பேரிலக்கியங்களும் பேருரைகளும்

சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய இலக்கியங்கள் குறித்த உரையாடலை உருவாக்க முயன்று அதைத் தொடங்க முடியாமல் போக கோவிட் பெருந்தொற்று காரணியாக அமைந்தது. மலேசியாவில் உரைநடை இலக்கியம் 1916இல் (மீனாட்சி அல்லது மலாய்நாட்டு மங்கை) தொடங்கிவிட்டது. 1923இல் 1923 ‘பொதுஜனமித்திரன்’ நாளிதழில் வெளிவந்த ‘பாவத்தின் சம்பளம்’ இவ்வட்டாரத்தில் முதல் சிறுகதையாகக் கருதப்படுகிறது. என் வாசிப்பில் நவீன இலக்கியத்தின் அழகியலை அறிந்த படைப்புகள்  50களில் மெல்லத் தலைகாட்டத் தொடங்கி 70களில் உச்சம் பெற்றன.

இந்த நெடிய வரலாற்றில் ரஷ்ய இலக்கியங்கள் குறித்த உரையாடல் என்பது 50களில் கு. அழகிரிசாமி காலத்தில் நடந்துள்ளதை அறிய முடிகிறது. அவர் முன்னின்று நடத்திய இலக்கியக் கலந்துரையாடல்களில் உலக இலக்கியம் குறித்த அறிமுகமும் ஓர் அங்கமாக இருந்துள்ளது. அதன் பின்னர் அப்படியான பெரும்படைப்புகள் குறித்த உரையாடல்கள் மலேசியாவில் நடந்தனவா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் அப்படியான உரையாடல்கள் நிகழ வேண்டும் எனும் ஆர்வம் எனக்குண்டு. எனவே இம்முயற்சி.

இதை நான் என் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்கிறேன். நான் வாசித்து வியந்த படைப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் அதன் வழியாக அவர்களும் அப்படைப்புகளை நோக்கிச் செல்ல வேண்டும் எனும் விருப்பத்தின் அடிப்படையில் தொடங்கவுள்ள முயற்சி இது.

இந்த முயற்சியை அறிவிக்கும் முன்; இப்போது இதை டைப் செய்துக்கொண்டிருக்கும் நிமிடம் வரை இது குறித்து தயக்கமே எனக்கு உண்டு. காரணம் என் மனதுக்குள் இந்த நாவல்களைப் பேசிப்பார்த்தாலே ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்கிறது. எனவே இது சாத்தியமா என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஆனால் வேறு வழியில்லை. யாரோ ஒருவர் தொடக்கி வைக்கத்தானே வேண்டும். தவறு செய்தாலும் நண்பர்கள் முன்தானே செய்யப்போகிறேன்.

இந்த அங்கத்தை எப்படி நடத்தலாம்; யாரெல்லாம் இதில் கலந்துகொள்ளலாம் எனும் முன் திட்டமும் விதிகளும் சில உண்டு,

அ. அதிக பட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம்.

ஆ. முழுமையாக இரண்டு மணி நேரம் அமர்ந்து முழுமையாகப் பேசுவதைக் கேட்க முடியாதவர்கள் தயவு செய்து வர வேண்டாம்.

இ. உரையைச் செவிமடுக்கும்போது பலகாரங்களையோ நொறுக்குத் தீனிகளையோ கொறித்தே ஆக வேண்டும் எனும் வேட்கை கொண்டவர்கள் இணைய வேண்டாம்.

இ. இவ்வங்கத்தில் நான் மட்டுமே பேசுவேன். அது பெருங்கூட்டத்தின் முன் நிகழ்த்தும் உரையாக இருக்காது. மிக அணுக்கமாக, ஒவ்வொருவரின் ஆழத்துக்குள்ளும் சென்று பேசும் அந்தரங்க உரையாக அமைய வேண்டுமென விரும்புகிறேன். எனவே பெருங்கூட்டத்தை ஈர்க்கும் வடிவத்தில் இல்லாமல் பேரியக்கியங்களின் ஆழங்களைச் சென்றுத் தொடும் உரையாக அமைக்க ஆர்வம் கொண்டுள்ளேன்.

ஈ. கேள்வி – பதில் என எதுவும் இடம்பெறாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் புறப்பட்டுவிட வேண்டும்.

உ. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். குறைந்தது 5 பேர் இணைந்தால் கூட போதுமானது. எனக்குத் தேவை இலக்கியத்தின் ஆழங்களைச் சென்று தொடும் நுண்ணுணர்வு கொண்டவர்கள் மட்டுமே.

இம்முயற்சியை இலவசமாகத்தான் ஏற்பாடு செய்கிறேன். அதற்கேற்ற இடத்தையும் ரவாங்கில் ஏற்பாடு செய்து வருகிறேன். ஜனவரி முதல் தேதியில் லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’விலிருந்து இம்முயற்சி தொடங்குகிறது.

வருடத்தின் முதல் நாள் தொடங்க பல காரணங்கள் உண்டு. முதலாவது, பலரும் அறிந்தது நான் கொண்டாடும் ஒரு தினம் வருடத்தின் முதல் நாள். அன்று என்னைப் போல இலக்கியத்தில் பேரார்வம் கொண்ட சிலருடன் இருக்க விரும்புகிறேன். சொல்லப்போனால் அந்நாளில் இலக்கியத்துடன் மட்டுமே இருக்க விரும்புகிறேன். எனக்குத் தெரியும், பலரும் அந்நாளையும் அதற்கு முதல் நாள் இரவையும் கேளிக்கைகளால் நிரப்பியிருப்பார்கள். எனவே அது பலரும் கலந்துகொள்ள சிக்கலான நாள். அப்படியில்லாத சிலருடன் நான் இருக்க முடிந்தால்; அவர்களுடன் பேரிலக்கியம் குறித்து உரையாட முடிந்தால் அதுவே எனக்குப் போதும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி நடக்கும் இடம், இன்னபிற தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த உரை மாலை 6.00 மணிக்குத் தொடங்கி இரவு 8.00 மணிக்கு நிறைவடையும். உரை பதிவு செய்யப்படாது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdc6oS0XAF5KNoQIq3LAdWQ-ImVjRvdZLDcxVYjtjLvzXuIkw/viewform?usp=publish-editor

(Visited 8 times, 8 visits today)