புதிய ஆண்டு

2017 Calender on the red cubes

புதிய ஆண்டு என்பது உற்சாகம் கொடுப்பது. என்னை நெருக்கமாக அறியும் நண்பர்களுக்குத் தெரியும் ஒரு புதிய தொடக்கத்தை நான் எவ்வளவு விரும்புபவன் என. பாம்பு தன் சட்டையைக் கலற்றுவதுபோல அது அந்தரங்கமான ஒரு தோலுரிப்பு.  அவ்வாறு புத்தம் புதிதாய் தொடங்க, கடந்த ஆண்டு வாழ்வை நினைத்துப்பார்ப்பதும் உற்சாகம் தரக்கூடியதுதான். எதையெல்லாம் செய்து அந்த ஆண்டை முழுமை செய்திருக்கிறோம் என்பதற்கான பார்வை அது. இந்த ‘எதையெல்லாம்’ என்பதில் பலவும் இருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமாகச் சில மட்டுமே இருக்கும். நாம் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கண்டடையும் மிகச் சில மட்டுமே அவை.

ஜனவரி அம்ருதா இதழில் ‘வெறிநாய்களுடன் விளையாடுதல்’ என்ற எனது கவிதை தொகுப்பு குறித்த எழுத்தாளர் இமையத்தில் கட்டுரையில் இருந்துதான் உற்சாகம் தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி ‘செம்மொழி’ என்ற இதழில் இராம கண்ணபிரான் ‘மண்டை ஓடி’ குறித்த அறிமுகக்கட்டுரை எழுதியிருந்தார்.

அம்ருதாவில் எழுதிய ‘உலகின் நாக்கு’ தொடருக்காக பல நூல்களையும் கதைகளையும் மீள்வாசிப்பு செய்ய வேண்டி இருந்ததும் நண்பர்களின் ஆலோசனையில் புதிய சிறுகதைகளைத் தேடி வாசித்ததும் வழக்கமாகப் போய்க்கொண்டிருக்கும் வாசிப்புக்கு மத்தியில் ஒரு கிளைநதிபோல ஆங்காங்கு பிரிந்து அழகு செய்தது.

பிப்ரவரி மாதத்தில் ‘வல்லினம் விமர்சன அரங்கு 1’ ஏற்பாடு செய்து நடத்தியது புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அரு.சு.ஜீவானந்தன், கோ.புண்ணியவான் போன்ற படைப்பாளிகளை அணுக்கமாக உணர முடிந்தது. மேலும் வருடத்தின் தொடக்கத்திலேயே ‘விமர்சன அரங்கு ‘ மூலம் வல்லினத்தில் பதிப்பித்த நூல்களை மையப்படுத்தி கறாரான விமர்சனங்களை பிறர் முன்வைக்கவும் விவாதிப்பதைக் கேட்கவும் முடிந்தது படைப்புக்கான மன எழுச்சி.

மார்ச் மாதத்தில் யாழ் பதிப்பகம் மூலம் மாணவர்களுக்கான கட்டுரை நூல் ஒன்று எழுதி வெளியிடும் வாய்ப்புக்கிடைத்தது. அதோடு மலாயா பல்கலைக்கழகத்தில் அப்பதிப்பகத்தின் ஏற்பாட்டில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தமிழ் மொழி கட்டுரைக்கான பயிற்சி வழங்கியதும் தொடர்ந்து நாட்டில் சில இடங்களில் பயிற்சிகள் நடத்தியதும் நிறைவாக இருந்தது.  குறிப்பாக ஜெராண்டுட் பகுதியில். முதன் முறையாக தெலுக் இந்தானில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பட்டறை நடத்தினேன். 2015 போல் இல்லாமல் இம்முறை பட்டறைகளுக்கான பயணங்களைச் சுருக்கிக்கொண்டேன். எழுத்தையும் வாசிப்பையும் அவை பாதிக்கக்கூடியவை. ஆனால் யாழ் பதிப்பகம் மூலம் வெளிவந்த நான்கு நூல்களில் இரு பயிற்சி நூல்கள் (மலாய்மொழி, தமிழ்மொழி கருத்துணர்தல்)இரு ஆசிரியர்களின் (சரவணன், கோமதி) முதல் பயிற்சி நூல் என்பதில் திருப்தி. மேலும் இரு பயிற்சி நூல்களான தமிழ்மொழி கருத்துணர்தல் மற்றும் கணிதத்தை நானும் ஆசிரியர் முருகனும் உருவாக்கினோம்.

சக பள்ளி ஆசிரியர்களுடன் இவ்வருடம் உற்சாகமாகவே பொழுதுகள் கழிந்தன. அவ்வாறான ஒரு நண்பர் வட்டம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை கொஞ்சம் சீரியஸாகத்தான் செல்லும் போல.  கராவ்கே சென்று பாடுவது தொடங்கி போர்ட்டிக்சன், பூலாவ் பெசார் என தொடர்ந்து வித்தியாசமான மாமிசங்களைச் சாப்பிட்டுப்பார்க்க ஜொகூர் சென்று தங்கியது வரை  நல்ல அனுபவம்.

மே மாதத்தில் ஈப்போவில் வல்லினம் குழுவுக்கான சந்திப்பை ஏற்பாடு செய்து அந்நகரமே சென்ற ஆண்டு முழுவதும் மையமானது. சந்திப்பில் திட்டமிட்ட விடயங்களைத் திட்டமிட்ட திகதிகளில் செய்து முடித்தது தன்நம்பிக்கையை அனைவருக்குமே கொடுத்திருக்கும்.

சென்ற வருடம் மத்தியில் அமைந்த தமிழகப்பயணமே இப்போதும் நினைத்துப்பார்க்கும் அனுபவம். 2004-ல் ஒருமாதம் தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்தது போன்ற இன்னொரு பயணம் அது. கூடுதலான புரிதலோடே இம்முறை பயணத்தை அணுகினேன். தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், ஐராவதேஸ்வரர் கோயில் என தொடங்கி தோழர் அன்புவேந்தனுடன் பழனி, மதுரையில் யானை மலையிலும் கீழவளவிலும் சமண படுகைகளைப் பார்த்தது புதிய அனுபவம். மேலும் கீழக்குடியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்கள் வாழ்ந்ததாகத் தடயங்கள் உள்ள  அகழ்வாராய்ச்சி நடக்கும் பகுதிக்குச் சென்றது மன எழுச்சியைக் கொடுத்தது.   சுந்தர் மற்றும் அன்பு வேந்தனுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வந்த அற்புத தருணமெல்லாம் மீண்டும் கிடைக்குமா எனத் தெரியவில்லை. அப்படியே எழுத்தாளர் இமையத்துடன் ஶ்ரீரங்கம் சென்றது, வீ.அரசு இல்லத்தில் நூலகத்தைப் பார்க்கச் சென்றது எஸ்.வி.ஆர் ஆவணப்பட திரையீட்டில் ஆதவன் தீட்சண்யா, ஓவியர் மருது, வா.கீதா , பிரளயன் என தோழர்கள் பலரையும் சந்திக்க முடிந்ததும், லீனா மணிமேகலையை அவர் வீட்டில் சந்தித்தது தமிழகப் பயணத்தை முழுமைப்படுத்தியது.  சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது அதுவே முதன்முறை. புதிய நண்பர்கள் அறிமுகம் ஏற்பட்டது.

வல்லினம் மூலம் நண்பர்களுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி உத்வேகம் நிற்காமல் பாதுகாத்தது. அந்தப் போட்டிக்காக எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் நடத்திய பட்டறையும் அவருடனான தனிப்பட்ட உரையாடல்களும் எழுத்தாளனுக்கு உற்சாகம் தரக்கூடியவை. மேலும் நாஞ்சில் நாடனை கலை இலக்கிய விழாவுக்கு அழைத்து வந்ததில் உருவான உரையாடல்களும் அவசியமானதாக இருந்தது. வல்லினம் மூலம் இம்முறை நான்கு ஆளுமைகளின் ஆவணப்படங்களும் அவர்களின் சிறுகதைகள் மொழிப்பெயர்ப்பும் விமர்சன நூலும் திட்டமிட்டபடி நண்பர்கள் உதவியுடன் வெளிவந்தது நிறைவு.  MICCC இயக்கம் மூலம் வல்லினம் பதிப்பித்த நூல்களில் ஒன்று தீபாவளி சந்தையில் வெகுமக்கள் பார்வைக்குச் சென்றது.

அம்மாவுக்கு 2016 இறுதியில் ஓர் அறுவை சிகிச்சை நடந்தபோது நான் எப்போது முதன் முதலாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் என யோசித்ததில் கடகடவென மூன்று சிறுகதைகள் அடுத்தடுத்து வந்தன. அதில் மூன்றாவது நிறைவாக இருந்தது. ‘புதுவிசை’ இதழில் மார்ச் மாதம் வரலாம். சென்ற வருடம் ஒரு சிறுகதைகூட எழுதாமல் இருந்த எனக்கு வருட இறுதி பெரும் புத்துணர்ச்சி இந்த மூன்று சிறுகதைகளால் உருவானது. அந்த உற்சாகத்தின் உச்சமாக அம்ருதாவில் எழுதிய ‘உலகின் நாக்கு’ நூலும் வெளியீடு காண்கிறது. ஜெயமோகன் அதற்கு எழுதியுள்ள முன்னுரை படைப்பிலக்கிய முயற்சிகளை ஊக்குவிப்பதாக இருந்தது. வருட இறுதியில் சிங்கப்பூர் பயணமும் அங்குள்ள நண்பர்களின் சந்திப்பும் சென்ற ஆண்டின் மிகச்சரியான முற்றுப்புள்ளி.

எப்போதும் போல இவ்வருடத்திலும் நண்பர்களுடன் பிரிவு ஏற்பட்டுள்ளது. சில எதிர்ப்பாராத பிரிவுகள். சிலவற்றை நானே உருவாக்கினேன். கீழ்மைகளைப் புறக்கணிப்பின் மூலமே விரட்ட முடியும். திருமணம் முறிவில் சென்றுவிட்டது. காலம் கடந்து பார்க்கையில் நத்தை ஊர்ந்த பாதைபோல எல்லா சம்பவங்களும் வாழ்க்கையில் சின்னச்சின்ன மினுமினுப்பைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. பின்னர் அவை காய்ந்து காணாமல் போகும் என்றே தோன்றுகிறது. அந்த நம்பிக்கையினால் மட்டுமே வாழ்வு நகர்கிறது. வாழ்வின் மீது அவ்வளவு நம்பிக்கைக் கொண்டிருப்பவன் நான். என்னவாயினும் பிடிவாதமாக வாழ்ந்து முடித்துவிட்டுதான் செல்லவேண்டும்.

(Visited 169 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *