இலங்கையில் ஏழு நாட்கள்…1

இலங்கையிலிருந்து திரும்பி இரண்டு வாரங்கள் ஆகின்றன. அப்பயணம் குறித்து எழுத பலமுறை தொடங்கியும் முடிக்க முடியாமல் அழித்தபடி இருக்கிறேன். ஒருவகையில் இது ஒரு நிறைவான பயணமா என்ற கேள்வி மனதில் எழுந்தபடி உள்ளது. பொதுவாகவே நான் திட்டமிடப்பட்ட பயணத்தளங்களுக்குச் செல்லும் பயணி அல்ல. சில நாடுகள் அவ்வாறு சுற்றுப்பயணிகளுக்கு முகம் காட்டும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. சட்டென நினைவுக்கு வருவது பாலித்தீவு. அத்தீவின் அனைத்துப்பகுதிகளுமே பயணிகளின் வசீகரப்பார்வையை உள்வாங்கிக்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவே அங்கிருந்த காலங்களில் தோன்றியது. அதனாலேயே அத்தீவு குறித்து எழுத ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால் இலங்கை அப்படி அல்ல.

மிகப்பழமையான வரலாறும் வாழ்வும் பதிந்துள்ள பூமி. இயல்பான பிரதேசத்திற்கு இல்லாத வாழ்வியல் சிக்கல்கள் நிறைந்த மனிதர்கள். இது போன்ற நாட்டில் பயணம் என்பது மனிதர்கள் வாழும் கதகதப்புமிக்க இடங்கள் நோக்கியதாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். அம்மனிதர்களுடனான உரையாடல்கள் மூலமாகவே ஒரு நாட்டின் பல்வேறு மனநிலைகளை உள்வாங்க முடியும் . அது பயணியின் பார்வையைக் கூர்மையாக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக எனது பயணம் அவ்வாறானதாக இல்லை. குளிர்சாதனம் அடைத்த பேருந்தில் பெரும்பாலும் நான்கு நட்சத்திர விடுதிகளில் ஃபுவ்வே உணவுகளோடு தொடங்கி முடிந்தது இப்பயணம். இவ்வாறான ஒரு சூழல் ஒரு அசலான வாழ்வை எனக்கு அறிமுகம் செய்திருக்குமா என்ற சந்தேகம் இன்னமும் எஞ்சியிருக்கிறது.

மலேசியாவில் மிக முக்கியப் பயண நிறுவனமாகத் திகழும் ஏ.பஹாருடின் ஏற்பாடு செய்திருந்த இந்த இலங்கை பயணத்தில் சுமார் 60 பேர் கலந்துகொண்டோம். எல்லோரும் எனக்குப் புதுமுகங்கள். வெவ்வேறு வகையான பின்புலம் கொண்டவர்கள். அனேகமாக எல்லோருக்கும் அது இலங்கைகான முதல் பயணம்தான். ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்களுடன் சிங்கை அமைச்சரின் தந்தையாரும் இந்தப்பயணத்தில் கலந்துகொண்டார். எல்லோர் மனதிலும் இலங்கை குறித்தான ஒரு பொது சித்திரமே இருந்தது. இலங்கை போர் மண்.

ஏ.பஹாருடின் இப்பயணத்தை மிக நேர்த்தியாக அமைத்திருந்தார். அவரது பயண அனுபவம் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இப்பயணம் அலங்கரிக்கப்பட்ட இடங்களைப் பார்க்கவிரும்பும் பயணிகளுக்கானது என்பதால் இதனூடே நான் எனது ஒரு குட்டிப்பயணத்தை நிகழ்த்திக்கொள்ள தீர்மானித்தேன். ஏ.பாஹாருடினும் அதற்கு எல்லா ஒத்துழைப்பும் வழங்கினார். அவ்வகையில் பயண நிரலில் உள்ளது போல மிக முக்கிய வரலாற்று இடங்களைப் பார்ப்பது மற்றும் இலக்கிய நண்பர்களைச் சந்திப்பது என இரண்டாக வகுத்துக்கொண்டேன்.

போகின்ற ஊர்களில் எழுத்தாளர்களையும் நண்பர்களையும் சந்திப்பது எனது முக்கிய நோக்கமாக இருந்தது. எழுத்தாளர்கள் ஒரு தேசத்தின் கலை, கலாச்சார, அரசியல் மாற்றங்களைக்கூர்ந்த அவதானிப்பவர்கள். சராசரி மனிதன் சிந்திப்பதைக் காட்டிலும் எழுத்தாளர்கள் ஒரு நிகழ்வின் காரணங்களை இன்னும் கூர்மையாக அவதானிப்பவர்கள். அவ்வகையில் எனக்கு இலங்கை எழுத்தாளர்களைச் சந்திக்க மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தன.

முதலாவது: இலங்கையில் தற்போதைய அரசியல் நிலவரத்தை அறிந்துகொள்வது

இரண்டாவது : இலங்கை தமிழ் இலக்கியத்தின் தற்போதையப் போக்கை அறிந்து கொள்வது.

கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியவுடன் நான் முதலில் தேடியது நண்பர் பிரகாஷை. மலேசியாவில் ஒருவருடம் ஜனசக்தி இதழில் பணிப்புரிந்தவர். அவர் தொடர்புகிடைக்காததால் உள்ளூர் சிம் கார்ட் ஒன்று வாங்கி கைத்தொலைபேசியில் பொறுத்தினேன். 200 ரூபாய். முதலில் எம்.ஏ.நுஃமானைத் தொடர்பு கொண்டேன். பின்னர் றியாஸ் குரானா மற்றும் யோ.கர்ணன். நான் இலங்கையிலிருந்து திரும்பும்வரை அநேகமாக ஒவ்வொரு நாளும் இவர்களிடமிருந்து  அழைப்பு வந்துகொண்டே இருந்தது. அந்தந்த ஊர்களில் உள்ள இலக்கிய நண்பர்களைச் சந்திக்க பெரும் உதவியாக இருந்தனர்.

வழக்கமானச் சுற்றுலாத்தளங்களுக்குச் சென்றப் பின் முதல்நாள் இரவு ஆநுராதப்புரத்தில் தங்கினோம். வனங்களுக்கு நடுவில் உள்ளது போன்ற இயற்கை சூழல் கொண்ட விடுதி.

கொழும்பிலிருந்து அநுராதப்புரம் வரை பயணம் செய்ததில் சில விடயத்தை நன்கு அவதானிக்க முடிந்தது. சிங்களவர்கள் கலை உணர்வு கொண்டவர்கள். எளிய பொருட்களைக் கொண்டே இடங்களை அழகு படுத்துகின்றனர். மேலும் சாலையின் இருபக்கங்களும் தூய்மையாகவே இருந்தது. இந்தத் தூய்மையை எல்லா இடங்களிலும் காண முடிந்தது. அதேபோல பொது இடங்களில் புகைவிடுவதையும் காண முடியவில்லை. எனக்கு சிங்களவர்களைப் பார்க்கும் போது மலாய்க்காரர்களின் நினைவு வந்தது.

– தொடரும்

(Visited 90 times, 1 visits today)

One thought on “இலங்கையில் ஏழு நாட்கள்…1

  1. >சிங்களவர்கள் கலை உணர்வு கொண்டவர்கள். எளிய பொருட்களைக் கொண்டே இடங்களை அழகு படுத்துகின்றனர். மேலும் சாலையின் இருபக்கங்களும் தூய்மையாகவே இருந்தது.

    ஆம் சரி. அத்தோடு channel 4 வீடியோவையும் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *