இலை மறைவில் புது உயிர்கள்!

21-5-1964-ல் தமிழ் முரசு பத்திரிகையில் முதல் புதுக்கவிதை தோன்றியதாக வரலாறு சொல்கிறது. `கள்ளபார்டுகள்’ என்ற கவிதையை எழுதிய சி. கமலநாதன் பெயர் தொடர்ந்து எல்லா புதுக்கவிதைத் திறனாய்வு கட்டுரைகளிலும் இடம்பெற்று விடுகின்றது. இன்னும் சிலர் அது `கள்ளபார்டுகள்’ இல்லை `காலப்படகுகள்’ எனவும் கூறிவருகின்றனர். அவர் காலகட்டத்தில் புதுக்கவிதைகள் எழுதியபைரோஜி நாராயணன், எம். துரைராஜ், போன்றோர்களின் படைப்புகளும் முறையான பதிவில் இல்லாமல் எங்கோ ஓர் அலிபாபா குகைக்குள் அடைந்து கிடக்கிறது. இப்படி ஆரம்பமே ஆதாரங்கள் குறைந்திருக்கும் புதுக்கவிதை வரலாறு நமக்கு.

புதுக்கவிதைக்குத் தமிழ்மலர் ஒரு தொடக்கமாக இருந்தாலும் 1977ஆம் ஆண்டு `வானம்பாடி’ வார இதழாக வெளிவந்தபோதே இயக்கமாக வளர்ச்சி கண்டுள்ளது.

எம்.ஏ.இளஞ்செல்வன், இராஜகுமாரன், அக்கினி, சீ.முத்துசாமி, கு.கிருஷ்ணன், கோ.முனியாண்டி, துரை முனியாண்டி போன்றோர் புது உத்வேகத்துடன் புதுக்கவிதைகள் படைக்கப் புறப்பட்டனர். மே 1979-ல் நெருப்புப்பூக்கள் (எம்.ஏ. இளஞ்செல்வன்), புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள் (ஆகஸ்டு 1979ல் எம்.ஏ. இளஞ்செல்வன்) கோலங்கள் (அக்டோபர் 1979ல் இரா தண்டாயுதம்), கனா மகுடங்கள் (1984ல் அக்கினி) உணவும் உறவும் (1985ல் ஏ.எஸ்.பிரான்சிஸ்) கல்வெட்டுகள் காத்துக் கிடக்கின்றன (டிசம்பர் 1986ல் ஏ.எஸ். பிரான்சிஸ்) ஆகிய 6 தொகுப்புகள் அக்கால கட்டத்தின் புதுக்கவிதைகளைப் பதிவு செய்திருப்பது ஆறுதல்.

இவர்களுக்குப் பிறகு ம.சண்முகசிவா, வே.ராஜேஸ்வரி, நாகராஜன், சு.முருகையா, த.விஜயநாதன், முகிலரசன், ஜெக வீரபாண்டியன், ச.சுந்தரம்பாள், கோ.புண்ணியவான், சு.கமலா, சி.அருண், பா.ராமு, கு.கோபாலன், க.உதயகுமார், ந. பச்சைபாலன், ஏ.தேவராஜன், கு.தேவேந்திரன், பெ.ச.சூரியமூர்த்தி, எம்.சேகர் (சிலர் பெயர் விடுபட்டிருக்கலாம்) என ஒரு நீண்ட பட்டியலும் தொடர்ந்து வந்தது.

இப்படி 42 ஆண்டுகள் எண்ணற்ற கவிதைகளும், கவிஞர்களும் நமது நாட்டில் உதயமாகியபடிதான் இருந்துள்ளனர். ஆனால் இந்த 42 ஆண்டுகளில் கடந்த 2 ஆண்டுகளாகத்தான் கவிதை உருவாவதற்கான சாத்தியங்களை நாம் நெருங்கி வந்துள்ளதாகத் தோன்றுகிறது. இவற்றை குறையாகவும் கருத முடியாது. யாப்பு எனும் கட்டமைப்பிலிருந்து வடிவ ரீதியிலான மாற்றத்தைக் காட்டவே வானம்பாடிக்கு முந்தைய, மற்றும் வானம்பாடிகாலக் கவிஞர்களின் தலையாய நோக்கமாக இருந்துள்ளது. பிரச்சார நெடியுடன், மிகுந்த உரத்த குரலில் மக்களிடம் தங்கள் கருத்துகளை முன் வைக்கும் வானம்பாடிகால கவிஞர்களில் முக்கியமானவரான எம்.ஏ. இளஞ்செல்வன் சொல்கிறார்.

`…புதிய நெம்புகோல்களால்
உலகைப் புரட்டக்
கிளம்பிவிட்ட
வானம்பாடிகளுக்கும்
அவர்களின்
நெம்புதல்களுக்குப்
பின்பலம் கொடுக்கும்
வானம்பாடிக்கும்…..’

ஆக இக்கால கட்டத்தின் கவிஞர்கள் (தமிழக வானம்பாடி கவிஞர்களின் சீடர்களாக உருவெடுத்து) படிமங்களையும், குறியீடுகளையும் அங்கதத் தொன்மங்களையும் கருவிகளாகப் பயன்படுத்தி அதன் மூலம் சொல்ல வருபவற்றை அழகுபட உரைக்க தொடர்ந்து முனைந்தார்கள். மரபுக் கவிஞர்கள் எதை யாப்பு எனும் சட்டத்திற்குள் அடக்கி சொன்னார்களோ அதையே படிமக் குறியீடுகளில் புதுக்கவிதையும் செய்து கொண்டிருந்தது. இப்படி ஒட்டுமொத்தமான ஒரு சமூகத்தின் குரலாக உயர்ந்து ஒலித்தாலும், அவை அக்காலத்தின் தேவையாகவும், ஆரம்பகால சில பலவீனங்களாகவும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இன்னும் கூறப்போனால்,

தாயுமின்றி தந்தையுமின்றித்
தப்பால் பிறக்கும் ஒரு குழந்தை
தாளமுமின்றிக் கோளமுமின்றித்
தவறாமல் பிறப்பது புதுக்கவிதை
சாலை விதியை சமிக்ஞை விளக்கை
சாரத்தோடும் புதுக்கவிதை
நாளும் செறிந்த நமக்குள் வழக்கை
நாசமாக்கட்டும் புதுக்கழுதை
– தீப்பொறி

போன்ற மரபுக் கவிஞர்களின் வசவுகளுக்கும் இந்த உச்சந்தொனி புதுக் கவிஞர்களுக்குத் தேவைப்பட்டிருக்கலாம். … இப்படி என்னையே நான் சில சந்தர்ப்ப நெருக்கடி சூழல்களைக் காரணங்களாக முன் வைத்து சில சமாதானங்களை செய்து கொண்ட பின் தொடர்ந்து சில கருத்துகளையும் முன் வைக்க வேண்டியுள்ளது.

இந்நாட்டில் புதுக்கவிதை எனும் வேரினை ஆழ பதிந்து அதை விட்டுச் சென்ற வானம்பாடி கவிஞர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் (வானம்பாடிக்குப் பிந்தைய கால கவிஞர்கள்) அவர்களைப் பின்பற்றியோ அவர்களைவிட பிரச்சாரமாகவே தொடர்ந்து `கவிதை’ என்று எதையோ எழுதி வந்துள்ளனர். கோ.புண்ணியவான், சு.கமலா, ப.ராமு, க.உதயகுமார், துரைராஜு முனியன், ந.பச்சைபாலன், கு.தேவேந்திரன், பெ.ச.சூரியமூர்த்தி (சிலர் பெயர் விடுபட்டிருக்கலாம்) என தொடரும் ஒரு நீண்ட பட்டியலில் சிலர் மட்டுமே சில வரிகளில் கவித்துவத்தை அடைவதற்கான சாத்தியங்களை நோக்கி நகர்கின்றனர். மற்றபடி பலரது பல படைப்புகள் பத்திரிகை இடைவெளிகளை நிரப்புவதற்கும் இதழ் ஆசிரியர்கள் தொப்புள் படங்களை உபயோகிக்கவும், காதல் வரிகளுக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் மொழி போதாமையை நிவர்த்தி செய்யவும், மிக பெரிய உதவிகரம் நீட்டுகின்றன.தமிழ்க்கவிதையின் வளர்ச்சி எங்கோ முன்னேறி சென்று விட்ட நிலையில் இன்றும் நமது ஏடுகளில் கவிதைப்பக்கங்களில் நிரம்பியிருக்கும் சில உயிர்,மெய்,உயிர்மெய் எழுத்துகள் உயிரற்ற எறும்புகளாய் அசையாது கிடக்கின்றன.வாழ்வைப் பற்றிய ஆழ்ந்த பார்வை இல்லாது,சிந்திக்க பயந்து,பிறர் கூறிச்சென்றதை தன் கருத்துகளாக்கி,தன்னுணர்வில் எந்த கவனமும் இல்லாமல் எழுதப்பட்டதெல்லாம் கவிதையாகிவிட்டது நமது நாட்டில்.

நினைக்கும், கேட்கும், பார்க்கும் சம்பவங்களைப் பதிவு செய்ய வார்த்தைகளைத் தேடி பிரயோகிக்கும் இயந்திரத் தன்மையுடனே 16 ஆண்டுகள் காலம் கடத்தி உள்ளனர். கணிதம் செய்வது போலவோ,கார் ஓட்டுவது போலவோ இயந்திரத்தனமாய் எல்லைகளற்ற இந்த வாழ்வின் இருண்ட பகுதிகளுக்குள் பிரவேசிக்காமலேயே வாசகனின் கீழான ரசனையை கவர்ந்திழுப்பதிலேயே வார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன. மனித மனம் கொண்டுள்ள சின்ன சின்ன சிடுக்குகளின் பூதாகரமான பிரளயங்கள் இவர்கள் கால கவிதைகளில் காட்சி கொடுத்ததா என்பது கேள்விகுறி. இன்னும் கூறப்போனால் இவர்களின் காலக்கட்டத்தில் தொடர்ந்து வரிகள் (கவிதைகள்) எழுதப்பட்டு பசிக்காத பிள்ளைக்கு உணவு ஊட்டியே கொல்வதுபோல தமிழ்க்கவிதைகளின் நகர்ச்சியினை கொன்று விட்டனர். தொடர் வாசிப்பின்றி, சுய சிந்தனையின்றி , வாழ்வை எந்த வித விசாரணையுமின்றி எதிர்கொண்டிருக்கினறனர். வழக்கமான உணர்வுகளையே மீண்டும் மீண்டும் எழுதி, மிக நுணுக்கமாய் நமக்குள்ளிருந்து அவ்வப்போது தலைகாட்டி மறையும் சில அதிர்வுகளைக் கூர்ந்து கவனிப்பதில் தைரியம் இழக்கின்றனர்…கவனிக்கையில் மொழியின்றித் தவிக்கின்றனர். தமிழக இலக்கியவாதிகளின் கூற்றுகளை வேதமாக ஏற்று அதைப் பின்பற்றி போகும் ஒரு கூட்டமும் இன்று நம்மிடையே உருவாகி விட்டது. தமிழக கவிஞர்களும் எழுத்தாளர்களும் அவரவர்களுக்கான தனிப்பட்ட இலக்கிய ஆளுமைகளை அவரவருக்கான இலக்கிய உலகினை உருவாக்கி, தொடர் விவாதங்களின் வழி வெவ்வேறு கட்டங்களைத் தாண்டிக்கொண்டிருக்கின்றனர். அவற்றில் எது சரி…எது தவறு என ஆராய்வதோ அக்கருத்துகளை நமதாக்கி ஒப்புவித்து `அறிவாளி’ பட்டம் பெற்றுக்கொள்வதோ இலக்கியத்திற்கு தேவையில்லை என கருதுகிறேன். “கவிதையை ஒட்டிய சுய அடையாளமோ… ஆழ்ந்த பார்வையோ நமது எழுத்தாளர்களிடம் உருவாகும் வரை ஆக்கப்பூர்வமான விவாதங்களும் விமர்சனங்களும் நம்மிடம் எழ வாய்ப்பு இல்லை. இன்னும் இருபது வருடங்கள் ஆனாலும்…….என ஜெயமோகன் குறிப்பிடுகிறார்,” ….என மனுஷ்ய புத்திரன் கூறுகிறார் என்று கூறியே பாதுகாப்பாய் இருந்துவிட்டுப் போகலாம்.

மேற்கொண்டு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பது போல அரைத்த மாவையே அரைத்து, பழைய படிமங்களையும், தட்டையான மொகேளையும் அடுக்கி வைத்து அதையும் நமது விமர்சகர்கள் “ஆஹா…ஹோ ஹோ…” என புகழும் அவலம் இன்று வரை அரங்கேறி கொண்டிருக்கிறது.

இவர்களின் சீடர்களாக புறப்பட்ட நான்காம் தலைமுறை கவிஞர்களான அகிலன்,பூங்குழலி, ப.ஆ.சிவம், ம.நவீன், சிவா, சந்துரு, தோழி,யோகி,கி.உதயகுமார் போன்றவர்களும் பழைய பாதத் தடங்களைப் பின்பற்றி பத்திரமாய் செல்வதாகவே தத்தம் கவிதை பயணத்தைத் தொடங்கினர். வெறும் உணர்ச்சிகரமான வார்த்தைகளால் மிக அழகான உயிரற்ற பெண்ணை தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தனர். இந்நிலை இப்போது மாற்றம் கண்டுள்ளது கொஞசம் ஆறுதல். ஒரு கவிதை உருவாவதற்கான சாத்தியங்களையும் கவிதைக்குள் அமைந்துள்ள நுட்பமான உலகையும், குறைந்த பட்சம் அறிந்துள்ளனர். மிக முக்கியமாக கவிதைக்கும் கவிதை அல்லாததுக்குமான வேறுபாடுகளைப் புரிந்துள்ளனர். ஆனாலும் இவர்களின் இந்த அறிதலும் வருங்காலத்தில் கவிதை திட்டமிடப்பட்ட ஒன்றாக வெளிப்படும் சாத்தியங்களை கொண்டுள்ளது. இதற்கு முன்பு இருந்தவர்கள் வைரமுத்துவையும், மேத்தாவையும் பின்பற்றினார்கள் என்றால் இவர்கள் மனுஷ்ய புத்திரனையும், யுவனையும் பின்பற்றுவது போல தோன்றுகிறது. ஆனாலும் அந்த ஓடைக்குச் செல்லும் பாதையை விட இந்த நதிக்கு செல்லும் பாதையில் சில நம்பிக்கைகளும் திருப்தியும் ஏற்படுகின்றன.

நமது நாட்டு கவிகள் இன்னமும் அந்தச் சொல் அலங்காரத்திலிருந்து வெளிப்படாமல், பழைய வார்த்தைகளுக்குப் புதுச்சாயம் அடித்தப்படியே இருக்க, கவிதை உறவுடனான சில நவீன புதியக் குரல்கள் நமது நாட்டிலும் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியிருப்பது …ஆழ்ந்த சோர்வில் இருந்த கவிதை முகத்தின் மேல் ஒரு கைப்பிடி நீர் அள்ளி `சரேல்’ என அடித்தது போல் உள்ளது. ஒரு வாசகன் என்ற முறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் இந்த மாற்றத்தினை என்னால் அதிகம் உணர முடிகின்றது. எங்கிருந்து தொடங்கிற்று இப்பயணம்? என்ற கேள்விக்குப் பதில் காண முடியாவண்ணம்,மொட்டாய் இருக்கும் ஒன்று மிக இரகசியமாய் மலராவதுபோல் இன்று இளம் கவிகளாலான ஒரு பட்டாளம் நவீன கவிதையின் கால கட்டத்தை இந்நாட்டில் தொடங்கியிருப்பது வரலாறு. இது இந்நாட்டு இலக்கிய வாதிகளால் இப்போது அறியப்பட வாய்ப்பு இல்லை. அவர்கள் இந்நேரம் வைரமுத்துவையோ…ப.விஜயையோ படித்துக் கொண்டிருப்பார்கள். (அது அவர்களின் நிலை, ஈடுபாடு. அதைப்பற்றி நாம் கருத்துக் கூற முடியாத பட்சத்தில்…அவர்களும் இந்நாட்டுக் கவிதைகள் வளர்ச்சி அடையவில்லை என கருத்து தெ(ரியாமல்)ரிவிக்கக்கூடாது என்பது என் எதிர்பார்ப்பு)

ஆங்காங்கே தனி நபர்களாக இயங்கிக்கொண்டிருந்த இந்நவீன கவிஞர்கள் `காதல்’ இதழ் தோற்றத்திற்குப் பின்னர் ஒரு இயக்கமாக உருவெடுத்தனர் என்று தாராளமாகக் கூறலாம்.
கடந்த ஆண்டு வெளியீடு கண்ட அகிலன் மற்றும் சிவத்தின் கவிதைத் தொகுப்புகள் இளம் எழுத்தாளர்கள் மொழியின் மீது புகுத்தியிருக்கும் புதிய அர்த்தங்களுக்கும் வாழ்வின் யதார்த்த நிலைகளை வெளிப்படுத்தும் அவர்களின் கவிதைப்போக்குக்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

`கைககோர்த்தபடி ஒன்றாகச்
சென்றோம்…
எனது சொல்லும்
உனது சொல்லும்
ஒவ்வாத நிலையிலும்’ என சிவம் கூறும் போதும்

`நானே அர்த்தங்களாய்
விரிகின்ற இன்பம்
இந்த மொழிகளின் உலகில்
கிடைப்பதில்லை’ என்ற அகிலனின் குரலும்

`ஜன்னல் பழையதுதான்
என்றாலும்
புதிதாய் எதையாவது பார்க்க
நேர்ந்துவிடுகிறது’

என தோழியும் கூறும்போது இம்மியளவும் போலியான முகங்களை என்னால் அதில் காண முடிவதில்லை.இவர்களை கவிதையினூடே நெருங்கிச்செல்ல இந்த உண்மை முகம் உதவுகிறது.ஆனாலும் கவிஞர்கள் தங்கள் சட்டைப் பையில் சில அறிவுரைகளையும்,தத்துவங்களையும் சுமந்து கொண்டிருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கும் பலரின் வசவுகள் இன்று சாபங்களாக உருவெடுத்துள்ளன. தனித்து வாழும் தாய்மார்கள்,அனாதைக் குழந்தைகள்,ஜாதி ஒழிப்பு,மதுவைத் தொடாதே என அவர்கள் மனதில் கொண்டிருக்கும் தலைப்புகளுக்கு வசப்படாத மொழியில் உருவாகியுள்ள கவிதைகள் இம்சையாகப் பலருக்குத் தோன்றுகிறது.தொடர்ந்து கவிதைக்கான அர்த்தங்களைக் கோரியும் விளக்கங்களை வினவியும் சளிப்படைந்த நிலையில் இந்தப் புதிய தலைமுறையினரை `குறுங்கூட்டம்’ என்ற அடைமொழியுடன் சிலர் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

‘ஒருமுறை
எங்கிருந்தோ வந்த புயலின் வீரியத்தை
சமாளிக்கத்தெரியாத
அறையின் கூரை
கழன்று பறந்தது.

இல்லை என நான் நினைத்திருந்த
கதவுகளும் ஜன்னல்களும்
தன்னை வெளிகொணர்ந்தன’

என யோகி கூறுகையில் அக்காட்சி எனக்குள் ஏற்படுத்தும் ஒரு கலவையான உணர்வு நிலையை பற்றிக்கொண்டு என் வாழ்வின் இண்டு இடுக்குகளில் மீண்டும் ஒருமுறை புகுந்து மறுபார்வை பார்க்க முடிகிறதே தவிர வார்த்தைகள் கொடுக்கும் அர்த்தங்களை சேகரிப்பதில்லை. ஒரு ஆசிரியர் குணத்துடன் காட்சிகளை தட்டையாகவே கவனிப்போர்க்கு

`புன்னகை முற்றிலும் தொலைத்தவர்
சாலையோரத்தில் உதிர்ந்த
பூக்களையும் இலைகளையும்
ரசனையற்று பெருக்கிக்கொண்டிருக்கிறார்’ – சந்துரு.

போன்ற கவிதை கொடுக்கும் அழகியலை நெருங்கவே முடியாமல் போய்விடுகிறது.

கைரேகைகள் போல எத்தனை வகையான மனிதர்கள்…வாழ்க்கை முறைகள். அவரவருக்கான உலகத்தின் அனுபவங்களும் நியாயங்களும் வாழ்வு பற்றிய புரிதல்களும் கொடுக்கும் விசித்திர உணர்ச்சி மாற்றங்களே மீண்டும் மீண்டும் கவிதை உலகில் பயணிக்க உதவுகிறது.

`வாழ்க்கையென்று
பிரத்தியேகமாய் ஏதுண்டு?
கவிதையினூடே
வாழ்ந்துகொண்டிருக்கிற
இறந்த கால நிமித்தங்கள் தவிர’ – பா.அ.சிவம்

`கடவுள் கேட்கிறோம்
வாழ்வு முழுவதும்
பேய்களாய் அழைகின்றோம்’ -அகிலன்

`வாழ்வு பற்றி
உதிர்ந்த என் எழுத்துகளை
சில எறும்புகள்
பொறுக்கிச் சென்றன…………….
………………………………………….
புற்றுக்குள் குவிக்கப்பட்ட எழுத்துகளை
என்ன செய்வதென்று தெரியாத
எறும்புகளுக்கு
இடஞ்சலாகவும் அடசலாகவுமாகி
பின் மறந்தும் போனது. – ம.நவீன்

என நான்காம் தலைமுறைக்கவிஞர்கள் ஒவ்வொருவரும் வாழ்வு பற்றி கொண்டிருக்கும் தனிப்பட்ட அபிப்பிராயங்களே இந்நாட்டில் நல்ல இலக்கியம் வளர்வதற்கான அறிகுறியாகப்படுகிறது.

இயற்கையை மிஞ்சி ஒரு படைப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு மலை…ஒரு மரம்… ஒரு மலர்…ஒரு கனி… இவற்றை மிஞ்சி என்ன பெரிதாகப் படைத்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. இவற்றிடம் அப்படி என்னதான் அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. அர்த்தங்களைப் புகுத்தியே பழக்கப்பட்ட மனித மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணங்களைக் கூறுகிறது. ஒரு மலர், காதலனுக்கு உதடு…வியாபாரிக்கு மாலை… வண்டுக்கு உணவு. அறிவியல் இதையெல்லாம் கடந்து சொல்கிறது… மலரின் வண்ணம், வாசம் அதன் இனவிருத்திக்கான ஈர்ப்புத்தன்மையென்று.அப்படியென்றால் உலகில் எல்லா மலரும் ஒரே வண்ணத்தில் படைக்கப்பட்டிருக்கலாம். எல்லா மரமும் ஒரே வடிவத்தில் வார்க்கப்பட்டிருக்கலாம்… ஏன் இத்தனை வடிவம்… ஏன் இத்தனை வண்ணம்.இயற்கையின் படைப்புகள், எல்லா அர்த்தங்களையும் கடந்து இருக்கிறது. உண்மையான இலக்கிய படைப்புகளும் அப்படித்தான். அது எண்ணற்ற அர்த்தங்களை, அலைகளை மனத்திற்குள் எழும்பியபடிதான் இருக்கின்றது. ஒரு நல்ல கவிதையின் முற்றுப்புள்ளி எத்தனையோ கேள்விக்குறிகளையும் சில ஆச்சரியக் குறிகளையும் ஏற்படுத்தியபடிதான் இருக்கின்றன.

– காதல் – பிப்ரவரி 2006

(Visited 446 times, 1 visits today)

One thought on “இலை மறைவில் புது உயிர்கள்!

  1. Mr.Navin you have done a good research on Puthu Kavithaigal in Malysia.Its very impressive and well presented,though it was compiled in 2006.
    I suppose there was arena where writers like M.Sultan,V.Poobalan, Karaikilar,Velusamy contributed poems in our country but you may clarify with me whether it was marabu kavithaigal or puthukavithaigal.
    Has anyone written about the birth of Puthukavithaigal in Malaysia? I wonder whether Re.Shanmugam has written any?
    Sometimes last year Dr.Karthigesu did some radio presentations on Malaysian Kavithaigal for almost 30 episodes.

    Keep writing..Malaysian/ Singapore Tamils owes you alot.

    VALGA TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *