மரணத்தை வெல்லும் மந்திரவாதிகள்!

 

ஆழி சூழ் உலகு

மலேசிய இலக்கியம் பரந்துபட்ட தளத்தில் வாசிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. வெகுசன எழுத்துகள் அல்லது எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியத்தின் அடையாளமாகக் காட்டப்படுவது அதில் முக்கியமானது. தொடர் உரையாடல்கள், விவாதங்கள் மூலமாக முந்தைய படைப்பிலக்கியங்கள் மற்றுமொரு காலக்கட்டத்தில் விவாதங்கள் மூலம் மீட்கப்படாமல் இருப்பதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். அதேபோல மலேசிய எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்களின் பினாமிகள் போல மலேசிய இலக்கியத்தை ஒட்டிய விரிவான வாசிப்பு இல்லாமல் அதன் மீது ஆழமான விமர்சனங்களை வைக்காமல் ‘ஒன்றும் இல்லை’ என மொண்ணையாக கருத்துக்கூறுவதும் மோசமான அரசியல்தான். இதைவிட முக்கியமாக தமிழகத்தில் கா.நா.சு, சு.ரா, ஜெயமோகன், அ.மார்க்ஸ்,  போன்ற ஆளுமைகள் ஒவ்வொரு காலத்திலும் தமிழ் இலக்கியத்தின் மீது தங்களின் ஆழமான பதிவுகளைச் செய்வது போல இலங்கை இலக்கியத்தை ஒட்டிய மதிப்பீடுகள் கைலாசபதி, கா.சிவதம்பி, எம்.ஏ.நுஃமான், மு.தலையசிங்கம் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. மலேசியாவின் இலக்கியத்தை அவ்வாறான ஒரு பரந்த வாசிப்பு மற்றும் தீவிரமான விமர்சன போக்கில் முன்னெடுக்கும் ஆளுமைகள் இல்லை எனலாம். துரதஷ்டவசமாகப் பேராசிரியர்கள் சிலர் அப்பாத்திரத்தை மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் போதிக்கும் ஒரே தகுதியினால் ஏற்கின்றனர்.

இவ்வாறான விமர்சகப் பார்வைகள் அதையொட்டிய விவாதங்கள் , மதிப்புரைகள் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் பதிப்பிக்கப்படும் நூற்றுக்கணக்கான பிரதிகளில் நமது வாசக ரசனையைத் தாண்டி சிலவற்றைத் தேர்வு செய்ய காரணியாக உள்ளன. தமிழகத்தில் இச்சூழல் மிக ஆரோக்கியமாக உள்ளது. அவ்வகையில் கடந்த ஆண்டில் ஜெயமோகனின் வருகை சில நல்ல நாவல்களை அறிமுகம் செய்து வைத்தது.

வல்லினம் நிகழ்விலும் அதற்குப் பின்பான உரையாடலிலும்  அவர் தொடர்ந்து முன்வைத்துப் பேசிய நாவல் ‘ஆழி சூழ் உலகு’. அதற்குமுன் நான் அந்த நாவலின் பெயரைக் கூட கேள்விப் பட்டிருக்கவில்லை. மலேசியாவில் அந்த நாவலின் ஒரு பிரதிகூட எந்தக் கடையிலும் கிடைக்காது என நன்கு தெரியும். டாக்டர் சண்முகசிவா தமிழகம் சென்றபோது அந்நாவலை வாங்கி வரப் பணித்தேன். மறக்காமல் வாங்கி வந்தார்.

இந்நாவலை நான் படிக்கத் தொடங்கியபோது பினாங்கிலிருந்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டவர். நாவலில் உள்ள சில மீன்கள் தொடர்பாகவும் மீனவர் வாழ்வு தொடர்பாகவும் தொடர்ந்து கேட்டப்படி இருந்தேன். அவருக்கு பெரும்பான்மையான விடயங்கள் புதியனவாக இருந்தன. நாவல் சொல்லும் சூழல் 1933 ஆக இருந்தாலும் எல்லாவகையிலும் மலேசியர்கள் வாழ்வு மேம்போக்கானதாய் இருப்பது மட்டும் புரிந்தது. நாம் ஒரு கலவையான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் பொருளியல் நோக்கில் மட்டுமே ஈடுபடுகிறோம். எத்துறையிலுமே நமக்கு அழுத்தமான ஆழமான பயிற்சி இருப்பதில்லை. அல்லது அதை நாம் நம்புவதில்லை எனப்பட்டது. ‘ஆழி சூழ் உலகு’ போன்ற நாவல்கள் வெவ்வேறு வாழ்வினை வாழ்வதற்கான துல்லியமான பயிற்சியை அளிக்கின்றன.

000

பொதுவாகவே நான் ஒரு ஞாபக மறதியான ஆள். மனிதர்களின் முகங்களும் பெயர்களும் என் நினைவில் இருப்பது மிகவும் சிரமம். அவ்வாறு நினைவில் வைத்துக்கொள்ள ஏதாவது ஒரு சிறப்பு அம்சத்தை மனதில் பதித்து வைத்துக்கொள்வேன். அதே போலதான் பாதைகளும். பாதைகளைத் தவறவிடுவதிலும் மறந்துவிட்டு வேறெங்காவது சுற்றிக்கொண்டிருப்பதிலும் நான் பலே கில்லாடி. மனதில் மிக ஆழமான உணர்வுகளைத் தூண்டினாலே எதுவும் என் நினைவில் நின்றிருக்கும்; மற்றவையெல்லாம் மனதில் மங்கலாகவே இருக்கும்.

இத்தனை குழப்பம் மிக்க ஒரு மனிதன் ‘ஆழி சூழ் உலகு’ நாவலை வாசிப்பது என்பது மிகச் சவாலானதாகத்தான் இருக்கும் என முதலில் நினைத்தேன். காரணம்  அந்நாவல்  முக்கால் நூற்றாண்டின் (1933 – 1985 ) கதையைச் சொல்கிறது. நாவல்  மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களுடனும் சுவாரசியமான புலிச்சுறா வேட்டையுடன்தான் தொடங்கியது.  புலிச்சுறா பிடிக்கச்செல்லும் மூவர் (சிலுவை, சூசை, கோத்ரா) கட்டுமரம் கவிழ நடுக்கடலில் மூவரும் ஒரே கத்தையைப் பிடித்துக்கொண்டு மிதக்கும் காட்சி நாவலின் இடையிடையே வந்து அம்மனிதர்களிடம் இருக்கும் அன்பை, கருணையை, தியாகங்களை, காதலை ஒட்டுமொத்த பரதவர்களின் ஆதாரமாகச் சொல்லிச்செல்கிறது.

இவ்வாறு ஆரம்பிக்கும் நாவலில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதக் கூட்டங்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டிருக்கிறது. இம்மக்கள் திரளில் நான் யாரையும் குறிப்பாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியாமல் தத்தளித்தபடி வாசித்துச் சென்றேன். அவ்வட்டார வழக்கு மொழியும் பெரும் தடையாக இருக்க, பெரும் சவாலுடன் தொடர்ந்து அவர்கள் அனுபவங்களைக் கடக்கும் போதுதான் எனக்கு அது நிகழ்ந்தது. நான் அந்த மக்களை மொத்தமாகவே அடையாளம் கண்டுக்கொண்டிருந்தேன். அந்தச் சனத்திரளில் நானும் ஒருவனாகியிருந்தேன். தொம்மந்திரையையும் கோத்ராவும் அவர்களின் உருவ அமைப்புடன் கண்முன் கடந்து சென்று கொண்டிருந்தனர். அதற்கு பின் பெயர்கள் முக்கியமானதாக இல்லை. மொழி முக்கியமானதாக இல்லை. பெயரும் மொழியும் கடந்த ஒரு பெரும் வாழ்வில் என்னால் அவர்களுடன் இணைய முடிந்திருந்தது.

000

நாவல் இரு வெவ்வேறு மனநிலையைக் கொடுக்கிறது.

ஒரு வசதிக்காக 1985ஆம் ஆண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று திரும்பும் சிலுவை, சூசை, கோத்ரா பிள்ளை என்ற மூன்று பரதவர்களும் புயலில் மாட்டிக் கொள்வதை முதல் பகுதியாக வைத்துக்கொள்ளலாம்.   அவர்கள் பசியாலும் குளிராலும் வாடி , ஒருவர்  மற்றவருக்காக உயிர் துறப்பதின் தியாகத்தைச் சொல்லிச்செல்கிறது. சிலுவை மட்டும் காப்பாற்றப்படுகிறான்.

இரண்டாவதாக, 1933ஆம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் கடலிலும் கடற்கரையிலும் பரதவர்களுக்கு ஏற்படும் வாழ்வியல் சிக்கல்கள், அவற்றோடு சம்பந்தப்படும் வெவ்வேறு மனிதர்கள் என மிக விரிவான வாழ்வு சொல்லப்படுகிறது. இவ்விரண்டு சம்பவங்களும் வாசகனுக்கு வெவ்வேறான மனநிலையைக் கொடுக்கக்கூடியவை. முன்னது மிகப் பதைபதைப்பான ஓர் உணர்வுநிலையை ஏற்படுத்தியபடி இருக்கிறது. இரண்டாவது ஒரு நீண்ட வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பதற்கான நிதானத்தைக் கொடுக்கிறது. ஆனால் இவ்விரு தருணங்களின் போதும் ஏதோ இரைச்சல் மட்டும் மனதிலிருந்து நீங்கவில்லை. அதை கடலலை ஓசையாக நான் நம்பிக்கொண்டேன்.

1985 : மறுநாட்களில் தொடரும் தியாகங்கள்

நாவலை நான் ஒரு முறைதான் வாசித்தேன். ஆனால் வட்டார சொற்கள் என்றபடியால் கூர்மை கூடியிருந்தது.  நாவலை வாசித்து முடித்த பின்பும் நாவலின் இடையில் சிலுவை, சூசை, கோத்ரா ஆகியோர் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு மிதப்பதை மட்டும் பலமுறை வாசித்தபடி இருந்தேன். அவர்களின் எவ்வித பின்புலத்தையும் நினைவில் கொள்ளாதபடி அதை வாசிப்பது புதிய அனுபவமாக இருந்தது. அதை மட்டுமே இன்னும் கொஞ்சம் நீட்டி தொகுத்து ஒரு குறுநாவலாகக் கூட வெளியிடலாமே எனப்பட்டது. 1985 ல் அடுத்தடுத்த நாள் நிகழும் சம்பவத் திரள் அது. இதே போன்ற அனுபவம் எனக்கு யூமா வாசுகியின் ‘இரத்த உறவு ‘ வாசித்த போதும் இருந்தது. அதில் வரும் தம்பியின் கனவுகளை மட்டும் தனியாக வாசித்துக்கொண்டிருக்கலாம்.

மூவர் மிதந்துகொண்டிருக்கின்றனர். அங்கு ஓங்கில்கள் (டால்பினை அவர்கள் அவ்வாறுதான் அழைக்கின்றனர். நல்ல தமிழ்ச்சொல்.) இருப்பதால் சுறாவின் பயம் இல்லை. பசிக்கிறது. மயக்கத்தில் இருந்த கோத்ரா கண்விழிக்கிறார். அவரை ‘பெரியாளு’ என்றுதான் அழைக்கின்றனர். பெரியாளுக்குத் தன் மனைவி தோக்களத்தா நினைவாகவே உள்ளது. தூரத்தில் மிதந்து வரும் பாசிகளைப் பிடித்து சிலுவைக்கும் சூசைக்கும் சாப்பிடக்கொடுக்கிறார். அவருக்கு நெஞ்சு அடைப்பதாகக் கூறி சாப்பிட மறுக்கிறார். அவர் இருக்கும் நம்பிக்கையில் இருவரும் நிம்மதியாக மிதக்கின்றனர்.

மறுநாள் அவர்களுக்குப் பஞ்சு ஆமை கிடைக்கிறது. பெரியவர் அதை தலையால் முட்டி கவிழ்க்க சூசையும் கோத்ராவும் அதன் கழுத்தின் மென்மையானப் பகுதியைக் கடித்து இரத்தம் குடிக்கின்றனர். பெரியாள் அதன் கால்களை வாகாகப் பிடித்துக்கொள்கிறார். அது திடுமென திரும்ப பெரியவருக்கு அடிப்படுகிறது. மூவரும் மீண்டும் மிதக்கும் போது ஊறிய கத்து இனி தாங்காது என பெரியாள் முடிவு செய்கிறார். கத்திலிருந்து தன் பிடியைத் தளர்த்துகிறார். உயிருடன் ஊர் போகும்போது கிழவியிடம் தான் இறக்கும் போது அவளை நினைத்துக்கொண்டிருந்ததாகக் கூறச்சொல்கிறார். இயற்கையுடன் தானும் ஒன்றாகிறார்.

மறுநாள் அவர்கள் களைப்பில் இருக்கும்போது ஏதோ சத்தம் கேட்கிறது. திக்கிலாத அவர்கள் பயணம் குறித்த கவலையில் அன்றைய பொழுது மெல்ல இருட்டுக்கிறது. திடீரென மின்னிக்கொண்டு ஒரு மீன் கூட்டம் அவர்களைச் சூழ்கிறது. அதில் ஒன்றிரண்டைப் பிடித்து சாப்பிடுகின்றனர். மீன்கூட்டம் ஓடிவிடுகின்றது. மீண்டும் விசித்திர ஒலி. ஆயிரக்கணக்கான கடல்குதிரைகள் மேலெலும்பி வந்து மேய்ந்துகொண்டிருக்கின்றன. காண முடியாத அந்த அதிசயக் காட்சியைக் கண்டு இருவரும் ஆனந்தப்படுகின்றனர். சூசை , தாங்கள் மிகுந்த ஆழ் பகுதியில் இருப்பதை உணர்கிறார். அவர் எதிர்ப்பார்த்ததைப் போல சிறிது நேரத்திலெல்லாம் அங்கு ஒரு பூந்நோட்டமே மலர்கிறது. பலவண்ண மீன்கள் அவ்விடத்தில் வலம் வருகின்றன. இயற்கை அவர்களின் பசியை அன்று மறக்கடிக்கின்றது.

மறுநாள் சிலுவை கொஞ்சம் துடிப்புடன் இருக்கிறான். தொலைவில் ஒரு பாய் தெரிகிறது. ஏதோ ஒரு கப்பல் போவதற்கான அடையாளம் . அது தங்களைக் மீட்கும் என நம்புகிறான். அருகில் வரும் போது கை காட்டி தங்கள் அடையாளத்தைக் காண்பிக்க முடிவெடுக்கிறார்கள். அது அருகில் வரும்போதுதான் திமிங்கலம் எனத் தெரிகிறது. சூசை அவை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவை எனவும், நாம் சீண்டாமல் ஒன்றும் செய்யாது என்கிறார். அவர் கைகள் நடுங்குகின்றன. திமிங்கலத்தின் வால்தான் பாய் போல தெரிந்திருக்கின்றது. அது கடந்து போகும் போது சூசை சொல்கிறார் ‘இந்த மீன்கள் எல்லாங் குசும்பு பண்ண ஆரம்பிச்சா நம்மளால இந்தக் கடல்ல தொழில் செய்ய முடியுமாய்யா!’

மறுநாள் இருவரும் விழித்தபோது , இன்னும் தாங்கள் இருக்கும் உண்மை தெரியவர துன்பம் தொற்றிக்கொள்கிறது. சூசையின் மனம் பலவாறாகக் குழம்புகிறது; புலம்புகிறது. கடல் சுழிப்பெடுப்பதை அறிந்து சூசை கத்தையை சுழிப்பிலிருந்து தள்ளிவிட்டு தான் அதில் மாட்டி கடலுக்குள் செல்கிறார். சிலுவைத் தனியனாகிறான். மூச்சு மட்டும் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெரிய கப்பல் கேப்டன் கண்களில் பட்டு காப்பாற்றப்படுகிறான். மனம் முழுதும் தான் காப்பாற்றப்படுவதற்காக உயிர்விட்ட இருவரின் நினைப்பு மட்டும் இருக்கிறது.

மரணத்தை வெல்ல தியாகத்தால் மட்டுமே முடிகிறது.

1933: ஊகங்களில் எஞ்சிய உணர்வுகள்

ஆமந்துறை என்ற சிற்றூர். பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மூன்று தலைமுறைகளாக கிராமத்தில் ஏற்படும் மாற்றங்கள் இவர்களின் மூலமே பதிவாகியுள்ளது.  அங்கிருக்கும் பரதவர்கள் ஒவ்வொரு நாளும் கடலில் மீனுக்காகப் பயணம் செய்கின்றனர். கடல் சார்ந்த வாழ்வில் அவர்களின் துயரங்கள்,  உயிரிழப்புகள் ,போராட்டங்கள் , பொருளியல் ரீதியானச் சுரண்டல்கள், பாலியல் வெளிப்பாடுகள் என மிகப்பெரும் சமூகத்தின் எல்லா குணாதிசயங்களோடும் நாவல் 1933 லிருந்து நகர்கிறது.

சுரண்டல்களை எதிர்க்கொள்ள சிந்தனையற்று தங்களுக்குள் பிரிந்து உருவாக்கிக்கொள்ளும் வன்முறைகள் , நாடார்களுடன் ஏற்படும் மோதல்கள் என பரதவர்களின் வாழ்வு பதிவாகியுள்ளது.

இவர்கள் வாழ்வில் கிருத்துவ மதமும் காகு பாதிரியாரின் பங்களிப்பும் முக்கியமானது. பரதவர்களுக்கும் அவருக்குமான உறவும் பின்னர் அவர் பிரிவும் அவர்களுக்கிடையிலான ஆழ்ந்த அன்பினை வெளிப்படுத்துகிறது. பரதவர்களின் வாழ்வில் எல்லாச் சூழலிலும் உடனிருப்பவராக அவர் சித்தரிக்கப்படுகிறார். அவர் சொல்லுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது. ஏதோ ஒருவகையில் அவர் அம்மக்களுடன் தன்னை பிணைத்தே வருகிறார்.

அவர்களின் மத நம்பிக்கை மலேசியாவில் உள்ள கிருத்துவ மதத்துடனான உறவைச் சிந்திக்க வைத்தது. மனிதன் தொடர்ந்து கருணையைத் தேடிக்கொண்டிருக்கிறான். தன்னால் தடைசெய்ய முடியாத ஒரு அதிகாரத்திடமிருந்து சுரண்டலை எதிர்க்கொள்ளும்போது அவனுக்கு பாதுகாப்பு அளிக்க மதம் முன்வருகிறது. மதம் இதை ஒரு கொடுக்கல் வாங்கலாகச் செய்கிறது எனலாம். இன்னமும் மலேசியாவில் ஏழ்மை நிலைக்காரணமாக அரிசி, பருப்பு கிடைக்கும் என மதத்தை ஒரு வணிகமாகச் செயல்படுத்துபவர்கள் இருக்கவே செய்கின்றனர். அல்லது இப்படிச் சொல்லலாம் வணிகமாக இருக்கின்ற மதம் தன் பணியைச் செவ்வனே செய்கிறது.

000

இது ஜோ டி குருஸின் முதல் நாவல் என ஜெயமோகன் மூலம் அறிய முடிந்தது. அவர் தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி நாட்களில் மீனவர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியுள்ளார். இப்போது கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார்.

ஆழி சூழ் உலகு உருவான விதம் குறித்தும் ஜெயமோகன் சொன்னத் தகவல் சுவாரசியமானது.  சில கவிதைகளுடன் அவர் தமிழினி வசந்தகுமாரை சந்தித்துள்ளார். அவை வசந்த குமாருக்கு திருப்தி அளிக்காததால் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தபோதுதான் கடல் சார்ந்த அவரது மகத்தான அனுபவம் புரிய வந்திருக்கிறது. வசந்தகுமாரே அவரை நாவல் எழுத ஆர்வம் கொடுத்துள்ளார். வசந்தகுமாரின் ஆலோசனைகள் அவருக்கு உதவியாக இருந்துள்ளன.

பல தருணங்களில் அவர் நாவலின் அல்லது படைப்பிலக்கியத்தின் மிக முக்கிய தன்மையாக வாசகனின் யூகத்திற்கு வழிவிடுகிறார். எல்லாவற்றையும் சொல்ல அவர் மெனக்கெடவில்லை. சில சமயங்களில் ஒரு பகுதியின் இறுதிப்பாகத்தில் மிக உச்சமான ஒரு தருணத்தில் நிறுத்தி அடுத்தடுத்த சம்பவங்களுக்குத் தாவிச்செல்கிறார். பின்னர் இயல்பாக நாவலின் மற்றுமொரு பகுதியில் அதன் விளைவுகள் இடைவெளி இல்லாமல் பற்றிக்கொள்கின்றன. மேலும் 1933 ல் தொடங்கும் நாவலின் இடையிடையே 1985 காட்சிகள் வந்தாலும் அவை நாவல் கொண்டிருக்கின்ற எந்தப் புதிருக்கும் முதலிலேயே பதில் சொல்லவில்லை. ஒவ்வொரு பகுதியும் மிகச் சரியான இடத்தில் செருகப்பட்டிருக்கின்றன. இது கதையோட்டத்தில் நாம் காண்கிற மனிதர்களின் மனப் பரிணாமத்தை உணர வகை செய்கிறது. மிக முக்கியமாக சூசை.

ஊமையன் மற்றும் சாரா நினைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவனாக இருக்கிறான். நாவல் முழுதும்  வன்முறையுடனும் காமத்துடனும் வரும் அவனா உயிர்த்தியாகம் செய்கிறான் என வியக்க வைக்கிறது. தியாகம் சில சமயங்களில் மனம் கேட்கும் இரக்கமற்ற கேள்விகளுக்குச் சொல்லும் பதிலாகவும் மாறிவிடுகிறது.

அதேபோல வருவேல் பாத்திரம் . தன் தகப்பனுடன் உறவு கொண்டதால் தாய்க்குச் சமமாக நினைக்கும் ரோஸம்மாவிடம் உறவு கொண்டப்பின் வருவேலின் மன உளைச்சல் அடைவதும் அதிலிருந்து விடுப்பட முடியாமல் மீண்டும் மீண்டும் கொள்ளும்  உறவும் அதன் மனச்சிக்கலையும் ஆசிரியர் நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார் . இதில் ரோஸம்மா அவளுக்கே உரிய பாலியல் சுதந்திரத்துடன் செயல்படுகிறாள். தன் மகளை திட்டமிட்டு வருவேலிடம் இணைத்து அவளைக் கூட்டிக்கொண்டு ஓடச்சொல்வதுவரை அவளது வன்மம் செயல்படுகிறது.

அதிகம் பேசாமல் ஒரு ஏமாளிப்போல நாவலில் வரும் மேரி (சூசையின் மனைவி) நாவலின் இறுதியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். சுந்தரி டீச்சருக்கும் சூசையருக்கும் உள்ள இரகசிய உறவு மேரிக்கு  தெரிந்திருந்தாலும் எதுவும் தெரியாதது போலவே வந்து போகிறாள். இறுதியில் மீன் பிடிக்கச் சென்ற சூசையரின் நிலை அறியாமல் சுந்தரியைப் பார்த்து , “நம்மள விட்டுட்டு போயிருவாரா அக்கா…” என மேரி அழும்போதுதான் சுந்தரியோடு வாசகனுக்கும் புரிகிறது. அவள் வாழ்வைப் புரிந்து வைத்திருக்கிறாள்.

000

நாவலின் பக்கங்கள் 558. மிக நீண்ட வாழ்வனுபவத்தைக் கொடுக்கும் இதுபோன்ற நாவல்கள் வழியே மீண்டும் மீண்டும் மனிதர்கள் மேல் நம்பிக்கையும் அன்பும் வைக்க முடிகின்றது. நமது வாழ்வில் நாம் வெறுக்கும் ஒருவரை மீட்டும் மனதில் நிறுத்துப்பார்க்க வைக்கிறது. காலம் ஒரு மனிதனை மாற்றியமைக்கும் பெரும் சக்தி. யார் போதிக்காவிட்டாலும் அல்லது நாமே மறுத்தாலும் கண்ணுக்குத் தெரியாத ஓர் அற உணவை மையமிட்டே நாம் இயங்க வேண்டியதாக உள்ளது. அதற்கு பதில் சொல்ல வேண்டியதாய் உள்ளது. அதனோடு காலம் முழுவதும் போராட வேண்டியுள்ளது.
ஒரு மனிதன் ஒருவனாக இருப்பதில்லை. அவன் பல மனிதர்களைத் தனக்குள் கொண்டுள்ளான். அதில் நாம் காணும் ஒரு பகுதியை மட்டுமே வைத்து மொத்தத்தையும் முடிவு செய்ய வேண்டியவர்களாகி விடுகின்றோம். காலம் முழுதும் ஒருவனை கூர்ந்து அவதானித்து அவனை தீர்வு செய்வதென்பதும் நடவாத காரியம்தான். ஆனால் படைப்பிலக்கியங்கள் அதற்கான சாத்தியங்களை நமக்குத் தருகின்றன. நெடுங்காலத்தை சுருக்கிக் கைகளில் தருகின்றன. நமது இதற்கு முன்பான முடிவுகளை மீள்பார்வை செய்யத் தூண்டுகின்றன.

இந்நாவலை நான் ஆறு மாதங்களுக்கு முன் வாசித்த போது இவ்வாறான ஒரு மனநிலையில்தான் இருந்தேன். அவ்வுணர்வின் மீது எனக்கே சந்தேகம் இருந்தது. ஒரு நீண்ட நாவலை வாசித்த உழைப்பின் பெருமிதமா…அல்லது ஒரு பெரும் அனுபவத்தைக் கொடுத்த பிரதியின் பால் உண்டான ஈர்ப்பா என்ற குழப்பத்தில் நாவல் குறித்து அதிகம் பேசாமல் கொஞ்சம் ஒத்திப்போட்டேன். இவ்வாறான உணர்வுகளுடன் ஒரு பிரதி குறித்து பேசுவது அல்லது எழுதுவது வெற்றுக் கொண்டாட்டத்தை மட்டுமே பிரதிபலிப்பதாகப் போகலாம். ஆனால் மனதின் அடியாழத்தில் இருக்கின்ற ஒன்று இன்றும் இந்நாவல் கொடுத்த அனுபவங்களை மீட்டுணர்ந்தபடி உள்ளது.

அந்த ஒன்றின் பெயர் ஒருவேளை மனிதம் என்று இருக்கலாம்.

(Visited 292 times, 1 visits today)

2 thoughts on “மரணத்தை வெல்லும் மந்திரவாதிகள்!

  1. மிகத்தெளிவான அலசல், மிகக் கூர்மையான பார்வை,சாத்வீகத்தை எந்த முரண் நகையுமின்றி சொல்லத்தெரிந்த விமர்சனம். அருமை. வாழ்த்துக்கள்.

    அன்புடன், அம்மா.
    கமலாதேவி அரவிந்தன்

  2. In this world in the name of religion man does most wicked things.It could be christinity,islam ,buddhism or even hinduism.I wonder any religious teaching encourages on cheating,bribery or murder.Your observation on Christinity shows your limited knowledge on it or you have negative attitude on it.When the Christian missionaries started orphanage they gave education,food and dress.The great man Sigan Paul translated Bible into Tamil from Latin he translated Thirukural and Thirupayai into Latin.Like wise G.U.Pope translated Thirukural in German language.Father Feski who changed his name to Veerama Munivar wrote Thembavani Illakkiam. John Caldwell,mastered Tamil and did research on Dravadian languages said Tamil is senior language than any, he is known as Dravida Moligalin Thanthai (AK Paranthamanar,Nalla Tamil Elutha Venduma)
    Eresu Pathiriyar,came from Spain did research on Sindu Veli Nagareegam and proclaimed the the beauty Indian culture.
    Mr.Navin do you know who started the Uraidai Illakkiam in Tamil and the Tamil Dictionary?
    Ignorance is bliss in your case.
    The great Bharathiar,Bharathithasan,Agilan,Sandilyan,Kalgi,Jeyaganthan and even you wont be writing Tamil in this manner if not the missionaries introduced the urainadai illakiam.
    THAMBIRAN VANAKKAM is the first print out in Tamil,a christian song pave way for building paper mills in Tamil Nadu in the 17th centuary (P.Samy,19 Nootrandugalin Ithalgal)brought economic revival in Southern India.
    I can site more examples but its not necessary I guess.
    I suppose Mother Therasa is a liability in your observation as she fed the needy and gave food to the poor! Bear in mind she is a christian missionary as well
    I agree there are murderers,liars,rapist,smugglers in Christian community,but I would appreciate you,if could show me which part of Bible teaches one has to do all this!But there is a religion teaches on caste, so much so Mahatma Gandhi agreed with caste and said these are called Arijans or children of God.But Ambetkar the man who wrote the Indian constitution disputed this and became a buddhist missionary.(Crisis with Destiny, Paul Deltmann,1996)
    Her I come with facts I appreciate the same.

    Thanks

Leave a Reply to Justin from Petaling Jaya, Kuala Lumpur, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *