இந்தப் புத்தாண்டில் நண்பர்களுடன் லங்காவி தீவில் இருக்கிறேன். லங்காவி உற்சாகத்துக்குக் குறைவில்லாத தீவு. பூலாவ் பெசார் போலவோ பங்கோர் போலவோ அங்கே செயலற்று அமருவதெல்லாம் சாத்தியப்படாது. 2021ஐ உற்சாகமாக வரவேற்க அந்தத் தீவில் தஞ்சமடைவதே சரியெனப்பட்டதால் ஒரு மாதத்திற்கு முன்பே இப்படி ஒரு பயணத்திட்டம் உருவானது. மேலும் எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. வேறு எந்த பண்டிகைகளையும் நான் கொண்டாடுவதில்லை.
Continue readingபுத்தாண்டு
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்
இதுவும் மற்றுமொரு நாள்தான் எனும் தத்துவத்தையெல்லாம் நான் புதிய ஆண்டின் தொடக்கத்தில் சட்டை செய்வதே இல்லை. நான் இந்து புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என எதையும் கொண்டாடுபவன் அல்ல. எந்த மத, இன பண்டிகைகளையும் விரும்புவதும் இல்லை. ஆனால் வருடத்தின் முதல் திகதியை ஒரு பண்டிகையைப்போல அவ்வளவு மெல்ல ரசித்து நகர்த்துவேன். எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்கலாம் என்றும் எல்லா கவலைகளும் தீர்ந்துவிட்டது என்றும் இனி எல்லாம் நலமாக நடக்கும் என்றும் நானே எனக்குள் சொல்லிக்கொள்வேன். புதிய சட்டை போட்டுக்கொள்வேன். அது தோலை நீக்கி புதுத்தோலை போர்த்திக்கொண்டதுபோல தோன்றும். புதிய வருடத்தின் மற்றுமொரு உற்சாகம் கடந்து சென்ற வருடத்தை முழுக்க அலசிப்பார்ப்பதில் தொடங்கும். அநேகமாக அந்த நாள் முழுவதும் அவ்வாறு கடந்தவற்றை எண்ணி அவற்றை ஒரு கனவுபோல கடப்பதிலேயே முடியும். அக்கனவு புதிய வருடத்தை கொஞ்சம் கவனமாக நகர்த்திச் செல்ல உதவக்கூடியதாக மாறும்.