நீங்கள் எந்தக் கதையையாவது படித்து குற்ற உணர்ச்சி அடைந்ததுண்டா? உங்களை நீங்களே கீழான மனோநிலைக்கு நகர்த்தி வைத்ததுண்டா? உங்கள் மனதில் உள்ளிருக்கும் மிருகத்தை அடையாளம் கண்டதுண்டா?
என்னை அப்படியொரு படைப்பு செய்தது என்றால் அது மண்ட்டோவின் சிறுகதையாகத்தான் இருக்கும். ஒரு சிறுகதையில் வாசகனின் பங்களிப்பு என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. அவன் கதை கேட்பதை மட்டுமே வேலையாகச் செய்கிறான் என்றால் நிச்சயம் சிறந்த வாசகனாக இருக்க முடியாது. நாம் இன்று காணும் பெரும்பாலோர் சிறுகதையை வாசித்து அதன் சாரத்தை மட்டுமே அறிந்துகொண்ட சாரசரி வாசகர்கள்தான். அவர்களால் கதையை மட்டுமே சொல்ல முடியும். கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகள் பிரயோகத்தைச் சுட்டிக்காட்டமுடியும். வெகுசிலரே சிறுகதையுடன் உரையாடல் நடத்துகின்றனர். ஒரு சிறுகதையை வாசித்து முடித்தப்பின் உடன்பட்டும் முரண்பட்டும் தான் யாராக இருந்திருக்கிறோம் என்று மீளாய்வு செய்கின்றனர்.