பவுத்த அய்யனார் பாவண்ணனை எங்கோ விட்டுவரப்புறப்பட்டார். நானும் சிவாவும் அவருக்காகக் காத்திருந்தோம். நான் அவ்வப்போது அவர் கொடுத்துச்சென்ற புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வண்ணநிலவன் கவிதைகளில் அதிக நேரம் கண்கள் சென்றுக்கொண்டிருந்தது.
பவுத்த அய்யனார் மதுரையைச் சேந்தவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிற்றிதழ்களில் இயங்கி வருகிறார். முன்பு ‘காலச்சுவடு’ இதழில் துணையாசிரியராக இருந்துள்ளார். தற்போது ‘நேர்காணல்’ என்ற தலைப்பில் நேர்காணலுக்கென்றே தனி இதழ் தொடங்கி கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் நேர்காணலுடன் ஜனவரி 2010-ல் முதல் இதழை வெளியிட்டார். இரண்டாவது இதழ் வண்ணநிலவன், மூன்றாவது இதழில் நாசர் எனத் தொடர்ந்து இதழ்கள் வெளிவருகின்றன.
எனக்கு உண்மையில் பவுத்த அய்யனார் வியப்பாகவே தெரிந்தார். வியாபாரம் செய்ய இலக்கியம் வளர்க்கிறோம் என்று அரசியல்வாதிகளின் கட்டவுட்டுகளை வைத்துக்கொண்டும் தான் நம்பும் ஒன்றுக்கும் முரணாகச் செயல்பட்டுக்கொண்டும் இருக்கும் இதழியல் சூழலில் அவர் தான் விரும்பும் ஒன்றில் தன் சக்திக்கு மீறியே செயல்பட்டுக்கொண்டிருந்தார். உலகச் சினிமா குறித்தும் அவரிடம் நன்கு பரிட்சயம் இருந்தது. சிவாவிடம் பல திரைப்படங்கள் குறித்து பேசி சிலாகித்தார்.
பவுத்த அய்யனாரிடம் பேசுவது மனதுக்கு நெருக்கமாக இருந்தது. அவரிடம் இயல்பாகவே மற்றவர்களின் சிறப்புகளைப் போற்றும் பண்பு இருந்தது. எந்த ஆளுமையைப் பற்றியும் அவருக்குத் தெரிந்த நல்ல விசயங்களையே முன்வைத்தார்.
பாவண்ணனை அனுப்பிவிட்டு வந்தவர் மீண்டும் எங்களுடன் இணைந்து கொண்டார். வெளியில் அதிக இரைச்சல் இல்லை. கொஞ்சம் நிதானமாகப் பேச முடிந்தது. டாக்டர் சண்முகசிவா பற்றி கேட்டு நலம் விசாரித்தார். சண்முகசிவாவுக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. வந்த நாள் முழுவதும் சந்தித்த நபர்கள் குறித்து கூறினோம் . “வெரிகுட் வெரிகுட் ” என்றார். பாராட்டும் போதெல்லாம் அவர் அந்த வாசகத்தையே பயன்படுத்தினார்.
பவுத்த அய்யனாரிடம் ஒரு குழந்தைதனம் இருந்தது. அந்தக் குழந்தை தனத்துடன் தனது இதற்கு முந்தய குழந்தை தனங்கள் பற்றி சீரியசாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் பேசுவதைக் கேட்க சுவாரசியமாக இருந்தது. அதுபோன்ற பேச்சுகளைக் கேட்பது இப்போதெல்லாம் குறைந்து விட்டிருப்பது சட்டென உரைத்தது. அவர் பேச்சில் எங்குமே ‘நான்’ என்பது இல்லாமல் இருந்தது. (இந்த வரியை ‘அன்புமிக்க அய்யனார்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் சுந்தர ராமசாமி பவுத்த அய்யனாருக்கு எழுதிய கடிதங்கள் வழியும், ‘முள்’ நாவலில் முத்துமீனாள் தன் கணவரான அய்யனாரைச் சந்தித்த தொடக்ககால அனுபவங்களை வாசித்ததின் வழியும் இன்னும் உறுதியாகச் சொல்லமுடிகிறது) காலம் பவுத்த அய்யானுருக்கு அந்தக் குழந்தை தனம் விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
அடுத்து எங்குச் செல்லலாம் என்று கேட்டேன்.
கொஞ்ச நேரம் சிந்தித்தவர் ‘வண்ணநிலவனைச் சந்திக்கலாமா?’ என்றார். தாமதிக்காமல் ஆட்டோவைப் பிடித்தேன்.
…தொடரும்