இந்த எதிர்வினையை எழுதுவதற்கு முன் மிகக் குறைந்த சொற்களை மட்டுமே பயன்படுத்தும் திறன் வாய்க்க வேண்டுமென எனக்குள் ஒருமுறை கூறிக்கொள்கிறேன். சிலருக்கு அதிகச் சொற்களைப் பயன்படுத்துவது விரயம்.
பா.அ.சிவம் அண்மையில் வெளிவந்த மௌனம் இதழில் சை.பீர்.முகம்மதுவை நேர்காணல் செய்திருந்தார். சை.பீர் அதில் தனது கருத்துகள் பலவற்றைப் பதிவு செய்திருந்தார். அதில் உள்ள சில மாற்று கருத்துகள் குறித்து பாலமுருகன் தனது வலைத்தளத்தில் கூறியுள்ளதால் நான் அது பற்றி கூற அவசியம் இல்லை. http://bala-balamurugan.blogspot.com/2011/06/blog-post.html
பொதுவாக அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் வேண்டுமென எதிர்ப்பார்ப்பவன் நான். அவ்வகையில் அவர் கருத்துகளைக் கூற அவருக்கு எல்லாவகை உரிமையும் உண்டு. சை.பீர் முகம்மது கூறியுள்ள பல்வேறு கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அதுபற்றி மாற்று கருத்து வைப்பதில் எந்த அவசியமும் இல்லை என நினைக்கிறேன். அக்கருத்துகளில் பலவும் சத்தற்றவை என்ற நிலையில் அவை குறித்தெல்லாம் பேச நான் சில வருடங்கள் பின் தங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் இதை நான் எழுதுவதற்கான மிக முக்கிய காரணம் அவர் இணைய இதழ்கள் குறித்து முன்வைத்த கருத்து தொடர்பானது.
அந்த நேர்காணலில் ‘இலக்கியம் மட்டுமே புரியும் அல்லது படைப்புகள் மட்டுமே முன்னிருத்தும் செயல்பாடுகள் பின்னர் வல்லினத்தில் தொடரப்படவில்லை. அவை விமர்சனம் என்ற பெயரில் தாக்குதல் செய்கின்றன’ என வருத்தம் தெரிவித்திருந்தார். நியாயமான கவலைதான். இந்நிலையில் அநாவசியமாக நான் சில ஆண்டுகள் பின் நோக்கி பார்க்க வேண்டியுள்ளது. 2009ல் சை.பீர் முகம்மதுவின் சிறுகதை தொகுதி வெளியீடு கண்டது. அப்புத்தகத்தின் முன்னுரையில் மார்க்ஸ், பெரியார் , சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ என தனது முன்மாதிரிகள் குறித்து எழுதிவிட்டு, மேடையில் சாமிவேலுவைப் போற்றிப் புகழ்ந்து கூனி குறுகி நின்றார். (என்ன பேசினார் என விரிவாக காண http://www.vallinam.com.my/issue9/column1.html)அச்சமையத்தில் சை.பீர் எழுதுவதெல்லாம் உண்மைதான் அவர் இலக்கிய ஆளுமை என்பது அதிகாரத்துக்கு எதிரானதுதான் என நம்பியிருந்ததால் எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இந்தச் சமூகம் எழுத்தாளனை மதிப்பதில்லை என முழங்கும் சை.பீருக்கு இந்த மலிவான செயல்கள்தான் அதற்கு காரணம் என விளங்க வைக்க (சை.பீருக்கு மட்டுமல்ல… அது போன்ற எழுத்தாளர்கள் அனைவருக்குமே ) அந்த இதழில் 3 கட்டுரைகள் பிரசுரமானது.
அதேபோல பேரவை கதைகள் போட்டிக்கு கோ.புண்ணியவான் ஏற்கனவே மக்கள் ஓசையில் அனுப்பி பிரசுரமான கதையை மீண்டும் போட்டிக்கு அனுப்பி முதல் பரிசை பெற்றார். காரணம் கேட்டதற்கு அவசரத்தில் நடந்த தவறு என்றார். எனவே எதிர்வினை ஆற்றினோம். http://www.vallinam.com.my/issue17/ilakiyamosadi.html
என் நினைவில் இவை இரண்டுதான் வல்லினம் தீவிரமாக எழுத்தாளர்கள் மேல் முன்னெடுத்த சர்ச்சைகள். இது தவிர மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பிற்போக்குத்தனம் குறித்தும் அவ்வபோது எதிர்வினையாற்றி வருகிறோம். அதோடு சமகால இலக்கியம், அரசியல் சார்ந்த விவாதங்களை மாற்றுக்கருத்துகளை வெவ்வேறு வடிவங்களில் வல்லினம் பதிவு செய்தே வருகிறது. சை.பீர் சொல்லியிருப்பது போல ஒரு ஆரோக்கியமான இலக்கிய சூழல் வளர படைப்பிலக்கியம் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பது எந்த இலக்கிய ஆய்வாளரின் கருத்து என தெரியவில்லை. பல்வேறு அரசியல், இலக்கியம், தத்துவங்கள் சார்ந்த விவாதங்கள், மாற்று கருத்துகள் எனத்தொடங்கி வல்லினம் தனது செயல்பாடுகளை அதிகாரத்துக்கு எதிரானதாகவே செயல்படுத்தி வருகிறது. மேற்கண்டவாறு ஓர் இலக்கியச் சூழலில் நடக்கும் முரண்களையும் மோசடிகளையும் வெளிப்படுத்துவது , பொதுவில் விவாதிப்பது வல்லினத்தின் பலவீனமாக சை.பீரோ அவரைப்போன்ற எழுத்தாளர்களோ கருதினால் அதை வல்லினம் தொடர்ந்து செய்யும்.
இந்நிலையில் மற்றுமொரு கருத்தையும் சை.பீர் வைத்திருந்தார். சை.பீர் சிறப்பிதழ் வெளிவரும் பட்சத்தில் , நான் அதில் எழுதப்போவதில்லை என மிரட்டியிருந்ததாகவும் நான் எழுதாமல் போனால் மௌனம் விற்பனை பெரிய அளவில் நஷ்டப்படும் எனவும் கிண்டல் செய்திருந்தார். பொதுவாகவே இலக்கிய சூழலில் இதுபோன்ற கிண்டல்களெல்லாம் சகஜமானதுதான். ஆனால் அதில் ஒரு உண்மை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் நான் எழுதியதாகக் குறிப்பிட்ட கட்டுரை இதுதான் : http://vallinam.com.my/navin/?p=442
சிற்றிதழ்கள் கொண்டிருக்க வேண்டிய தீவிர அரசியல் பார்வை குறித்த என் கருத்துகள் அவை. இக்கருத்தில் இன்னும் அழுத்தமாகவே இருக்கிறேன். இதில் எந்தச் சமரசமும் இல்லை.
சை.பீர் என்குறித்தும் வல்லினம் குறித்தும் முன்வைத்த தவறான கருத்துக்கு மட்டுமே மேற்கண்ட எதிர்வினை. உண்மையில் நான் தொடுக்க வேண்டிய வினாக்கள் தேவராஜனை நோக்கியது.
உண்மையில் உங்கள் இலக்கிய நிலைபாடு என்ன? ஒருவர் எவ்வகை சுரண்டல் அல்லது மோசடிகள் செய்தாலும் அவர் எழுதுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை உங்கள் இதழில் முன்னெடுக்கத் தயங்க மாட்டீர்கள் இல்லையா? ஒருவர் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து வெளியில் வந்து பெண்ணியம் பேசினால் உங்களுக்குப் போதுமானதா? இதுதான் உங்கள் அரசியல் பார்வையா? எழுத்து மட்டுமே இலக்கியம் என்கிறீர்களா? அதை தாண்டி ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய தார்மீகம் குறித்து உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
ஒரு சிற்றிதழ் ஆசிரியருக்கும் வணிக இதழாசிரியருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சிற்றிதழ் என்பதே குறிப்பிட்ட ஓர் அரசியல் நோக்கத்தில் முனைப்பாக இருந்து அதை முன்னெடுப்பதுதான். அவ்வகையில் சை.பீர் சமகாலத்தில் இலக்கியம் நோக்கி தீவிரமாய் இயங்கும் வல்லினம் குறித்து அவதூறு செய்துள்ளார். வல்லினத்தில் எழுதும் உங்களுக்கு அந்தக் கருத்தின் பலவீனம் தெரியவில்லையா? ஒரு நேர்காணல் செய்பவராக சிவம் அக்கருத்து குறித்து மேலும் சில கேள்விகள் கேட்டிருக்க வேண்டும். பதில்களை ஒட்டிய கேள்வியின் மூலம் அடுத்தடுத்த தளங்களுக்குச் செல்லுதல் ஒரு நேர்காணல் செய்பவரின் ஆற்றலைப் பொறுத்தது. சிவத்துக்கு அது இல்லாத நிலையில் நீங்கள் ஒரு இதழாசிரியராக அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எழுத்துப்பிழை பார்த்து அச்சாக்குவது மட்டும்தான் ஒரு இதழாசிரியரின் கடமை என்ன எண்ணியிருந்தால் உங்கள் பலவீனம் குறித்து நான் பரிதாபம் மட்டுமே படுகிறேன்.
சை.பீர் அதில் ‘நவீன் எழுதாவிட்டால் மௌனம் விற்பனை குறைந்து விடுமா ‘ எனக் கேட்டுள்ளார். நீங்கள் அக்கருத்தை அனுமதித்துள்ளீர்கள். நல்லது உங்கள் விருப்பம் புரிகிறது.
உங்களிடம் ஓர் இதழாசிரியனுக்கான எவ்வகை அழுத்தமான நிலைபாடும் இல்லாத பட்சத்தில் ஓர் எழுத்தாளனாகவாவது நீங்கள் சை.பீர் கருத்துக்கு மாற்றுக்கருத்தை உங்கள் இதழில் முன்வைப்பீர்கள் என நம்புகிறேன் . இதழாசிரியர் பொறுப்பில் நிகழ்ந்த உங்கள் தவறுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லாத பட்சத்தில் இலக்கியம் என நீங்கள் நம்பும் ஒன்றை தொடர்ந்து செய்யுங்கள். மரணங்களைப் பார்த்து மறத்துவிட்டது.