை எந்த‌ப் ப‌ட‌ப‌ட‌ப்பும் இல்லாம‌ல் ப‌டித்து முடித்திருந்தேன். புத்த‌க‌க் க‌டை ந‌ஷ்ட‌த்தில் மூட‌ப்ப‌ட்ட‌தும் நூல்க‌ள் வாங்கும் வாய்ப்பு அச்சிற்றூரில் கிடைக்காம‌ல் போன‌து.

பின்னாளில் ஆசிரிய‌ர் ப‌யிற்சி க‌ல்லூரியில் ப‌டித்த‌ மூன்று ஆண்டுக‌ளும் பெரும் வ‌ர‌ட்சி. க‌ற்ற‌ல் க‌ற்பித்த‌லுக்கான‌ நூல்க‌ள் ம‌ட்டும் அங்கு இருந்த‌ன‌வே த‌விர‌ நாவ‌ல்க‌ள் என்று பெரிதாக‌ எதுவும் இல்லை. நான் ப‌டித்து முடித்திருந்த‌ மு.வ‌ர‌த‌ராச‌ன், க‌ல்கி அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த‌ன‌ர். ர‌ம‌ணி ச‌ந்திர‌னை 3 புத்த‌க‌ங்க‌ள் ப‌டித்த‌தோடு அலுத்துவிட்ட‌து. என‌து அறைத்தோழ‌ர் ச‌ங்க‌ இல‌க்கிய‌த்திலும் த‌னித்த‌மிழிலும் ஈடுபாடு காட்டிய‌தால் வேறு வ‌ழியில்லாம‌ல் அ.கி.ப‌ர‌ந்தாம‌னின் ந‌ல்ல‌ த‌மிழ் எழுத‌ வேண்டுமா, திருக்குற‌ள், திரும‌ந்திர‌ம் என‌ வாசித்து அவ்வ‌ப்போது பேசிக்கொண்டிருப்பேன். என்னைக் காட்டிலும் என் அறைத்தோழ‌ர் திருவ‌ருட்பாவையும் திருக்குற‌ளையும் ம‌ன‌ன‌மாக‌ச் சொல்வ‌தில் தேறியிருந்தார்.

டாக்ட‌ர் ச‌ண்முக‌சிவாவின் தொட‌ர்பு என‌க்கு சில‌ ந‌ல்ல‌ நூல்க‌ளை அறிமுக‌ம் செய்து வைத்த‌து. ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ எழுத்துக்கும் தீவிர‌ எழுத்துக்குமான‌ பேத‌ங்க‌ளை அவ‌ர் தொட‌ர்ந்து என்னிட‌ம் பேசிக்கொண்டே இருந்தார். வாசிப்பின் அடுத்த‌க் க‌ட்ட‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ அவ‌ரிட‌ம் ஒரு ப‌ட்டிய‌லே இருந்த‌து. ஒவ்வொரு ச‌ந்திப்பிலும் ஏதாவ‌து ஒரு புத்த‌க‌த்தை என் கைக‌ளில் கொடுத்துவிடுவார். ஜெ.ஜெ. சில‌ குறிப்புக‌ளிலிருந்து என‌து இர‌ண்டாம் க‌ட்ட‌ நாவ‌லுக்கான‌ வாசிப்பு தொட‌ங்கிய‌தாக‌ ஞாப‌க‌ம்.

இர‌ண்டாம் க‌ட்ட‌ வாசிப்பில் முன்பு போல‌ நிதான‌ம் கைகூடி வ‌ர‌வில்லை. மிகுந்த‌ ப‌ட‌ப‌ட‌ப்பான‌ ஓர் ம‌ன‌ நிலையில்தான் வாசிப்பை மேற்கொண்டேன். கிடைக்கும் நூல்க‌ளையெல்லாம் இர‌ண்டு நாட்க‌ளுக்குள் வாசித்துவிட‌ வேண்டும் என்ற‌ முன் திட்ட‌ங்க‌ளோடுதான் வாசிப்பு நிக‌ழ்ந்த‌து. வாசிப்ப‌தும்… வாசிப்பு பிர‌திக‌ளின் எண்ணிக்கையும் ஒருவ‌கையான‌ கௌர‌வ‌ம் சார்ந்த‌ நிக‌ழ்வாக‌ மாறிக்கொண்டிருந்த‌து.

வாசிப்பும் எழுத்தும் ஆண‌வ‌த்தின் ஒரு வெளிபாடாக‌ நான் உண‌ர்ந்த‌ ஒரு த‌ருண‌ம்தான் மீண்டும் வாசிப்பை நிதான‌ப்ப‌டுத்த‌த் தொட‌ங்கினேன். வாசிப்பின் தேவை என்ன‌ என்ற‌ கேள்வி என்னைத் திரும்ப‌ திரும்ப‌ தொந்த‌ர‌வு செய்த‌து. இந்த‌ச் ச‌மூக‌மும் உற‌வுக‌ளும் நாம் பிற‌ந்த‌திலிருந்து ம‌த‌த்தின் மூல‌மாக‌வும், ஜாதியின் மூல‌மாக‌வும், வ‌ர்ண‌த்தின் மூல‌மாக‌வும், அறிவின் மூல‌மாக‌வும் ந‌ம‌க்குள் மிக‌ ஆழ‌மாக ஏற்ப‌டுத்த‌ முய‌லும் அதே ஆண‌வ‌த்தைதான் வாசிப்பும் த‌ருகிற‌தென்றால் அத‌ன் அவ‌சிய‌ம்தான் என்ன‌ என்று என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன்.

இல‌க்கிய‌ம் சார்ந்த‌ அறிவும் வெளிபாடும் ஏற்ப‌டுத்த‌ முய‌லும் ஆண‌வ‌த்தை அக‌ற்றிவிட்டு மீண்டும் மீண்டும் அதில் இய‌ங்குவ‌துதான் இல‌க்கிய‌த்தின் பெரிய‌ ச‌வால் என்று நினைக்கிறேன். அவ்வாண‌வ‌த்தில் விழுவ‌துதான் அத‌ன் தோல்வி. ஏற‌த்தாழ‌ எல்லா க‌லை வெளிப்பாடுக‌ளிலும் இத்த‌ன்மையே புதைந்துள்ள‌தாக உண‌ர்கிறேன். அப்புரித‌லோடு நான் நிக‌ழ்த்தும் வாசிப்பை மூன்றாம் க‌ட்ட‌மாக‌ பார்க்கிறேன். வாசிப்பின் புரித‌ல் ஒவ்வொரு க‌ட்ட‌த்தில் மாறுவ‌து போல‌ வாசிக்கும் நோக்க‌மும் வாசிப்பை எதிர்க்கொள்ளும் வித‌மும் அறிவின் முதிர்ச்சிக்கு ஏற்ப‌ மாறுகிற‌து.

அவ்வ‌கையில் தொட‌ர்ச்சியாக‌ வாசிக்கும் நாவ‌ல்க‌ளில் நான் உண‌ரும் விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டுமே இத்தொட‌ரில் ப‌கிர்ந்து கொள்ள‌ விழைகிறேன். இது விம‌ர்ச‌ன‌ம் இல்லை. நான் விம‌ர்ச‌க‌னும் இல்லை. என் வீட்டிற்கு விருந்தாளிக‌ளாக‌ நுழையும் நாவ‌ல்க‌ள் விட்டுச்செல்லும் வாழ்வின் மிச்ச‌ங்க‌ள் அவ்வ‌ள‌வே!

நினைவுச்சின்ன‌ம்

‘ல‌ங்காட் நதிக்கரை’ மற்றும் ‘இமையத் தியாகம்’ தமிழ்நாட்டு பதிப்பகமான ‘தமிழினி’ பதிப்பில் வந்தது மூலம் ஓரளவு தமிழக வாசகர்களின் கவனத்தை பெற்ற‌வ‌ர் நாவ‌லாசிரிய‌ர் ரெங்க‌சாமி. வெறும் நாவலாசிரியராக மட்டுமல்லாமல் ஒரு கள ஆய்வாளராகவும் விளங்கும் ரெங்கசாமி அவர்கள் இதுவரையில் ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். எல்லோரும் மறக்கக் கூடிய அல்லது மறைக்கப்படக்கூடிய ஒன்றே அவர் நாவல்களின் கருவாக உள்ளது.

எண்பது வயதை அடைந்துள்ள ரெங்கசாமி அவர்கள் ஐம்பதாம் ஆண்டுவாக்கில் தனது இருவதாவது வயதில் இலக்கியத்தில் ஈடுபடத்தொடங்கினார். முதலில் அவர் சிறுகதைகளையே அதிகம் எழுதினார். ‘காமாட்சி விளக்கு’ எனும் சிறுகதை நூலையும் வெளியிட்டார். அது பெரிதாகப் பேசப்படாத பட்சத்தில் மேடை நாடகம் பக்கம் அவர் கவனம் திரும்பியது. தமிழ்ப்பள்ளி ஆசிரியராக இருந்த அவர் மாணவர்களை வைத்து மேடை நாடகங்களை எழுதி இயக்கினார். அவை பெரும்பாலும் மொழி மற்றும் இன பற்றை அடிப்படையாகக் கொண்டவை. வில்லு பாட்டிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்திய ரெங்கசாமி அவர்கள் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த பின் எழுத்தில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். இம்முறை அவர் கவனம் நாவல் பக்கம் திரும்பியது. ‘மயில்’ மாத இதழ் தூண்டுதலால் தீவிரமாக எழுதத் தொடங்கினார். அதன் விளைவாக மலேசிய தமிழ் இலக்கிய உலகிற்கு புதியதோர் உலகம், நினைவுச் சின்னம், லங்காட் நதிக்கரை, இமையத் தியாகம் எனும் நாவல்கள் கிடைத்துள்ளன. ‘என்று விடியும்’ என்ற நாவல் மிக விரையில் புத்தகமாக வெளிவர உள்ளது.

அவரின் ‘நினைவுச்சின்னம்’ நாவ‌லை அண்மையில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த‌து. ‘மரண இரயில்வே’ என்று அழைக்கப்படும், சயாம் – பர்மா இரயில் பாதை அமைப்பதில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு ஆதரவின்றி அநாதைகளாய் விடப்பட்ட தமிழர்களின் வாழ்வை சொல்லிச் செல்கிறது இந்நாவல். இதற்கு முன் ஆர். சண்முகத்தின் ‘சயாம் மரண இரயிவே’ என்ற நாவலை வாசித்தபோது எனக்கு நானும் ஏன் அந்த காலக்கட்டத்தில் பிறக்கவில்லை எனும் சொல்லும் அளவிற்கு அதில் வரக்கூடிய சம்பவங்கள் சுவையானதாகப் பதிவாகி இருந்தது. ரெங்கசாமி நினைவிச்சின்னத்தில் காட்டும் ரயில் பாதை அதன் வழி நெடுகிலும் அச்சமூட்டக்கூடியதாகவும் அமைதியிழக்கச் செய்வதாகவும் உள்ளது.

1943 ஆம் ஆண்டு தோட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் சயாமுக்கும் பர்மாவுக்கும் இடையில் இரயில் பாலம் அமைக்க விலங்குகளைப் போல மேல் கூரையில்லாத மொட்டை இரயில் வண்டிகளில் அடைக்கப்பட்டு இழுத்துச்செல்லப்படுகின்றனர். அதிகபட்சம் பதினைந்து பேர் மட்டுமே அமரக்கூடிய ஒரு பெட்டியில் முப்பது பேர் வரையில் அடைக்கப்படுகின்றனர். இரவின் குளிரும், பகல் புழுக்கமும், மழையின் சாரலும் உடலை வதைக்க வழி நெடுகிலும் மரணங்களைச் சந்தித்தபடியே நிகழும் நெடிய பயணம் அது. இரயில் பயணம் ஒரு கட்டத்தில் முடிய ‘போம் போங்’ எனும் இடத்திலிருந்து அவர்களின் நடைப்பயணம் ஏழு நாட்கள் தொடர்கிறது, இருவர் ஒரு அரிசி மூட்டையைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற கட்டளையோடு. ஆங்காங்கே ஜப்பானியர்களால் கொடுக்கப்படும் புழுக்கள் நெளியும் உணவை நிராகரித்த படியும் நிராகரிக்க முடியாத பசியில் சிரமப் பட்டு விழுங்கியபடியும் ஒரு தருணத்தில் அது பழகிப்போக புழுக்களை பொறுக்கி எரிந்துவிட்டு உண்ணும் அளவிற்கு துயரம் அவர்களுக்குப் பழக்கமாகிவிடுகிறது.

ஏறக்குறைய 150 பக்கங்கள் வரை இந்தக் கொடிய பயணத்தைப் பற்றியே சொல்லிச் செல்கிறார் ரெங்கசாமி. தாங்கள் சென்று கொண்டிருப்பது எங்கே என்றுகூட தெரியாமல் சந்தேகங்களோடும் பயங்களோடும் அவர்களுக்கே உரிய சின்ன சின்ன கிண்டல்களோடும் பயணம் நெடுகிலும் தங்கள் இயலாமையை வெவ்வேறு உணர்வுகள் கொண்டு பூசி மூடியபடியே செல்கின்றனர் பாட்டாளிகள். நோயாளிகளும் முதியோர்களும் தொடர்ந்து நடக்க முடியாமல் தவிக்கையில் அவர்களை பாதை நெடுகிலும் விட்டுச்செல்லும் கொடும் பயணமாக அது அமைகிறது. சோர்ந்து நிற்பது, தூங்க முயல்வது குற்றமாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்தைச் செய்பவர்கள் அடித்தே சாகடிக்கப்படுகிறார்கள்.

ஏழு நாள்கள் பயணத்தின் பின் பாட்டாளிகள் வேலை செய்ய வேண்டிய இடத்தை அடைகின்றனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர் தங்கி சென்ற அல்லது மாண்ட பூத்தாயான அதில் துர்வாடையும் மலத்தின் மிச்சங்களும் பிசுபிசுக்கின்றன. களைப்பில் வேறுவழியில்லாத பாட்டாளிகள் அதிலேயே உறங்குகின்றனர். கடும் மழைவரும் காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பூத்தாய்க்கு கீழ்ப் பகுதியில் புதைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பிணங்கள் வெளியேறுகின்றன. அடுத்த நிமிடமே பிணத்தின் மேல் மிதக்கின்ற ஊராக அது தோற்றம் தருகிறது.

ஜப்பான் மொழியைக் கற்றுள்ள தமிழர்களுக்கு மட்டும் சில விஷேட உதவிகள் கிடைக்கின்றன. மரணத்திலிருந்து தப்பவும் இந்த மொழி கைக்கொடுக்கிறது. இந்தச் சலுகையால் ஜப்பானியர்களோடு இணைந்து வேலை செய்யவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஜப்பானியன் கூறுவதை மொழிப்பெயர்த்து பாட்டாளிகளிடம் தமிழில் கூறுவதே அவர்களின் தலையாயப் பணி.

ஏறத்தாழ மூன்று வருடங்கள் இந்த கொடுமையை அனுபவித்தவர்கள் ஆங்கிலேயர்களின் தாக்குதல் ஜப்பானியர்கள் மேல் தொடங்கியதும் இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் அங்கேயே விட்டு விட்டு ஊர் நோக்கி திரும்புகின்றனர். இரப்பர் காடு மீண்டும் அவர்களை வரவேற்கிறது.

நாவல் முழுதுமே இரத்தத்தின் வாடை பரவி கிடக்கிறது. அதிகாரம் எப்படியெல்லாம் காலம் தோறும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு நாவல் முழுதும் வரும் சம்பவங்களையே உதாரணமாகச் சொல்லலாம்.

உழைப்பவர்களின் தலைகள் சதா மூங்கில் களிகளால் தட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மழை காலங்களிலும் நனைந்தபடியே வேலை செய்ய வேண்டியிருக்கிறது. காலராவில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதற்கு முன் இறந்தவர்களின் பிணங்களோடு சேர்த்து அடுக்கப்படுகின்றனர். வேலையில் பழுதான உடல் பாகங்கள் எவ்வித கேள்வியும் இல்லாமல் இரம்பத்தால் அறுக்கப்பட்டு அகற்றப்படுகிறது. மரணத்தின் தீ நாக்குகள் நாலா புறங்களிலும் சுற்றி சூழ்ந்து பாட்டாளிகளைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது. மரணம் அனைவருக்கும் பழக்கமாகிறது. இன்றும் மரணம் நடக்குமா என்ற கேள்வி மெல்ல அழிந்து இன்று இறக்கப் போவது யார்? என்று எல்லோர் வாயிலும் தொனிக்கிறது.

ஏறக்குறைய பாட்டாளிகள் இந்த நாவல் முழுவதும் சந்தேகங்களோடும் குழப்பங்களோடுமே வாழ்கின்றனர். தங்களைச் சுற்றி இவ்வாறு நடப்பதற்கான நியாயங்களையும் காரணங்களையும் அவர்கள் தேடுகின்றனர். நமது வாழ்வை நாம் தீர்மானிக்க முடியாமல் போகும் அவலம் நாவல் முழுதும் வியாபித்துள்ளது.

இருபத்தோரம் எண் கொண்ட இரயில் பெட்டியில் ஏறுபவர்கள்தான் நாவலின் முக்கிய பாத்திரங்கள். அவர்களின் உரையாடலின் வழியே நாவலை நகர்த்தியுள்ளார் ரெங்கசாமி. அவர்களின் பேச்சு மொழி பெரும்பாலும் நெறிப்படுத்தப்பட்டதாக உள்ளது. அவர்களின் வாழ்வும் அவ்வாறே உள்ளது. 1943க்கான பாட்டாளிகளின் மொழியாக என்னால் அதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. மரணமும் நெருக்கடியும் தொடர்ந்து மனித மனத்தை இப்படியா கட்டுக்குழையாமல் வைத்திருக்கும் என்ற கேள்வி எனக்கு நாவல் முழுதுமே எழுகிறது.

இது ஒரு வரலாற்று நாவல். வரலாற்று நாவலில் பொதுவாகவே ஒரு சிக்கல் உண்டு. பல நூறு பேரால் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் சொல்லப்பட்டுவிட்ட சம்பவங்களை நாவலாசியன் தனக்கே உரிய தோரணையில் சொல்லவேண்டியுள்ளது. அறிந்த விஷயத்தை புதிய கோணத்தில் கூறும் சவால் வரலாற்று ஆசிரியன் முன் எப்போதுமே விஸ்வரூபமாக நிற்கிறது. ரெங்கசாமி வரலாற்றின் எல்லைகளை நெருங்கி செல்கிறார். பல புதிய தகவல்களைத் தர முயல்கிறார். குறிப்பாக சயாமுக்குப் பெண்களும் சென்றார்கள் என்பது பல இடங்களிலும் பதிவாகாத ஒன்று. ஆனால் ஜ‌ப்பானிய‌ர்க‌ளோடு கொரிய‌ர்க‌ளும் த‌மிழ்ப்பாட்டாளிக‌ளை அடிமைக‌ளாய் ந‌ட‌த்திய‌தை நாவ‌லில் எவ்விட‌த்திலும் ஆசிரிய‌ர் குறிப்பிட‌வில்லை. கொரிய‌ர்க‌ளையும் ஜ‌ப்பானிய‌ர்க‌ளாய் க‌ருதிய‌த‌ன் விளைவாக‌ இருக்க‌லாம்.

நாவ‌லின் மொழி த‌ட்டையான‌து. எந்த‌ ஆட‌ம்ப‌ர‌மும் இல்லாத‌ சொற்க‌ளால் நாவ‌லை ந‌க‌ர்த்திச் செல்கிறார் ஆசிரிய‌ர். இத‌ற்கு முன் த‌மிழ‌க‌ எழுத்தாள‌ர்க‌ள் உன்ன‌த‌மான‌ நாவ‌ல் என‌ கொண்டாடிய‌ த‌ன்மைக‌ள் எதுவும் இந்த‌ நாவ‌லில் இல்லை. ஆனாலும் இந்த‌ நாவ‌ல் தொட‌ர்ச்சியாக‌ என்னைத் தொந்த‌ர‌வு செய்வ‌தாய் உள்ள‌து. அதில் ப‌ட‌ர்ந்து விரிந்துள்ள‌ இர‌த்த‌ க‌றைக‌ள் என‌து மூதாதைய‌ர்க‌ளுடையதாய் காட்சி கொடுத்து அச்ச‌த்தை மூட்டுகிற‌து.

நெறிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தொரு மொழியை ஆசிரிய‌ர் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌வே பாட்டாளிக‌ளின் வாழ்வும் நெறிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து நாவ‌லின் மீத‌ன‌ அதிருப்திக்குக் கார‌ண‌மாக‌ இருக்கிற‌து. ஒவ்வொரு நாளும் ம‌ர‌ண‌த்தை எதிர்க்கொள்ளும் வாழ்வில் பாட்டாளிக‌ள் க‌டைப்பிடிக்கும் நேர்மையும், ஒத்துழைப்பும், விட்டுக்கொடுத்த‌லும் சாத்திய‌ம்தானா என‌ கேள்வி எழுப்ப‌ வைக்கிற‌து. ச‌ப்பானிய‌ர்க‌ளின் கொடுமையிலிருந்து த‌மிழ்ப்பெண்க‌ள் கெட்டிக்கார‌த்த‌ன‌மாய் த‌ப்பிப்ப‌தும் த‌ங்க‌ளைத் த‌ற்காத்துக்கொள்வ‌தும் அந்த‌ ம‌ர‌ண‌ பூமியில் எவ்வ‌கையான‌ சாத்திய‌ங்க‌ளைக் கொண்ட‌தென‌ குழ‌ப்ப‌மாக‌வே உள்ள‌து. ம‌ன‌மும் உட‌லும் ந‌ம்பிக்கையும் சிதையும் ஒரு பூமியில் ம‌னித‌னின் வாழ்வு எண்ண‌மும் எத்த‌கைய‌ அப‌த்த‌ம் நிர‌ம்பிய‌தாக‌ இருக்கும் என‌ நினைக்கும்போது ஏற்ப‌டும் ப‌ய‌ங்க‌ர‌ம், நாவ‌லில் இல்லை.

நாவலின் இறுதியை நெருங்கும்போதுதான் சயாம் – பர்மா இரயில் பாதை அமைக்கப்படும் காரணம் சொல்லப்படுகிறது. மலாயாவில் உள்ள தமிழர்களைத் திரட்டி நேதாஜி பர்மா வழியாக இந்தியா சென்று ஆங்கிலேயர்களைத் தாக்க அமைக்கப்படும் வழிதடம் என அதை அறியும் போது சில பாட்டாளிகள் ஆனந்தம் அடைகின்றனர். தன் தாய்நாட்டிற்காக தாம் செய்யும் சேவையென மரண இரயில் பாதையைக் கருதுகின்றனர். நேதாஜி இப்பாதை வழியாகச் செல்லும் போது அவருடன் தாங்களும் தாயகம் சென்று போராட தயாராக உள்ளனர். அங்கு வேலை செய்யும் ஒரு பாட்டாளி தான் நேதாஜியை சந்தித்திருப்பதாகவும் அவருடன் கைக்குழுக்கியிருப்பதாகவும் கூறிக்கொண்டே இருக்கிறான்.

நாவலின் இறுதி பகுதியில் ஜப்பானியர்கள் சகல மரியாதைகளோடும் நேதாஜியை பாட்டாளிகளின் முன் அழைத்து வருகின்றனர். நேதாஜி அவர்கள் முன் உரையாற்றுகிறார். பாட்டாளிகள் தங்கள் பட்ட கொடுமைகளை நேதாஜியிடம் கூறுகின்றனர். எல்லாவற்றையும் செவிமடுத்த நேதாஜி பின்வருமாரு கூறுகிறார்.

“நாம் அடிமைகளாய் இருக்கும் வரைக்கும் இப்படித்தான் நம்மை ஆட்டிப்படைப்பார்கள். அந்த அடிமை விலங்கை உடைத்தெறியதான் நமது வீரர்கள் சென்று கொண்டிருக்கின்றனர் போர்களம் நோக்கி. இந்த நீண்ட பயணத்தில் நாம் பல தியாகங்கள் செய்ய வேண்டி நேரலாம். அத்தகைய தியாகங்களில் ஒன்றுதான் இங்கு மக்கள் உயிரிழப்பு; பட்ட துன்பங்கள் அத்தனையும். ஆகவே இதை பெரிது படுத்தாதீர்கள்.” என்கிறார். அனைவரும் “நேதாஜிக்கு ஜே” என முழங்குகின்றனர். நேதாஜியுடன் ஏற்கனவே கைக்குலுக்கியவர் மட்டும் அமைதி காத்து அவர் போனவுடன் “கட்டப்பயலுக நம்ம ஏமாத்திட்டாங்க. இவர் உண்மையில் நேதாஜி இல்லை. யாரோ ஒருவருக்கு வேஷம் போட்டு நம்மை ஏமாற்றுகிறார்கள்” என்கிறார்.

எனக்கென்னவோ உண்மையில் நேதாஜியாக இருந்திருந்தாலும் இவ்வாறுதான் பேசியிருப்பார் எனத் தோன்றுகிறது. நாம் மகத்தானதாக நம்பும் வெற்றிகள் எல்லாம் அடையாளம் தெரியாதவர்களின் தியாகங்களின் மேல்தானே ஏறி நிர்க்கிறது.

நன்றி : http://www.vallinam.com.my/

(Visited 135 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *