அநுராதபுரத்திலிருந்து காலையிலேயே யாழ்பாணம் கிழம்பினோம். நீண்ட பயணம். நான்கு மணி நேரம் என நினைவு. வவுனியா, புளியங்குளத்தைத்தாண்டி கிளிநொச்சியை அடைந்தபோது பேருந்து இராணுவத்தினரால் நிறுத்தி பரிசோதிக்கப்பட்டது. எங்களது சுற்றுப்பயணப் பேருந்து என்பதால் கடப்பிதழை மட்டும் சோதனைக்கு அனுப்பினார்கள். நான் சில நண்பர்களுடன் கீழே இறங்கினேன். பொட்டல் நிலம். ஆங்காங்கு இராவணுத்தினர் துப்பாக்கிகளோடு நின்று கொண்டிருந்தனர். உள்ளூர்வாசிகள் பேருந்திலிருந்து இறக்கப்பட்டு தரவாகச் சோதிக்கப்பட்டனர். சுமையுந்துகளின் பின்பக்கம் உயர்த்தப்பட்டுச் சோதிக்கப்பட்டன. அருகில் இருந்த கழிவறைக்குச் சென்றேன். கால்வைக்க இடம் இல்லை.
இராணுவத்தினரின் முகத்தில் திமிரைப் பார்க்க முடிகிறது. அவர்கள் சாமானிய சிங்களவர்களாக இல்லை. பயணம் நெடுகிலும் நான் சந்தித்த பல சிங்களவர்கள் நட்புடன் பேசினார்கள். எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ‘டோன்’ எனும் சிங்கள இளைஞனும் இலங்கை அரசியல் பிரச்சனை குறித்து சில விளக்கங்கள் கொடுத்தபடி இருந்தான். அரசியல் செய்பவர்களால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவது அவன் கவலையாக இருந்தது. ஆனால் அதிகாரம் யாரைத்தான் சாமனிய முகத்துடன் விட்டது. அது எல்லோரையும் விரோதமாகப் பார்க்கவைக்கிறது. அல்லது அவ்வாறு பயிற்றுவிக்கிறது.
பரிசோதனை முடிந்தபின் பேருந்து நேராக நல்லூர் முருகன் கோயில் சென்றது. பெரிய கோயில். தமிழகத்துக் கோயில் போல இங்கும் குளம் இருந்தது. எங்களுடன் அவ்வளவு நேரம் பேருந்தில் வந்தவர்களின் புதிய முகம் கண்டேன். அடிபணியும் முகம். வெளியே வந்தவுடன் அவரவர் பழைய முகங்களை அணிந்து கொண்டனர். உள்ளே புகைப்படம் பிடிக்க அனுமதி இல்லை என்றார்கள். நான் என்றைக்கு யார் சொன்னதை கேட்டேன். சில படங்கள் எடுத்தேன். கோயிலின் வெளியே யாழ்பாணத்தில் மட்டுமே கிடைக்கும் சில உணவுகள் இருந்தன. முதலாவது பனங்கட்டி. பனை ஓலையில் சுற்றப்பட்டு சின்னதும் பெரிதுமாக விற்கப்பட்டது. மற்றது ஒடியல். பனங்கிழங்குகள் காயவைக்கப்பட்டு சிறு துண்டுகளாகக் குச்சிகள் போல இருந்தது. பனங்கட்டி நல்ல இனிப்பு. இரண்டு சாப்பிட்டேன். வீட்டுக்கு வாங்கிகொண்டேன். ஒடியலை சாப்பிட முடியவில்லை. கொஞ்ச நேரம் மென்றுவிட்டு துப்பிவிட்டேன். ஏதோ தவறான முறையில் சாப்பிட்டுவிட்டது போல உணர்ந்தேன். மலேசியா திரும்பிய பின் அதை நறுக்கி புதிய முறையில் ஏதும் செய்து சாப்பிடலாம் என பத்திரப்படுத்திக்கொண்டேன்.
இலங்கையின் மேற்கு பகுதியில் அதிகம் தென்னைமரங்களைக் காண முடிவது போல வடக்குப் பகுதியில் அதிகமும் பனைமரங்களைக் காண முடிகிறது. நல்லூரிலிருந்து புறப்பட்டு யாழ்பாணம் செல்ல இரண்டு மணி நேரம் பிடித்தது. பேருந்து யாழ்பாண நகரில் நிறுத்தப்பட்டது. அப்போது மணி ஆறு. ஆனால் இருட்டத்தொடங்கிவிட்டது. இலங்கையில் ஆறுமணிக்கெல்லாம் இருட்டி நான்கு மணிக்கெல்லாம் நன்கு விடிந்துவிடுகிறது.
நகரத்தில் இருந்த ரவுண்டபோட்டின் மத்தியில் திருவள்ளுவர் இருந்தார். அங்கிருந்து ஏறக்குறைய ஐநூறு மீட்டரில் பூபாலசிங்கம் புத்தகக்கடை. எல்லோரும் சோப்பிங் சென்றிருந்தனர். நான் புத்தகக் கடை நோக்கி நடந்தேன். பூபாலசிங்கம் புத்தகக்கடை குறித்து கேள்விபட்டுள்ளேன். ஆனால் நாங்கள் சென்ற நேரத்தில் கடை அடைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கொஞ்சதூரம் நடந்து மற்றுமொரு புத்தகக் கடையில் புகுந்தபோது நகரில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்கள். கூடவே கிறிஸ் மனிதன் பேச்சும் ஆங்காங்கு அடிப்பட்டது. மின்சாரம் இல்லாததால் இருளடைந்திருந்த கடையில் புகுந்து ஒரு சில புத்தகங்களைப் பொறுக்கி எடுத்தேன். மலேசியாவை காட்டிலும் கொஞ்சம் விலை கம்மி.
எம்.ஏ.நுஃமான் அறிமுகத்தின் பேரின் அன்று இரவு அ. யேசுராசா அவர்களை சந்திக்க இருந்தேன். ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் அவர். நான் விடுதிக்குச் செல்ல இரவாகிவிடும் என்பதால் எஞ்சி இருக்கும் நேரத்தை அவருடன் கழிக்க அழைத்தேன். HSBC வங்கியருகே நானும் மணிமொழியும் காத்திருந்தோம். யாழ்பாண நகரில் சுற்ற எங்களுக்கு இரவு 7.30 வரை ஒதுக்கியிருந்தார்கள். ஆனால், எங்களுடன் வந்தவர்கள் 6.45 கெல்லாம் பேருந்தில் புகுந்துவிட்டார்கள். தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருந்த காற்றில் மணல் பறந்துகொண்டிருந்தது.
முச்சந்தியில் அமர்ந்திருந்த வள்ளுவரின் முதுகை மட்டும் இப்போது ஓரளவு பார்க்க முடிந்தது.
தொடரும்