மரணத்தை
இறுதியென நம்பி அழுதுக்கொண்டிருந்தவர்களை
துக்கம் கசிந்த அமாவாசையில்
சந்தித்தேன்
பதுக்கி எடுத்துச்சென்ற
ஒளிவீசும்
கால டைரிக்குள்
கையை நுழைத்து
ஒவ்வொன்றாக வெளியே எடுத்தேன்
அவர்கள் கடந்துவந்த அவமானங்களை
அவர்கள் கடந்துவந்த பிரிவுகளை
அவர்கள் கடந்துவந்த புறக்கணிப்புகளை
அவர்கள் கடந்துவந்த குற்றச்சாட்டுகளை
அவர்கள் கடந்துவந்த இழப்புகளை
நிராகரிக்கப்பட்ட வாக்குறுதிகளை
நிர்வாணமாக்கப்பட்ட அந்தரங்கங்களை
பலவீனத்தின்மீதான கேலிகளை
மரணத்தை இறுதியென நம்பிக்கொண்டிருந்தவர்கள்
கதறி அழுதார்கள்
வீதியில் சரிந்தார்கள்
விரல்களால் கண்களைக் குத்திக்கொண்டார்கள்
பெரும் ஓலங்களுக்கு மத்தியில்
நான்
பலகாலமாகவே அவர்கள் மரணித்துக்கொண்டிருந்த ரகசியம் கூறினேன்
இனியும் மரணிப்பார்கள் என்ற உண்மையைச் சொன்னேன்
மரணம் அவ்வளவு கொடுமையானதில்லை என நினைவுறுத்தினேன்
முக்கியமாக
கடந்து வந்த மரணத்தின் வலி
நம் நினைவில்
எப்போதும் இருப்பதே இல்லை
என்றேன்
***
ஒரு குழந்தையைக் கொல்ல
முடிவெடுத்த
வெயில் பொழுதில்
ஆயுதங்களைத் தேடிக்களைத்தோம்
நீ துப்பாக்கிகளைத் துடைத்துவைத்தாய்
நான் கூர்வாளை சானைப்பிடித்தேன்
இரண்டுமே குழந்தையை
அச்சுறுத்தலாம் என
கைகளால்
கொல்ல முடிவு செய்தோம்
ஒரு குழந்தையைக் கொல்லும் முன்
நீ தாலாட்டுப் பாடலொன்றை
தயார் செய்தாய்
கண்மூடும் சிசுவைக் கொல்வதில்
சங்கடம் இருக்காது என்றாய்
எனது விளையாட்டுத்தனங்களைச் சேகரித்து சிரிப்பு மூட்ட திட்டமிட்டேன்
சிரிக்கும் குழந்தையைக் கொல்வது அவ்வளவு கொடூரமாக இருக்காது என்றேன்
குழந்தையைக் கொல்லும் முன்
சில கோழிக்குஞ்சுகளையும் ஒரு பூனைக்குட்டியையும்
கொல்வதற்குக் கொடுத்தாய்
ஒரு சமயம் வௌவால் குஞ்சொன்றை
எடுத்துவந்து கழுத்தைத் திருகிப் பயிலச்சொன்னாய்
நீ தாலாட்டுகளையும் நான் விளையாட்டுகளையும் பயிற்சியெடுத்து களைத்த இரவுகளில்
கை கால்கள் வளர்ந்து
வெளிவரப்போகும்
சிசுவின் தலை
நம் பயிற்சிகளை மறக்கடிக்கக்கூடாது
என கட்டளையிட்டுக்கொள்ளும்
நிமிடம்
துளியும் அறைக்குள் ஒளியில்லாமல்
இருப்பது
நாம் இருவருமே அழவில்லை என நம்பவைத்து
கொலைக்கான உக்கிரத்தை
அவ்வளவு சூட்சுமமாகத் தூண்டுகிறது.