வாரிஸ் டைரி : பாலைவனத்தில் உதிர்ந்த பூ

femalegenitalmutilation-source-middle-east-info_orgபிறப்புக்குரிய உறுப்பு வெட்டி எடுக்கப்படுவதை உணர்ந்தேன். மொன்னையான பிளேடு முன்னும் பின்னும் என் தசையினூடே சென்றுவரும் சத்தம் கேட்டப்படியிருந்தது. யாரோ உங்கள் தொடையிலிருந்து தசையைத் துண்டாக அறுத்தெடுப்பதுபோல அல்லது உங்கள் கையை வெட்டியெடுப்பது போலானது அவ்வலி. தவிர, இது உங்கள் உடம்பில் மிக முக்கியமான உணர்ச்சிப் பூர்வமான பகுதி. – waris dirie

இந்த வரியைப் படித்தவுடன் நான் பாலைவனப் பூ (Desert Flower) நூலை மூடிவைத்துவிட்டேன்.  அது நள்ளிரவு. மனம் மீண்டும் வாசிக்கத்தான் வேண்டும் என வற்புறுத்தியது. இந்நூலை நான் வாசிக்காமல் இருக்க அது ஒரு சுய வரலாறு என்பதுதான் காரணம். குளிரூட்டிய அறையில் நான் சொகுசாகப் படுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரம் உலகில் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு சோமாலியப்பெண்ணுக்கு மதம், கலாச்சாரம் என்ற பெயரில் அவளது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் என்ற எண்ணம் பயமுறுத்தியது. அவள் அழுதுகொண்டிருப்பாள். அவள் அழுகை எனக்குக் கேட்டது. மொன்னையான கத்தி தசையை அறுக்கும் ஒலியும் உடன் கேட்டது. ஆனால் நான் இந்த நூலை கையில் எடுக்க waris dirie இன்று அடைந்திருக்கும் இன்றைய உச்சங்கள் காரணமாய் இருந்தது.

சோமாலியாவில் ஒரு கிராமத்தில் பிறந்தார்  வாரிஸ் டைரி (waris dirie). ஒட்டகம் மேimg1131211037_1_1ய்க்கும் நாடோடி பழங்குடிச் சமூகம் அவர்களது. ஒரு இடத்தில் நான்கு வாரங்களுக்கு மேல் தங்குவதில்லை அவர்கள். விலங்குகளைப் பராமரிக்கும் தேவைக்காகவே அந்த இடமாற்றம். அவைக்கு உணவும் நீரும் வேண்டும். விலங்களைக் கொன்று உண்பதில் நாட்டம் இல்லாத இந்தப் பழங்குடியினர் அவற்றின் பாலை நம்பியே வாழ்ந்தனர். விழாக்காலங்களில் மட்டுமே மாமிசம். அவர்கள் குடிசை புற்களால் வேயப்பட்டிருக்கும். ஒரு இடத்தைவிட்டு மாறிச்செல்லும்போது குடிசை வேயப்பட்ட புற்கள், குச்சிகளைப் பிரித்துச் சேர்த்துக்கட்டி ஒட்டகத்தில் ஏற்றி வீட்டுடனேயே இடம் மாறி விடுவார்கள். புதிய இடத்தில் வீட்டை அமைத்துக்கொள்வார்கள்.

வாரிஸ் டைரி தன் குழந்தை பருவம் மிக அழகானது என்கிறார். காட்சிகளை, ஒலிச்சத்தங்களை, வாசனைகளை தான் உணர்ந்ததோடு சிங்கங்களின் குறட்டைவிடும் ஓசைகூட தனக்கு அறிமுகம் என்கிறார். ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நரிகள் ஆகியவற்றுடன் ஓடி விளையாடிய அனுபவத்தையும் நெருப்புக்கோழி முட்டையை எடுத்துக்கொண்டு ஓடும்போது தாய்கோழி மண்டையில் கொத்தியதையும் யானைகளின் வாழ்வையும் தன் அனுபவித்திலிருந்து பகிர்ந்துகொள்கிறார்.

ஆனால் அந்த குழந்தை பருவத்தில் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவிடாமல் பழங்குடி சடங்குகள் குறுக்கிடுகின்றன. மற்ற ஆப்பிரிக்கப் பெண் குழந்தைகளைப் போலவே ஐந்து வயதில் வாரிஸும் பெண் உறுப்பு சிதைப்பு என்னும் கொடூரத்தைச் சந்திக்க நேர்கிறது. தொடக்கத்தில் அவளது சகோதரிக்கு அச்சடங்கு நடக்கும்போது தனக்கும் அவ்வாறு செய்ய வேண்டுமென  அம்மாவிடம் அடம் பிடிக்கிறாள் வாரிஸ் டைரி. ஆனால் சகோதரிக்கு நடந்த அந்தக் கொடூரத்தைப் பார்த்தபோது பயம் கௌவிக்கொள்கிறது. வலியில் அக்காள் அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையும் மீண்டும் அவளைப்பிடித்துவந்து விருத்தசேதனம் செய்வதையும் பார்த்து தனக்கும் இந்தக் கொடூரம் நடக்கும் என அச்சம் மிரட்டுகிறது.  சந்தேகமே இல்லாமல் அது அவளுக்கும் நடக்கிறது.

உயிரே போனதுபோல வலி. ரத்தம் பெருகி மணலில் ஊர்கிறது. அவள் எல்லாம் முடிந்தது என நினைக்கும்போது வேளமரத்திலிருந்து ஒடித்த முட்களால் உறுப்பில் துளையிட்டு, தடித்த வெள்ளை நூலை தீக்குச்சியின் waris-dirieதலையின் அளவிலான சிறு துவாரம் மட்டும் விட்டு தைக்கிறார்கள். சிறுநீர் கழிக்கவும் மாதவிடாய் இரத்தம் வெளியேறவும் அந்தத் துவாரம். ஒவ்வொரு துளி சிறுநீர் வெளியேறும்போது வலியால் துடிக்கிறாள். இந்த விருத்தசேதனம் செய்துக்கொள்ளாத பெண் மோசமானவள், மாசுற்றவள், காமவேட்கை கொண்டு திரிபவள் என பலவாறாக இச்சமூகத்தால் தூற்றப்படுகிறாள். அவளுக்குத் திருமணமும் ஆகாது. இந்தச் சடங்கால் திருமணம் செய்துக்கொள்ளும்வரை உடலுறவுக்கொள்ள முடியாதபடி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவளது கணவன் கற்புள்ள ஒரு பெண்ணை பெற்றதற்கான அடையாளம் அந்தக் கொடுமை. மாதவிடாய் காலங்களில் பல பெண்கள் இந்தச் சடங்கின் பின்விளைவால் இறந்தது குறித்தோ  கிருமிகள் தாக்கம் குறித்தோ அந்தச் சமூகத்துக்கு எவ்வித அக்கறையும் இருக்கவில்லை.

இந்நிலையில் அவளுக்குத் திருமண பேச்சும் நடக்கிறது. 13 வயதில் 60 வயதை தாண்டியவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார் வாரிஸின் அப்பா. அந்த வயதானவர் வாரிஸைத் திருமணம் செய்துக்கொள்ள 5 ஒட்டகத்தைப் பகரமாகத் தருவதில் அவள் அப்பாவுக்கு ஏக சந்தோஷம். வாரிஸால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓர் இரவில் அம்மாவின் அனுமதியுடன் வீட்டைவிட்டு ஓடுகிறாள். பாலைவனத்தில் ஓட்டம். இந்த ஓட்டத்தில் இருந்துதான் ‘பாலைவனப் பூ’ நூல் தொடங்குகிறது.

உணவில்லாமல் எலும்பு துருத்திக்கொண்டு மயங்கி விழுந்த அவளை சிங்கம் சீண்டாமல் செல்லும் பதபதைப்பு புதிய உலகத்தை வாசகனுக்குக் காட்டக்கூடியது. உதவிக்கு வரும் லாரிக்காரனின் பாலியல் இச்சையிலிருந்து தப்பி ஓடுவதும் ஒட்டகக்கூட்டத்தில் புகுந்து மேய்ப்பவன் விரட்டி அடிக்கும்வரை  மடியில் வாய்வைத்து ஒட்டகப் பாலைக்குடிப்பது என ஒரு விருவிருப்பான நாவல் தன்மையுடன் இந்தச் சுயசரிதை நகர்கிறது.

பல துன்பங்களுக்கு ஆட்பட்டு 300 மைல்களைக் கடந்து தன் தாயாரில் சகோதரி வீட்டுக்கு வந்து சேர்கிறாள் வாரிஸ் டைரி . அங்கு வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டு இருக்கும்போது அவள் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர் வருகிறார். லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர். லண்டனில் வீட்டு வேலை செய்வதற்காக ஆட்கள் தேடிக்கொண்டிருப்பதைச் சொல்கிறார். தானே வருவதாக கெஞ்சுகிறாள் வாரிஸ். சிறு தயக்கத்துக்குப் பின் அழைத்துச்செல்லப்படுகிறாள். அங்கே நான்கு ஆண்டுகள் வீட்டுவேலை செய்கிறாள். நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்ப வேண்டும். அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. சித்தப்பாவிடம் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லி தன்னந்தனியாக லண்டனை எதிர்க்கொள்கிறாள். ஹல்வு என்ற சோமாலிய பெண்ணின் நட்பும் அவளுடன் தங்கும் வாய்ப்பும் அவள் மூலம் மெக்டொனால்ட் உணவகத்தில் வேலையும் கிடைக்கிறது. பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் அவள் வேலை.

அப்போதுதான் அவள் Terence Donovan என்ற புகழ்ப்பெற்ற புகைப்பட கலைஞனின் கண்களில் பimg1131211037_5_1டுகிறாள். அங்கிருந்து அவள் வாழ்க்கை மாறுகிறது. அது அவளது புதிய அத்தியாயம். கல்வி அறிவில்லாத அவள் தட்டுத்தடுமாறி மாடலிங் உலகில் நுழைகிறாள். ஆனால் பிறப்புறுப்பின் வலி அவளைத் துரத்தியபடியே வருகிறது. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் உயிர்போகும் வலி. அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆலோசனை நடக்கிறது. பண்பாட்டு விரோதமான அந்த அறுவை சிகிச்சையையும் செய்கிறாள். அவள் துவாரம் திறந்துவிடப்படுகிறது.  பின்னர் புகழ்பெற்ற பைரலி காலண்டரில் அவரது புகைப்படம் வெளியானது. புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளை அலங்கரித்தார். The Living Daylights என்ற ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திலும் நடித்தார். உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது. வாரிஸை ரிப்போர்ட்டர் எதிர்ப்பார்க்காத ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார். அது அவர் மனதை உலுக்கிய நேர்காணல் பின்னர் உலகையே உலுக்கியது.

1997இல் இருந்து 2003வரை ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். இன்று Desert Flower Foundation என்ற அறவாரியத்தை அமைத்து உலகின் பல நாடுகளிலும் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார். (http://www.desertflowerfoundation.org/)

வாரிஸ் டைரி  சொல்கிறார், “செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.”

பாலைவனப் பூ

வாரிஸ் டைரி / காத்லீன் மில்லர்

தமிழில் : எஸ்.அர்ஷியா

எதிர் வெளியீடு

 

(Visited 335 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *