வண்ணநிலவன் எழுத்துகளை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் சண்முகசிவாவும் யுவராஜனும். அவரின் பல கதைகளை அவ்வப்போது நினைவு கூர்ந்து சொல்வார்கள். வண்ணநிலவனை வாசிக்கத்தொடங்கும் போதுதான் , சண்முகசிவா எழுத்தில் இருக்கும் வண்ணநிலவன் பாதிப்பு தெரிந்தது.
வண்ணநிலவன் சிறுகதைகள் அடங்கிய தொகுதியை முழுமையாக வாசித்தப்பின்னர் வண்ணநிலவன் காட்டும் உலகம் ஓரளவு புரிந்தது. அது பெரும்பாலும் நடுத்தரவர்க்க மனிதர்களின் இயலாமைகளையும் அவர்கள் அந்நியமாகிப் போகின்ற குடும்ப , சமூக சூழல்களையும் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறது. ஒரு வாசகனாய் நான் உணர்ச்சிவயப்படும் எந்த இடத்திலும் வண்ணநிலவனின் குரல் உயராததைக் கண்டுள்ளேன். அதில் கசிந்துள்ள அன்பும், கருணையும் , மனிதமும் பலமுறை என்னைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அநேக நேரங்களில் நான் சந்திக்கும் மானிட துக்கங்களையும், எதிரில் அமர்ந்திருக்கும் மனிதனிடம் மிக நுட்பமாக வெளிப்படும் எதிர்ப்பார்ப்புகளையும் எத்தனை எளிதாய் நிராகரித்துள்ளேன் என்றும், பார்வையால், சொற்களால் எதிராளி மறுக்கும் ஒன்றை எத்தனை வன்மமாக திணித்துள்ளேன் என்றும் மனதின் ஆழத்திலிருந்து அவர் எழுத்துகள் எடுத்துக்காட்டும்.
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் உள்ளன. அந்த நியாயத்தின் தன்மை வெளியிலிருந்து பார்க்கும் பலருக்கும் புரிவதில்லை. ஒரு நீண்ட வாழ்வின் மிகக் குறுகியத் தருணங்களின் தரிசனங்களை நாம் நமது இருப்பில் இருந்து அணுமானிக்கின்றோம். வண்ணநிலவனின் பல கதைகள் எனக்குச் சொன்னது இதைதான். அது அடுத்தவனின் நியாயத்திலிருந்து வாழ்வைக் காண எனக்கு சில அவகாசங்களைக் கொடுத்தது. அதன் மூலம் கொஞ்சம் நிதானமாகவும் அதிகம் சிரிக்கவும் முடிந்தது.
வண்ணநிலவன் எங்களை நட்புடன் வரவேற்றார். என் நினைவில் நாங்கள் திரும்பும்வரை அவர் முகத்தில் நட்பின் சிரிப்பு இருந்து கொண்டே இருந்தது. எங்கள் நினைவில் இருந்த சில கதைகள் பற்றி கூறினோம். அவரது சக நண்பர்களான வண்ணதாசன் குறித்தும், கலாப்ரியா குறித்தும் பேசினோம். சில சமயங்களில் புனைக்கதைகள் மூலமாக நன்கு அறிந்த எழுத்தாளர்களிடம் பேசும்போது ஒரு வெறுமை சட்டென கவ்விக்கொள்ளும். அவர்கள் கதைகள் மூலமாகவே அந்த எழுத்தாளருடன் பலகாலம் பேசிக்கொண்டிருந்தது போல ஓர் உணர்வு எழும். வண்ணநிலவனிடம் இருந்த நிமிடங்கள் முழுக்க அவ்வாரான ஓர் எண்ணம்தான் இருந்தது. அவர் துணைவியாரும் அன்பு நிறைந்தவராக இருந்தார். அங்கிருந்த சில மணி நேரங்களில் உண்பதற்குப் பலவகையான பதார்த்தங்கள் வந்துகொண்டே இருந்தன.
புனைவில் அவர் கொண்டுவரும் வாழ்வின் நிஜத்தன்மை தெரியாவிட்டாலும் அதன் அடிநாதமாக இருக்கின்ற அவர் மனம் எனக்கு நெருக்கமானதாய் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சர்ச்சைகள், விவாதங்கள், இலக்கியப் போட்டிகள் என எதிலும் தனது கவனத்தைச் செலுத்தாமல் புனைவுகளையே ஒரு மொழியாகக் கொண்டு இவ்வுலகுடன் மிக அந்தரங்கமாக உரையாடிக்கொண்டிருக்கிறார். இவ்வுலகை கூர்மையாகக் கவனித்துக்கொண்டும் இருக்கிறார்.
உரையாடலுக்குப் பின் புறப்பட்டோம். அவரது பக்கத்துவீட்டில் சங்கீத வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பாடிய சிறுமியின் குரல் சொக்கவைத்தது. வண்ணநிலவன் கீழே வந்து எங்களை வழியனுப்பினார். நிறைவான சந்திப்பாக இருந்தது. அத்துடன் பவுத்த அய்யனாரிடமும் விடைப்பெற்றோம். மெரினா கடற்கரைக்குப் போவதாகத் திட்டம்.
மெரினாவில் இறங்கியவுடன் காந்தியிடம் ஒரு நிழற்படம் எடுத்துக்கொண்டோம். கூட்டம்.
மேடாக இருந்த மணல்பகுதியில் அமர்ந்து ‘அன்புமிக்க அய்யனார்’ தொகுதியை வாசிக்க ஆரம்பித்தேன். சுந்தரராமசாமி பவுத்த அய்யனாருக்கு எழுதிய கடிதங்கள் அதில் தொகுக்கப்பட்டிருந்தன. அக்கடிதங்கள் மூலம் பவுத்த அய்யனாரின் வாசிப்பின் பின்புலம் பற்றி அறிய முடிந்தது. மேலும் சுந்தரராமசாமி காலச்சுவடு தொடங்கிய காலத்தில் இருந்த மனநிலையை அக்கடிதங்கள் சொல்லியது. ஒரு புதிய இதழாசிரியனின் குதூகலம் அவர் காலச்சுவடு குறித்து பேசும்போதெல்லாம் இருந்தது. கடிதங்கள் பல சுருக்கமானவை என்பதால் விரைந்து வாசித்து முடித்திருந்தேன். லீனா லிவிங் ஸ்மைல் வித்யாவை அழைத்துவருவதாக கூறியிருந்ததால் ஆர்வத்தோடு காத்திருந்தேன்.
லீனா தாமதித்தே வந்தார். வித்யாவுக்கு அலுவல் என்றார். அன்றைய மாலை நிதானமாகக் கடந்தது.இரவில் ‘செங்கடல்’ பார்த்ததோடு அன்றைய இரவும் முடிந்தது.
…தொடரும்