கேள்வி : இலக்கியம் சார்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்த வல்லினம், இம்முறை வரலாற்றை முன்னெடுக்கிறது. என்ன காரணம்?
ம.நவீன் : இலக்கியத்தை ஓர் அரசியல் செயல்பாடாகக் கருதுபவன் நான். வார்த்தைகள் கொடுக்கும் சிலிர்ப்புகளும் , கற்பனைகளும், பிரச்சாரங்களும், போலி உணர்ச்சிகளும் எனச் சூழ்ந்திருக்கும் மலேசிய இலக்கிய உலகில் உண்மையான வாழ்வை அதன் அரசியல் பார்வையோடு உரைடாலுக்குட்படுத்த வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். இதற்கு நமக்கு நமது வரலாறு, சமகால அரசியல் சூழல், தத்துவங்கள் எனப் பலவும் தேவையாய் இருக்கின்றன.
கேள்வி : அவ்வாறான இலக்கியம் மலேசியாவில் படைக்கப்படுவதில்லை என்கிறீர்களா?
ம.நவீன் : மலேசியாவில் நல்ல இலக்கியம் இல்லை என சொல்பவர்களுக்கு நான் எதிரானவன். மலேசியாவில் நல்ல இலக்கியங்களும் அதைப் படைக்கும் எழுத்தாளர்களும் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதே என் கவலை.
கேள்வி : முன்னெடுக்கப்படுவதில்லை எனும் கருத்தை எவ்வாறு முன்வைக்கிறீர்கள்?
ம.நவீன் : மிக அடிப்படையில் மலேசியாவில் ஜனரஞ்சக இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்குமான பேதம் தெரிவதில்லை. அவர்கள் சினிமா பாடல் ஆசிரியர்களையும் கவிஞர்களையும் ஒரே தளத்தில் வைத்துப்பார்க்கின்றனர். வாழ்வை மிக மொண்ணையாகப் பார்க்கும் பிரதிகளுக்கு இந்நாட்டில் கிடைக்கும் வெளிச்சம் தீவிர இலக்கியத்திற்குக் கிடைப்பதில்லை. ஒரு வகையில் இச்சூழல் உலகம் முழுவதுமே நடக்கும் சூழல் என்றாலும் மலேசியாவில் இது திட்டமிட்டே செயல்ப்படுத்தப்படுவதாகக் கருதுகிறேன்.
கேள்வி : எழுத்தாளர்களை முன்னெடுப்பது குறித்து கூறினீர்களே?
ம.நவீன் : உரையாடல்கள் மூலமாகத்தான் இது சாத்தியம் எனக் கருதுகிறேன். ஜி.நாகராஜன் பல எழுத்தாளர்களால் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த போது சுந்தர ராமசாமிதான் அவர் குறித்து பேசத்தொடங்கினார். அதே போல பா.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ அடையாளமற்று இருந்த போது ஜெயமோகன் அப்பிரதி குறித்து தொடர்ந்து பேசினார். பா.சிங்காரத்தின் எழுத்துலகம் தொடர்பாகக் கட்டுரைகளும் எழுதினார். இது வாசகர்களின் கவனம் அவர்கள் எழுத்தில் குவிய காரணங்களாக இருந்தன. மொத்த மலேசியத் தமிழ் எழுத்துலக சூழலில் இவ்வாறு படைப்பின் தரம் குறித்து தீவிர விமர்சனப் போக்கில் முன்வைக்கும் ஆளுமைகள் இல்லை. இச்சூழலில் விவாதங்கள், கலந்துரையாடல்கள் மூலம்தான் நான் நமது இலக்கியப் பிரதிகளை மீட்க முடியும்.
கேள்வி : அவ்வாறான உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதில்லை என்கிறீர்களா?
ம.நவீன் : ஆம். மலேசியாவில் இன்று தமிழகப்படைப்புகள் சார்ந்தே அதிகம் பேசப்படுகிறது. பலரும் தாங்கள் முன்வைக்கும் கருத்து சு.ராவுடனோ ஜெயமோகனுடனோ எஸ்.ராவுடனோ ஒத்திருக்க வேண்டும் என அக்கறைக்காட்டுகின்றனர். சுயவாசிப்பில் அடையும் சுய இலக்கிய பிரக்ஞையை முன்வைப்பதன் மூலமும் இந்நாட்டில் எழுதப்படும் இலக்கியங்களை வாசித்து அதை ஒட்டிய எதிர்வினைகளைப் பதிவு செய்வதன் மூலமுமே நாம் தனித்த அடையாளத்தைப் பெற முடியும். இங்கு யாரும் அடுத்தவர் படைப்புகளைப் பற்றி பேசத் தயார் இல்லை. வாசிக்கவும் தயார் இல்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் எம்.குமாரன், அரு.சு.ஜீவாநந்தன் போன்ற எழுத்தாளர்களை நாம் எப்போது புதுப்பித்தே வைத்திருப்போம்.
கேள்வி : இந்த பின்னடைவைச் சரிகட்ட வல்லினம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் என்ன?
ம.நவீன் : ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எங்கள் திட்டங்களைக் கூர்மை படுத்துகிறோம். முதல் கலை இலக்கிய விழாவில் ஓவியம் மற்றும் நிழல்ப்பட கண்காட்சி நடத்தினோம். 20 ஆண்டுகளுக்கும் மேலாய் நிழல்ப்படத்துறையில் ஈடுபட்டு, உலகம் முழுதும் 100க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கிய ‘ஸ்டார்’ கணேசனுக்கு அதுதான் முதல் கண்காட்சி என்றால் நம்பமுடிகிறதா? அதேபோல இளம் ஓவியர் சந்துருவின் ஓவியங்களும் அந்நிகழ்வில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இதே போல சிங்கை இளங்கோவனின் நாடகமும் ஒளிபரப்பாகி மலேசியர்களுக்கு புதிய நாடகச் சூழலை அறிமுகம் செய்தது. மேலும் 3 புத்தகங்களை அந்நிகழ்வில் வெளியடவும் செய்தோம். அதன் பின்னர் இரண்டாம் ஆண்டில் எங்கள் நோக்கம் இளம் தலைமுறையினரை அடைவதாய் இருந்தது. மாற்றுச்சிந்தனையில் செயல்படும் இன்றைய மலேசிய- சிங்கை இலக்கியவாதிகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த ‘மலேசிய- சிங்கப்பூர் 2010’ எனும் 200 பக்க நூலினைத்தொகுத்தேன். எல்லா ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அதை இலவசமாகவே கிடைக்கச்செய்தேன். இவ்விரு நடவடிக்கைகளும் கலைத்துறையில் தீவிரமாக இயங்குபவர்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள்தான்.
கேள்வி : இம்முறை உங்கள் முயற்சிகள் எத்தகையதாக உள்ளது ?
ம.நவீன் : 80 வயதைக் கடந்து மலேசியத் தமிழர் வரலாற்றை இலக்கியத்தில் வடித்து இயங்கி கொண்டிருக்கும் அ.ரெங்கசாமி; 78 வயதில் சுயவரலாறு, நாட்டுப்புறப் பாடல்கள்,சயாம் மரண ரயில் போன்றவற்றை ஆய்வு செய்து நூலாக்கிக்கொண்டிருக்கும் முத்தம்மாள் பழனிசாமி; ‘மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலை எழுதிய ஜானகிராமன் போன்றவர்களைக் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. இம்மூவருக்கும் உள்ள ஒற்றுமை அவர்களின் வரலாறு சார்ந்த பிரக்ஞை. மலேசியத் தமிழ்ச்சூழலில் இவர்களின் பங்களிப்பு பொருட்படுத்தக்கூடியதாக உள்ள நிலையில் இவர்களுடன் உரையாட ஒரு கலத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
கேள்வி : என்னென்ன நிகழ்வுகள் இதில் இடம்பெரும்?
ம.நவீன் : ஈழம் தொடர்பான தனது பதிவை எழுத்தாளர் அ.ரங்கசாமிசாமி அவர்கள் எழுதியுள்ளார். செம்பருத்தி வெளியீடாக வரும் இப்புத்தகம் இலவசமாகவே எல்லாருக்கும் வழங்கப்படும்.ஆசிரியர் பயிற்சி கழகங்களில் உள்ளவர்களையும் பல்கலைக்கழகத்தினரையும் புத்தகங்கள் பெற்றுக்கொள்ள தொடர்ந்து அழைக்கிறோம். சிலரிடமிருந்து நல்ல பதில்கள் வருகின்றன. சிலர் இலக்கிய நிகழ்வுக்கு வருவதைத் தவிர்க்கின்றனர். அதோடு தமிழினி பதிப்பில் வெளிவந்துள்ள அவரது புதிய நாவலான ‘இமையத் தியாகமும்’ அந்நிகழ்வில் வெளியீடு காண்கிறது. மேலும் திருமதி முத்தம்மாள் பழனிசாமி எழுதிய சுயவராலாற்று நூலான ‘நாடு விட்டு நாடு’ மற்றும் ‘மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள்’ தொகுப்பும் இந்நிகழ்வில் வெளியீடு காண்கிறது. ஜானகிராமனுடனான ஒரு கலந்துரையாடலும் உண்டு. கடந்த காலங்களைப் போலவே ‘செம்பருத்தி’ இதழும் திரு.பசுபதி அவர்களும் எங்களின் இம்முயற்சிக்குப் பக்கபலமாக உள்ளனர்.
நிகழ்வு தொடர்பான விபரங்கள் :
‘வல்லினம்’ ஏற்பாட்டில் ‘செம்பருத்தி’ ஆதரவில்
கலை இலக்கிய விழா 3
‘வரலாற்றை மீட்டுணர்தல்’
இடம் : தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம்,
Jalan Ipoh, Sentul
நாள் : 5.6.2011 (ஞாயிறு)
நேரம் : மாலை 5.00
நன்றி : நயனம்