‘உலகின் நாக்கு’ நூலின் முன்னுரை

coverவாசிப்பின் வாசல்கள்

16 வயதில் சுஜாதாவிலிருந்துதான் நான் தமிழக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினேன். அதுவரை மலேசிய இலக்கியங்களை வாசித்ததோடு சரி. எம்.ஏ.இளஞ்செல்வன்தான் முதன் முதலாக என் வாசிப்பின் போதாமையைச் சுட்டிக்காட்டினார். வாசிப்பு எத்தனை சுவையானது என புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ சிறுகதையைச் சொல்லி புரிய வைத்தார். அப்போது லுனாஸில் செயல்பட்ட புத்தகக் கடையையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது வித்தியாசமான புத்தகக் கடை.

அங்கு நூல்கள் வாடகைக்குக் கிடைத்தன. ஒரு நூலின் மொத்த விலையில் 25% கொடுத்து மூன்று நாள்களுக்கு இரவல் வாங்கலாம். நான் வீட்டில் பணம் கேட்டு சுஜாதா, வைரமுத்து, சாண்டில்யன் என வாசிக்கத் தொடங்கியிருந்தேன். கொஞ்ச நாளில் இளஞ்செல்வனே என்னை அந்தப் புத்தகக்கடையில் மாதம் 300 ரிங்கிட்டுக்கு வேலைக்குச் சேர்த்துவிட்டார். புத்தகங்களை இலவசமாக வாசிக்கக் கிடைத்த மாபெரும் சந்தர்ப்பம் அது.

துப்பறியும் கதைகளில் திளைத்திருந்த நான், எப்படியோ ஓஷோவின் பக்கம் திரும்பியிருந்தேன். பெரும்பாலும் கவிஞர் புவியரசுவின் மொழிப்பெயர்ப்பில் அவை வாசிக்கக் கிடைத்தன. தொடர்ச்சியாக அவர் நூல்களை வாசித்ததில் என் மொழியில் ஒருவித நுட்பம் நுழைந்திருப்பதாக  உணர்ந்தேன். எழுதும்போது மொழி கூர்மைப்பட்டிருந்தது. எழுத்தாளர் கோ.புண்ணியவானின் நெருக்கம் என் வாசிப்பு மேம்பட துணை செய்தது. வாசித்ததை உரையாட எனது எல்லா வயதிலும் நண்பர்கள் இருந்தது ஆச்சரியம்.

கோலாலம்பூருக்கு வந்தபின் மா.சண்முகசிவாவின் நட்பு என் வாசிப்பை மாற்றி அமைத்தது. அவர் இலக்கியம் மட்டும் இல்லாமல் மார்க்ஸியம் குறித்த அறிமுகத்தையும் எனக்குச் சில நூல்கள் மூலம் ஏற்படுத்தினார். அப்போது நண்பர்களாக இருந்த பா.அ.சிவம், சு.யுவராஜன் அறிமுகம் மூலம் தமிழகத்திலிருந்து வெளிவரும் காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்களை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். திண்ணை மற்றும் திசைகள் ஆகிய இணையத்தளங்களிலும் வாசிப்பை நீட்டித்திருந்தேன். அப்போது வாசிப்பில் எனக்கு ஒரு அவசரம் தொற்றியிருந்தது. 300 பக்கத்திற்குக் குறைவான எந்த நாவலையும்  ஐந்து மணி நேரத்தில்  வாசித்து முடித்துவிடுவேன். வாசிக்கும் நூல்கள் பட்டியலில் கூடுதலாக ஒன்று இணைவதில் பெருமிதம் இருக்கும்.

2006இல் மலேசியாவுக்கு வந்த எழுத்தாளர் ஜெயமோகன் என் வாசிப்புக்குப் புதிய கதவுகளைத் திறந்து வைத்தார். எதையெல்லாம் வாசிக்க வேண்டும் எனச்சொல்லிக் கொடுத்தவர்கள் மத்தியில் எப்படி வாசிக்க வேண்டுமென அவர்தான் எனக்கு போதித்தார். அதுவரை நான் வாசித்த நூல்கள் குறித்து சிந்தித்தபோது அவை பட்டியலில் உள்ள எண்ணிக்கையாக மட்டுமே இருந்தன. எந்தப்புனைவிலும் நான் நுண்ணிய வாசிப்பை நிகழ்த்தி இருக்கவே இல்லை. நான் கதைகள் என சம்பவங்களை நினைவில் வைத்திருந்தேன். எந்த நாவலும் எனக்கு நாலுவரி சம்பவமாக மட்டுமே இருந்தது. நான் உஷாரான தருணம் அது. ஜெயமோகன் நவீன இலக்கிய முன்னோடிகள் என்ற தலைப்பில் எழுதிய ஏழு நூல்களையும் பாடநூல் போல வாசிக்கத் தொடங்கினேன். அதில் அவர் கதைகளை உள்வாங்கும் விதத்தையும் கதைகளோடு முரண்படும் விதத்தையும் புரிந்துகொண்டு பட்டியலிடப்பட்ட அனைத்துச் சிறுகதைகளையும் தேடி வாசிக்கத் தொடங்கினேன்.

எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட சோதனை முறை அது. நுணுகி வாசிப்பதற்கான பொறுமையும் உள்வாங்களும் உழைப்பும் விமர்சனப் பார்வையையும் ஓரளவு பெற்றுத்தந்தபோது மொழிப்பெயர்ப்பு இலக்கியங்கள் மீதும் சமகால இலக்கியங்கள் மீதும் வாசிப்பைச் செலுத்தினேன். ஜெயமோகன் மறுத்திருக்கும் இலக்கியவாதிகளையும் வாசித்து எனக்கென தனி புரிதலையும் உள்வாங்கலையும் ஏற்படுத்திக்கொண்டேன். ஜெயமோகனுக்கு எதிராக நான் சில படைப்பாளிக்காக  எனக்குள் வாதடிக்கொண்டே இருந்தேன். அதுதான் எனக்கான பயிற்சியாக அமைந்தது. வாசிப்பதை விவாதிப்பதே அதை நினைவில் வைத்திருக்க ஒரே வழி. அதற்கு நாம் கற்பனையான ஒரு எதிர்க்கருத்துள்ளவரை உருவாக்க வேண்டியுள்ளது.

இன்று ஒரு புதிய வாசகன் இலக்கியத்தை அணுகும்போது ஏற்படும் குழப்பமும் இலக்கியத்தின் பிரத்தியேக வடிவமும் சோர்வை ஏற்படுத்தி அவனை கேளிக்கைகள் சூழ்ந்துள்ள வேறு உலகுக்குத் துரத்தலாம். ஓர் நல்ல இலக்கியப்பிரதி தனக்குள் என்ன வைத்துள்ளது என புதிய வாசகனுக்குத் திறந்து காட்டும் முயற்சியாகத்தான் எழுத்தாளர் இமையத்தின் ஊக்குவிப்பில் ‘அம்ருதா’ இதழில் இந்தக் கட்டுரைகளை எழுதினேன். அந்தப் பிரதிகளுடன் நான் எனக்குள் நடத்திய உரையாடலின்  கோர்வையைத்தான் இங்குக் கட்டுரைகளாக வழங்கியுள்ளேன்.  இதை வாசிக்கும் வாசகன் ஒருவன் அந்த இலக்கியங்களையும் வாசித்து என் பார்வையுடன் முரண்படுவானாயின் அதுவே இத்தொகுப்பின் வெற்றி. அவனுடைய கற்பனையின் நான் எதிர்த்தரப்பில் நின்று விவாதிப்பது மட்டுமே ஒரு வாசகனாக எனக்கு நிறைவு.

ம.நவீன்
16.9.2016

இந்நூலுக்கு  எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய முன்னுரை.

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூலை புலம் புத்தக அரங்கில் (35) வாங்கலாம்.

(Visited 145 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *