சென்னை புத்தகக் கண்காட்சி 40 : ஓர் அனுபவம்

20170110_113805இது நான்காவது தமிழகப்பயணம். ஒவ்வொருமுறையும் அதிகப் புகார்களுடன் பயணமாகும் தேசம். ஆனாலும் அங்கு மீண்டும் செல்லும் வேட்கை குறைந்தபாடில்லை. எல்லா புகார்களையும் மீறி தமிழ்ச்சூழலில் அங்கு நடக்கும் அறிவியக்கம் அவ்வளவு எளிதாக மறுக்க இயலாதது.

இம்முறை இப்பயணத்தை வல்லினம் மூலம் ஏற்பாடு செய்தோம். ஏற்பாடு செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். கலை இலக்கிய விழாவின் போது கடுமையாகப் பணிபுரியும் வல்லினம் இலக்கியக் குழுவினருக்கு (என்னையும் சேர்த்துதான்) நன்றி சொல்லும் வகையில் விமான டிக்கெட் செலவில் 400 ரிங்கிட்டும் நூல் வாங்கும் செலவில் 100 ரிங்கிட்டும் என வல்லினம் சேமிப்பில் இருந்து வழங்கப்பட்டது.

பொதுவாகவே பயணத்தை ஏற்பாடு செய்வது சிக்கலானது என என் கல்லூரி காலத்தில் இருந்தே உருவான அனுபவங்கள் வழி அறிவேன். பயணத்தில் பங்குபெறுபவர்கள் மூன்று விதமான மனநிலையைக் கொண்டவர்கள். முதலாவது, பயணத்தின் அத்தனை நிமிடங்களையும் அனுபவமாகவே உள்வாங்குபவர்கள். புகார்களின் மூலம் அப்போதைய சுவாரசியத்தன்மையைக் குழைக்கும் எண்ணம் இல்லாதவர்கள். அல்லது புகார்களை நகைச்சுவைகளாக்கத் தெரிந்துவைத்திருப்பார்கள். இரண்டாவது, ஒரு கூட்டுப்பயணத்தில் தங்கள் ஆதங்கத்தைத் தனித்தனியாக அதன் உறுப்பினர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதன் மூலம் கேட்பவர்களின் மகிழ்ச்சியான மனநிலையையும் பாதிப்பார்கள். அவர்களின் உடல் நிலை பாதித்தால் மொத்த பயணமும் கெட்டது என அர்த்தம். அவர்கள் வலியை அனைவரும் உளவியல் ரீதியாக அனுபவிக்க வேண்டும் என அவ்வளவு மெனக்கெடுவார்கள். மூன்றாவது பயணிகளின் உடல் மட்டும்தான் அங்கு இருக்கும். மனம் , அறிவு என எல்லாமுமே அவர்கள் வேலை, குடும்ப இட சிக்கல்களை யோசித்து யோசித்து திணறிக்கொண்டிருக்கும்.

நான் இந்த மூன்று சூழலிலும் பயணப்பட்டுள்ளேன். பயண முகவர்கள் மூலம் பணம் செலுத்தி செல்லும் பயணங்களில் என்னைப்போன்ற கறார் பேர்வளியைப் பார்க்க முடியாது. வாக்களிக்கப்பட்ட வசதிகள் இல்லாவிட்டாலும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டாலும் கலாட்டா செய்யும் முதல் ஆளாக நானே இருந்திருக்கிறேன். ஆனால் நானே எனக்காகத் திட்டமிடும் பயணங்களில் உருவாகும் அத்தனைச் சிக்கல்களுக்கும் முழுமையாகப் பொறுப்பேற்ப்பேன். 2003 – இல் ஒரு மாத தமிழகப்பயணத்தில் மிகக்குறைந்த பணச்செலவில் பயணமாவதென முடிவு செய்தபோதும் கடந்த ஆண்டு சமண மலைகளுக்குச் செல்வதென பயணமானபோதும் அடைந்த உடல், மனச்சோர்வுகள், ஏமாற்றங்கள் என அனைத்தையும் பயண அனுபவங்களாக இன்றும் திரட்டி வைத்துள்ளேன்.

photo

நண்பர் பாலு

இவ்வாறான சூழலில் வல்லினம் நண்பர்களுடன் அவர்களின் துணைவியர்களையும் இணைத்துப் பயண ஏற்பாடுகளைச் செய்வது என்பதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. நான் பயண முகவர் இல்லை. எழுத்தாளர் சங்கத்தில் இருந்திருந்தால் அதற்கான பயிற்சி கிடைத்து நாலு காசு பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்கும். கொழுப்பெடுத்து ராஜேந்திரனையும் பகைத்துக்கொண்ட பட்சத்தில் கொஞ்சம் குழப்பத்துடனேதான் ஏற்பாடுகளைச் செய்யவேண்டி இருந்தது. எதுவாக இருந்தாலும் அனுசரித்துக்கொள்ளலாம் என நண்பர்கள் முன்னமே கூறியிருந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. முதலாவது, அங்கு நிகழும் பணத்தட்டுபாடு பிரச்சனையை எதிர்க்கொள்ள முன்திட்டம் தீட்டவேண்டியிருந்தது. இரண்டாவது, முறையான தங்கும் விடுதி. மூன்றாவது, போக்குவரத்துக்கான வாகன ஏற்பாடுகள். நண்பர் கலைச்செல்வனின் தமிழக நண்பர் பாலு மூலம் சென்றுச்சேரும் முன்னரே பணத்தை இந்திய ரூபாய்க்குச் சில்லரையாக மாற்றும் வேலை முடிந்திருந்தது. தமிழ் ஆர்வலர் சிங்கப்பூர் எம். எ. முஸ்தபா அவர்களின் மூலம் எக்மோரில் தங்கும் விடுதி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு நாள் பயணம் என்பதால் 1500 ரூபாய்க்குள் அறை வேண்டும் எனக்கேட்டிருந்ததால் தனது உதவியாளர்கள் மூலம் அதற்கேற்ப ஏற்பாடு செய்திருந்தார்.

விமான நிலையத்தில் நண்பர் பாலு காத்திருந்தார். புலனத்தில் அவர் முகம் கண்டதுண்டு. ஆனாலும் என் மனதில் மனித முகங்கள் பதிவதில்லை. அடையாளமாகக் கைத்தொலைப்பேசியில் ஏ.ஆர்.ரஹ்மானின் படம் பதித்த கைப்பேசி வைத்திருப்பேன் என்றார். எளிதாகக் கண்டுப்பிடித்தோம். அன்று (6.1.2017) ரஹ்மானின் பிறந்தநாள். தீவிர ரஹ்மான் ரசிகரான அவருக்கு அன்று ரஹ்மானைச் சந்திக்கும் திட்டம் இருந்தது. அதனூடே எங்களையும் அழைத்துச்செல்ல வந்திருந்தார். கலைச்செல்வன் மேல் உள்ள அன்பு காரணமாக இருக்கலாம். விமான நிலையத்தில் இருந்து எக்மோரில் அமைந்துள்ள சிங்கப்பூர் ஹாட்டலுக்குச் செல்ல ஒரு மணி நேரப்பயணம். போகும் பாதையில் ஏ.அர்.ரஹ்மான் வீட்டைக் காட்டினார். அவரைச் சந்தித்து வாழ்த்துச்சொல்ல பெரிய கூட்டம் காத்திருந்தது. “அவருக்கு எல்லாரையும் நினைவில் இருக்கும். ரசிகர்களைச் சந்திப்பதில் சுணக்கம் காட்டமாட்டார்” என பாலு விளக்கிக்கொண்டே வந்தார். மிகக்குறைவாகப் பேசினார். அளவாகச் சிரித்தார். கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவரிடம் எங்கள் பயணம் குறித்து பெரிதாகக் கேள்வி ஒன்றும் இருக்கவில்லை. நான்தான் அவரைப் பேசவைக்க தொணதொணத்துக்கொண்டிருந்தேன். முதல் நாள் என்னுடன் சேர்த்து பாண்டியன் அவர் மனைவி பத்மா டீச்சர், தயாஜி, விஜயலட்சுமி, சரவணதீர்த்தா என அறுவர் சென்றிருந்தோம். எனவே ஏற்பாடு செய்திருந்த ‘இனோவா’ வண்டி வசதியாக இருந்தது.

fb_img_1483916835238

‘புலம்’ லோகநாதனுடன்

வண்டியை நேராக புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு விடச்சொன்னேன். ஒரு பெட்டி நிறைய வல்லினம் பதிப்பில் வந்த நூல்கள் இருந்தன. ஒவ்வொரு தலைப்பிலும் பத்து நூல்கள். இதற்கு முன் தமிழகப்பதிப்பகங்களுடன் இணைந்து நூல்கள் பதிப்பித்திருந்தாலும் அவை புத்தகக் கண்காட்சியில் இடம்பெறுவதில் ஏதோ சிக்கல்கள் இருந்தன. இத்தனைக்கும் முழு அச்சுத்தொகையைச் செலுத்தினாலும்கூட அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியும் அதே கதிதான். நான்கு நூல்களுக்கான அச்சுத்தொகை கொடுத்தும் நூல்களை கண்காட்சி கூடத்தில் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை. அதன் பதிப்பாளரிடம் கேட்டபோது “முன்னுக்கு உள்ள அரங்கைப் பார்த்தீர்களா? இன்னும் கடையே போடவில்லை” என சம்பந்தமே இல்லாமல் சொல்லிச் சிரித்தார். எதிர் அரங்கு தயாராகாததற்கும் நான் கொடுத்தப்பணத்தில் அச்சான நூல்களை காட்சிக்கு வைக்காததற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பதற்குள் அவர் பிஸியாகிவிட்டார். நான் மீண்டும் சென்று பேசியபோது, “கொஞ்சம் பிஸியா இருக்கேன் understand பண்ணிக்கிங்க” என்றார். மலேசிய இலக்கியத்தை ஏதாவது ஒருவகையில் கொண்டுச்சேர்க்க வேண்டும் என்ற எனது நோக்கம் அவருக்கும் இருக்க வேண்டும் என்ற அற்ப ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஆனால் எல்லா செலவுகளையும் வல்லினமே ஏற்றுக்கொண்ட பட்சத்தில் குறைந்தபட்சம் ஒரு நேர்மையான வணிகராகப் பதிப்பித்த நூல்களைப் பார்வைக்கு வைப்பதில் காட்டும் அலட்சியம் புரிந்துகொள்ள முடியாதது.

இம்முறை அவ்வாறு நடக்காது என அறிந்திருந்தேன். புலம் பதிப்பாளர் லோகநாதனுடன் ஏற்பட்டிருந்த நட்பின் காரணமாக அவர் நேர்மை மீது நம்பிக்கை இருந்தது. எனது ‘உலகின் நாக்கு’ நூல் இன்னும் அச்சகத்திலிருந்து வந்திருக்கவில்லை. ஒரு பெட்டி வல்லினம் பதிப்பில் வந்த நூல்களைக் கொடுத்துவிட்டு அறைக்குச்சென்றோம். பட்சட்டுக்கு ஏற்ற அறை. அந்தத் தொகைக்கு அவ்வாறான அறை நியாயமானதுதான் என பின்னர் இணையத்தை ஆராய்ந்தபோது தெரிந்தது. 100 ரிங்கிட்டுக்கு மூன்று பேர் வசதியாக தங்கும் குளிர்சாதன அறை மலேசியாவில் சாத்தியமில்லை. ஆனால் அருகலை (WiFi) போன்ற வசதி இல்லாமல் தகவல்களைப் பெறுவதிலும் பகிர்வதிலும் சிரமம் இருந்தது. பாலு அவரின் செறிவட்டை (Sim Card) ஒன்றை இரவல் கொடுத்தார். அதையே அனைவரும் தொலைத்தொடர்புக்காக உபயோகித்துக்கொண்டோம்.

அறையில் எங்களை வரவேற்க முஸ்தபா அவர்களின் உதவியாளர் பழனியப்பன் வந்திருந்தார். பாலுவும் எங்களுடன் இருந்தார். குளிக்காமல் அப்படியே தி.நகருக்குப் புறப்பட்டோம். பசியாக இருந்ததால் ஓர் உணவகத்தில் நிறுத்தச் சொன்னோம். உண்டு முடிக்கத் தாமதமாகும் என தெரிந்தது. ஏ.ஆர்.ரஹ்மானைப் பாலு சந்திக்க முடியாமல் போய்விடுமோ என என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. பயணத்தை நான் பார்த்துக்கொள்வதாகக் கூறி அவரிடம் விடைப்பெறச் சொன்னேன். அவரும் இசைப்புயலைச் சந்திக்கப் புறப்பட்டார். உணவுக்குப் பின் ஆட்டோ பிடித்து நேராக சரவணா ஸ்டோர் சென்றோம். ஒரே ஆட்டோவில் ஆறு பேர்.

களைப்பும் பசியும் நீங்கி சிரிக்கத் தொடங்கியிருந்தோம்.

***

தி.நகரில் குறிப்பிட்ட ஒரு நேரத்தையும் இடத்தையும் கூறிவிட்டு பிரிந்தோம். ஷோப்பிங் போன்ற விடயங்களின் கும்பலாகச் செல்வது சாத்தியமாகாதது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. திரும்பிச்செல்கையில் இரண்டு ஆட்டோ. எனக்கு முதுகெலும்பு வலி தொடங்கியிருந்தது.  அங்கிருந்து ஹாட்டலுக்கு அதிகபட்சம் 150 ரூபாய். 170 ரூபாய் கேட்டார்கள். முடியாது என மறுத்தேன். “20 ரூபாயில் என்ன கோட்டையா சார் கட்டப்போறோம். கொஞ்சம் Understand பண்ணிக்க சார்” என்றார். கோட்டையெல்லாம் கட்ட எவ்வளவு செலவு ஆகும் என யோசித்தபோது ஞாயம்தானே எனத்தோன்றியது. ஒத்துக்கொண்டோம்.

விடுதிக்குச் சென்றவுடன்தான் பிரச்னை தொடங்கியது. தண்ணீர் வரவில்லை. நான், தயாஜி, சரவணதீர்த்தா ஆகியோர் ஓர் அறையில் தங்கியிருந்தோம். முதலில் தயாஜி சென்று புகார் செய்தார். அடுத்த 10 நிமிடத்தில் தண்ணீர் வரும் என உறுதியளிக்கப்பட்டது. சரியாகப் பத்து நிமிடத்திற்குப் பின்பும் தண்ணீர் வராததால், பின்னர் நான் சென்று அமைதியாகவே சொல்லிவிட்டு வந்தேன். “10 நிமிடம், டாங்கியில் தண்ணீர் திறந்துவிட மறந்துட்டாங்க” என்றார் மேனேஜர். மீண்டும் சரியாகப் 10 நிமிடமானவுடன் நானும் சரவணதீர்த்தாவும் கீழே இறங்கினோம். இம்முறை கொஞ்சம் கடுமையாகவே பேச வேண்டியதாகிவிட்டது.

“உங்க வீட்டுல தண்ணி வரலன்னா கொஞ்சம் Understand பண்ணிக்கிட்டு Adjust செய்ய மாட்டீங்களா? அப்படிதானே” என்றார்.

“அப்படியானால் பணம் செலுத்தும்போது நானும் பணம் குறைவாக கொடுப்பேன் Adjust செஞ்சிக்கோங்க” என்றேன்.

“என்னசார், இதுக்கெல்லாம் பணத்தைக் குறைப்பேன்னு சொல்றீங்க” என நொந்துகொண்டார்.

img-20170109-wa0018அவரது முதலாளியைச் சந்திக்க வேண்டும் என்றேன். நாளை வருவார் என்றவர் முகத்தில் கொஞ்சம் பயம் தெரிந்தது. “என்னசார் இந்த ஹாட்டல்ல இத்தனைப்பேர் இருக்காங்க, எல்லாரும் Adjust பண்ணிக்கிறாங்க. நீங்க மட்டும் 10 நிமிஷத்துக்கு ஒருதரம் சத்தம்போடுறீங்க. இதுக்குப்போயி போஸ பார்க்கனுமா?” என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. “அடுத்த 10 நிமிடத்தில் தண்ணீர் வரவேண்டும் எனக்கூறிவிட்டு” பேசாமல் புறப்பட்டேன். அது அவரின் குரல் மட்டும் இல்லை. எனக்கு நெருக்கமான பலரின் குரல். இணைந்து வேலை செய்வதற்கு நான் ஒவ்வாதவனாக நம்பும் ஒவ்வொருவரின் கூட்டுக்குரல். முதலாளியிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என அறிவேன். அவர்களுக்குப் பேசி சமாளிக்கத் தெரியும். மொத்தமாகப் பழியை இன்னொருவர் மேல் சுமத்தத் தெரியும். ஆனால் அவர்கள் அலட்சியத்தையும் சோம்பேறித்தனத்தையும் பொறுத்துக்கொண்டிருப்பவர்களை முட்டாள்கள் என நினைத்துவிடக்கூடாது. இவர்கள் சொல்லும் பத்து நிமிடம் என்பது பத்து நிமிடம் மட்டும்தான் என நம்பும் ஒருவன் உலகில் இருப்பதாகத் தெரியவேண்டும். ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு மதிப்புள்ளது என தெரியவேண்டும். ‘ஐந்து நிமிடம்’, ‘பத்து நிமிடம்’ என்பது தற்காலிக சமாளிப்புக்கான சூத்திரமாகப் பயன்படுத்தும் சொல்லாடல் என்பதை வன்மமாக மறுத்தால் மட்டுமே அடுத்தவர்களின் வலியும் அவசரமும் தெரியவரலாம்.

பத்து நிமிடத்தில் தண்ணீர் வந்தது.

***

தயாஜி தமிழகத்தில் இரண்டாவது முறையாக மொட்டைப்போடுவதென முடிவெடுத்திருந்ததால் காலையிலேயே சரவணத்தீர்த்தாவுடன் புறப்பட்டிருந்தார். வடபழனி மொட்டை. கடந்தமுறை பழனி. திரும்பும்போது கங்காதுரை மற்றும் அவர் துணைவியாரும் உடன் இருந்தனர். களைத்திருந்தனர். ஆனால் நேரம் இல்லை. மகாபலிபுரம் போவதாகத் திட்டம். குறிப்பிட்டபடி அரைமணி நேரத்தில் கிழம்பி வந்தனர்.

01மகாபலிபுரம் ஏற்கனவே நான் பார்த்த இடம்தான். கவிஞர் அதியனுடன் சென்றிருக்கிறேன்.  பத்மா டீச்சர், சரவணத்தீர்த்தா மற்றும் விஜயலட்சுமிக்கு இது முதல் தமிழகப் பயணம். தயாஜி முன்னமே தமிழகம் வந்திருந்தாலும் மகாபலிபுறத்துக்குச் சென்றதில்லை. வாகன ஓட்டுனர் மூலம் 30 ரூபாய்க்கான டிக்கெட் எடுத்தோம். வெளிநாட்டுப் பயணி என்றால் 500 ரூபாய் கட்டணம். முதலில் கடற்கரை கோயிலுக்குச் சென்றோம். 1,300 ஆண்டுகள் பழமையானது. இரண்டாம் நரசிம்ம வர்மனால் கட்டப்பட்டதாக அறிவிப்புப் பலகையில் இருந்தது. நல்ல வெயில். கொஞ்ச நேரத்தை அங்கேயே செலவளித்தோம். பின்னர் ஐந்து இரதம், புலிக்குகையைப் பார்க்கச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டோம். எங்களின் தோற்றம் காவலில் இருந்தவருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம். வாகன ஓட்டுனர் நாங்கள் தமிழ்நாடு என அடித்துக்கூறினார். நாங்கள் யாரும் வாய்த்திறக்கவில்லை. ஒரு பொய்யை அவ்வளவு உறுதியாகச் சொல்வதில் மனத்தடை இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஒன்றும் சொல்லாமல் வெளியேறினோம். வாகன ஓட்டுனர் நாங்கள் வாய்த்திறந்து பேசியிருக்க வேண்டும் எனக் கோபித்துக்கொண்டார். வாகன ஓட்டுனர், பத்மா டீச்சர் அணிந்திருந்த கருப்புக்கண்ணாடியும் தொப்பியுமே காவலாளி கண்டுப்பிடிக்கக் காரணம் என அவர் குத்துமதிப்பாக ஒரு முடிவுக்கு வர நாங்கள் மொத்தப்பலியையும் அவர்மீதே சுமத்திவிட்டோம். யாராவது ஒருவர் பலியாகத்தானே வேண்டும். அதன்பிறகு அவர் தொப்பியும் கறுப்புக்கண்ணாடியும் அணியவே இல்லை. பயணம் முழுவதும் குதூகலமாய் நகர்ந்தது.

புடைப்புச் சிற்பங்களையும் கலங்கரை விளக்கத்தையும் பார்த்துவிட்டு புறப்பட்டபோது கடும் வெயில். செல்லும் பாதையில் மெரினா இருந்தது. பாண்டியனும் பத்மா டீச்சரும் அங்கு இறங்கிக்கொண்டனர். ஜெயலலிதாவின் சமாதியைப் பார்க்கத் திட்டம். நாங்கள் புறப்பட்டு விடுதிக்குச் சென்றோம். அன்று மாலையில் அராத்துவின் ஆறு புத்தகங்களின் வெளியீடு இருந்தது. அதில் ஜெயமோகன் பேசுவதாக அறிவிப்பு இருக்கவே அவரைச் சந்தித்து எனது ‘உலகின் நாக்கு’ நூலை கொடுத்துவிடுவதாகத் திட்டமிட்டிருந்தேன். நூலில் அவர் முன்னுரை எழுதியிருந்தார். நூல் அச்சாகி இருந்தாலும் இன்னும் அரங்கிற்கு வரவில்லை என லோகநாதன் கூறவே பதற்றம் தொற்றிக்கொண்டது. ஜெயமோகன் மறுநாள் காலையில் புறப்படுவதால் அந்த இரவு மட்டுமே எனக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு. நாளையும் புத்தகம் வந்து சேராவிட்டால் நான் நூலைக்கொண்டுச்செல்லப் போட்டிருந்த 40 கிலோவுக்கான பணம் தண்டமாகிவிடலாம். லோகு பதற்றமாகவேண்டாம் நூல் எப்படியும் வந்துவிடும் என்றார். எனக்கு நம்பிக்கைக் குறைந்துக்கொண்டிருந்தது. நேராக அரங்கில் வந்து நூலைத் தருவார்கள் என்றார். முந்தைய அனுபவங்கள் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை எனச் சொன்னது. நிகழ்ச்சி அரங்கில் சென்று அமர்ந்தேன். ஜெயமோகன் பேசிக்கொண்டிருந்தார்.

அராத்துவின் எழுத்தில் தனக்கு நிறைவு இல்லாததையும் ஆனால் எந்தக்கருத்தையும் ஒருவகையில் ஆரோக்கியமாகப்பார்க்கும் அடுத்தத்15875191_961189587315729_4721778551413271497_o தலைமுறையின் உற்சாகமான மனநிலைக்காகத் தான் வந்ததாகவும் பேசத்தொடங்கியவரின் உரை புனைவியக்கியத்தின் நுட்பங்கள் குறித்துச் சென்றது. அதோடு நான் எழுந்து வந்திருக்கலாம். இறுதியில் அராத்துவின் உரை எரிச்சலைக் கொடுத்தது. ஆழமற்ற மொண்ணையான பேச்சு. இந்தவரியை அவர் வாசித்தால், “மொண்ணையானதுதான். மொண்ணையான பேச்சு உங்களுக்கு எப்படி இருக்கும் என தெரிகிறதென்றால் நீங்கள் அதை கேட்டிருப்பவர்தானே. அப்படியானால் மொண்ணையான பேச்சுக்கான தேவை உண்டல்லவா? மொண்ணையான பேச்சுக்கான தேவை…” எனத் தொடரலாம். அப்படித்தான் தன் எழுத்துக்குறித்தும் அவர் அன்று அரண் அமைக்க முயன்றார். சாருவுக்கு ஜெயமோகன் கமலஹாசனுடன் நெருக்கமாக இருப்பதும் சங்கர் உள்ளிட்ட இயக்குனர்களின் எளிதாகப் பேச முடிவதுமே அவரிடம் காணும் முக்கிய அம்சமாக இருந்தது. ஒருவர் தன் மனதில் என்னவாக இருக்கிறார் என அவர் பிறரைக்கண்டு வியக்கும் விடயத்தை வைத்து மதிப்பிட்டுவிட முடிகிறது.

நிகழ்ச்சி முடிந்து வாசகர்கள் ஜெயமோகனைச் சூழ்ந்துகொண்டனர். சாருவிடம் வல்லினம் பதிப்பில் அண்மையில் வந்த இரு நூல்களைக் கொடுத்தேன். என்னை யாரென்று கொஞ்ச நேரம் யோசித்தார். நினைவுக்கு வந்திருக்குமா எனத் தெரியவில்லை. புறப்பட்டார். ஜெயமோகனுக்கு கையொப்பம், செல்ஃபி என நேரம் ஓடியது. எல்லாரிடம் நேரம் எடுத்துப் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரை சந்தித்தபோது புத்தகம் வந்து சேர்ந்திருக்கவில்லை. அனைத்துக்கொண்டார். எட்டுப்பேர் வந்திருக்கிறோம் என்றேன். “ராஜேந்திரனுக்குப் போட்டியா படை திரட்டி வறீங்க” என்றார். இடம் கலகலப்பானது. அவரைச் சுற்றி நிறையபேர் பேசவும் கையொப்பம் வாங்கவும் புகைப்படம் எடுக்கவும் காத்திருந்தனர். அந்தச் சூழலை நான் கெடுத்துவிடுவேனோ என்ற குழப்பம் தொற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டேன். சிலர் அருகில் வந்து “வல்லினம் நவீனா?” என்றனர். அறிமுகம் செய்துக்கொண்டோம். நூல் வராத சோர்வில்  ஓர் உணகத்தில் நுழைந்தபோது நூலை எடுத்துவந்து காத்திருப்பதாக அழைப்பு. ஓடிச்சென்று பெற்றுக்கொண்டேன். எப்போதும்போல ஆனந்தம். நான் மகிழ்ச்சியில் இருந்தேன். அப்படி நான் இருப்பது அப்பட்டமாக வெளியே தெரிவதாக விஜயலட்சுமி கூறினார். உண்மைதான். அப்போது நாங்கள் உணவகத்தில் இருந்தோம். முதல் நூலை தயாஜியிடம் கொடுத்தேன். இருந்த ஏழு நூலில் ஆறு நூல்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு ஒரு நூலை ஜெயமோகனிடம் கொடுத்துவிடுவதென முடிவெடுத்தேன். இன்று விட்டால் மீண்டும் பார்க்க சாத்தியமில்லை. மறுநாள் அவர் புறப்படுகிறார்.

20170110_161628

ஜெயமோகன்

அவர் தங்கியிருந்த அறைக்கு விஜயலட்சுமி மற்றும் தயாஜியுடன் சென்றேன். வாசகர்களுடன் அறையில் உரையாடிக்கொண்டிருந்தார். ராஜகோபாலன் இருந்தார். அவரிடம் பேச வேண்டும் என்ற ஆவல் முன்பே இருந்தது. சிறந்த வாசகர் என ஒரு சில கட்டுரைகள் வழி கண்டடைந்திருந்தேன். அதுபோன்றவர்களிடம் பேசுவது அற்புதமாக அனுபவத்தைக் கொடுக்கும். அவர்களே நமது வாசிப்பின் பாதைகளை சிலசமயம் திருப்பிவிடுகிறார்கள்; கூர்மைப்படுத்துகிறார்கள்; கவனிக்காத நுண்ணிய தருணங்களில் ஒளிபாய்ச்சுகிறார்கள். ஒன்றும் வாசிக்காமல் எழுத்தாளன் எனச்சொல்லிக்கொள்பவனை விட நுட்பமான வாசகனின் அருகாமையையே என்னளவில் விரும்புகிறேன். ராஜகோபாலன் மறுநாள் புத்தகக் கண்காட்சியில் சந்திக்கலாம் என்றார். ஒருவித களைப்பு கவிந்திருந்தது. விடைபெற்றோம்.

ஜெயமோகனிடன் நேரில் சென்று நூலைக்கொடுக்க ஒரு காரணம் இருந்தது. அந்நூலுக்கு அவர் அணிந்துரை எழுதியிருந்தார். ‘உலகின் நாக்கு’ என் வாசிப்பு அனுபவம் குறித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு. 2006 -இல் ஜெயமோகன் மலேசியா வந்தபோது வாசிப்பு எப்படி நிகழவேண்டும் என்றே அவரிடம் கற்றுக்கொண்டேன். அதன் பின்னர் 2011 -இல் நாவல் வாசிப்புக்குறித்தும் 2014-இல்  உலக இலக்கிய வாசிப்புக்குறித்து அவருடனான உரையாடல் வழி கற்றிருந்தேன். அவ்வகையில் அவர் எனது வாசிப்புக்கான வழிகாட்டி. இதை பலமுறை பல இடங்களில் கூறியதுண்டு. அவருடன் நான் செய்துக்கொண்டிருப்பது ஒரு நீண்ட அந்தரங்க எதிர்வினை. அவரின் வாசிப்பில் கண்டடைந்து எழுத்தின் வழி முன்வைக்கு கருத்தாக்கத்தை மறுத்தும் ஒப்பிட்டுமே ஓர் அந்தரங்கமான உரையாடலை நான் எனக்குள் ஏற்படுத்திக்கொண்டுள்ளேன்.

ஒரு சிறந்த வாசகனாக மாற நான் நண்பர்களுக்குப் பரிந்துரைப்பதையும் அதுவே. ஒரு சிறந்த வாசகனை அடையாளம் காணுங்கள். வாசிப்பில் அவரது புரிதலுடனும் நிலைபாட்டுடனும் உங்களின் தனித்த வாசிப்பின் வழி கண்டடைந்த புரிதலை ஒப்பிடு விவாதியுங்கள். இந்த விவாதத்திற்கு அவர் தேவையே இல்லை. அவர் எழுத்துகள் போதுமானது. அவர் வாசிப்பின் விளைவாக முன்வைக்கும் விமர்சனங்களுடன் மோதிப்பார்க்க உங்களை வாசிப்பின் மூலமே தயார்ப்படுத்துங்கள். அதன்பின் அப்பிரதி உங்களது. நீங்கள் உங்கள் சிந்தனை மூலமாக அந்த நாவலைச் சென்று அடைந்திருப்பீர்கள். அது நீங்கள் கண்டடைந்த தனி உண்மை.

ஜெயமோகன் “நூலை இப்படிக்கொடுத்தால் எப்படி?” என  எழுந்தார். நண்பர்களைப் புகைப்படம் எடுக்கச் சொன்னார். பத்துக்கும் குறையாத தீவிர இலக்கிய வாசகர்கள் சூழ ‘உலகின் நாக்கு’ ஜெயமோகனால் அவ்வறையில் வெளியீடு கண்டது.

***

20170110_161522

அறைக்கு வந்தபோது லக்ஷ்மி சரவணகுமார் என்பவர் அழைத்தார் என தகவல் கூறினர். அவரது தொடர்பு எண்களைக் கொடுத்திருந்தார். அவரைச் சந்திப்பதாகத் திட்டம் இருந்தது. அப்போது மணி இரவு 10-ஐ கடந்திருந்தது. லக்ஷ்மி சரவணகுமாரை அழைத்தேன். சிறிது நேரத்தில் வந்தார். நூறு நாடுகள் நூறு சினிமா, ஊதா ஸ்கர்ட் கதைகள், மற்றும் அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றும் நூலாக அச்சாகி இருந்தது. கையோடு எடுத்துவந்திருந்தார். மோக்லி என்ற பதிப்பகத்தைத் தொடங்கியிருந்தார். அவ்விரவிலும் அக்களைப்பிலும் உற்சாகமாக உரையாட முடிந்தது.

20170108_142040

ஷோபாவுடன்

மறுநாள் காலையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். கூட்டம் நிரம்பியிருந்தது. முதலில் புலம் பதிப்பகத்தில் அரங்கு சென்றேன். குதூகலமானது. வல்லினம் பதிப்பில் வந்த நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. லோகனாதன் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அங்கிருந்து நூல் வாங்கும் படலம் ஆரம்பித்தது. அவசரம் இல்லாமல் தேர்ந்தெடுத்து வாங்கினேன். ஷோபாசக்தி சென்னையில் இருப்பது தெரியவந்ததும் அழைத்தேன். மதிய உணவு அவருடன் கழிந்தது. வழக்கம் போல நகைச்சுவை ததும்பும் உரையாடல்கள். சமகால இலக்கியம் குறித்த பேச்சு. ‘போரும் வாழ்வும்’ உள்ளிட்ட ரஷ்ய நாவல்களை இன்னும் நான் வாசிக்காதது குறித்து பேசினார். அதன் தேவையை விளக்கினார். ஷோபாவைச் சந்திக்கும்போதெல்லாம் வாசிக்க வேண்டிய நூல் பட்டியல் ஒன்றை நான் கேட்டுப்பெருவது வழக்கம். அதை வாசித்தும் முடித்துவிடுவேன். அப்போதெல்லாம் அவர் கொடுத்தப்பட்டியல் எளிமையானது. இப்போது கொஞ்சம் சவாலாகத் தெரிந்தது. சென்னை புத்தகச் சந்தையில் ‘டான் குயிக்ஸாட்’ என்ற நாவலை வாங்கி வாசிக்கச்சொன்னார். சந்தியா பதிப்பகத்தில் பிரசுரமாகியிருந்தது. இருபெரும் தொகுதிகள். வாங்கிக்கொண்டேன்.

20170108_134717

ஜோ டி குரூஸுடன்

நூல் வாங்கும்போது உடன் நடந்து வந்தார் ஷோபா. எதிர்ப்படும் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார். தமிழினி வசந்தகுமாரிடம் அறிமுகப்படுத்தும்போது நான் சொன்னேன், “அவரை மூன்று முறை சந்தித்துள்ளேன். ஒவ்வொருமுறையும் புதிதாகவே அறிமுகமாகிறேன்” என்றேன். வசந்தகுமார் மென்மையாகச் சிரித்தார். தற்செயலாக ஜோ டி குரூஸைச் சந்தித்தேன்.  ஒருமுறை அவரிடம் தொலைப்பேசியில் பேசியதுண்டு. தேர்தலில் அவர் மோடியை ஆதரித்தபோது எழுந்த விமர்சனங்களை அறிவேன். ஆனால் அதற்காக ஒரு கலைஞனைத் தவிர்த்துச் செல்வது எனக்குச் சாத்தியமாகாது. ‘ஆழி சூழ் உலகு’ அத்தனை எளிதாகப் புறக்கணிக்கக் கூடிய ஆக்கமா என்ன? அவர் வாசகனாக என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். அவர் நாவல் குறித்து நான் எழுதியதை நினைவு கூர்ந்தார். உடன் வந்திருந்த குழந்தைகளை   அறிமுகம் செய்துவைத்தார்.

லீனா மணிமேகலை அடையாளம் அரங்கில் இருந்தார். குறையாத அன்பு. கொஞ்ச நேரமே பேச முடிந்தது. என் புத்தகத்தைக் கொடுத்தேன். புலம் பதிப்பகத்தில் பௌத்த ஐய்யனார், ஆதவன் தீட்சண்யா, கவிஞர் வ..ஐ.ச ஜெயபாலன் இருந்தனர். பேசுவதற்கு நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதாகிவிட்டது. செல்வதற்கு மனமில்லை. அன்று இரவு விமானம். நேரம் நெரித்துக்கொண்டிருந்தது. அனைவரிடமும் விடைப்பெற்றபோது மாலையாகியிருந்தது.

20170108_172427

வ ஐ ச ஜெயபாலன்

உண்மையில் இந்தப் புத்தகக் கண்காட்சி பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலருக்குமே ஓர் அற்புத தருணம்தான். ஆனால் கண்காட்சியை ஒருங்கிணைக்கும் பபாஸி குறைந்த பட்சம் மூன்று விடயங்களில் கவனம் செலுத்தினால் அனைத்துத்தரப்பினருக்குமே பெரும் பலனைக்கொடுக்கும்.

1.நூலை சுமந்து செல்ல சிறிய வண்டிகள். பேரங்காடிகளில் வழங்கப்படும் இதுபோன்ற வண்டிகளை குறைந்த வாடகைக்கேனும் தயார்    செய்தால் அதிக புத்தகங்களை வாங்குபவர்கள் நூல்களைச் சுமந்துசெல்வதில் சிக்கலை எதிர்நோக்க மாட்டார்கள். மேலும் அதிக நூல்களை வாங்கவும் வாய்ப்புண்டு.

2.வாங்கிய நூல்களின் கனத்தை நிறுத்துபார்க்கும் நிறுவைகளைத் தயார் செய்யலாம். விமானம் மூலம் பயணம் செய்து வந்தவர்கள் சரியான அளவில் புத்தகம் வாங்கியிருப்பதை உறுதி செய்ய இயலும்.

3.தபாலில் நூல்களை அனுப்பும் சேவையை அரங்கிலேயே ஏற்படுத்தலாம். தான் எடுத்துச்செல்லவும் தன் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கவும் இச்சேவை பெரிதும் உதவும்.

***

விமான நிலையத்தில் வழியனுப்ப பாலு வந்திருந்தார். நன்றி கூறி விடைப்பெற்றோம். கங்காதுரையும் அவர் மனைவியும் மேலும் ஒருவாரம் இருந்துவருவதாகத் திட்டம். வந்த ஆறுபேருமே மீண்டும் திரும்பினோம். விமான நிலையத்தில் இருந்தபோது என் பெயரைக் குறிப்பிட்டு மைக்கில் அழைத்தார்கள். பெட்டியில் ஏதேனும் மருந்து உள்ளதா எனக்கேட்டார்கள். இல்லை என்றேன். உடன் வந்திருந்த நண்பர்களின் யாரோ ஒருவரின் பையில் இருந்திருக்க வேண்டும். பத்மா டீச்சர் பையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் பாண்டியன் சோதித்துவரச் சென்றார். ஆனால் சோதிக்கக் கொடுத்தது விஜயாவின் பெட்டி. உள்ளே ஒன்றும் இல்லை. விமானத்தில் ஏறினோம். ஏன் அழைத்தார்கள், ஏன் ஒன்றும் இல்லை என எல்லோருக்கும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.

அதெல்லாம் கொஞ்சம் Understand பண்ணி Adjustment செய்திருப்பார்கள் என என் உள்ளுணர்வு கூறியது.

(Visited 997 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *