முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி: வல்லினம் 100-இல் லஞ்சம்?

என்னிடம் சிங்கப்பூர் பற்றிக்  கட்டுரை கேட்டல் கூடக் கொடுத்திருப்பேன். ஆனால் மலேசியப்பெண் எழுத்தாளர்கள் (நாவலாசிரியர்கள்) பற்றிய கட்டுரையை அச்சிடுவதாகக் கூறிய தாங்கள் அவ்வாறு செய்யவில்லையே. அச்சிடுவதற்கு வாசகர்வட்டத்தைப்போலப் பணம் எதிர்பார்த்திருந்தால்கூடத் தந்திருப்பேன்.வாக்குத் தவறலாமா? தங்களின் குணம் மாறிப்போனதில் வருத்தம்தான்.

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி.

வணக்கம் டாக்டர். வல்லினம் 100 இதழ் பணிகள் தொடங்கியபோதே வல்லினம் வளைத்தளத்தில் உள்ள படைப்புகள் பலவற்றையும் தொகுத்து எடுத்தோம். அவ்வகையில் கட்டுரைக்கான பொறுப்பாளர் அ.பாண்டியன் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். முதலில் அந்தப்படைப்புகள் வேறு சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளதா என சோதிப்பது வழக்கம். உங்கள் படைப்பையும் அவ்வாறு கேட்டுச் சோதித்துக்கொண்டேனே தவிர அக்கட்டுரை வல்லினம் 100இல் இடம்பெறும் என நான் எவ்விடத்திலும் வாக்குறுதி கொடுக்கவில்லை. அவ்வாறு தொகுத்துக்கொண்ட பல படைப்புகள் மறுவாசிப்பில் நீக்கப்பட்டன. உங்கள் கட்டுரையும் அவ்வாறே. உங்கள் கட்டுரை அந்நூலில் இடம்பெற தகுதிபெறவில்லை.  நிற்க, இதே சமயம் நான் உங்களை அணுகியும் கட்டுரை கேட்கவில்லை என நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ஜனவரி 10இல் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் இது:

அன்புள்ள நவீன்,
புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாண்டில் தாங்கள் நடத்தவிருக்கும் கலை இலக்கிய தினத்தில் வெளியிடவிருக்கும் இலக்கிய மலரில் என்னுடைய கட்டுரை ஒன்றும் இடம்பெற வேண்டும் என நினைக்கிறேன். தாங்கள் பலரிடம் கட்டுரை கேட்டதாக அறிகிறேன். என்னை எப்படி மறந்தீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல ( புதிய) ஆய்வுக்கட்டுரை ஒன்றும் எழுதிடும் எண்ணம் உண்டு. எப்போது காலக்கெடு? நான் பிப்ரவரி மாதத்திற்குள் அனுப்பிவிடுகிறேன். வெளியிட இயலுமா? பதில் எழுதுக.

நன்றி
அன்புடன்
முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி

குறிப்பிட்ட தினத்துக்குள் உங்கள் படைப்பு வராததால் உங்கள் புதிய கட்டுரையும் இடம்பெறவில்லை. மேலும் உங்களுக்கு எந்த வாக்குறுதியும் தராததால் நான் உங்கள் கட்டுரை இடம்பெறாதது குறித்து கூறவும் இல்லை. சரி இதை நான் இங்கு பொதுவில் சொல்ல ஒரே காரணம்தான். உங்கள் விஷப்பேச்சு. இந்த விஷப்பேச்சுதான் பின் அவதூறாக மாறும். பின்னர் அதை பேசி பேசியே வரலாறாக மாற்றுவீர்கள். பணம் உள்ளிட்ட விடயங்களில் நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்.

/அச்சிடுவதற்கு வாசகர் வட்டத்தைப்போலப் பணம் எதிர்பார்த்திருந்தால்கூடத் தந்திருப்பேன்/ என்பது யாரை அவமானப்படுத்தும் சொற்கள். வாசகர் வட்டத்தையா? நான் வல்லினம் 100இல் இடம்பெற்ற ஏதாவது ஒரு படைப்பாளியிடம் பணம் வாங்கியதை உங்களால் நிரூபிக்க இயலுமா? உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கட்டுரையைப் பிரசுரிக்கும் அளவுக்கு என் இலக்கிய நிலைபாடு பலவீனமானது என நினைத்தீர்களா? டாக்டர், உங்கள் அவதூறு பரப்பும் பேச்சு இன்றுவரை மாறாதிருப்பது எனக்கும் வருத்தம்தான்.

இங்கே பதிவிட்டு விட்டேன். இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் என் நிலைபாடு குறித்த அவதூறுகளைப் பேசத்தொடங்கலாம். நன்றி.

(Visited 384 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *