விஸ்கி மணியத்தின் சகாக்களும் சாமிவேலுவின் அடிவருடிகளும் காரணம் இல்லாமல் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சடங்கு பூர்வமான சர்ச்சைகள் போல, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை விமர்சிப்பதும் ஒரு குழு சார்ந்த அரசியலாக சில சமயங்களில் அதன் தலைவராலேயே வர்ணிக்கப்படும் ஆபத்து இந்தக் கட்டுரைக்கும் நிகழலாம். பல்வேறு சூழல்களில் எழுத்தாளர் சங்கத்தின் போக்கு குறித்து விமர்சித்ததின் பலனாக வரும் தொலைபேசி அழைப்புகளின் மூலம் காதில் இரத்தம் வழிந்ததுதான் மிச்சம். சுய புராணங்களும்… வெட்டிப் பேச்சுகளும்… அங்கலாய்ப்புகளும்… மிரட்டல்களும் வெளிபடுமே தவிர நிபுணத்துவத்தோடு அவர்கள் தரப்பு சார்ந்த தெளிவான விளக்கம் இதுவரையில் வெளிவந்தபாடில்லை. ஆச்சரியமாக நான் ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் எழுத்தாளர் சங்கத்தின் போக்கு குறித்து ஒரு நேர்காணலில் பதிவு செய்த எனது கருத்துகளுக்கு அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் பதிலுரைக்கும் விதமாக அதே ‘பெர்னாமா’ தொலைக்காட்சியில் சில கருத்துகளை முன் வைத்திருந்தார். அதில் ஒரு ஆய்வாளனுக்கே உரிய சில புதிய கண்டுபிடிப்புகளின் வழி தன் அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதில் அவர் எப்போதும் போல ‘எழுத்தாளர் சங்கத்தைக் குறை சொல்பவர்கள் சிறு கூட்டத்தினர்தான். அவர்கள் 6 அல்லது 7 பேர் மட்டுமே’ என கணக்கெடுப்பெல்லாம் செய்திருந்தார். தந்தை பெரியாருக்குப் பிறகு அதிகம் சிந்திக்கத்தூண்டும் கருத்துகளைக் கூறுபவர் இராஜேந்திரனாகத்தான் இருக்க வேண்டும். அந்த நேர்காணலில் அவர் முன் வைத்த கருத்திலிருந்து இந்தக் கட்டுரை:
எழுத்தாளன் என்பவன் யார்?
ஒரு சமூகத்தில் எழுத்தாளனாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்பவன் யார் என்பதை முதலில் அடையாளம் காண்பது முக்கியம். நானறிந்த வரையில் மலேசியாவில் தன்னை எழுத்தாளனாகக் காட்டிக்கொள்பவர்களை மூன்று வகையாகப் பிரித்துள்ளேன். முதல் தரப்பினரை அரசியல் கூட்டங்கள், வெகுசன கேளிக்கைகள், மிகையுணர்ச்சிப் பொங்கும் மேடைகள் என எங்கும் பார்க்கலாம். இவர்களால் இந்தச் சமூகத்துக்குப் பெரிதாகப் பலனில்லாதது போலவே ஆபத்தும் இல்லை. ஒரு சமத்தான பிரஜைகளாக இவர்கள் இருப்பார்கள். தங்கள் வாழ்நாள் முழுதும் அறிவின் மிக இளைத்தப் பகுதியை மட்டுமே நிஜமென நம்பி இருப்பவர்கள். எளிதில் எதற்கும் வசமாகிவிடுபவர்களும் இவர்களாகத்தான் இருக்க முடியும். அரங்கம் அதிர கைத்தட்டுவதும் அரங்கம் அதிர கைதட்டல் பெறுவதும் இவர்களாகத்தான் இருக்கும். உண்மையில் இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
இரண்டாம் வகையினர் மிக ஆபத்தானவர்கள். இவர்கள் தங்களைத் தீவிரம் மிகுந்த படைப்பாளர்கள் போல் காட்டிக்கொள்வார்கள். தனது கருத்தைக் காப்பிக்கடையிலும் காரிலும் தொலைபேசியிலும் மட்டுமே மிக இரகசியமாகப் பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரத்துக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் முன்வைக்க வக்கற்று அவர்களின் சமரசம் மீது இனிப்பை வைத்து மூடி விடுவார்கள். தாங்கள் நம்பும் பதவி, மதம், சடங்குகள், உணார்வுகள் என ஒன்றின் மீதும் இவர்களுக்குக் கேள்வி எழாது. ஆனாலும் முதல் குழுவினரைப் போலல்லாமல் ஆச்சரியமாக இவர்களின் படைப்பாற்றல் வீரியம் கொண்டிருக்கும். இவர்களை அதிகாரம் துதிபாடும் மேடைகளிலும் அதிகாரத்துக்கு எதிரான மேடையிலும் சம அளவில் காணலாம்.
மூன்றாம் தரப்பினர்களை உருப்படாதவர்கள் எனலாம். சீக்கிரம் உணர்ச்சிவயப்பட்டு கிடைக்கவிருக்கும் அத்தனை அனுகூலங்களையும் கெடுத்துக்கொள்வார்கள். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசி புண்ணாக்கிக் கொள்வார்கள். கொஞ்சம் முதுகு வளைந்தால் ஏதாவது தலைவரிடம் அறுபத்து இரண்டாயிரம் கிடைக்கும் என்பதை அறியாமல் அநாவசியமாக சண்டையிட்டு ஏற்கனவே குறுகியிருக்கும் இவர்கள் இன்னும் குறுங்கூட்டம் ஆவார்கள். இவர்களை நீங்கள் பார்ப்பது அரிது. அப்படியே இருந்தாலும் எங்காவது இறுதி இருக்கையில் அமர்ந்துகொண்டு பைத்தியங்கள் போல சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
ஆக, எழுத்தாளர் சங்கத் தலைவர் கூறியது முற்றிலும் உண்மை. ஒரு சமூகத்தில் சிந்திக்கும் எழுத்தாளன், நேர்மையான எழுத்தைப் பதிவு செய்யும் எழுத்தாளன், சமரசங்களை ஒதுக்கும் எழுத்தாளன், முதுகு வளையாத எழுத்தாளன் நிச்சயம் சிறு கூட்டத்தில் அடங்கியவனே. அந்தச் சிறு கூட்டமும் ஆழ் நிலையில் பல்வேறு முரண்பாடுகளுடன் இயங்கி இறுதியில் எழுத்தாளன் தனி மனிதனாக மட்டுமே அடையாளம் காணப்படுகிறான். அப்படி இருக்கையில் சொரணையுள்ள சிறு கூட்டத்தார் மட்டுமே அதிகார துஷ்பிரயோகத்திற்கும் சுரண்டலுக்கும் குரல் கொடுப்பது எந்த வகையிலும் ஆச்சரியம் இல்லாதது. வீசியெரியும் எலும்புத் துண்டுக்கு நாக்கு நீட்டி ஓட எல்லா எழுத்தாளனுக்கும் வால் முளைக்கவில்லை.
விருதும் எலும்புத்துண்டும்:
தனது நேர்காணலில் இராஜேந்திரன் வருத்தமடைந்த மற்றொரு விசயம் இன்னும் முக்கியமானது.
“இவர்களுக்கு ஏதும் விருதுகள் வழங்கினால் அதை வேண்டாம் என்பார்களாம். சரி, வேறு யாருக்காவது இவ்விருதுகளை வழங்கினால் ‘அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது அவர்களுக்குப் போய்ப் பரிசு கொடுக்கிறார்கள்’ என்று இந்தக் குழு குறை கூறுகின்றனர்.”
அண்மையில் நான் அறிந்து திருமதி க.பாக்கியம் மற்றும் மஹாத்மன் எழுத்தாளர் சங்கம் தருவதாக இருந்த விருதினை மறுத்திருந்தனர். மஹாத்மன் அந்த விருதை மறுக்கும் போது அவர் பணப்பையில் பத்து ரிங்கிட் கூட இல்லை என்பது நான் நேரில் கண்ட உண்மை. ஒரு விருதை மறுப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எழுத்தாளர் சங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாகவே இந்த விருதினை இவர்கள் மறுத்தனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நீங்கள் அணிவிக்கும் கிரீடத்தினால் சிலர் தலை அழுக்காகிறது எனச் சொல்வதில் உண்மையும் உள்ளது. வேறு வழியே இல்லை அதை பற்றி பேசத்தான் வேண்டும்.
தான் ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது 2005 தொடங்கி இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் என சங்கத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கவிதைக்காகச் சற்குணன் என்பவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கவிதை துறையில் சற்குணனுக்கான இடம் என்ன? இன்று அவர் எங்கே? அவர் எத்தனை கவிதைகளை (அட எண்ணிக்கையை விடுங்கப்பா) அல்லது எத்தனை தரமான கவிதைகளை இயற்றியுள்ளார்? அவரைச் சிறந்த கவிஞராக தேர்ந்தெடுத்த நீதிபதி யார்? அவரின் இலக்கிய பரிட்சயம் என்ன? சற்குணன் அக்காலக்கட்டத்தில் எழுதி பிரசுரமாகிய கவிதைகளின் தரம் அதன் போதாமைகள் குறித்து தலைவரிடமோ அந்த நீதிபதியுடனோ பொது மேடையில் நான் விவாதிக்கத் தயார். நீங்கள் தயாரா? ஒரு தனியார் தொலைகாட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சற்குணனால் தலைவருக்குச் சில காரியங்கள் ஆக வேண்டியிருந்தது என வெளியில் பலர் சொல்வதை நான் நிச்சயமாக நம்பவில்லை. எனது கேள்வி எளிமையானது. அதே காலக்கட்டத்தில் மிகத் தீவிரமாகக் கவிதை புனைந்து கொண்டிருந்த பா.அ.சிவத்திற்கு கவிதைக்கு விருது தராமல் சிறுகதைக்குக் கொடுத்தது எதை சமன் செய்ய?
இதே போல, 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தான் ஸ்ரீ மாணிக்கவாசம் புத்தக விருது சங்க தலைவர் மனைவியின் முதுகலை ஆய்வு நூலுக்கு வழங்கப்பட்டது. கணவர் தலைவராக இருக்க மனைவிக்கு விருது கொடுக்கும் அதிசயம் உலகில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் மட்டுமே நடந்துள்ளது. உலகப் பொதுவிதியில் எந்த ஒரு போட்டியிலும் போட்டி நடத்தும் அமைப்பின் குடும்பத்தார் கலந்து கொள்ள முடியாது என அடிப்படை சட்டம் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. அதைவிட அந்தப் புத்தகத்தின் தரம் குறித்து ஏற்கனவே நிறைய பேசியாகிவிட்டது. சலிப்படைந்தும் விட்டது.
நீங்களாக ஒரு புத்தகம் எழுத பணிப்பீர்கள்… அதை அச்சுக்குவிட்டு கருணாநிதியிடம் ஆசி வாங்குவீர்கள். அதை நீங்கள் நடத்தும் போட்டிக்கே அனுப்பி பரிசும் கொடுப்பீர்கள். அதை உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கவும் செய்வீர்கள். என்ன கொடுமை சார் இது!
இப்படி மலேசிய எழுத்தாளர் சங்க வரலாற்றில் இராஜேந்திரன் காலக்கட்டத்தில் தரம் குறைந்து போன விருதுகளைப் பெற அவர் சொன்ன சிறு கூட்டத்தில் ஆள் இல்லை. மாணிக்கவாசகம் விருது, ஆண்டு தோறும் ஐவருக்குத் தங்கப்பதக்கம், ஆண்டுதோரும் எண்மருக்கு தான் ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது என நீங்கள் தரப்போகும் விருதுக்கு ஆசைப்பட்டக் கூட்டம் மட்டுமே உங்களுக்கு ‘ஜே’ போடும்.
பின்நவீனத்துவம் – ஒழுக்கம் – பண்பாடு
அந்த நேர்காணலில் மிகுந்த சமுதாயப் பொறுப்புணர்வோடு மற்றொரு கூற்றையும் தலைவர் முன்வைத்துள்ளார். “ஒரு குறிப்பிட்ட சிறு குழுவினர் ‘பின்நவீனத்துவம், யதார்த்தம்’ எனும் போர்வையில் பண்பாட்டிற்கு ஒவ்வாதவற்றைப் படைப்பாக எழுதி, மலேசிய இலக்கியத்திற்கு இழிவையும் ஒழுக்கச் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றனர்”.
இந்தக்கட்டுரையை எழுதும் போதே தனிநபர் வாழ்வு குறித்து ஒன்றும் எழுதக் கூடாது என குலதெய்வம் மூலி முங்காலி மீது சத்தியம் செய்திருந்ததால் கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் ‘ஒழுக்கம்’ என்ற வார்த்தைக்கே தனி பத்தி எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். சரி, அதை விடுவோம். படைப்பிலக்கியத்திற்கு வருவோம்.
ஒரு தேர்ந்த எழுத்தாளரின் தொனியில் அமைந்திருக்கும் சங்க தலைவரின் குற்றச்சாட்டுக்கு முன் அவர் ‘பின் நவீனத்துவம் யதார்த்த இலக்கியம்’ போன்ற சொற்களுக்கு என்ன அர்த்தம் கொண்டிருக்கிறார் என அறிய ஆவலாக உள்ளேன். அதை எழுத்தின் மூலமாக விவாவதிப்பதெல்லாம் கால விரயம். மேலும் பலரையும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டும், அ.மார்க்ஸ், பிரேம் ரமேஷ், ஷோபா சக்தி, எம்.ஜி.சுரேஷ் போன்றோரை சிரமம் கொண்டு படித்து (அவரைச் சொல்லவில்லை; என்னைதான். எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் என்பதால் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார் என எனக்குத் தெரியாதா என்ன?) அதன் பிறகு விவாதிப்பதெல்லாம் காலத்திற்கு கேடு என்பதால் இருவரும் ஒரு பொது மேடையிலோ தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பிலோ உரையாடலாம். எனக்கு சந்தேகம் விளைவித்திருக்கிற மிக எளிய கேள்விகளுக்கு சங்க தலைவர் பதில் கொடுத்தால் கோடி புண்ணியம். ஆனால் இப்போது உறுத்துகின்ற ஒரு கேள்வியை மட்டும் இங்கு கேட்டு வைக்கிறேன். ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பும் சங்க தலைவர், நடிகைகளின் தொடைக்கும் தொப்புளுக்கும் வரிகள் அமைக்கும் வைரமுத்துவுக்கு மலேசியாவில் பாராட்டு விழா செய்ததும்; மலேசிய எழுத்தாளருக்கு இது வரையில் செய்யாத சேவையாக, அவர் நாவலை தனது செலவிலேயே வெளியிட்டதும் எந்தத் தார்மீகத்தில்?
பதில் இருந்தால் எழுத்துபூர்வமாக விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன். மற்றபடி எந்தத் தொலைபேசி பதிலுக்கும் செவி சாய்க்க முடியாது. காரணம் எங்களுக்குக் காலம் ‘உயிர்’ போன்றது.
வல்லினம் – ஜனவரி 2010
பல இடங்களில் உங்கள் ஆதங்கம் வெளிப்படுகின்றது.
எல்லாம் சரி. ‘கரிகாலச் சோழன் விருது’ என்ற எலும்புத் துண்டை கே.பாலமுருகன் ஏன் கவ்வினார்?
விநோதன் கண்ணன், முதலில் ‘கரிகாலச் சோழன் விருது’ எழுத்தாளர் சங்கத்தால் தரப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ராஜேந்திரன் ஏதோ அவ்விருது தன்னால்தான் உருவாக்கப்பட்டது போல காட்டும் பாவனையை எல்லாம் பார்த்துவிட்டு இங்கு வந்து பதிவிடவேண்டாம்.
super nettiyadi…. avar pakkam niyayam irunthal yeluttu poorvamage bathil sollatummeh!
This is good..without fear and favour!I may dont know much about Tamil writers and its sangam but you have observed rightly I suppose.
One thing is obvious every guy wanted to please the politician!
I think it is proper to honor a writer or a poet! Mr.Vairamuthus poems may be sexy,just like Kannathasan, ironically there is a Kannathasan vila!
May be you are looking for discipline poems and poets like Barathiar
only time can answer this…
VALGA TAMIL