நாரின் மணம் 3: களவெனும் கலை

p-alibblதிருடர்கள் என்றலே எனக்கு மிகவும் பயம். அப்போதெல்லாம் எண்ணெய் மனிதன் (Orang Minyak) குறித்தப் பேச்சு எங்கள் ஊரில் அதிகம் இருந்தது. கம்பத்தில் வசித்தபோது நள்ளிரவுகளைத் தாண்டியும் பேய் பயமெல்லாம் இல்லாமல் சுற்றியுள்ளேன். கம்பத்து வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பகலில்கூட திருடர்கள் பயம் கௌவிக்கொள்ளும். குறிப்பாக எண்ணெய் மனிதன் என் பொழுதுகளை அச்சமடைய வைத்தான்.

எங்கள் வீடு முப்புறமும் வனம் சூழ்ந்த இருளில் இருந்தது. நாங்கள் அங்குக் குடியேறியப்பிறகுதான் மரங்களை வெட்டி கொஞ்சம் வெளிச்சம் வரச்செய்தோம். ஆபத்து அவசரத்துக்குக் குசினியின் நின்று அடித்தொண்டையில் கத்திக்கதறி அழைத்தால் ஓலம்மா பாட்டி வீட்டில் மெல்லிசை கானம் போல கேட்கும் அளவில் பாதுகாப்பு இருந்தது. எனவே மூன்று நாய்களை வளர்த்து வந்தோம். பாம்புகள் வராமல் இருக்க ஆங்சா வளர்த்தோம். நாய்க்கும் ஆங்சாவுக்கும் ஆகாது. சில சமயங்கள் அவைகளின் சொந்தப்பிரச்சினையில் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதை மறந்திருக்கும்.

பள்ளியிலும் அடிக்கடி சக மாணவர்கள் வீட்டில் யாராவது திருடன் நுழைந்து திருடிய கதை பரவலாகியிருக்கும். நண்பர்கள் தாங்கள் சந்தித்த திருடர்கள் குறித்துக்கூறும் போது கிலிபிடிக்கும். கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே நுழைவதும், பொருள் விற்பதாகச் சொல்லி வாசல் வழி நுழைவதும், பல நாள்கள் வேவு பார்த்து யாரும் இல்லாத சமயத்தில் நுழைவதும் என செவிமடுத்தக் கதைகளை வீட்டில் அச்சம் பொங்க கூறுவேன். ஒருவேளை திருடன் வீட்டில் நுழைந்துவிட்டால் நான் எங்குச்சென்று ஒளிவதென இடமெல்லாம் பார்த்து ரகசியமாக வைத்திருந்தேன்.

ஆரம்பப்பள்ளியில் படிக்கும்போதெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொலைக்காட்சியில் பி.ரம்லியின் (P. Ramlee) படம் போடுவார்கள். குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்போம். எனக்குப் பி.ரம்லியைப் பிடித்திருந்தது. நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என அவரது ஆளுமை எதுவும் தெரியாத வயதில் அவரது நடிப்பில் இருந்த அங்கதச்சுவை வாரா வாரம் தொலைக்காட்சியின் முன் என்னை அமர வைத்தது.

அப்படி ஒருமுறை அமர்ந்திருந்தபோதுதான் அலிபாபா எனும் திரைப்படம் (Ali Baba Bujang Lapok – 1961) ஒளிபரப்பானது. பி.ரம்லிதான் அதில் திருடர் கூட்டத்தின் தலைவன். நான் அதற்கு முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தைப் பார்த்திருந்தேன். எம்.ஜி.ஆருக்கு முன்பே நாற்பதுகளில் என்.எஸ்.கிருஷ்ணன் அலிபாபா திரைப்படத்தில் நடித்துள்ளார் என பின்னர்தான் அறிந்தேன். ஆனால் இந்தத் திரைப்படம் முற்றிலும் வேறாக இருந்தது. நான் கதைகளிலும் தமிழ்ப்படங்களிலும் பார்த்த திருடனைப் போல இல்லாமல் பி.ரம்லி முற்றிலும் ஈர்க்கக் கூடிய திருடனாக அதில் தோன்றினார்.

சின்னஞ்சிறிய சைக்கிள்தான் திருடர் கூட்டத்தின் தலைவனின் வாகனம். அதில் மணியடித்தபடி வருவார் பி.ரம்லி. ‘ஆயிரத்தொரு ஆரேபிய இரவுகள்’ எனும் பாரசீக இலக்கியத்தில் உருவான தொகைநூலில் ஒரு கதைதான் அலிபாபா. எனவே இக்கதை பாக்தாத் நகரத்தில் நடப்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். குகையை நோக்கி வரும் அவர் ரகசிய சொற்களைக் கூறி குகையைத் திறக்கும் முன் மரத்தின் மீது ஒளிந்திருக்கும் அலிபாபாவைப் பார்த்துவிடுவார். அந்த வயதில் அடுத்து என்னாகும் எனப் பார்த்த போது திருடன் அலிபாபாவைப் பார்த்து ‘ஹாய்’ என்பார். பதிலுக்கு அலிபாபாவும் ‘ஹாய்’ என்பார். எனக்கு ஒரே ஆச்சரியம். அதற்கு முன் நான் பார்த்த; வாசித்த அலிபாபா கதைகள் எதிலும் அவ்வாறான காட்சி இல்லை. திருடன் கொடூரமானவனாகவே அதில் வருவான். அலிபாபா முற்றிலும் தன்னை மறைத்துக்கொண்டிருப்பான். குழப்பத்துடன் தொடர்ந்து பார்த்தபோது, குகையிலிருந்து இரவில் மீண்டும் கொல்லையடிக்க வெளியேறும் பி.ரம்லி கை பாவனையில் அலிபாபாவைப் பார்த்து உறங்கவில்லையா என்பார். அலிபாபாவும் மரத்திலேயே உறங்குவேன் என பாவனை காட்ட ‘ஹாய்’ என விடைக்கொடுப்பார். எனக்கு அந்த வயதில் முதன் முறையாகத் திருடனைப் பிடித்துப்போனது.

பி.ரம்லி இயக்கிய அப்படம் அடிப்படையான அலிபாபா கதையைக் கொண்டிருந்தாலும் அதற்குள் அவர் செய்து வைத்த பகடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. குலாம் சாயுபு வேடத்தை ஏற்று தமிழ்ப்படத்தில் காலணி தைப்பவராக வரும் தங்கவேலுவின் பாத்திரத்தை ஒரு சீனருக்கு வழங்கி இஸ்லாமியர்கள் புழங்கும் பாக்தாத் நகரில் அலையவிடுவதோடு அடிக்கடி ‘நானும் இந்த நாட்டின் குடிமகன்’ எனும் வசனத்தையும் அச்சீன கதாபாத்திரத்துக்கு வழங்கி கலகம் செய்திருப்பார் பி.ரம்லி. எனக்கு எம்.ஜி.ஆரைவிட திரைப்படத்தில் கலகம் செய்யும் பி.ரம்லியைப் பிடித்ததுபோலவே நல்லவர்களைவிட திருடர்களைப் பிடித்துப்போனது.

நான் கதைகளில் வரும் எதிர்மறைக் கதாமாந்தர்களைக் கவனிக்கத்தொடங்கியதுmaxresdefault பி.ரம்லியின் அத்திரைப்படத்தினால்தான். திருடர்கள் தான் வாழும் காலத்தின் சாகசக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் இருப்பிடங்கள் சுவாரசியமானவை. அவர்களால் குகைகளிலும் மர பொந்துகளிலும் அடந்த காடுகளிலும் யார் கண்களிலும் படாமல் வாழ முடிந்தது. அவர்கள் விரும்பாமல் அவர்களை யாரும் பார்த்துவிட முடியாது. அவர்களால் புதிது புதிதாகத் தந்திரங்களைச் செய்ய முடிந்தது. நான் வாசித்தக் கதைகள் பலவற்றிலும் திருடர்களின் சாமர்த்தியங்கள் நாசுக்காகச் சொல்லப்பட்டுக்கொண்டே இருந்தன. ஆத்தா சொன்ன தோலிருக்க சொளா முழுங்கி கதையின் நாயகனும் கடைசியில் திருடியே தன் வாழ்வை வசதியானதாக்கிக் கொள்வான். நண்பர்கள் சொன்ன அனுபவக் கதைகளில் வந்த திருடர்களும் சாதுர்யம் மிக்கவர்களாக இருந்தனர். அவர்கள் என் நண்பர்களின் பெற்றோர்களைவிட புத்திசாலிகள் என மெதுவாகத்தான் அறிந்துகொண்டேன்.  எல்லா கலைகளையும் போல திருடுவதும் ஓர் அறிய கலையாகவே எனக்குப்பின்னர்தான் தோன்றியது.  கதைகளில் அவர்கள் கடைசியில் தோற்றாலும் அதுவரை அவர்கள்  நூதனமாகத் திருட உருவாக்கும் உத்திகள் சுவாரசியமானவை.

அலிபாபா படத்தைப் பார்த்தபின் எனக்கு எண்ணை மனிதன் மீதான பயம் முற்றிலும் அகன்றிருந்தது. அவன் மிகுந்த சாமர்த்தியசாளியாகத் தெரிந்தான். திருடிக்கொண்டு ஓடும்போது யார் கையிலும் பிடிபடாமல் இருக்க அவன் உடல் முழுதும் பூசியுள்ள எண்ணை எப்படியெல்லாம் துணைச்செய்யும் என நினைத்துப்பார்த்தபோது அவனைச் சந்திக்கும் ஆர்வம் துளிர்ந்தது.

காலம் செல்லச் செல்ல திருடர்கள் புகும் வீடுகளில் உயிர்ச்சேதங்களை நடக்கும் செய்திகள் காதுகளுக்கு எட்டும்போது சின்னவயதில் நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த திருடர்களை நினைத்து ஏங்கத் தொடங்கினேன். கற்பனையாற்றலும் தொழில்திறனும் உள்ள திருடனால் மட்டுமே சக மனிதனுக்குக் காயம் விளைவிக்காமல் திருட முடிகிறது. திருடுவது என்பது அவன் தொழிலின் சவால். அதற்கு முன்பான நுண்ணிய ஆயத்தங்களும் சுவடு தெரியாமல் ஒரு வீட்டில் நுழைவதும் மீள்வதுமே அவன் தொழிலுக்கான கௌரவம். முற்றிலும் கலை உணர்ச்சி இல்லாத திருடர்கள் மட்டுமே பிற மனிதர்களைக் காயம் செய்து பயமுறுத்துகிறார்கள்.

ஒரு சிலையின் கண்ணை இறுதியாகத் திறக்கும் சிற்பியின் கவனத்துடன் திருடும் கலைஞர்கள் இல்லாமலாகிவிட்ட நிலத்தில் உருவாகும் திருடர்கள் பற்றிய கதைகளும் படங்களும் மீண்டும் அச்சமூட்டக்கூடியதாகவே மாறி வருகிறது. எல்லா கலைத்துறையையும் போலவே அசலான, நுட்பமான கலைஞர்கள் திருட்டுத்தொழிலும் அருகிவருவதை உணராத தேசம் ஆபத்தாகத் தெரிகிறது.

(Visited 55 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *