இசங்களை விமர்சன ரீதியில் அணுக வேண்டும் – எம். ஏ. நுஃமான்

 

எம்.ஏ.நுஃமான்

எம்.ஏ.நுஃமான் தமிழ் இலக்கியச் சூழலில் மிக முக்கிய விமர்சகர். கல்விதுறை சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் இவர் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளம். இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தற்பொழுது மலாயா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார். வல்லினத்திற்காக அவரை நேர்காணல் செய்தோம்.

வல்லினம் : பேராசிரியராக, பதிப்பாளராக, மொழிப்பெயர்ப்பாளராக, மார்க்சிய விமர்சகராக, எழுத்தாளராக என தங்கள் பணிகள் விரிந்து கிடக்கின்றன. தங்களை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?

எம்.ஏ.நுஃமான் : ஒருவருக்கும் ஒற்றை அடையாளம் இல்லை. நம் எல்லோரது அடையாளமும் பன்முகப்பட்டதுதான். தொழிலைப் பொறுத்தவரை நான் ஒரு பேராசிரியன். மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதிலே, ஆய்வுத் துறையில் ஈடுபடுவதிலே ஒரு திருப்தி இருக்கின்றது. ஒரு சில மாணவர்களையாவது வித்தியாசமாக, விமர்சனபூர்வமாகச் சிந்திக்கப் பயிற்றுவிக்க முடிந்திருக்கிறது. எனது புலமைத்துறை வளர்ச்சிக்குப் பல்கலைக் கழகப் பணி ஒரு தளமாகவும் இருந்து வந்திருக்கின்றது. தமிழ் மொழி, இலக்கியக் கல்வியைப் பொறுத்தவரை இரண்டொரு பல்கலைக்கழகங்களிலாவது பாடத்திட்டங்களைப் புதிய முறையில் வடிவமைக்கும் வாய்ப்பு இத்தொழிலால் எனக்குக் கிடைத்திருக்கின்றது. அந்த வகையில் ஒரு பேராசிரியன் என்ற அடையாளத்துக்கு என்னைத் தகுதியாக்கிக் கொள்ள முயன்றிருக்கிறேன்.

பதிப்புத் துறையில் நான் செய்தது மிகவும் சொற்பம். 1960-களின் இறுதியில் எனது நண்பர் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் உதவியுடன் ‘கவிஞன்’ என்ற ஓர் இதழைத் தொடங்கி நான்கு இதழ்கள் வெளியிட்டேன். ஐந்தாவது இதழை ஒரு தனிநூலாக- மஹாகவியின் கோடை – வெளியிட்டேன். எனது பதிப்புத்துறை முயற்சிகள் இப்படித்தான் தொடங்கியது. ‘கவிஞன் வாசகர் சங்கம்’ என்ற பெயரில் பின்னர் சில நூல்களை வெளியிட முடிந்தது. மஹாகவியுடனும் அவரது குடும்பத்தினருடனும் எனக்கு இருந்த நெருக்கமான நட்புக் காரணமாக அவருடைய மறைவின் பின்னர் அவரது நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அந்த முயற்சி இன்னும் தொடர்கின்றது. ஆயினும் என்னை ஒரு பதிப்பாசிரியனாக அடையாளப்படுத்தும் அளவுக்கு எனது அறுவடை போதாது என்றே சொல்வேன்.

மொழி பெயர்ப்புத் துறையில் எனது ஈடுபாடு பிறமொழிக் கவிதைகளை ஆங்கிலத்தின் ஊடாகப் புரிந்துகொள்ளும் முயற்சியின் ஒரு உபவிளைவாகவே தொடங்கியது. ஒரு கவிதையை ஆங்கிலத்தில் படிப்பதைவிட அதனைத் தமிழாக்கிப் படிப்பது அதனுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துவதாக உணர்ந்தேன். அவ்வகையிலேயே 1970-களின் தொடக்கத்திலிருந்து சில கவிதைகளை மொழிபெயர்க்க முனைந்தேன். அதன் மூலம் மொழி பெயர்ப்பின் தேவையையும் அதிகம் உணர முடிந்தது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு பண்பாட்டுப் பாலம்தான். இரண்டு பண்பாடுகளுக்கிடையே மொழிபெயர்ப்பு ஒரு பாலமாக அமைகின்றது. குறிப்பாக இலங்கை போன்ற இனமுரண்பாடு தீவிரமடைந்த ஒரு பன்மொழிச் சமூகத்தில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பை ஒரு கற்கை நெறியாகப் பயிலவும் பயிற்றுவிக்கவும் வாய்ப்பு ஏற்பட்ட போது அதுபற்றி கோட்பாட்டு ரீதியாகப் புரிந்து கொள்ளவும் முடிந்தது.

மொழிபெயர்ப்பை ஓர் இலக்கியப் பணியாக மட்டுமின்றி ஒரு சமூக, அரசியல் பணியாகவும் நான் கருதுகின்றேன். எனது மொழிபெயர்ப்புகள் அத்தகையனதான். எனது மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் மூன்றாம் உலகப் படைப்புகள் தொடர்பானவைதான். நான் மொழிபெயர்த்த பலஸ்தீனக் கவிதைகள் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எனது ஆதரவை தெரிவிப்பதாக மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உணர்வின் வெளிப்பாடாகவும் உள்ளன. அவ்வகையில் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற அடையாளம் எனக்குத் திருப்தி தருவதுதான்.

என்னை மார்க்சிய விமர்சகன் என்பதைவிட, ஒரு நடுநிலையான விமர்சகன் என்ற அடையாளத்தையே நான் பெரிதும் விரும்புவேன். மார்க்சிய விமர்சனத்தில் மேலோங்கி இருந்த வரட்டுப்போக்கை நான் தீவிரமாக விமர்சித்திருக்கிறேன். ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ என்ற எனது நூல் அதன் விளைவுதான். இலக்கியம் பற்றிய விமர்சனப் பார்வைகளும், கொள்கைகளும் பல. அதில் ஒன்றுதான் மார்க்சியப் பார்வை. இலக்கியத்தின் சமூக வேர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில், இலக்கியத்தை ஒரு உன்னத நிகழ்வாக அன்றி ஒரு சமூக உற்பத்தியாக (Social product) நிறுவியதில் மார்க்சியத்தின் பங்கு முக்கியமானது. ஆயினும் இலக்கியத்தில் எல்லா அம்சங்களையும் அதனால் விளக்கிவிட முடியும் என்று நான் நம்பவில்லை. பல்வேறு விமர்சனக் கொள்கைகளில் நமக்குப் பயனுள்ளவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

எழுத்தாளன் அல்லது படைப்பாளி என்ற அடையாளத்தையே எல்லாவற்றிலும் முக்கியமானதாக நான் கருதுகின்றேன். கவிஞன், சிறுகதை ஆசிரியன் என்ற வகையில்தான் நான் எழுத்துத்துறைக்கு அறிமுகமானேன். 1960, 70-களில் ஈழத்துக் கவிதைத் துறையில் நானும் குறிப்பிடத்தக்க சில படைப்புகளைச் செய்திருக்கின்றேன்; அதிகம் இல்லையென்றாலும் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் 1980-களில் ஆராய்ச்சி, விமர்சனத் துறைகளில் எனது ஈடுபாடு படைப்பாளி என்ற அடையாளத்தை மெல்ல விழுங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அது எனக்குக் கவலைதரும் ஒரு விடயம்தான்.

வல்லினம் : பொதுவாகவே இலக்கியத்தை ஒட்டிய மார்க்சிய பார்வை ஒரு கட்டமைப்பிற்குள் இருப்பதாகவும் பிரச்சாரங்களை விரும்புவதாகவும் இருக்கிறது. மார்க்சிய பார்வை கொண்ட நீங்கள் இன்றைய நவீன இலக்கியத்தையும் அதன் வளர்ச்சியையும் எப்படி சுவீகரித்துக் கொள்கிறீர்கள்?

எம்.ஏ.நுஃமான் : இலக்கியத்தை ஒட்டிய மார்க்சியப் பார்வை ஒரு கட்டமைப்புக்குள் இருப்பதாகவும் பிரச்சாரங்களை விரும்புவதாகவும் ஒட்டுமொத்தமாகக் கூறமுடியாது என்றுதான் நான் நினைக்கின்றேன். தமிழிலே மேலோங்கியிருந்த ஒரு வரட்டு மார்க்கியப் பார்வையின் எதிர்வினையாகவே இத்தகைய கருத்துவருவாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறலாம். ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ என்ற நூலில் நான் இதுபற்றி விரிவாகவே விளக்கியிருக்கின்றேன். இலக்கியத்தை ஓர் அரசியல் ஆயுதமாக மட்டும் நோக்கியதன் விளைவு இது. மார்க்சியத்துக்கு மட்டுமின்றி தேசியம், சாதியம் போன்ற எல்லாச் சித்தாந்தங்களுக்கும் இது பொருந்தும். இன்று தமிழ்த் தேசியப் பார்வை அல்லது தலித்தியப் பார்வை இலக்கியத்தை எவ்வாறு நோக்குகின்றது என்பதை அவதானித்தால், நீங்கள் சொல்லும் மார்க்சியப் பார்வையுடன் அவை ஒரு வகையில் ஒத்திருப்பதைக் காணலாம். மார்க்சியத்தை ஓர் அரசியலாக அன்றி சமூகக் கோட்பாடாக (social theory) நோக்கினால் அதன் ஒளியில் இன்றைய சமூகத்தையும் அதன் கலாசார நடவடிக்கைகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கின்றேன். இன்றைய சமூகத்தைப் புரிந்து கொள்ளாமல் அதன் இலக்கியத்தையும் ஏனைய பண்பாட்டுக் கூறுகளையும் நாம் புரிந்து கொள்ள முடியாது.

இன்றைய இலக்கியம் இன்றைய சமூகத்தின் உற்பத்திதான். இன்றைய சமூகத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகள், முரண்பாடுகள், மோதல்கள் எல்லாம் இன்றைய இலக்கியத்தில் வெளிப்பாடு கொள்கின்றன. மேலை சமூகங்களுக்கும் நமது சமூகங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் மூன்றாம் உலகத்தைச் சேர்ந்தவர்கள். மேலைச் சமூகங்களைப் போல் நவீனத்துவம் அல்லது பின் நவீனத்துவ சமூகங்களாக அன்றி பின்காலனித்துவ சமூகங்களாகவே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். பின் காலனித்துவ பண்பாட்டு நெருக்கடிகளுக்கு நாம் முகம் கொடுக்கிறோம். காலனித்துவ செல்வாக்கில் இருந்து நாம் இன்னும் முற்றாக விடுபடவில்லை; பதிலாக பண்பாட்டு ஏகதிபத்தியத்தின் வலையில் நாம் இறுக்கமாகச் சிக்குண்டிருக்கின்றோம். மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையில் நாம் தத்தளிக்கின்றோம். இவற்றின் வெளிப்பாடகவே இன்றைய இலக்கியத்தை நான் புரிந்து கொள்கிறேன்.

வல்லினம் : ஒரு மொழித் தகவலை ஒரு கலைப்படையாக ஆக்குவது எது என நினைக்கிறீர்கள்?

எம்.ஏ.நுஃமான்: இது ஒரு முக்கியமான கேள்வி. ருஷ்ஷிய உருவவியலாளர்கள் எழுப்பிய கேள்வி. உருவவியல் சிந்தனையின் முன்னோடிகளுள் ஒருவரான ரோமன் ஜகோப்சன் இக்கேள்வியை எழுப்பினார். இது தொடர்பாக ‘மொழியியலும் இலக்கியத் திறனாய்வும்’ என்ற எனது கட்டுரையில் பேசியிருக்கிறேன். விடையளிப்பதற்கு மிகவும் சிக்கலான கேள்வி இது. இலக்கியத்தின் மூலப் பொருள் மொழிதான். மொழி இல்லாமல் இலக்கியம் இல்லை. அவ்வகையில் இலக்கியத்தை ஒரு மொழிக்கலை என்று சொல்லலாம். ஏனைய கலைகளுக்கு மொழி ஒரு அடிப்படைக் கூறாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மொழியை நாம் இலக்கியப் படைப்புக்கு மட்டுமின்றி பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றோம். உதாரணமாக ஒரு கட்டுரை, விளம்பரம், மரண அறிவித்தல், கவிதை, சிறுகதை எல்லாவற்றின் மூலப்பொருள் மொழிதான். இவையெல்லாம் மொழித் தகவல்கள்தான். ஆனால், ஒரு கட்டுரையில் இருந்து ஒரு கவிதையை வேறுபடுத்துவது எது? உருவவியலாளர்கள் இதற்கு விடையளிக்க முயன்றார்கள். ஜகோப்சன் மொழியின் கவித்துவச் செயற்பாட்டை (poetic function) அதன் பிற செயற்பாடுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட முயன்றார். எல்லா மொழித் தகவல்களிலும் கவித்துவச் செயற்பாடு இருக்கலாம் எனினும் இலக்கியப் படைப்பில் அது குவிமையமாக இருக்கிறது என்று அவர் விளக்கினார். ஆயினும், பின்நவீனத்துவம் முதன்மைப் படுத்தும் பிரதிக்கோட்பாடு இலக்கியத்துக்கும் இலக்கியம் அல்லாதவற்றுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அதிகம் பொருட்படுத்துவதில்லை. பிரதிக்கோட்பாட்டைப் பொறுத்தவரை ஒரு விளம்பரமும் கவிதையும் பிரதிகள்தான். இவற்றை ஒருவர் எவ்வாறு பொருள் கொள்கிறார் என்பதிலேயே அது அதிக அக்கறை கொள்கின்றது. இலக்கியம், கவித்துவம் என்பதெல்லாம் நவீனத்துவ யுகத்துக்குரிய சங்கதிகள். பின்நவீனத்துவ யுகத்தில் செல்லுபடியாகாது என்பது பிரதிக்கோட்பாட்டின் உட்கிடை எனலாம்.

வல்லினம்: ஒரு கட்டுரையில், ‘புதிதாக வளர்ச்சியடைந்து வந்த முதலாளித்துவ சமூக அமைப்பின் தேவையும், அதன் இயல்புகளுமே நவீன உரைநடையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணி’ என்கிறீர்கள். இதை சற்று இன்னும் தெளிவாக விளக்க இயலுமா?

எம்.ஏ.நுஃமான்: கைத்தொழில் புரட்சிக்கு முந்திய விவசாய சமூகங்களில் உரைநடையின் தேவையும் பயன்பாடும் பெருமளவில் இருக்கவில்லை. செய்யுளே அதன் இடத்தைப் பிடித்திருந்தது. உரைநடையின் பயன்பாடு வரையறுக்கப்பட்டதாகவே இருந்தது. அதனால் உரைநடை ஒரு முக்கியமான தொடர்பாடல் ஊடகமாக வளர்ச்சியடையவில்லை. ஆனால் கைத்தொழில் புரட்சியோடு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகத்தைப் பொறுத்தவரை மொழிமூலமான அதன் தொடர்பாடல் தேவை அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. கைத்தொழில் பெருக்கம், வர்த்தக வளர்ச்சி, நகரமயமாக்கல், வெகுஜனக்கல்வி, எழுத்தறிவு வளர்ச்சி, அச்சியந்திரத்தின் வருகை, பத்திரிகைகளின் தோற்றம் இவையெல்லாம் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை; பின்னிப் பிணைந்தவை. இவை உரைநடையின் வளர்ச்சியையும் பயன்பாட்டையும் தவிர்க்கமுடியாதவை ஆக்கின. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தமிழில் வளர்ச்சியடைந்திருந்த உரைநடையோடு, கடந்த ஒன்றரை நூற்றாண்டு வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும். இன்று செய்யுள் பொதுப்பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டது. கவிதைக்குக் கூட செய்யுள் அவசியம் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இதனை வளர்ச்சியின் இயக்கவியலாகவே கருத வேண்டும்.

வல்லினம்: அமைப்பியல் வாதம் பற்றி விமர்சிக்கும் நீங்கள், ஆசிரியரின் மரணம் பற்றியும் பிரதி வாசகனால் புரிந்து கொள்ளப்படுவது பற்றியும் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கிறீர்கள். ஒரு படைப்பு தரும் அர்த்தத்தை வாசகன் தீர்மானிப்பது அவன் உரிமைதானே. அது பாரதி கவிதையாக இருந்தாலும்… நேரடி அர்த்தம் தரும் கவிதையாக இருந்தாலும் வாசகனுக்கு அதன் அர்த்தத்தை வேறொரு கண்ணோடு பார்க்க உரிமை உண்டுதானே?

எம்.ஏ.நுஃமான்: அர்த்தத்தை வாசகன் தீர்மானிப்பது, அது அவனது உரிமை என்ற வார்த்தைப் பிரயோகங்கள் விசயத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதில் தடையாக அமைந்து விடலாம். உதாரணமாக ‘இன்று ஏப்ரல் முதலாம் திகதி’ என்று நான் சொன்னால், அதை ‘இன்று மார்ச் முப்பதாம் திகதி’ என்று நான் சொல்வதாகத் தீர்மானிப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்று கருதமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். எனது கூற்றுக்கும் நீங்கள் பொருள் கொண்டதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனால் ‘இன்று ஏப்ரல் முட்டாள் தினம்’ என்பதை நான் நினைவூட்டுவதாக நீங்கள் பொருள் கொள்ளலாம். அல்லது அந்தத் திகதியில் நீங்கள் பிறந்திருந்தால் உங்கள் பிறந்த தினத்தை நான் நினைவூட்டுவதாக நீங்கள் பொருள் கொள்ளலாம்; அல்லது ஒரு முட்டாள் பிறந்த தினம் என்று நான் உங்களைக் கிண்டல் செய்வதாகக் கூட நீங்கள் பொருள் கொள்ளலாம். இவை இந்தக் கூற்றோடு தொடர்புடைய விடயங்கள். முற்றிலும் நீங்கள் உருவாக்கிய பொருள் அல்ல. பிரதியின் அர்த்தத்தை வாசகன் தீர்மானிக்கிறான் என்பதைவிட அவன் புரிந்து கொள்கிறான் என்பதே சரியானது என்று நான் நினைக்கின்றேன். பிரதியின் அர்த்தத்தை வாசகன் எவ்வாறு புரிந்து கொள்கிறான்? ஏன் அவ்வாறு புரிந்து கொள்கிறான்? என்பன முக்கியமான கேள்விகள். இது பிரதிக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு தொடர்பான பிரச்சனை. ஓர் இலக்கியப் பிரதியை வாசகர்கள் வெவ்வேறு வகையாகப் புரிந்து கொள்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பிரதி சார்ந்ததாக அல்லது வாசகர் சார்ந்ததாக இருக்கலாம். வாசகனை மட்டும் மையமாகக் கொண்டு நோக்கினால், வாசகனின் இலக்கியப் பரிச்சயம், அவனது உலக ஞானம், அவனது மொழித்திறன், அவனது சமூக, அரசியல் கண்ணோட்டம் போன்ற பல காரணிகள் அவனது புரிதலைத் தீர்மானிக்கின்றன. பிரதியும் அத்தகையப் புரிதல்களுக்கு இடம் கொடுக்கின்றது. இவ்வாறு நோக்குவதைவிடுத்து பிரதிக்குப் பொருளே இல்லை; வாசகன் எதைப் புரிந்து கொள்கிறானோ அதுதான் அதன் பொருள் என்று வாதிடுவது ஒரு இலக்கிய அராஜகவாதம்தான். பின் நவீனத்துவ விமர்சகர்கள் பலர் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வல்லினம்: உங்கள் பதில் மூலமும் இலக்கியம் குறித்தான உங்கள் கட்டுரைகளின் வழியும் நீங்கள் பின்நவீனத்தை ஏற்கவில்லை எனப் புரிகிறது.

எம்.ஏ.நுஃமான்: பின் நவீனத்துவத்தை ஏற்கிறேனா அல்லது ஏற்கவில்லையா என்பதைவிட பின்நவீனத்துவத்தை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதுதான் முக்கியம். உலக மயப்பட்ட முதலாளித்துவத்துக்கு அனுசரணையான ஒரு சித்தாந்தமாகவே நான் அதைப் புரிந்து கொள்கிறேன். இரண்டு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏகாதிபத்திய சமூகம் எதிர்நோக்கிய அரசியல் பொருளாதார நெருக்கடியின் விளைவாகத் தோன்றிய கலாசார நெருக்கடியின் விளைவாகத்தான் நவீனத்துவம் அல்லது நவீனவாதச் சிந்தனை மேற்கில் தோன்றியது. இரண்டாவது உலக யுத்தத்தின்பின் புதிய முகத்துடன் எழுச்சியடைந்த நவகாலனித்துவமும் அதன் உலகமயக் கோட்பாடும் மேற்கில் தோற்றுவித்த சமூக நெருக்கடிகளின் விளைவுதான் பின்நவீனத்துவச் சிந்தனை என்று நான் புரிந்து கொள்கிறேன். பின் நவீனத்துவச் சிந்தனைகள் சாரம்சத்தில் உலக மயப்பட்ட முதலாளித்துவத்துக்கு அனுசரணையாகவே அமைகின்றன. சாராம்சம் என்ற சொல்லையே பின் நவீனத்துவவாதிகள் சாராம்சவாதம் என்று ஒதுக்கிவிடுவார்கள்.

உலகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்பது ஒரு முக்கியமான பின்நவீனத்துக் கருத்து. இது மிகப்பழைய ஐய வாதத்தத்துவத்தின் பிறிதொரு வடிவம்தான். உலகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள அல்லது விளக்க முயலும் தத்துவங்களைப் பெருங்கதையாடல் (matanarrative) என பின் நவீனவாதிகள் ஒதுக்கி விடுகின்றனர்.

அதற்குப் பதிலாகக் கூறுபடுத்தல் (fragmentation) கொள்கையை முன்வைக்கின்றனர். இதன் நடைமுறை விளைவு சமூகத்தை இனம், மதம், மொழி, சாதி, பால் அடிப்படையில் கூறுபடுத்துவதாகவே அமைகின்றது. ஏகாதிபத்தியம் தனது பொருளாதார நலன்களைப் பூகோளமயப்படுத்துவதற்கு நாடுகளை அரசியல், சமூக அடிப்படையில் கூறுபடுத்துவது அவசியமாகின்றது. உலக நாடுகளில் இனம், மதம், மொழி, சாதி, பால் அடிப்படையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து அடையாள அரசியலை ஏகாதிபத்தியம் ஊக்கப்படுத்துவதன் நோக்கம் இதுதான். பின் நவீனத்துவச் சித்தாந்தம் அடையாள அரசியலுக்குச் சாதகமாகவே இருக்கின்றது.

இலக்கியத் தளத்தில் குறிக்கோள் உள்ள எழுத்தை முற்றாக நிராகரித்து, பிரதி தரும் போதையே (pleasure of the text) இலக்கியத்தின் பயன் என்பதை வலியுறுத்துகின்றது. ஆசிரியனை முற்றாக நிராகரித்து வாசகனை அதன் இடத்தில் நிறுத்துகின்றது. பிரதிக்கு வாசகனே பொருளைத் தருகிறான் என்ற கொள்கையை முன்வைக்கின்றது. ஆசிரியன் வாசகனுக்கு எதையும் சொல்ல முடியாது என்பது இதன் உட்பொருள். பத்தாயிரம் பேர் ஒரு பிரதியைப் படிக்கும்போது பத்தாயிரம் வெவ்வேறு பிரதிகளாக அது மாறுகின்றது. இவ்வாறு பிரதிபற்றிய ஒரு மாயாவாதத்தை பின்நவீனத்துவம் முன்மொழிகின்றது. இத்தகைய ஒரு கோட்பாட்டின் உட் புதைந்திருக்கும் அரசியல் எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது. இந்த அரசியல் செயலற்ற நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் அரசியல். பின் நவீனத்துவச் சிந்தனையை விழுங்கிக் கொண்டு பிரிதி வித்தை காட்டும் சில அதிநவீன தமிழ் எழுத்தாளர்களைப் படித்தால் அவர்களின் அரசியலை மறுக்கும் அரசியலை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரலில்’ நீங்கள் தெளிவாக இதனைக் காணலாம். விடுதலைக்காக, உரிமைக்காகப் போராடுவதெல்லாம் எவ்வளவு அர்த்தமற்றது, பைத்தியக்காரத்தனமானது என்பதை நிரூபிப்பதற்கு அவர் நூற்றுக்கணக்கான பக்கங்களில் சொல்வித்தையாடுகிறார்.

எல்லாச் சித்தாந்தங்களையும் போலவே பின்நவீனத்துவமும் சமூகத்தை, அரசியலை, கலை இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கு சில கலைச் சொற்களையும் கருத்தாக்கங்களையும் நமக்குத் தந்திருக்கின்றது. நமது தேவைக்கும் புரிதலுக்கும் ஏற்ப நாம் அவற்றைப் பயன்படுத்தலாம். அதேவேளை எல்லா சித்தாத்தங்களையும் வழிபாட்டு ரீதியில் அன்றி விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுக நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

வல்லினம் :இலங்கையின் போர்ச்சூழல் காரணமாகத்தான் இலக்கியம் மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று கருதுகிறீர்களா? சமூகப்பிரச்சனை சாராத எழுத்துக்கு இடமில்லையா?

எம்.ஏ.நுஃமான்:அப்படி இல்லை.இலங்கையில் போர்ச்சூழல் தோன்றுவதற்கு முன்பிருந்த 1950,60 களில் இருந்தே இலக்கியம் சமூகச் சார்புடையதாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கிறோம்.இது எழுத்தாளனின் சமூகக் கடப்பாடு சார்ந்த விடயம்; அவனுடைய அறநோக்கு சார்ந்த விடயம்.உலகின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாரும் இந்தக் கடப்பாடு உடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எழுத்தாளன் இந்தக் கடப்பாட்டுக்கு அப்பாலானவன் என்று கூறுவோர் பற்றி எனக்கு அக்கறை இல்லை.தமிழில் இத்தகையவர்கள் மிகச் சிறுபான்மையினர்தான்.தமிழ் நாட்டில் அதி நவீன எழுத்தாளர்கள் என்று தம்மைக்காட்டிக்கொள்ளும் மிகச்சிலர்தான் சமூக அக்கறையற்று புனைவு தரும் போதையில் மூழ்கி இருக்கிறார்கள்.இவர்களின் பிரக்ஞையில் புனைவு மட்டும்தான் இருக்கிறது.மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை பிரச்சனைகளும் இல்லை.ஆனால், இன்றைய பெரும்பான்மையான ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க எழுத்துகள் இன்றும் சமூக அக்கறை உடையதாகத்தான் இருக்கிறது. அதுதான் தற்கால இலக்கியத்தின் பிரதான போக்காகவும் இருக்கிறது.நான் இவ்வாறு கூறுவதன் மூலம் இலக்கியத்தில் சமூகப் பிரச்சனை சாராத எழுத்துக்கு இடமில்லை என்று கூறுவதாகாது.எல்லா வகையான மனித உணர்வுகளும் இலக்கியத்தில் வெளிபாடு பெற்றே வந்துள்ளன.என் சமூக அக்கறையும் தனி உணர்வுகளும் எனது கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.எனினும் 80-க்குப் பிந்திய எனது கவிதைகள் பெரும்பாலும் எனது அரசியல் எதிர்புணர்வு சார்ந்ததாகவே அமைந்திருக்கின்றன.இது எமது வாழ்க்கை யதார்த்தத்தின் தவிர்க்க முடியாத வெளிபாடு என்பேன்.அது எனது தார்மீக உணர்வு சார்ந்த தேர்வு.

வல்லினம் : எழுத்தாளர் ஜெயமோகன் ‘இயல்’ விருது குறித்து தனது எதிர்வினையில் தங்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.நவீன இலக்கியத்தோடு தாங்கள் தொடர்பற்றவர் என்றும் ‘இயல்’ விருது குறித்தான மதிப்பீட்டையும் கேள்விக்குறியாக்குகிறார்.இதில் தங்கள் நிலை என்ன?

எம்.ஏ.நுஃமான்: விருதுகள் பற்றி எப்போதுமே கருத்து வேறுபாடு உண்டு. வெங்கட் சாமிநாதனுக்கு ‘இயல்’ விருது வழங்கப்பட்ட போது நான் அதைக் கடுமையாக விமர்சித்தேன். ஜெயமோகன் என் கருத்தை மறுத்து சாமிநாதனுக்கு ஆதரவாக இருந்தார். இப்போது லட்சுமி ஹோம்ஸ்ரம் விருது பெற்றிருக்கிறார். அவர் விருதுக்குத் தகுதியற்றவர் என்று ஜெயமோகன் கருதுகிறார். அவ்வாறு கருதுவதற்கு அவருக்குள்ள உரிமையை நான் நிராகரிக்க மாட்டேன். சாமிநாதனுக்கு விருது வழங்கப்பட்ட போது நான் நடுவர் குழு பற்றி எதுவும் கூறவில்லை. சாமிநாதனின் தகுதி பற்றி மட்டுமே நான் பேசினேன். ஜெயமோகன் நடுவர் பற்றி விமர்சிக்கிறார். லட்சுமிக்கு விருது வழங்கப்பட்டதைவிட நடுவர் குழுவில் எம்.ஏ.நுஃமான், ஆ.இரா.வெங்கடாசலபதி இருவரும் இடம் பெற்றிருந்ததுதான் அவருக்கு அதிகம் பிரச்சினை என்று தோன்றுகிறது. அதுபற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. அவரது மனத்தடையை அவரால் தாண்ட முடியும் என்று தோன்றவில்லை.

வல்லினம்: ஒரு இலக்கியப்படைப்புக்கான தகுதி காலத்திற்கு காலம் மாறுபடும்போது, விமர்சனத்திற்கான அவசியம்தான் என்ன?

எம்.ஏ.நுஃமான்: ஒரு இலக்கியப் படைப்புக்கான இடம் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றது என்பதே ஒரு விமர்சன நோக்குதான். விமர்சன ரீதியாகத்தான் நாம் இந்த வேறுபாட்டைத் தீர்மானிக்கின்றோம். இலக்கியத்தின் உடன் விளைவுதான் இலக்கிய விமர்சனம். இலக்கியம் தோன்றும்போதே விமர்சனமும் தோன்றிவிடுகின்றது. இது உலகப் பொதுவான ஓர் உண்மை. கிரேக்க இலக்கியம் இல்லாவிட்டால் அரிஸ்டாட்டிலின் கவிதையில் கோட்பாடு இல்லை. தொல்காப்பியப் பொருளதிகாரம் சங்க இலக்கியம் பற்றிய விமர்சன அழகியல் கோட்பாடுகளைத்தான் பேசுகின்றது. காலம் தோறும் இலக்கியப் பொருளிலும் வடிவத்திலும் ஏற்படும் வேறுபாடுகள்தான் இலக்கியக் கோட்பாடுகள், விமர்சனப் பார்வைகள் என்பவற்றின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகின்றன. அவ்வகையில் இலக்கியம் என்ற ஒன்று இருக்கும் வரை விமர்சனம் இருக்கும். இலக்கியத்தின் உள்ளார்ந்த அம்சங்களையும், அதன் இயக்க விசையையும் புரிந்து கொள்வதற்கு விமர்சனம் தேவைப்படும். இலக்கியத்தின் தேவையும் வளர்ச்சியுமே விமர்சனத்தின் தேவையையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்.

வல்லினம்: சுய அனுபவத்தைப் படைப்பாக்குதல்,சமூக சீர்திருத்தத்திற்காக எழுதுதல்,படைப்பை ஒரு புனைவாக மட்டுமே அணுகுதல் என படைப்பாளிகள் பல்வேறு அணுகுமுறையோடு இலக்கியத்தை நெருங்குகின்றனர்.இதில் இன்றையக் காலத்தின் தேவையாக எதைக் கருதுகிறீர்கள்?

எம்.ஏ.நுஃமான்: எல்லாக் காலத்திலும் பல்வேறு இலக்கியப் போக்குகளுக்கு இடம் இருந்திருக்கின்றது. ஒரு காலத்தின் சமூக, அரசியல் சூழலை ஒட்டி இவற்றில் ஏதாவது ஒரு போக்கு, அணுகுமுறை முனைப்பாக இருக்கலாம்; மற்றவை பின்னடைந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இலக்கிய உற்பத்தியில் எத்தகைய சமூக சக்திகள் முன்னணியில் இருக்கின்றன எத்தகைய சமூக அரசியல் முரண்பாடுகள் முனைப்புற்றிருக்கின்றன என்பதைப் பொறுத்து இது அமைகின்றது. ஒரு காலத்தில் மேலோங்கி இருக்கும் இலக்கிய மரபு இதன் விளைவு என்றுதான் கூற வேண்டும். தமிழ் இலக்கிய வரலாறும் இதனை உணர்த்துகின்றது. காதலும் போரும் சங்க இலக்கியத்தின் பிரதான பாடுபொருள் என்பது நமக்குத் தெரியும். இரண்டும் அன்றைய சமூக வாழ்வின் எதிர்வினைகள்தான். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிர் நிலையானவை எனினும் ஒரு கவிஞனே இரண்டையும் கவிப்பொருளாகக் கொண்டிருக்கிறான். அதை அடுத்துவந்த காலத்தில் அறப்போதனையும் சீர்திருத்தமும் முனைப்பாக இருந்தாலும் அக உணர்வு புறந்தள்ளப்படவில்லை. அறமும் பொருளும் பாடிய வள்ளுவரே காமத்தையும் சுவைப்படப் பாடியிருக்கிறார். பண்டையப் புலவர்கள் இலக்கியத்தைக் கூறுபடுத்தி நோக்கவில்லை என்று தெரிகின்றது. தாம் இலக்கியம் படைக்கிறோம் என்ற பிரக்ஞையுடன் அவர்கள் படைப்பு முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றும் கூறமுடியாது.

இலக்கியம் சுய அனுபவ வெளிப்பாட்டுக்கு மட்டும் உரியது என்பதோ, சமூக சீர்திருத்தமே இலக்கியத்தின் பிரதான பணி என்பதோ, அல்லது இலக்கியம் வெறும் புனைவு விளையாட்டுத்தான் என்பதோ நம் காலத்துக்குரிய பிளவுண்ட மனதின் வெளிப்பாடுதான். இத்தகைய சித்தாந்தங்களுக்குப் பின்னால் உள்ள அரசியலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுய அனுபவம் மட்டுமே இலக்கியப் படைப்புக்கு உரியது என்னும் போது, அது தனிமனித அனுபவத்தையே பிரதானப்படுத்தி சமூக அனுபவத்தைப் புறக்கணித்துவிடுகின்றது. இங்கு இலக்கியம் சமூகப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட ஒன்றாகிவிடுகின்றது. பதிலாக, சமூகச் சீர்திருத்தத்துக்காகவே படைப்பு என்று கூறும்போது இலக்கியம் மனித வாழ்வின் ஏனைய அம்சங்களை விட்டும் விலகிவிடுகின்றது. மறுபுறத்தில் படைப்பை ஒரு புனைவாக மட்டுமே அணுகுவோர் இலக்கியத்தை ஒரு சொல்வித்தையாகவே மாற்றிவிடுகின்றனர். கோணங்கியின் பிற்கால எழுத்துக்கள் இத்தகைய சொல்வித்தைக்குச் சிறந்த உதாரணம் என்பேன். இலக்கியம் பற்றிய இத்தகைய பிளவுண்ட அணுகுமுறைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இலக்கியத்தை வெறும் புனைவாக, சொல்வித்தையாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை தனி மனித அனுபவத்தையும் சமூக அனுபவத்தையும் பிரித்து நோக்க முடியாது. படைப்பாளி சமூக வேர்களை அறுத்துக் கொண்டு புனைவு என்னும் வித்தையுள் புதையுண்டு போகக் கூடாது. ஒரு படைப்பு, வாழ்க்கை பற்றிய – மனித அனுபவத்தின் அர்த்தம் பற்றிய கண்டுபிடிப்பாக, வாழ்க்கைபற்றிய நமது புரிதலை வளப்படுத்துவதாக அமைய வேண்டும். இத்தகைய படைப்புகளே நமக்குத் தேவை. அவற்றையே நல்ல படைப்புகள் என்பேன்.

வல்லினம்: இலக்கியத்தில் ‘இசங்களைப்’ பற்றிய தங்களின் பார்வை அல்லது அபிப்பிராயம்…

எம்.ஏ.நுஃமான்: ‘இசங்கள்’ என்பது அறிவுத் துறைகளை, சமூகக் கோட்பாடுகளைக் குறிக்கின்றது. இவை சமூக இயக்கங்களின் உடன் விளைவுகள். வாழ்க்கையை மட்டுமின்றி, இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கும், இலக்கியம் பற்றிய நமது பார்வையை வளப்படுத்துவதற்கும் இலக்கியப் படைப்பை மேற்படுத்துவதற்கும் இந்த இசங்கள் வெவ்வேறு அளவில் உதவுகின்றன என்றே நான் கருதுகின்றேன். இலக்கியம் பற்றிய எனது சமூகப் பார்வையை வளப்படுத்துவதற்கு ‘மார்க்சியம்’ எனக்குப் பெரிதும் உதவியிருக்கின்றது. 1950க்குப் பிந்திய தமிழ் இலக்கிய உற்பத்தியில் இதன் செல்வாக்கு கணிசமானது. 1980க்குப் பிந்திய தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெண்ணியம் முக்கியப் பங்களிப்பு செய்திருக்கின்றது என்பதை நாம் மறுக்க முடியாது. மொழி, இலக்கியம் பற்றிய எனது பார்வையில் பெண்ணியம் தாக்கம் செலுத்தியிருக்கின்றது என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். 1960-களின் இறுதியில் ‘கவிஞன்’ என்ற கவிதை இதழை நான் தொடங்கினேன். பெண்ணை வெளி ஒதுக்கும் – ஆண் முனைப்புள்ள இத்தலைப்பை இன்று நான் தேர்வு செய்யமாட்டேன். அன்று இந்தப் பிரக்ஞை நமக்கு இருக்கவில்லை. இந்த பார்வை மாற்றம் பெண்ணியத்தின் செல்வாக்கு என்பதை மறுக்க முடியாது. ஆயினும் எல்லா ‘இசங்களும்’ எல்லா காலத்திலும் உடன்பாடான செல்வாக்கை செலுத்துகின்றன என்று கூறமுடியாது. ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலில் முற்போக்கான விடுதலைக் கருத்தியலாக இருக்கும் ஒரு கோட்பாடு பின்னொரு காலத்தில் பிறிதொரு சூழலில் பிற்போக்கான அடக்குமுறை கருத்தியலாக மாறிவிடுவதுண்டு. மார்க்சியமும் இதில் இருந்து தப்பவில்லை. தேசியம் பயங்கரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தியதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணம் உண்டு. தமிழ்நாட்டில் சாதியத்தின் சமூக விளைவுகள் நாம் அறியாததல்ல. எந்த ‘இசத்தையும்’ வழிபாட்டு ரீதியில் அன்றி, விமர்சன ரீதியில் நோக்க வேண்டிய அவசியத்தையே இவை நமக்கு உணர்த்துகின்றன.

வல்லினம்: இலங்கை,தமிழகம் தற்பொழுது மலேசியா என நெடிய வாசிப்பு அனுபவம் உள்ள தாங்கள் இன்றைய தமிழ் இலக்கியப் போக்கு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

எம்.ஏ.நுஃமான்: இன்றைய தமிழ் இலக்கியப் போக்கு என்று ஒருமையில் கூறுவதை விட போக்குகள் என்று பன்மையில் கூறுவதே பொருத்தமானது. பன்முகப்பட்ட இலக்கியப் போக்குகளை நாம் இன்று காண்கின்றோம். தமிழ் பல்வேறு நாடுகளில், பல்வேறு சூழல்களில், பல்வேறு சமூகங்களில் வழங்கும் மொழி என்பதனால் தமிழ் இலக்கியமும் பல்வேறு பட்டதாக இருப்பது இயல்புதான். பல்வேறு இன, மத, சாதி வர்க்கப் பிரிவினரின் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு பன்முகத் தன்மையைக் கொடுக்கின்றது. ஆயினும் இவை எல்லாவற்றையும் தாண்டிய வெகுசன ரசனைக்குத் தீனி போடும் ஜனரஞ்சக வர்த்தக எழுத்து பிரதானப் போக்காக இன்னும் நிலைத்திருக்கிறது. இது பிரதானமாகத் தமிழ் நாட்டின் வர்த்தக இதழ்களால் ஊட்டி வளர்க்கப்படுவது. தமிழ் சினிமா இதன் விளைதளமாக உள்ளது. தீவிர இலக்கியமும் தீவிர இலக்கிய இதழ்களும் நமக்கு இன்னும் சிறுபான்மை போக்குதான். வர்த்தக இதழ்கள் சில லட்சங்களை தாண்டும் போது, தீவிர இதழ்கள் சில ஆயிரங்களைத் தாண்ட முடியாத நிலை உள்ளது. தமிழ் பேசுவோர் தொகை சுமார் ஆறு கோடி என்றாலும் நல்ல நூல்கள் இன்னும் ஆயிரம் பிரதிகள்தான் அச்சிடப்படுகின்றன. வர்த்தக இலக்கியத்தின் முதன்மை, உலகப் பொதுவான ஒன்றுதான் எனினும் வர்த்தக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையிலான நுகர்வோர் இடைவெளி தமிழில் மிக மிகப் பெரிது என்றுதான் கூறவேண்டும்.

வர்த்தக எழுத்தை கணக்கில் எடுத்து நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். என்றாலும் தமிழ் இலக்கியப் போக்குகள் பற்றி பொதுவாகப் பேசும்போது அதன் இருத்தலை புறக்கணித்து விட முடியாது. தீவிர இலக்கியப் போக்குகள் பல்வேறு கருத்து நிலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 1960, 70-களில் கவர்ச்சி காட்டிய மார்க்சிய கருத்து நிலையின் பின்னடைவு 1980க்குப் பிறகு தமிழ் தேசியம், தலித்தியம், பெண்ணியம் போன்ற கருத்து நிலைகளுக்கு வழிவிட்டிருக்கின்றது. அமைப்பியல், பின் அமைப்பியல் கருத்து நிலைகளும் இக்காலப் பகுதியிலேயே தமிழில் நிலை கொள்ளத் தொடங்கின. கடந்த சுமார் 20 ஆண்டுகளில் தமிழ் படைப்பிலக்கியத்திலும் விமர்சன சிந்தனையிலும் இவற்றின் செல்வாக்கு முனைப்பாகத் தெரிகிறது. தமிழ் நாடே இப்போக்குகளின் பிரதான தளமாக அமைந்தது. நவீனத்துவத்தை தாண்டி, எதார்த்தவாதத்தைத் தாண்டி பின்நவீன யுகத்துக்குள் நுழையும் ஒரு போக்கு- ஒரு சிறுபான்மை போக்காக தமிழக இளம் படைப்பாளிகளிடம் முனைப்பாக வெளிப்படுகின்றது. புனைவு தரும் போதையை எழுத்தின் பிரதானப் பணியாக இவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது. இது இலக்கியத்தின் சமூகப் பணியை நிராகரிக்கும் போக்கு என்றே நான் கருதுகின்றேன். பெண்ணிய, தலித்திய எழுத்துக்கள் பாலியல், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி என்ற வகையில் முக்கியமான இலக்கியப் போக்குகள் என்றே கருதுகிறேன். இலங்கையில் உக்கிரமடைந்த இனப்போராட்டம் 1980க்குப் பிறகு ஈழத்து இலக்கியத்தைப் பெரிதும் பாதித்திருக்கின்றது. அரசியல் உள்ளடக்கம் கொண்ட எதிர்ப்பு இலக்கியம் இலங்கையில் எழுச்சி அடைவதை இது ஊக்குவித்தது. இன்றைய மூன்றாம் உலகின் பொதுவான இலக்கியப் போக்குடன் ஈழத்து இலக்கியத்தை ஒன்றிணைத்ததில் இது பிரதான பங்களித்தது. சமகாலத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை வழங்கும் புலம் பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் ஈழத்து இன முரண்பாட்டின் உப விளைவுதான். மலேசிய- சிங்கப்பூர் எழுத்தை நான் சமீபத்தில்தான் வாசிக்கத் தொடங்கினேன். அது வெளிபடுத்தும் வாழ்வு அனுபவம் வித்தியாசமானது. தமிழகத்தின் ஜனரஞ்சக எழுத்தின் செல்வாக்கில் இருந்து அது இப்போதுதான் விடுபட தொடங்கியுள்ளது என்று நினைக்கின்றேன். ‘வல்லினம்’ சஞ்சிகை அதன் ஒரு வெளிபாடு என்றே கருதுகின்றேன்.

வல்லினம் :தாங்கள் வாசித்த வரையில் மலேசியாவில் பொருட்படுத்தும் படியான நாவல்கள் வந்துள்ளனவா?

எம்.ஏ.நுஃமான்: நான் வாசித்த மலேசிய நாவல்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். பெரும்பாலான நாவல்கள் கதையம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக உள்ளன. வாசக ருசியைத் தூண்டும் கதைப் பின்னல் ஜனரஞ்சக நாவல்களின் அடிப்படை பண்பாகும். தீவிரமான தமிழ் நாவல் 1960-களிலேயே இதிலிருந்து விடுபட்டு விட்டது. மலேசிய தமிழ் நாவல் அப்போதிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்று நினைக்கிறேன். நான் படித்தவற்றுள் சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’, கோலலங்காட் ரங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ ஆகியவை வேறுபட்டவை எனலாம். ‘மண்புழுக்கள்’ வாசிக்க சிரமம் தருவது எனினும் கதை ருசியை புறந்தள்ளி சுதந்திரத்திற்கு முற்பட்ட தோட்டப்புற வாழ்வின் உண்மையான சித்திரத்தைத் தர முயல்கின்றது. ‘நினைவுச்சின்னம்’ ஓர் ஆவணத்தன்மை வாய்ந்த வரலாற்று பதிவு. இதனை ஒரு ‘documentary novel’ என்று சொல்லலாம். யுத்தகால அவலம் பற்றிய அனுபவத்தை விவரிக்கும் நாவல் என்ற வகையில் தமிழில் இது ஒரு வித்தியாசமான முயற்சி என்பேன். மலேசிய எழுத்து தமிழுக்கு புதிய வளம் சேர்க்கும் என்ற நம்பிக்கையை இவை தருகின்றன. மலேசிய நாவல்கள் எல்லாவற்றையும் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இவை தூண்டுகின்றன.

வல்லினம் : இன்றைய மலேசிய இலக்கிய சூழலை ஒட்டிய தங்கள் பார்வை அல்லது விமர்சனம்…

எம்.ஏ.நுஃமான்: மலேசிய இலக்கியச் சூழலுடன் எனது பரிச்சையம் மிகவும் சொற்பம்தான் என்றாலும் நான் எதிர்பார்த்ததை விட அது ஆரோக்கியமானதாக இருக்கிறது. நான் சந்தித்தப் புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். மரபு சார்ந்த கட்டுப்பெட்டித்தனம் அவர்களிடம் இல்லை. ஒரு தேடல் இருக்கிறது. புதியவற்றைத் தேடி நிறையப் படிக்கிறார்கள். அரசியல், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு அவர்களிடம் இருக்கிறது. நான் படித்த ‘வல்லினம்’, ‘காதல்’, ‘செம்பருத்தி’ முதலிய இதழ்கள் நம்பிக்கை ஊட்டும்படியாக இருக்கின்றன. இவர்களின் எண்ணிக்கை குறைவுதான் எனினும் எதிர்காலத்தில் இவர்கள் அதிகம் சாதிக்க முடியும் என்று நம்புகின்றேன்.தமிழ், மலாய், சீன மொழிகளுக்கிடையில் இலக்கியக் கொடுக்கல் வாங்கல் இல்லாமலிருப்பது ஏமாற்றமாய் இருக்கிறது. பிற சமூகங்களை புரிந்து கொள்வதற்கும் நமது இலக்கியத்தை வளப்படுத்துவதற்கும் இது அவசியம் என நான் நினைக்கின்றேன். ‘வல்லினம்’ இதில் முயற்சி எடுக்கலாம்.

வல்லினம்: எழுத்தைத் தவிர்த்து வேறு எந்த கலை வடிவங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள்?

எம்.ஏ.நுஃமான்: இலக்கியம்தான் எனது கலை ஈடுபாட்டின் மையமாக இருக்கின்றது. ஆயினும் பிற எல்லா கலை வடிவங்களிலும் எனக்கு அக்கறையும் ஆர்வமும் உண்டு. இளமைக் காலத்தில் ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்தேன். பள்ளிக் காலத்திலும் பிறகும் இரண்டொரு நாடகங்களில் நடித்திருக்கிறேன். இவற்றில் எனது நேர் பங்கு பற்றல் இவ்வளவுதான். ஆயினும் ஒரு கலைஞன் என்ற வகையில் இசை, நடனம், ஓவியம், நாடகம், திரைப்படம் ஆகியவற்றை ஆர்வத்துடன் நான் அனுபவிக்கின்றேன். அவைப்பற்றிய விமர்சன நோக்கை வளர்த்துக் கொள்ள முயல்கின்றேன்.

வல்லினம் : இன்றையச் சூழலில் இலக்கணத்தைத் தனி ஒரு பாடமாகப் போதிக்கும் கல்வித்திட்டம் ஏற்புடையதா? சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இலக்கணத்தைத் தனி பாடமாகக் கற்பிக்காமல் மொழிப்பாடத்துடன் இணைத்தே கற்பிக்கின்றனர். காலத்திற்கு ஏற்ப இலக்கணம் போதித்தலில் மாறுதல்கள் செய்வது முறையாகுமா?

எம்.ஏ.நுஃமான்: இலக்கண கல்வி பற்றிய நமது பார்வை முற்றிலும் மரபு சார்ந்ததாகவே இருக்கின்றது. மரபு இலக்கணத்தை- தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றில் கூறப்படும் இலக்கண கருத்துகளை மாணவர்களுக்கு கற்பிப்பதையே இலக்கணக் கல்வி என்று நாம் பொதுவாகக் கருதுகின்றோம். மாணவர்களின் மொழித்திறன் வளர்ச்சியில் இதன் பங்கு என்ன என்பது பற்றி நமக்குத் தெளிவு இல்லை. இலக்கணம் பற்றிய நவீன சிந்தனையைத் தரும் மொழியியல் பற்றி நமது பள்ளிகளில் மொழிக் கற்பிப்போருக்கு எதுவும் தெரியாது. ஒரு வாய்ப்பாடுபோல் பழைய செய்திகளை நம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். அதனால் மாணவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை. அவ்வகையில் இலக்கணக் கல்வி அவர்களுக்கு ஒரு சுமையாகவும் இருக்கின்றது.

மொழியியல் நோக்கில் இலக்கணம் என்பது மொழியின் அமைப்பையே குறிக்கும். மாணவர்கள் அந்த அமைப்பை புரிந்து கொண்டு அதில் தேர்ச்சி பெறும் வகையில் மொழி கற்பிப்பதே அதிக பயனுடையது. அவ்வகையில் மரபு ரீதியான இலக்கணத்தைத் தனியாகக் கற்பிப்பதை விட மொழி கற்பித்தலின் உள்ளார்ந்த ஒரு அம்சமாக அதைக் கற்பிப்பது பயன் தரும் என்று நான் கருதுகின்றேன். சிங்கப்பூரில் இதை எவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இலக்கணத்தை தனியாக அன்றி மொழிப்பாடத்துடன் இணைந்ததாகக் கற்பிப்பதை நான் ஆதரிக்கிறேன். மேலை நாடுகளில் கற்பித்தல் இலக்கணம் (pedagogic grammar) என்ற ஒரு கருத்து உண்டு. பள்ளிகளில் கற்பிப்பதற்கு மரபு ரீதியான இலக்கணத்தை விட இது உகந்தது. ஆனால் தமிழ் சூழலில் நமக்கு அது இன்னும் அறிமுகமாகவில்லை.

காலம்தோறும் மொழி மாற்றமடைகின்றது. அந்த மாற்றத்தை புரிந்து கொண்டு, தற்கால மாணவர்களின் மொழித்தேவையை மனங்கொண்டு, தற்கால மொழியியலில் அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அவ்வகையில் இலக்கணம் பற்றிய நமது சிந்தனையில், இலக்கணம் கற்பித்தலில் மாற்றம் வேண்டும். இது தொடர்பாக கடந்த 25-30 ஆண்டுகளாக நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ‘ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்: ஒரு மொழியியல் நோக்கு’ என்ற எனது நூலில் நான் இதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளேன். ‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ என்ற எனது நூலும் காலத்துக்கு ஏற்ப இலக்கணச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி உயர்வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பட்டது. இலக்கணம் கற்பித்ததலில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி அந்நூலின் முன்னுரையிலும் நான் குறிப்பிட்டுள்ளேன்.

வல்லினம் : இலக்கணம் பற்றி நூல்கள் எழுதியுள்ள தாங்கள் இலக்கியத்தில் முற்றிலும் மரபு மீறிய ஒரு தளத்தில் பயணிக்கிறீர்கள். இது முரண் இல்லையா?

எம்.ஏ.நுஃமான்: நான் முன்குறிப்பிட்ட இரண்டு நூல்களும்தான் இலக்கணம் தொடர்பாக நான் எழுதியவை. இன்னும் சில நூல்கள் எழுதும் திட்டம் உண்டு. இலக்கணம் மொழி தொடர்பாக நம் மத்தியில் நிலவும் மரபு ரீதியான, பழமைவாத சிந்தனைகளை உடைக்கும் முயற்சிகள்தான் இவை. நான் ஒரு மொழியியலாளன் என்ற வகையில் மொழிப் பற்றிய அறிவியல் பார்வையையே முன்வைக்கிறேன். இலக்கியத்தில் மட்டுமன்றி மொழி இலக்கணம் பற்றியும் எனது பார்வை மரபான பார்வை அல்ல. இலக்கணம் மொழி பற்றிய எனது கட்டுரைகளைப் படித்தால் இது புரியும். இங்கு முரண் எதுவும் இல்லை.

வல்லினம் :ஒரு மொழியிலாளர் என்ற வகையில் மொழி பற்றிய, குறிப்பாகத் தமிழ் மொழி பற்றிய உங்கள் பார்வை என்ன?

எம்.ஏ.நுஃமான்:தமிழ் சூழலில் மொழி பற்றிப் பேசுவதே சிக்கலானதாக உள்ளது.இங்கு மொழி பற்றிய பார்வை அறிவு சார்ந்ததாக அன்றி உணர்ச்சி சார்ந்ததாகவே இருக்கின்றது.மொழியைத் தனது இனத்துவ அடையாளமாகக் கொண்ட ஒரு சமூகத்தில் மொழி ஒரு புனிதத்தன்மையையும் பெற்று விடுகின்றது.தாயாகவும் தெய்வமாகவும் வழிபடப் படுகின்றது. மொழியைப்பற்றிய ஏராளமான ஐதீகங்கள் கட்டமைக்கப்படுகின்றன.மொழிக்காக உயிரை கொடுக்கவும் தயாரான ஒரு கூட்டம் உருவாகி விடுகின்றது.இத்தகைய சூழலில் மொழி பற்றி அறிவு பூர்வமாகச் சிந்திப்பது பேசுவதும் அத்தனை எளிதல்ல.கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழி பற்றி நடந்த சர்ச்சைகளையும் போராட்டங்களையும் நினைத்துப்பார்த்தால் இது புரியும். என்றாலும்,இந்த உணர்வு நிலையைத்தாண்டி மொழி பற்றி அறிவியல் பூர்வமாகச் சிந்திப்பதற்கு மொழியியல் நமக்கு உதவுகிறது.

மொழியியலைப் பொறுத்தவரை மொழி ஒரு கருவிதான்; சக்தி வாய்ந்த செய்தி பரிமாற்றக்கருவி .அதற்கு வேறு புனிதத்தன்மைகள் இல்லை.அது ஒரு சமூகத்தின் படைப்பு என்ற வகையில் சமூகத்தின் மாற்றத்துடன், வளர்ச்சியுடன் மொழியும் மாற்றமும் வளர்ச்சியும் அடைகின்றது. அந்த வகையில் மொழி மாற்றம் இயல்பானது.தவிர்க்க முடியாதது.மாற்றம் அடையாத மொழி வளர்ச்சி அடையாது;வளர்ச்சி அடையாத மொழி இறந்துவிடும். சமஸ்கிருதத்திற்கு, லத்தின் மொழிக்கு இதுதான் நடந்தது. தமிழ் இன்றும் வாழ்கிறது என்றால் அது தொடர்ச்சியாக மாற்றமடைந்து வளர்ந்திருக்கிறது என்று பொருள்.பாரதி பாடல்களைப் படிப்பது போல் சங்க இலக்கியத்தை நம்மால் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை.காரணம் அன்றையத் தமிழ் வேறு, இன்றையத் தமிழ் வேறு. தொல்காப்பியர் இன்று வந்தால் நாம் பேசுவதையோ எழுதுவதையோ கொஞ்சமும் புரிந்துகொள்ள மாட்டார் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.இது கால மாற்றத்தினால் , சமூக மாற்றத்தினால் மொழியில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு.

இந்த மாற்றம் சொற்களில் மட்டுமின்றி , ஒலி அமைப்பு ,இலக்கண அமைப்பு எல்லாவற்றிலும் நிகழ்கின்றது. ‘நீ நல்லை அல்லை’ என்றோ ‘யான் நல்லேன் அல்லேன்’ என்றோ நாம் இன்று எழுதுவதோ பேசுவதோ இல்லை.இவை இன்றையத் தமிழில் மொழி பெயர்த்தால் ‘நீ நல்லவன்/ நல்லவன் அல்ல’ என்றோ ‘நான் நல்லவள்/ நல்லவள் அல்ல ‘என்றோதான் அமையும்.இது மொழி மாற்றத்தின் விளைவு.

தனித்தமிழ் ,மொழித்தூய்மை பற்றி பேசுபவர்கள் தமிழின் பண்முகத்தன்மையை மறந்து அல்லது மறுத்துவிடுகிறார்கள். தமிழின் வளத்துக்கும் , பலத்துக்கும் இந்தப் பண்முகத்தன்மையையும் ஒரு முக்கிய காரணியாகும் என்பதை நாம் மறுக்க முடியாது.தமிழ்க்கல்வியைப் பொறுத்தவரை மொழிப்பழமைவாதம்தான் மேலோங்கி இருக்கிறது.இது ஆரோக்கியமான சூழல் அல்ல.

வல்லினம் : இன்றைய இலங்கை சூழலைப்பற்றி தங்கள் பார்வை? இதற்கு முன்பு அதன் அரசியல் சூழலில் தாங்கள் வைத்திருந்த விமர்சனத்திலிருந்து ஏதும் மாறுபடுகிறீர்களா?

எம்.ஏ.நுஃமான்: இலங்கை அரசியல் சூழல் தொடர்ச்சியாக மோசமடைந்துக் கொண்டே வருகிறது. நீண்டகால இன முரண்பாடும் யுத்தமும் நாட்டை அழிவுப்பாதைக்கே இட்டுச் சென்றிருக்கின்றது. எமதுககாலத்தில் இதற்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்பதில் இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எப்போதுமே இனவாதத்தை இனத்தேசிய வாதத்தை எதிர்த்து வந்திருக்கின்றேன. அது மக்களை கூறுபடுத்தி நாட்டு முன்னேற்றத்தை நாசப்படுத்திவிடும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம். இனங்களுக்கிடையே சமத்துவத்தை உறுதிப்படுத்தாமல் இனவாதத்தை நாம் அகற்ற முடியாது. சமத்துவம் இல்லாவிட்டால் சமாதானத்தை நிலைநாட்ட முடியாது. சமாதானம் இல்லாமல் நம் யாருக்கும் சுதந்திரம் இல்லை. சமத்துவம், சமாதானம், சுதந்திரம் மூன்றும் ஒன்றை ஒன்று வேண்டி நிற்பது. அரசியல்வாதிகள் இதைப் புரிந்துக் கொள்ளாமல் தங்களையும் மக்களையும் தேசத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இலங்கையின் எதார்த்தம்.இது தொடர்பான எனது பார்வையில் மாற்றம் எதுவும் இல்லை.

வல்லினம் :மலேசிய அரசியல் சூழல் பற்றிய தங்கள் பார்வை…

எம்.ஏ.நுஃமான்: இன முரண்பாடும், மோதலும், அரசியல் கொந்தளிப்பும், போரும், மனிதப் படுகொலைகளும் நிலவும் இலங்கைச் சூழலில் இருந்து வந்தவன் நான். கிட்டத்தட்ட ஒரு வருடம் மலேசியாவில் வாழ்ந்திருக்கிறேன். ஏனைய தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவை ஒரு சொர்க்க பூமி என்றுதான் சொல்லவேண்டும். மலேசிய அரசியல் ஒப்பீட்டளவில் நிலையானது, அமைதியானது. பொருளாதார நிலையில் மலேசியாவின் வளர்ச்சி வியந்து பாராட்டத்தக்கது. நடைமுறை வாழ்வில் உண்மையான பல்பண்பாட்டுத் தன்மையை (multiculturalism) நான் இங்கு பார்க்கிறேன். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு வாழ்க்கைத் தரம் உயர்வானது. இவை மலேசிய அரசியல் பற்றிய ஒரு சாதகமான எண்ணத்தையே என்னுள் ஏற்படுத்தியது. ஆனால் மலேசியாவின் உள்முரண்பாடுகள் புறக்கணிக்கத் தக்கதல்ல. எல்லா முதலாளித்துவ நாடுகளுக்கும் உள்ள முரண்பாடுகள் இவை. பொருளாதார வளர்ச்சியும் அடக்குமுறைச் சட்டங்களும் இதுவரை இந்த முரண்பாடுகள் மேற்கிளம்பாமல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. மலேசியா வெளிப்படையாகவே பெரும்பான்மை இன மேலாண்மையை பேணுகின்ற நாடு. இதன் ‘பூமிபுத்ரா’ கொள்கை நீண்ட கால நோக்கில் மலேசியாவின் அமைதிக்கு பாதகமாகவே அமையும். அது இப்போதே வெளிப்படத் தொடங்கிவிட்டது. மலேசியா ஒரு பல்லின சமூகம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு சட்டரீதியாகவும் நடைமுறையிலும் இனசமத்துவம் பேணப்படுவதுதான் அதன் நிலைத்தன்மைக்குத் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் என்று நினைக்கின்றேன்.

வல்லினம் : போர்ச் சூழலில் இருந்து வந்தவர் என்ற வகையில் , ஹிண்ட்ராப் பேரணி தொடர்பாகவும் மலேசிய அரசியல் நிலைத்தன்மையில் ஏற்பட்ட மாற்றத்தையும் தாங்கள் எப்படி உணர்கிறீர்கள்?இதன் தொடர்ச்சி எப்படி இருக்கும் என்று தங்களால் ஊகிக்க முடிகிறதா?

எம்.ஏ.நுஃமான்: மலேசிய சமூகத்தில் நிலவும் உள் முரண்பாட்டின் ஓர் அரசியல் வெடிப்பாகவே ஹிண்ட்ராப் பேரணியை நான் பார்க்கிறேன். மலேசிய இந்தியர்கள் ஒப்பீட்டளவில் ஏனைய இனத்தினரைவிட தாங்கள் பின்தங்கி இருப்பதாக உணர்கிறார்கள். தாங்கள் கல்வியிலும் தொழில் வாய்ப்பிலும் பாகுபடுத்தப்படுவதாக உணர்கிறார்கள். அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அந்த வகையில் தங்கள் சமூக பொருளாதார நல உரிமைக்கான, புதிய அரசியல் தலைமைத்துவத்துக்கான இந்தியர்களின் கோரிக்கைகளின் வெளிப்பாடே இப்பேரணி என்று நாம் கருதலாம். நடந்து முடிந்த தேர்தலில் ம.இ.காவின் வீழ்ச்சி இதனைத் தெளிவாக உணர்த்துகின்றது.

ஆனால், ‘இந்து உரிமை இயக்கம்’ என்ற பெயர் சந்தேகத்தைக் கிளறுகிறது. மலேசிய இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் அல்ல. கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என பிற மதத்தினரும் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ‘இந்து உரிமை இயக்கம்’ என்பது இவர்களையெல்லாம் வெளி ஒதுக்குகின்றது. மலாய்- இஸ்லாமிய மேலாண்மைக்கு எதிரான இந்திய – இந்து மேலாண்மை சிந்தனையாக வடிவம் பெற்றிருக்கின்றதா என்ற ஐயம் எழுகின்றது. இந்தியாவில் மேலோங்கியுள்ள இந்துத்துவாவின் கை இதன் பின்னால் உள்ளதா என்ற ஐயமும் எழுகின்றது. இவற்றுக்கெல்லாம் பின்னால் அமெரிக்க ஏகாதியபத்தியத்தின் கை இருக்கின்றதா என்ற கேள்வியும் உண்டு. உள்நாட்டு சமூக அரசியல் முரண்பாட்டுகளை வெளிநாட்டுச் சக்திகள் கையாள்வதற்கு எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் மத்தியில் ஹிண்ட்ராபின் எழுச்சியும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளும் திடீரென நிகழ்ந்தவை என நான் கருதவில்லை. சுதந்திரத்திற்குப் பிந்திய சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளின் எதிர்மறையான பின்விளைவு என்றே இதனைக் கருதவேண்டும். மலேசிய வரலாற்றின் நடந்து முடிந்த தேர்தல் ஒரு திருப்புமுனை. இந்தியர்களுக்கு மட்டுமின்றி சீன, மலாய் இனத்தவர்களுக்குள்ளும் புகைந்து கொண்டிருந்த அதிருப்தியின் வெளிப்பாடு. எதிர்காலத்தில் இது சாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் தலைமைத்துவம் இதனை ஒரு வரலாற்றுப் பாடமாக எடுத்துக் கொண்டு தமது சமூக அரசியல் கொள்கைகளை அதற்கு ஏற்ற விதத்தில் மாற்றிக் கொண்டால் எல்லா நிலைகளிலும் சமூக சமத்துவத்தை உறுதிப் படுத்தினால் மலேசியாவின் எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றே நம்புகின்றேன். இல்லையெனில் வெளியாரின் ஊடுருவலையும் அரசியல் கொத்தளிப்பையும் தவிர்க்க முடியாது.

 

வல்லினம் : ஜூன் – ஆகஸ்ட் 08

(Visited 402 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *