ஏதோ ஒரு காரணத்தினால் என்னை பாலர் பள்ளியில் இணைக்கவில்லை. வறுமை ஒரு காரணமாக இருக்கலாம். சித்திதான் (அம்மாவின் தங்கை) எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். இரவானால் அம்மா சாமி அறையில் என்னையும் அக்காவையும் அமரவைத்து தேவாரம், திருவாசகம் பாடுவார். ஏழு வயதிலெல்லாம் கந்தர் சஷ்டி கவசமும் சிவபுராணமும் எனக்கு நன்கு மனனம். கந்தர் சஷ்டி கவசம் என்னை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்றும் என அம்மா சொல்வதுண்டு. அம்மாவுக்காக இல்லாமல் அந்தப்பாடல்களைப் பாடும்போது எனக்குத் திக்காததால் நான் அவற்றை விரும்பிப் பாடுவதுண்டு. நாக்கு உளராத என்னை நான் சாமி அறையில்தான் அந்த வயதில் பார்த்தேன். என் உலகம் வீட்டுக்குள்ளேயே மையமிட்டிருந்தது. எனவே முதன்முறையாக ஒன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்தபோது பெரும் கலாச்சார அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.
கட்டுரை/பத்தி
காற்றுசெல்லும் பாதை – ஜெயமோகன்
சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் நவீனைச் சந்தித்தேன். 2006ல் நானும் அருண்மொழியும் சிங்கப்பூருக்குச் சென்றோம். சிங்கப்புர் எழுத்தாளர் சங்கம் சார்பில் என் நண்பர் சித்ரா ரமேஷ் அழைத்திருந்தார். அங்கிருக்கையில் மலேசியா வருகிறீர்களா என ஓர் அழைப்பு வந்தது. மலேசிய நவீன இலக்கியத்தின் மையமாகிய டாக்டர் சண்முக சிவா அழைத்திருந்தார் ஆனால் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக மலேசியா செல்ல விசா கிடைக்காது என்னும் நிலை.
மறைந்த நண்பர் ஈழநாதன் விசா ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். சிலநாட்களிலேயே விசா வந்தது. சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கினோம். கொலாலம்பூர் பேருந்துநிலையத்திற்கு நண்பர் அகிலனுடன் ஒரு காரில் நவீன் வந்து வரவேற்றார். கரிய உருவம் சிறுவனைப்போன்ற அழகிய முகம். முகத்தில் சரியும் மயிக்கற்றை. செல்லப்பிள்ளைகளுக்குரிய மெல்லிய திக்கல் கொண்ட பேச்சு.
‘உலகின் நாக்கு’ நூலின் முன்னுரை
16 வயதில் சுஜாதாவிலிருந்துதான் நான் தமிழக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினேன். அதுவரை மலேசிய இலக்கியங்களை வாசித்ததோடு சரி. எம்.ஏ.இளஞ்செல்வன்தான் முதன் முதலாக என் வாசிப்பின் போதாமையைச் சுட்டிக்காட்டினார். வாசிப்பு எத்தனை சுவையானது என புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ சிறுகதையைச் சொல்லி புரிய வைத்தார். அப்போது லுனாஸில் செயல்பட்ட புத்தகக் கடையையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது வித்தியாசமான புத்தகக் கடை.
மெனிஞ்சியோமா : வலியைத் தின்று வாழ்தல்
இதுவரை எந்த மரணத்துக்காகவும் அழுததாக நினைவில்லை. மரணம் ஒரு முற்றுப்புள்ளி. அதனிடம் விவாதிக்க ஒன்றும் இல்லை. ‘காலனும் கிழவியும்’ சிறுகதையில் அழைத்துப்போக வந்த எமனிடம் கிழவியைச் சண்டைப்பிடிக்க வைத்த புதுமைப்பித்தன்தான் ‘செல்லம்மாள்’ சிறுகதையில் செல்லம்மாளின் மரணத்தைக் பிரமநாயகம் ஒரு சாட்சியாக காண்பதைக் காட்டியுள்ளார். புதுமைப்பித்தன் அப்படித்தான். அவர் வாழ்வின் எல்லா சாத்தியங்களையும் புனைவில் உருவாக்கிப்பார்ப்பவர். ஆனால் வாழ்வு மனிதனுக்கு அத்தகைய சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. பிரமநாயகம்போல மரணத்திடம் அதிகபட்சம் சாட்சியாக இருக்கும் உறவே சாத்தியம். மரணம், மரணித்தவரின் அன்புக்குறியவரையே அதிகம் வதைக்கக் கூடியது. ஆனால் விபத்தில் துடிக்கும் ஒரு இளைஞன் , தனது உறுப்பில் ஒன்றை இழந்து கதறும் ஒருவரின் அவலம், நோய்மையின் சுமை படுத்தும் பாட்டின் பதற்றம் என ஒருவரின் வலியே என்னை அவஸ்தையுற வைக்கும்.
ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்
வாசிக்கும் முன்பு: இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த வசைகள் உதவலாம்.
வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்!
கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி முன்மாதிரி என அடிக்கடி சொல்வதுண்டு. தந்தையின் மடியில் படுக்கலாம், கோபித்துக்கொள்ளலாம். திட்டலாம். ஆனால், முன்மாதிரி ஆளுமையைத் தள்ளி நின்று கவனித்தபடியே இருக்கவேண்டும். அவர்கள் செயல்களை கவனிப்பதன் மூலமே கற்றல் நடக்கும்.
கலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை
நேற்றுப்போல் இருக்கிறது கலை இலக்கிய விழா கொண்டாடத்தொடங்கி. இது கொண்டாட்டமா என்றால்… ஆம்! கொண்டாட்டம்தான். 2009ல் நான் ‘கலை இலக்கிய நிகழ்ச்சி’ எனப் பெயரிட்டபோது மா.சண்முகசிவா சொன்னார், “இது நிகழ்ச்சி இல்லை. விழா. நாம் கொண்டாடப்போகிறோம்…” எனக்கு அப்போது ‘கொண்டாட்டம்’ என்ற சொல் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு தீவிர படைப்பாளிக்குள் எப்படிக் கொண்டாட்ட மனநிலை வரலாம் என, ‘கறார்’ முகத்துடன் இருந்தேன். பின்னர் பெயரைக் ‘கலை இலக்கிய விழா’ என மாற்றி அமைத்தேன். ஆனால், கொண்டாட்டமும் குதூகலமும் இல்லாமல் இலக்கியமும் கலையும் உருவாகும் மனநிலை வாய்க்காது என அடுத்த வந்த சில வருடங்களிலேயே அறிந்துகொண்டேன்.
சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை
ஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்.
ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும் அவ்வப்போது மாற்றியமைப்பார். பெரும்பாலும் அவர் சொல்லும் கதைகளில் நன்னெறிப்பண்புகள் இருக்காது. எல்லா பாத்திரங்களும் அதனதன் போக்கில் வரும் – போகும்.
இலக்கிய வட்டம் : ஒரு பார்வை
பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து, தட்டச்சு செய்யப்பட்டதை நகல் எடுத்து அடுத்த கூட்டத்தில் வழங்கி விவாதித்துள்ளனர்.
கச்சடா பேச்சு
கெட்ட வார்த்தையை எங்கள் ஊரில் கச்சடா பேச்சு என்றுதான் கூறுவர். நான் அனேகமாக 10 வயதுவரை கச்சடா பேச்சை அறிந்திருக்கவில்லை. தோட்டங்களில் வாழ்ந்த என் நண்பர்கள் அதுபோன்ற வார்த்தைகளை அடையாளம் காண்பதிலும் அதைப் பிரயோகிப்பவர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் கில்லாடிகளாக இருந்தனர். தோட்டங்களில் கச்சடாவாகப் பேசுவது சகஜமானது. சண்டையென வந்துவிட்டால் கச்சடா வார்த்தைகள் ஒன்றாகச் சேர்ந்து எதிராளி வீட்டுத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்று எப்படியும் அவர்கள் காதுகளுக்குள் புகுந்துவிடும் வல்லமையைக் கொண்டிருந்தன.