
வாசிப்பு எனக்கு உன்னதமான ஒரு நிகழ்வு என்ற தத்துவத்தோடெல்லாம் அறிமுகமாகவில்லை. மொழியின் சுவையே நான் புத்தகங்களைத் தேடிப்போகக் காரணமாக இருந்தது. அதிர்ஷ்ட வசமாக எனக்கு லுனாஸில் இருந்த புத்தகக் கடையிலேயே வேலை கிடைக்க சாண்டில்யன், கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, மு.வரதராசன், தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், சிவசங்கரி, வாஸந்தி, வைரமுத்து போன்றோரின் நாவல்களைத் தொடர்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பணியாற்றிய நான்கு மாதக் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எந்தப் படபடப்பும் இல்லாமல் படித்து முடித்திருந்தேன். புத்தகக் கடை நஷ்டத்தில் மூடப்பட்டதும் நூல்கள் வாங்கும் வாய்ப்பு அச்சிற்றூரில் கிடைக்காமல் போனது.
பின்னாளில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும் பெரும் வரட்சி. கற்றல் கற்பித்தலுக்கான நூல்கள் மட்டும் அங்கு இருந்தனவே தவிர நாவல்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. நான் படித்து முடித்திருந்த மு.வரதராசன், கல்கி அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தனர். ரமணி சந்திரனை 3 புத்தகங்கள் படித்ததோடு அலுத்துவிட்டது. எனது அறைத்தோழர் சங்க இலக்கியத்திலும் தனித்தமிழிலும் ஈடுபாடு காட்டியதால் வேறு வழியில்லாமல் அ.கி.பரந்தாமனின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா, திருக்குறள், திருமந்திரம் என வாசித்து அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பேன். என்னைக் காட்டிலும் என் அறைத்தோழர் திருவருட்பாவையும் திருக்குறளையும் மனனமாகச் சொல்வதில் தேறியிருந்தார்.
Continue reading
தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிகரமானவர்கள். கல்வியும், நாகரீகமாகிவிட்ட வாழ்வியல் முறையும், எளிதாகிவிட்ட உலகத் தொடர்புகளும் எந்த வகையிலும் அவர்களிடம் மாற்றம் கொண்டுவரவில்லை. திராவிட கழகப் பிண்ணனியில் பெரியாரைத் தவிர்த்து அறிஞர் அண்ணா, கருணாநிதி, போன்றோருடைய அடுக்குமொழியும் அலங்காரமுமான பேச்சில் உணர்ச்சி தூண்டப்பட்டு கொதித்தெழுந்த பரம்பரையின் இரத்தத்தொடர்பு, நமது நாட்டிலும் இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது.