ராணி சிறுகதை – கடிதங்கள்

சிறுகதையை வாசிக்க: https://vallinam.com.my/version2/?p=11361

வணக்கம் நவீன். ராணி சிறுகதையை வாசித்தேன். எனக்கு பிடித்திருந்தது. ஆனால், இன்னுமே விரிவுபடுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் இறுதியில் ஏற்பட்டது.
எந்தத் தருணத்தில் கதைசொல்லிக்கு மியாவின் உடலின் மர்மங்கள் அவிழத் தொடங்குகின்றதோ அந்தத் தருணம் முதல் அந்த உடலின் மீதான ஆச்சரியங்கள் விலகுகின்றன. அவளது வாளிப்பான உடலும் கவர்ச்சிகரமான அசைவுகளும் அவனுக்குள் பெருங்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், அதே உடல் நெருங்கி இருக்கும் போது கணநேரத்தில் ஒன்றுமில்லாததாக மாறுகின்றது. தன் உடலின் அத்தனை மர்மங்களையும் ஒரு திரவத்தில் துடைத்தெறிந்து வேறொருத்தியாக அவன் முன்னால் மியா நிற்கின்றாள்.

அம்மாவும் அவன் முன்னால் அப்படி தோன்றியதுண்டு. அசூயையான துப்புரவு தொழில் செய்யக்கூடியவளாக அம்மா அவனுக்குள் பதிவாகியிருந்தாலும் ஒரு ராணியாக எதற்கும் கட்டுப்படாதவளாகவே அம்மா இருக்கின்றாள். மியாவை நெருங்குவதன் வழி அம்மாவையும் கதைசொல்லி நெருங்கி பார்க்கின்றான். அன்புக்காக தன் உடலை இன்னொன்றாக மாற்றிப்பார்க்கும் சாகசம் பெண்களுக்குக் கைகூடிவருகிறது என்பதையே மியா சொல்கிறாள். கச்சிதமாக வடிவெடுத்ததைப் போன்ற தோற்றத்தில் கவர்ச்சிகரமான அசைவுகளை வெளிப்படுத்துவதும் செய்வதற்குச் சிரமமான அசூயையான வேலையைச் செய்யும் உடலைப் பழக்கப்படுத்துதும் அவர்களுக்கு ஒன்றே போலத்தான் இருக்கிறது.

மியா தன்னுடைய உடலின் வாளிப்பையும் அம்மா தன்னுடைய முரட்டுத்தனத்துக்குப் பின்னும் ஒளித்துவைத்திருப்பதைக் கதைசொல்லி அறிகிறான். அப்படி அறிகின்ற போது அவன் அதுவரையில் அறிந்தவர்களாக அவர்கள் இருப்பதில்லை. அவர்கள் கையில் ஏந்தியிருப்பது ஆளுகையின் அடையாளமான செங்கோலாக இருப்பதில்லை. தெருவோரத்தில் வெறும் வயிற்றுப்பாட்டுக்காய் கூவி அழைக்கும் பெண்ணுக்கும் அவளுக்கும் அவனால் வேறுபாட்டைக் கண்டறியமுடியவில்லை. அவள் தன் மீது வைத்திருந்த மர்மம் என்பது தன்னை நெருங்காமல் இருப்பதற்கான தந்திரம் தான். அந்தத் தந்திரத்தை அறிந்தபின்னர் அவள் மீது ஏற்படுவது கருணை. அந்தக் கருணையைத் தரிசிக்கும் துணிவு கதைசொல்லியிடம் இருப்பதில்லை. அதனாலே, ஒடி ஒளிகிறான். அவனுடைய ஆணவம் உடைபடுவதை ஒப்பாமல் ஓடுகிறான்.

அரவின் குமார்

இந்தக் கதையில் என்னை மிகவும் சிந்திக்க வைத்த அம்சம், ஒரு தாயின் தியாகத்தையும் அவள் தன் பிள்ளையின் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பையும் இளைஞன் உணர்ந்து கொள்ளும் தருணம்தான்.

தன் குடும்பத்தையும் மகனின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக ஒரு தாய் பல கடினமான வேலைகளைச் செய்கிறாள். மற்றவர்களின் வீடுகளில் வேலை செய்து, உடல் முழுவதும் வியர்வையுடனும் தலைமுடியில் தூசியுடனும் வீடு திரும்புகிறாள். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத அந்த இளைஞன் தன் தாயின் வேலையை அவமானமாகக் கருதி மற்றவர்கள் முன்னிலையில் அவளால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக நினைக்கிறான்.

ஆனால், கதையில் மியா என்ற நிர்வாணப் பெண்ணிடம் அவன் கேட்கும் ஒரு கேள்வியும், அதற்கு அவள் அளிக்கும் பதிலும் அவனுடைய சிந்தனையையே மாற்றிவிடுகின்றன. ஒரு தாய் தன் பிள்ளைக்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்பாள் என்பதை அந்தத் தருணத்தில் அவன் மெல்ல உணர்கிறான் என்று நினைக்கிறேன். தன் தாய் செய்யும் வேலை அவனுக்கு அவமானமாகத் தோன்றினாலும், அவள் அதைச் செய்வது அவன் மீதுள்ள அன்பினாலும், அவனுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தினாலும்தான் என்பதைப் அறிந்து வருகிறான்.

மேலும், மியா ஏன் அத்தகைய தொழிலைச் செய்கிறாள் என்பதற்குப் பின்னாலும் அவளுடைய மகன் மீதான அன்பும் தியாகமுமே காரணமாக இருக்கிறது. தன் மகனின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவனுக்குச் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, வேறு வழியின்றி அவள் அந்தத் தொழிலைச் செய்கிறாள். தன் வாழ்க்கையையும் கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல், மகனின் நலனுக்காக அவள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள். இதுவே அவளை ஒரு ராணியாக உயர்த்துகிறது.

அனு

இந்தக் கதையின் களத்தை முதிர்ச்சியடையாத ஒருவர் மிக எளிதாகவே ஆபாசமான சிறுகதையாக மாற்றிவிடுவார். நான் தாய்லாந்துக்குப் (பட்டாயா) போனதுண்டு. எல்லா கேளிக்கை நகரங்களிலும் உள்ள அதே கவர்ச்சி. ஆனால் அதற்கு மத்தியில் மனிதனின் சின்னஞ்சிறிய திடுக்கிடலைச் சொல்லிச் செல்கிறீர்கள். பொதுபுத்தியில் ஏற்கவே படாத, அல்லது ஆபாசமாக மதிப்பிடப்படுகிற தாய்லாந்து பெண்ணின் செயல்கள் கதைச்சொல்லிக்கு ஏற்பாக அமைவதும் அம்மாவின் செயல்கள் அவனுக்கு அருவருப்பாகத் தெரிவதிலும் உள்ள முரண் அவிழும் இடத்தில் சிறுகதை பல்வேறு கதவுகளைத் திறக்கிறது.

ராம்

மியாவையும் கதைசொல்லியின் தாயையும் வெவ்வேறு கதைமாந்தர்களாகப் பார்க்க முடியவில்லை. இருவர் செய்யும் பணியும் சமூகக் கண்களுக்கு இழிவானதுதான்.ஆனால் இருவருமே எந்தக் கூச்சத்தையும் காட்டாமல் செய்கிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்றக்கூடிய கடமையைத் தனித்து வாழும் தாய் சுமக்கவேண்டி நேரும்போது அதனைக் கூச்சமில்லாமல் இறுமாப்போடு செய்து அதற்கொரு கம்பீரத்தைக் கொடுக்கிறாள். அதே கண்கொண்டே மியாவின் பணியையும் நோக்கவேண்டும். அவள் உடலை விற்பவள் என்று ஒரு கோணத்தில் பார்த்தால் அது நியாயமாகாது. அவள் மானுட காமத்தையும் துய்க்கும் பெண்ணாக வருகிறாள். அதனையும் அதிகார தோரணையோடும் சவால்விடும் துணிவோடும் முன்னெடுக்கிறாள். காமம் பணிந்துபோகும் குணமுடையதல்ல துணிந்து நிற்கும் திராணியைக் கொடுப்பது. இரு பெண்களின் இந்தத் துணிவே பெண்ணியத்தின் இயல்பான ஒன்றாக ஆக்குகிறார் கதாசிரியர். நாம் பொதுமைப்படுத்தும் மாசை கதாசிரியர் நமக்கு வேறொன்றாகக் காட்டும்போது கதை வலிமையடைகிறது.

கோ. புண்ணியவான்

What an action packed story telling. Thoroughly enjoyed reading this. Amma with the broom and Mia with pole is a great symbol. Almost like when we hold the card one comes at the top and one at the bottom. Even though the protagonist is interested in extra ordinary feat and carnival games, he is simple at heart and not experimental in everything including desires in women, as well as taste where he prefers simple banana Nutella not a pad Thai.

Sudharshan

(Visited 10 times, 3 visits today)