இலங்கையில் ஏழு நாட்கள்…3

 

அ.யேசுராசாவுடன்...

ஏசுராசா என்றவுடன் என் நினைவுகள் வேகமாகச் செயல்படத்தொடங்கின. இலங்கை – ஏசுராசா என மனதில் எழுந்த குறிப்புகள் அவர் எனக்கு ஏதோ ஒருவகையில் அறிமுகமாகியிருந்தது  நினைவுக்கு வந்தது. ஆனால் சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. எனக்கு ஏசுராசாவைத் தெரியும். பெரிய சண்டைகாரர். யார் என்னவென்று பார்க்காமல் சண்டித்தனம் எல்லாம் செய்வார் என நினைவு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது. கொஞ்ச நேரம் மௌனமாகி வங்கியருகே நின்றிருந்தபோதுதான் எனக்கு தெரிந்த ஏசுராசா யார் என நினைவுக்கு வந்தது. அவர் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ நாவலில் வரும் ஏசுராசன்.  அந்த நாவலிலேயே இப்படி ஒரு வரி வரும். ‘குஞ்சன் வயலில் ஊருப்பட்ட ஏசுராசன்கள் இருந்தபடியால் அவர்கள் வில்லங்கம் ஏசுராசன், காற்றாற்ற ஏசுராசன், நான்தான் ஏசுராசன் என அழைக்கப்பட்டனர்’

என் குழப்பத்தை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது. கூடவே ஷோபா சக்தியின் நினைவும் தொற்றிக்கொண்டது. அருகில்தான் அவர் ஊர். அல்லைப்பிட்டி. அந்தத் தேர்ந்த கதைச்சொல்லி இங்கிருந்துதான் கதைகளை அள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார். ‘கொரில்லா’ நாவலில் காற்றாற்ற ஏசுராசன் இன்ஸ்பெக்டர் ஏசுராசனை அடித்த அடி நினைவுக்கு வந்தது. கூடவே நாவலின் பல சம்பவங்கள்.

சற்று நேரத்திற்கெல்லாம் அ.யேசுராசா அவர்கள் வந்தார். நட்போடு புன்னகைத்தார். சிறிது நேரம் சாலையோரம் நின்றபடியே கதைத்தோம். ‘அலை’ சிற்றிதழ்கள், ‘கவிதை’ சிற்றிதழ்கள் சிலவற்றையும் ‘அலை’ பதிப்பில் வெளியிடப்பட்ட சில நூல்களையும் வழங்கினார். நானும் ‘வல்லினம்’ பதிப்பில் வெளியிடப்பட்ட சில பிரதிகளை வழங்கினேன். தொடர்ந்து உரையாட அவ்விடம் தோதாக இல்லை. புழுதி பறந்தது. விடுதியில் சந்திக்கலாம் என முடிவெடுத்து நகர்ந்தோம்.

அ.யேசுராசா, 1946ல் யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்தவர். அஞ்சல் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். 1968 முதல் எழுதிவருகிறார். சிறுகதை, கவிதை, விமர்சனத் துறைகளில் ஈடுபட்டுவருகிறார்.

இதுவரை ‘தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்’ 1975 (சிறுகதைகள்), ‘அறியப்படாதவர் நினைவாக’ 1984 (கவிதை), ‘பனிமலை’ 2002 (மொழிப்பெயர்ப்புக் கவிதை) , ‘தூவானம்’ 2001, ‘பதிவுகள்’ 2003 (பத்திகள்),  ‘குறிப்பேட்டிலிருந்து’ 2007 (கட்டுரைத்தொகுப்பு) என தனது இலக்கியத்தடத்தை ஆழமாகப் பதித்துள்ளார்.

அவரது மிக முக்கிய முயற்சியாக ‘அலை’ இதழைச் சொல்லலாம். அலை  கலை இலக்கியச் சஞ்சிகை 1975 முதல் 1990 வரை 35 இதழ்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் வெளிவந்த காத்திரமான இதழ்களுள் ஒன்றான இதில் இவர்  இணையாசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் செயற்பட்டார். அதோடு ‘கவிதை’ என கவிதைக்காக இவர் நடத்திய இதழ் 1994 முதல் 1995 வரை 9 இதழ்கள் வெளிவந்தன. இளம் கவிஞர்களுக்கான களத்தை ஏற்படுத்தும் நோக்கில்  வெளிவந்த சஞ்சிகை இது. இவரின் கவனம் இளையர்களிடையே இலக்கிய ஆர்வத்தையும் புரிதலையும் ஏற்படுத்துவது என இவர் நடத்திய ‘தெரிதல்’ இதழும் மற்றுமொரு சான்றாக உள்ளது.  குறைந்த பக்கங்களில் இளைஞர்களின் கலை இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ் இது. இருமாதங்களுக்கு ஒருமுறை 2004 முதல் 2006 வரை 15 இதழ்கள் வெளிவந்தன. 2000 பிரதிகள் வரை அச்சிடப்பட்டதாகக் கூறினார். அவற்றில் சில பிரதிகளையும் கொடுத்தார். இவற்றோடு பதினொரு ஈழத்தக் கவிஞர்கள் (1984),  மரணத்துள் வாழ்வோம் (1984) ஆகிய ஈழத்துக் கவிதைத் தொகுப்புகளின் இணைத் தொகுப்பாசிரியர்.

‘திசை’ என்ற வார இதழின் துணையாசிரியராகவும் அ.யேசுராசா பணியாற்றியுள்ளார். இது  சமூக அரசியல், கலை இலக்கிய பத்திரிகை 1989 – 1990 வரை 69 இதழ்கள் வெளிவந்தன.

யேசுராசா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததில் அவரது ஆர்வம் அதிகமும் திரைப்படம் தொடர்பானதாக இருந்தது. சிறந்த உலகத் திரைப்படங்களில் நல்ல பரிச்சயம் உடையவராகத் திகழ்ந்தார். எனது திரைப்படம் ஆர்வம் குறித்து கேட்டார். மந்தமான எனது அறிமுகத்தைச் சொன்னேன். அதிகம் திரைப்படங்கள் பார்க்கக் கூறினார். அது வாழ்வின் மீதான பார்வையை இன்னமும் ஆழப்படுத்தும் என்றார். யாழ்ப்பாணத் திரைப்பட வட்டம் என்ற அமைப்பின் மூலம் நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அவ்வகையில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மிக முக்கிய இயக்குநர்கள் குறித்தும் அவர்களின் குறிப்பிட்ட படங்களைத் தேர்வு செய்வதின் நுட்பம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் வயதுக்கே உரிய நிதானம் அ.யேசுராசாவின் பேச்சில் இருந்தது. தனது ஆளுமை குறித்த பெருமிதங்கள் இல்லாமல் தற்போதைய தனது மனநிலை குறித்தும் விருப்பங்கள் குறித்தும் பேசினார்.

நாடகம், ஓவியம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு உள்ள அவர், கலைஞன் என்பவன் நேர்மையுடன் இருக்கவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏறக்குறைய அதை மையமாகப்பேசும் சிங்கை இளங்கோவனின் நேர்காணல் அவரை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

சற்று நேரத்தில் அவர் புறப்பட்டபோது நல்ல ஓர் எழுத்தாளரைத் சந்தித்த திருப்தி.

அந்தத் தங்கும் விடுதியில் பணியாற்றிய பலரும் தமிழர்கள். அங்கிருந்த ஒரு பணியாளரின் நட்பு கிடைத்தது. (பெயர் செல்வனில் முடியும் என்று மட்டும் ஞாபகம்) இரண்டு மூன்று முறை படிக்கட்டில் ஏறி இறங்கியபோது கண்களால் சிரித்தார். மலேசியன் என்றதும் சில தகவல்களைக் கேட்டறிந்தார். ஒவ்வொருமுறையும் ஏதாவது பேசிவிட்டு மௌனமானோம். மீண்டும் அவரை ஏறிடும்போது சிரித்த முகத்துடன் இருப்பார். சொற்பமான நேரமே ஓய்வெடுக்க வாய்த்திருக்கும் அவர் தொழிலில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு தமிழனிடம் பேசுவது இயந்திர தன்மையின் ஒரு இடைவேளையாக இருக்கலாம். வாழ்வில் எத்தருணம் எதை மகிழ்ச்சியாகக் கௌவிக்கொள்கிறது என அறியும் வலு அறிவுக்கு இன்னும் வாய்க்கவில்லை.

தொடரும்

(Visited 142 times, 1 visits today)

2 thoughts on “இலங்கையில் ஏழு நாட்கள்…3

  1. அ.யேசுராசா அவர்களால் நடாத்தப்பட்ட கவிதை சஞ்சிகையில் (நான் யாழ்ப்பாணத்தில் இருந்த போது) என் கவிதையும் பிரசுரமாகியிருந்தது. அதையிட்டு நான் கர்வமடைந்திருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *