மெனிஞ்சியோமா : வலியைத் தின்று வாழ்தல்

142307701இதுவரை எந்த மரணத்துக்காகவும் அழுததாக நினைவில்லை. மரணம் ஒரு முற்றுப்புள்ளி. அதனிடம் விவாதிக்க ஒன்றும் இல்லை. ‘காலனும் கிழவியும்’ சிறுகதையில் அழைத்துப்போக வந்த எமனிடம் கிழவியைச் சண்டைப்பிடிக்க வைத்த புதுமைப்பித்தன்தான்  ‘செல்லம்மாள்’ சிறுகதையில் செல்லம்மாளின் மரணத்தைக் பிரமநாயகம்  ஒரு சாட்சியாக  காண்பதைக் காட்டியுள்ளார்.  புதுமைப்பித்தன் அப்படித்தான். அவர் வாழ்வின் எல்லா சாத்தியங்களையும் புனைவில் உருவாக்கிப்பார்ப்பவர். ஆனால் வாழ்வு மனிதனுக்கு அத்தகைய சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. பிரமநாயகம்போல மரணத்திடம் அதிகபட்சம் சாட்சியாக இருக்கும் உறவே சாத்தியம். மரணம், மரணித்தவரின் அன்புக்குறியவரையே அதிகம் வதைக்கக் கூடியது. ஆனால் விபத்தில் துடிக்கும் ஒரு இளைஞன் , தனது உறுப்பில் ஒன்றை இழந்து கதறும் ஒருவரின் அவலம், நோய்மையின் சுமை படுத்தும் பாட்டின் பதற்றம் என ஒருவரின் வலியே என்னை அவஸ்தையுற வைக்கும்.

கடந்த ஆண்டு சிறுநீரகத்தில் கல் உருவாகியிருந்தது. சரியாக அதிகாலை நான்கு மணிக்கு மரண வலி தோன்றும். அதுதான் சிறுநீரகம் துரிதமாக வேலையைத் தொடங்கும் நேரமாம். நான் மூன்றுக்கெல்லாம் வலியை எதிர்க்கொள்ள தயாராகிவிடுவேன். மூளை எந்த நேரமும் வலியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. வலி உச்சத்தைத் தொடும்போது வாந்திவரும். மருத்துவர் வலிகளை ‘டாப் 10’இல் பட்டியலிட்டால் சிறுநீரகக் கல்லால் உண்டாகும் வலியை முதல் ஐந்துக்குள் அடக்கலாம் என்றார்.   கல்லைக் கரைக்க முள்ளங்கிச்சாறு, வாழைத்தண்டின் சாறு  என கொடுத்ததையெல்லாம் குடித்தேன். எதுவும் சரிபடாமல் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானேன்.

முதலில் லேசர் முறையில் சிகிச்சை நடந்தது. கல் உள்ள பகுதியில் லேசரைக் கொண்டு சுத்தியலால் அடிப்பது போல 30 நிமிடம் சிகிச்சை நடக்கும். அசையாமல் படுத்திருக்க வேண்டும். ‘டப் டப் ‘ எனச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மெல்லிய அடிதான். ஆனால் தொடர்ந்து ஒரே இடத்தில் விழும் மெல்லிய அடி தாளமுடியாத வலியை ஏற்படுத்தியது. முதுகெழும்பில் பிரச்னை இருந்ததால் சரியாகப் படுக்க முடியாமல் தவித்தேன். பலமணி நேரம் கடந்துவிட்டதுபோல சோர்ந்திருந்தபோது ‘இன்னும் 15 நிமிடமே’ என டாக்டர் சொன்னார். மனதளவிலும் தளர்ந்திருந்தேன். கல் கொஞ்சம் பெரிய அளவு போல. அடித்த அடியில் அது இரண்டாக உடைந்து உள்சிறுநீர் குழாயில் சிக்கிக்கொண்டது. இனி அறுவை சிகிச்சைதான் என முடிவானது.

அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் மருத்துவரைக் காணச் சென்றேன். மருத்துவர் வர தாமதமானது. திடீரென வலி. நான்கு மணிக்கே வர வேண்டியது 10 மணிக்கு வந்திருந்தது. கால தாமதம் குறித்து கண்டிக்கும் அளவுக்கு அந்நியோன்யம் வளராததால் தாதியிடம் செய்கையில் வலியைக் காட்டினேன். வார்த்தை வரவில்லை. பேசும் அளவுக்குச் சக்தி இல்லை. உடனே இரண்டாவது மாடிக்குச் செல்லுங்கள் என பதற்றமானார். மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாம் மாடிக்குச் செல்வது அவ்வளவு தொலைதூர பயணமாக இருந்தது. வலிதடுப்பு மருந்து கொடுக்கும் தாதியை அதற்குறிய அறையில் காணவில்லை. மயங்கிவிடுவேனோ என பயம் வந்தபோது  சக்தியைத் திரட்டி பக்கத்து அறைக்குச் சென்று சம்பந்தமே இல்லாத தாதியைத் திட்டத்தொடங்கினேன். அது தனியார் மருத்துவமனை. சட்டென அந்தத் தளம் விளிப்படைந்தது. வலி கோபமாகப் பரிணாமம் எடுத்திருந்தது. ஆயிரம் ‘சாரி’களுக்குப் பின் ஒரு ஊசி போட்டார்.

‘மெனிஞ்சியோமா’ எனும் நாவலைப் படிக்கத்தொடங்கியபோது இந்த நினைவுகள் வந்துகொண்டே இருந்தன. வலியைப் பற்றி படிக்கும்போது மூளை நமக்குத் தெரிந்த வலியையே சேமிப்பில் இருந்து எடுத்து மறு ஒலிபரப்பு செய்கிறது.

கதையின் நாயகன் சந்துருவிற்கு மூளையில் ஒரு சிக்கல் என்பதால் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்படுகிறது. அதன் பிள்விளைவுகளும் அந்த அறுவை சிகிச்சையால் சந்துரு அனுபவிக்கும் அவஸ்தைகளையும் இந்தச் சின்னசிறிய நாவலில் கணேச குமாரன் சொல்லிச் செல்கிறார். ஆனால் கணேச குமாரன் காட்டும் வலி, உடல் ரணத்தால் மட்டும் உருவானதாகச் சுருக்காமல் அவர் தந்தையான காளிதாஸின் உளவியல், சந்துரு மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் சொல்லில் கடக்க முடியாத அந்தரங்க இடைவெளி என விவரித்துள்ளது நாவலை செழுமையாக்குகிறது.

அறுவை சிகிச்சைக்கு முன் வயிற்றைச் சுத்தம் செய்ய ஆசனவாயில் ரப்பர் முனையைத் திணிக்கும்போது சந்துரு ‘அப்பா’ என அலர மகனின் நிர்வாணத்தைப் பார்க்க விரும்பாமல் திரும்பியிருந்த காளிதாஸ் சட்டென திரும்பி அவன் கைகளைப் பற்றிக்கொள்கிறார். அவனுக்கு ஆறுதல் சொல்கிறார். துளையைச் சுருக்க வேண்டாம் என்கிறார். பசியைப் போலவே வலி மனிதனின் வேறு எந்த உணர்வையும் பொருட்படுத்துவதில்லை.  வலியுடனும் அவமானத்துடனும் போராடிய சந்துரு பின்னர் தன்னை ஒப்புக்கொடுப்பதிலிருந்து நாவல் அந்தரங்கமான கண்களைச் சிமிட்டத்தொடங்குகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாகத்தால்  தவித்து சந்துரு படும் அவஸ்தையும் ஆனால் தண்ணீர் தரக்கூடாது என்ற மருத்துவரின் கண்டிப்பினால் உண்டாகும் ஏமாற்றமும் அதற்கு தீர்வாக தனது குறியில் கை வைத்து ரப்பர் டியூப் மாட்டியிருந்த இடைவெளியின் தோலில் கசிந்திருக்கும் சிறுநீரை உதட்டில் தடவிக்கொள்வதையும் இந்தச்சின்னஞ்சிறிய நாவலில் செறிவாச் சொல்லியுள்ளார் கணேச குமாரன்.

இதுவரை நான் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன். வலது விரல்கள் மோல்டிங் இயந்திரத்தில் மாட்டி நசுங்கியபோது எனக்கு வயது 18. வலது கால் மூட்டு நகர்ந்து அறுவை சிகிச்சை செய்தபோது 24 வயதிருக்கும். சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சை செய்தபோது 34. மூன்று முறையும் நான் மருத்துவமனையில் தனியாகவே இருந்துள்ளேன். அறுவை சிகிச்சை நடந்து முடிந்த மருத்துவமனை இரவுகள் பயங்கரமானவை. கணேச குமாரன் சொல்கிறார், ‘நிசப்தத்தைப் போல ஒரு கொடூரமான அலறல் உலகில் இல்லை’. மௌனம் சத்தமிடக்கூடியது என பல எழுத்தாளர்களும் எழுதியதுதான். ஆனால் மருத்துவமனையில் மௌனம் அலறும் என கணேச குமாருக்குத் தெரிந்துள்ளது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின் சந்துருவுக்கு ஏற்படும் வலிப்பு நாவலின் இரண்டாம் அத்தியாயமாக நகர்கிறது. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் வலிப்பு அது.வலியால் துடிக்கிறான். வலி நிவாரண மருந்து தரப்படுகிறது.

நாவலில் அவனைப் பராமரித்து ஆதரவாய் இருக்கிற அப்பாவின் நிலை இன்னொரு முனையிலிருந்து துயரத்தைப் பேசுகிறது. ஒரு பாம்பின் எலும்புகூடுபோல போடப்பட்டிருக்கும்14938368_1145555092195590_7782297048927565665_n தையலைப் பிரிக்கும் போது ரத்தம் பீச்சுகிறது. அப்பா கொஞ்ச நேரம் வெளியே செல்வதாகச் சொல்கிறார். சந்துருவுக்குத் தெரியும் அவர் அழுகிறார் என. பேசுவதால் அவன் மூளைக்குக் குமைச்சல் உண்டாகலாம் என மௌனம் காக்கிறார். அந்த மௌனம் அவனை துன்புறுத்துகிறது. தொடர் மருந்துகள் அவனை பலவீனமாக்குகிறது. தனக்கு என்னவென்று டாக்டருக்கே தெரியலவில்லை என்றும் தன்னை வைத்து அவர் கற்றுக்கொள்வதாகவும் நினைக்கிறான். வலி ஒருவனை அவ்வாறுதான் சிந்திக்க வைக்கும். எல்லாவற்றையும் சந்தேகிக்கும். எனது ஒவ்வொரு அறுவை சிகிச்சையிலும் டாக்டர் ஏதோ தவறு செய்துவிட்டதாகவே நான் கருதிக்கொண்டதுண்டு. என்னைச் சுற்றி ஏதோ ஒரு சதி நடப்பதாக முழுமையாக மயக்கம் தெளியும் முன்பாக தோன்றுவதைத் தவிர்க்க முடிந்ததில்லை.

தன் அவஸ்தை பொறுக்காமல் உயிர்விட எண்ணி சந்துரு 15 தூக்க மாத்திரைகளை விழுங்க, அது உயிரைப் போக்காமல் மேலும் துன்பத்தைத் தருகிறது. அப்பா மேலும் மௌனமாகிறார். மாத்திரைகளே அவரே கொடுக்கத்தொடங்குகிறார். மௌனம் கலைந்து அவர் பேசும் வசனங்கள் கனமானவை.

ஒருவகையில் இந்த நாவல் மருத்துவ உலகம் குறித்தும் நோய்மை குறித்தும் சிகிச்சை முறை குறித்தும் எவ்வளவு துள்ளியமாகச் சொல்லிச்செல்கிறதோ அதற்கு அடியில் மனித உறவுகளையும் அதன் உளவியலையும் பேசும் இன்னொரு கதையையும் கவனமாக இழுந்துவருகிறது. நாவலின் பலம் அந்த இன்னொரு பகுதிதான். ஆனால் நோய்மையில் உண்டாகும் கோபம், தளர்ந்து போயிருக்கும் உடலுக்குள் விழித்திருக்கும் மனது உசுப்பக்கூடிய விபரீத எண்ணங்கள், உடலுக்கும் மனதுக்குமான முரணியக்கம், சந்துருவின் பார்வையில் காளிதாஸ் யாராக இருக்கிறார் என பலவற்றையும்  இன்னும் நுட்பமாகவும் ஆழமாகவும் விரிவாக்கியிருந்தால்  மானுட உளவியலைப் பேசும் முக்கியப்பங்கை இந்நாவல் ஆற்றியிருக்கும். மிக முக்கியமாக FRISIUM 10mg மருந்தை அவன் சென்று அடையும் இறுதிப் பகுதி கொஞ்சம் அவசரமாகவே முடிந்துள்ளது.

நாவலைப் படித்து முடித்தவுடன் நான் என் மண்டையைப் பிடித்துப்பார்த்துக்கொண்டேன். சிக்கலான இயந்திரம். நோய்மையிலிருந்து முன் ஜாக்கிரதையாக உடலைக் காப்பதெல்லாம் நடவாத காரியம்தான். ஆனால் நம்மைச் சுற்றி அன்பால் நிறைந்திருப்பவர்களைக் காத்துக்கொள்ளுதல் அவசியமாகத் தோன்றியது.

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்

விலை : 80.00 ரூபாய்

விற்பனை உரிமை : டிஸ்கவரி புக் பேலஸ்

(Visited 203 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *