நினைவுக் குறிப்பு : அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, தேவாவின் மலேசிய வருகை

ஆதவன் தீட்சண்யா மூலமாகவே தேவா அறிமுகமானார். ‘குழந்தை போராளி’ எனும் சுயசரிதையை, டச்சு மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்த்தவர். அதே போல ‘அனொனிமா’ எனும் நூலை ஜெர்மன் மொழியிலிருந்து மொழிப்பெயர்த்துள்ளார். இரண்டு முறை தொலைபேசியில் பேசினோம். அப்போது அந்தப் புத்தகம் குறித்த கருத்துரைகளை வாசித்திருப்பதாகவும் நூலை இன்னும் வாசிக்கவில்லை என உண்மையை ஒப்புக்கொண்டேன். இறுதி தமிழகப்பயணத்தில்தான் அந்நூலை நீலகண்டனிடம் வாங்கினேன். தொடர்ச்சியாகத் தமிழ் நாவல்கள் குறித்த கவனத்தில் இருப்பதால் இன்னும் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஓர் எழுத்தாளரின் ஒரு படைப்பைக்கூட படிக்காமல் அவருடன் உரையாடுவது குற்ற உணர்வையே எழச்செய்யும். ஆனால் வேறு வழி இல்லாமல் அதைதான் செய்ய நேர்ந்தது.

26.1.2012 – வியாழன்

ஒரு வாடகை காரோட்டியின் நட்பினால், தேவா கைத்தொலைபேசியிலிருந்து தான் பத்துமலைக்கு வந்துவிட்டதாகக் கூறினார். பள்ளியில் அனுமதி கேட்டுவிட்டு சென்றபோது தேவா பத்துமலையை வியந்து பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கு முன் அவரைப் படத்தில் கூடப் பார்த்ததில்லை. ஆனால், தொலைவில் பார்த்தவுடன் அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. வழக்கமான நலவிசாரிப்புகளுக்குப் பின் அவரை ஒரு தங்கும் விடுதியில் இறக்கிவிட்டு மீண்டும் இரவில் சந்தித்தேன்.

தேவா சுவாரசியமானவர். போரினால் இலங்கையிலிருந்து சுவிஸ்லாந்திற்குப் புலம்பெயர்ந்த அவரிடம் அனுபவங்கள் நிரம்பி வழிந்தன. இப்போது மீண்டும் இலங்கைக்கே சென்றுவிட்ட அவர் தனது முழு நேரத்தையும் வாசிப்பிலேயே செலவிடுவது அவர் பேச்சில் ஆங்காங்கு பளிச்சிட்டன. சுவிஸ் வாழ்வு குறித்து கொஞ்சம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். பல்வேறு வகையான மனிதர்கள்; குணங்கள். பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு இளைஞர் குறுக்கிட்டார். கையிலிருந்த பணப்பையைக் காட்டி ‘இது உங்களதா?’ என தேவாவைக் கேட்டார். தேவா திடுக்கிட்டு ‘ஆமாம்’ எனப் பெற்றுக்கொண்டார். காரிலிருந்து இறங்கும் போது தேவா அதை கீழே தவற விட்டிருந்தார். உள்ளேதான் அவர் செலவுக்கு வைத்திருந்த டாலர் நோட்டுகளும் பாஸ்போர்ட் மற்றும் இலங்கை பிரஜை என்பதற்கான ஆதரச் சான்றிதழ்களும் இருந்தன. ஒருவேளை அது தொலைந்திருந்தால் தேவாவின் நிலை மோசமாகியிருக்கும். தேவாவின் நீண்ட அனுபவத்தில் அந்த மனிதரும் இணைந்திருப்பார். பெயர் அறியாத எளிய மனிதர்கள்தான் மங்களான வெளிச்சத்தில் எல்லார் வாழ்விலும் உயந்த இடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

தொடர்ந்த பேச்சினூடே, மனதில் ‘கலை இலக்கிய விழா’ தொடர்பான எண்ணங்கள் குறுக்கிட்ட படியே இருந்தன. அதோடு மறுநாள் நடக்கவிருந்த ‘பன்னாட்டு பகுத்தறிவாளர் மாநாட்டில்’ பேச்சாளர்களை அறிமுகம் செய்யும் பணி வழங்கப்பட்டிருந்ததால் அதற்கேற்ற முன் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது.

மறுநாள் சந்திப்பதாகக் கூறி தேவாவிடம் விடைப்பெற்றேன்.

27.1.2012 – வெள்ளி

மறுநாள் தேவாவை ஏற்றிக்கொண்டு மதியம் இரண்டுக்கெல்லாம் மாநாடு நடக்கும் ‘பெர்ல் இண்டர்நெஷனல் ஹாட்டல்’ வளாகத்திற்குச் சென்றுவிட்டேன். இனி அ.மார்க்ஸ் மற்றும் ஆதவன் வருகைக்காகக் காத்திருக்க வேண்டியதுதான் என அமர்ந்தோம். தேவா இலங்கையர் என தெரிந்ததும் மாநாட்டுக்கு வந்திருந்த சில நண்பர்கள் அவரிடம் பேச ஆர்வம் காட்டினர். இலங்கை நிலவரங்களைக் கேட்டறிந்தனர். ஊடே தொடக்கக் காலத்தில் யாழ்பாணத்தமிழர்கள் தோட்டத்தொழிலாளர்களை நடத்திய விதம் குறித்தும் பேச்சு எழுந்தது. தேவா அவற்றைக் கேட்டு வருந்தினார். இது போன்ற யாழ்பாணத்தமிழர்களின் மேலாதிக்கக் குணத்தை தான் அறிந்திருப்பதாகவும், அதை அனுபவித்த ஒரு தலைமுறையின் வாய்வழி கேட்கும்போது அதிர்ச்சியடைவதாகவும் கூறி அந்த நிகழ்வுகளுக்காக வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து ‘ஸ்டார் ஃபக்’க்கில் அமர்ந்து அரட்டையைத் தொடர்ந்தோம். தேவாவின் வாசிப்பு விசாலத்தின் மீது ஆச்சரியம் கூடிக்கொண்டிருந்தது. எல்லா சம்பவத்தையும் ஒரு சிறுகதையினுடன் முடிச்சிட்டு பேசினார். கதையை விவரமாகச் சொன்னார்.

மதியம் ஐந்து மணிக்கு மாநாட்டின் மூடுந்து வந்து நின்றது. பேராசிரியர் அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, பெரியவர் ஆனை முத்து, ஓவியா என முக்கிய ஆளுமைகள் இறங்கினர். தமிழகப் பயணத்தில் ஆதவனையும் அ.மார்க்ஸையும் சந்திக்க எண்ணி முடியாமல் போன தருணங்களை நிவர்த்திப்பதாய் இருந்தது அந்த நிமிடம். ஆதவனை தழுவிக்கொண்டேன்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் நட்பாய் புன்னகைத்தார். அவர் அறிவின் விசாலம் எனக்கு எப்போதும் ஒரு தயக்கத்தைக் கொடுப்பதுண்டு. பலமுறை தொலைபேசியில் அழைத்தாலும் விவரங்களைச் சொல்லி வைப்பதோடு சரி. ஏதோ அவரைத் தொந்தரவு செய்வது போன்றே ஒரு எண்ணம். தமிழகத்திற்குச் சென்றிருந்த போது லீனா மணிமேகலை, “எல்லாரையும் பார்க்கனுமுன்னு சொல்றீங்க. அ.மார்க்ஸைப் பார்க்கப் போகலயா?” என்றார்.

“அவரின் சில நூல்களைப் படித்தப்பின் அவர் அறிவின் விசாலம் ஒரு தயக்கத்தைத் தருகிறது. அவரிடம் எதை பேசினாலும் அதை அவர் நிச்சயம் ஏற்கனவே விரிவாக எழுதியிருப்பார். அவரின் நூல்கள் மலேசியாவில் கிடைப்பதும் இல்லை. அதிகம் வாசிக்காமல் அப்படி ஒரு புத்திஜீவியைச் சந்திப்பது சரியா எனும் தயக்கம்” என்றேன்.

“அப்படியெல்லாம் இல்லை. அவர் மற்றவர்கள் போல எந்த நேரமும் தன் அறிவின் ஆழத்தைக் காட்டிக்கொண்டிருப்பவர் அல்ல. இயல்பான அமைதியோடு இருப்பார். நீங்கள் ஏதும் கேள்வி கேட்டீர்கள் என்றால் விரிவாக விளக்கம் தருவார்” என்றார். அந்த ஒற்றை வாக்கியமே அ.மார்க்ஸ் குறித்த ஒரு சித்திரத்தைக் கொடுத்திருந்தது. அதனுடன்தான் அவரை அணுகினேன். நிதானமாக குரலில் பேசினார். நெருக்கமான குரல்.

முதலில் அவர்களை அழைத்துக்கொண்டு சீன உணவகத்திற்குச் சென்றேன். சிறிது நேரத்திலெல்லாம் செம்பருத்தி இணைய இதழின் வடிவமைப்பாளர் பிரசன்னா அழைத்தார். அ.மார்க்ஸைச் சந்திக்க முடியுமா எனக்கேட்டார். அவர் வந்தபோது உடன் தோழர் காத்தையாவும் இருந்தார். காத்தையா தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். அ.மார்க்ஸின் தந்தை மலேசியாவில் இருந்ததையும் அதன் தொடர்பான விவரங்களையும் பகிர்ந்துகொண்டார். அதோடு மலேசிய அரசியல் சூழலைப் பற்றியும் கொஞ்ச நேரம் கலந்துரையாடினர். அவர் வந்த நோக்கம் அ.மார்க்ஸை சந்திப்பதாகத்தான் இருந்தது.

மாநாடு இரவில் தொடங்கியப்பின் கலை நிகழ்ச்சி ஆரம்பமானது. அரங்கின் வெளியில் செம்பருத்தி இதழ் ஆசிரியர் கா.ஆறுமுகம் இருந்தார். அ.மார்க்ஸின் பேச்சைக் கேட்கவேண்டும் என்றார். அ.மார்க்ஸும், ஆதவனும் கா.ஆறுமுகம் போன்ற நண்பர்களைச் சந்திப்பது அவர்களுக்கும் மலேசிய சமகால அரசியல் தொடர்பான ஓர் அறிமுகத்தைக் கொடுக்கும் என நம்பினேன். வெளியில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தேன். உரையாடல் இரவு பத்து மணி வரை தொடர்ந்தது. சிவா பெரியண்ணன் வந்தவுடன் இரவுணவுக்கு வெளியேறினோம்.

மலேசியாவில் சாதியத்தின் தாக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். எனக்குத் தெரிந்த தகவல்களைக் கூறினேன். அ.மார்க்ஸ் பேசும் அனைவரிடமும் தேவையான விடயங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டார். எதையும் கவனமாகத்தான் பேச வேண்டியிருந்தது. நான் சொல்லும் சிறிய தகவல் பிழையும் தவறான புரிதலுக்கு உள்ளாகலாம். நள்ளிரவுக்குள்ளாகவே அன்று திரும்பினோம்.

28.1.2012 – சனி

முதல் நாள் மாநாட்டு சொற்பொழிவுகள் தொடங்கியது. பேச்சாளர்கள் சிலரின் உரையை முழுக்க கேட்க வேண்டும் என காத்திருந்தேன். பேச்சாளர்களை அறிமுகம் செய்யும் பொறுப்பு என்னுடையது. முதல் பேச்சாளரான பெரியவர் வே.ஆனைமுத்து அவர்கள் குறித்த தகவல்களைக் கூறி அழைத்தேன். அந்த 87 வயதான ஆளுமை குறித்து இந்த மாநாட்டின் மூலம் இன்னும் அதிகமாக அறிய முடிந்தது. எங்கெங்கோ நுழைந்து அவர் குறித்த தகவல்களைத் தேடும்போது பெரியாரியம் தொடர்பான பணிகளுக்காக அவர் ஆற்றிய பங்கு ஆச்சரியம் அளிக்கக்கூடியதாய் இருந்தது. அவர் போன்ற சிலரால்தான் சுயமரியாதைக் கொள்கைகள் அறுபடாமல் தொடர்ச்சியாக தமிழர் வாழ்வோடு பிணைந்து இருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரியார் ஏற்றிய தீபம் தீச்சுடர்களாக ஒரு குழுவினரால் ஏந்திச்செல்லவே படுகிறது. ‘பெரியார் – ஈ.வெ. ரா. சிந்தனைகள்’ என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்தவராக மட்டுமே எனக்கு அவர் அறிமுகம். ஆனால் தனது வாழ்நாள் முழுக்க அவர் ஓர் இயக்கமாகவே உள்ளார் என்பதற்கு 1949 முதல் அவரின் செயல்பாடுகளே சாட்சியம். ‘அம்ருதா’ நேர்காணலில் “பெரியார் – ஈ.வெ. ரா. சிந்தனைகள்’ தொகுப்பு முழுமையானது அல்ல, இன்னும் அதுபோல தொகுக்க 2 மடங்கு பகுதிகள் தன்னிடமே உள்ளன” என்று கூறியுள்ளார். அதை தொகுப்பதற்கான வயதும் வசதியும் தன்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார் என்பதை கவனித்து செயல்பட வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது.

தொடர்ந்து சில உரைகளுக்குப் பின் இயக்குநர் வேலு பிரபாகரன் பேசினார். ஒரு ஜனரஞ்சக இயக்குநராகத் தன் பணியைத் தொடங்கியவர், இப்போது பெரியார் கொள்கைகளைப் பரப்ப தனது இயக்குநர் சக்தியைப் பயன்படுத்திக்கொள்கிறார். பெரியாரின் கொள்கைகளை இன்னமும் ஆழமாக கலை நேர்த்தியுடன் சினிமாவில் சொல்லமுடியும் என்றாலும், வேலு பிரபாகரனின் பிரச்சார பாணியும் ஒரு வகை காலியிடத்தை நிறைவு செய்கிறது. ஒரு சினிமாவாக அல்லாமல் வெள்ளித்திரை மூலம் நடத்தப்படும் பகுத்தறிவு பிரச்சாரம் என்றே அதை புரிந்துகொள்கிறேன். பகுத்தறிவு, பெரியாரிய சிந்தனை பின்புலம் இல்லாத குடும்ப பின்னணியில் வந்த அவர், அக்கொள்கையை தனதாக்கிக்கொண்டு அதன் தீவிரத்துடனேயே இன்றளவும் செயல்படுகிறார். ‘கடவுள்’, ‘புரட்சிக்காரனை’ பிரச்சார படங்களாகப் பார்க்கமுடிந்தாலும் ‘காதல் அரங்கம்’ எனும் படத்தை எவ்வகையில் புரிந்துகொள்வதென தெரியவில்லை. ‘காதல்’ எனும் உணர்வின் இரசாயண மாற்றங்களை, உடல்கூறு சிக்கல்களை, உளவியல் ரீதியாக அணுகாமல் இவ்வளவு தட்டையாக ஒரு படத்தில் பேச வேண்டியதில்லை என்றே தோன்றியது. மதிய உணவுக்குப்பின்பான வேலு பிரபாகரனின் உற்சாகப் பேச்சு பலரையும் சோர்விலிருந்து எழச்செய்திருந்தது.

அன்றைய தினத்தில் பேராசிரியர் அ.மார்க்ஸும் பேசினார். பெரியாரின் கண்டுக்கொள்ளப்படாத சிந்தனைகளை அவர் பேச்சு முன்வைத்தது. பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாளர் நாத்திகர், பகுத்தறிவுவாதி, பார்ப்பன எதிர்ப்பாளர், தமிழ் தேசப் பிரிவினையாளர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காக நேர்மையாகச் செயற்பட்டவர் என்பன போன்ற கருத்தாக்கங்களின் வழியே கட்டமைக்கப்பட்டிருக்கின்றதை மீறி அவரின் சொல்லப்படாத ஆளுமைகள் சிந்தனைகள் என்ன என்பது குறித்து அவர் பேச்சு இருந்தது. அதன் சாரத்தை இவ்வாறு பட்டியலிடலாம்.

• மொழி இயற்கையானதல்ல; தேசம் ஒரு கற்பிதம்.
• நான் ஒரு தேசாபிமானி அல்ல(ம்); தேச துரோகி.
• மதப்பற்று, மொழிப்பற்று, சாதிப்பற்று, நாட்டுப்பற்று தேவையில்லை.
• பொது நன்மை, பொது உணர்ச்சி, பொது ஒழுக்கம், பொது நீதி சாத்தியமில்லை; ஒருவனுக்குச் சாத்தியமாக உள்ளது இன்னொருவனுக்கு அசாத்தியமாகலாம்.

அ.மார்க்ஸின் பேச்சு பெரியாரின் பிம்பத்தை இன்னும் விரிவாக்கிப் பார்ப்பதாய் இருந்தது. அவர் பேசிய தொனி மேடைக்கானதல்ல. கைத்தட்டலுக்கானதல்ல. அவர் தன் ஆழ்ந்த அறிவிலிருந்து கருத்துகளை வெளிப்படுத்தினார். பெரியார் கூறிய பற்றறுத்தலை அ.மார்க்ஸ் குறிப்பிட்ட இடம் முக்கியமானது. “சுய உறுதி படைத்த தன்னிலைகளே நமது சமூகத்தை விடுதலை செய்யவும் முடியும். தனி மனித விடுதலையும் சமூக விடுதலையும் சந்திக்கும் புள்ளியும் இதுவே. சுய உறுதி பெற வேண்டுமானால் ஒருவர் எல்லாவிதமான பற்றுகளையும், வழிகாட்டல்களையும் கொள்கைகளையும் விடுதல் அவசியம்” என்ற பெரியாரின் கூற்றை விளக்கியவர் பெரியாரின் பத்திரிகை பேட்டி ஒன்றிலிருந்த வாசகத்தையும் வாசித்து விளக்கினார். அதில் பெரியார் இவ்வாறு சொல்கிறார்.

“நான் ஒரு நாத்திகனல்ல; தாராள எண்ணமுடையவன். நான் ஒரு தேசியவாதியுமல்ல; தேசாபிமானியுமல்ல”. அ.மார்க்ஸ் சொல்லும் வரை இந்த வரிகள் எனக்குப் புதியது. தன்னை தாராள எண்ணமுடையவன் ‘தாராளவாதி’ Liberal/Anarchist என்ற பெரியாரின் கூற்றை பேராசிரியர் இன்னும் தெளிவு படுத்தினார்.

“வாழ்க்கை நலன்களை கடவுள் மேல் பொறுப்பேற்றி விட்டு மனிதன் வாளாவிருப்பதையும், பொருட்களைப் பாழாக்குவதையும் பொறுக்காமல்தான் இந்தக் கடவுள் விசயத்தில் பிரவேசிக்க வேண்டியிருக்கிறதேயொழிய மற்றபடி எவன் எத்தனை கடவுள்களை நினைத்துக் கொண்டிருந்தாலும் வணங்கினாலும் எனக்கு அக்கறையில்லை என்று ஒதுக்கியவர் பெரியார். எனவே பெரியாரை வெறும் நாத்திகராகவும் கடவுள் மறுப்பாளராகவும், உலகப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் ஆத்திக நாத்திக வெளிச்சத்தில் பார்ப்பவராகவும் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. பெரியாரின் பரிணாமம் இன்னும் விசாலமானது; அவரை ஒரு நாத்திகன் என்பதைக் காட்டிலும் அவரே சொன்னபடி ‘தாராளவாதி’ எனச் சொல்வதே பொருத்தம்” என்று தனதுரையை முடித்தார்.

அவரின் பேச்சு புதிய தேடுதலை ஏற்படுத்தியது. பெரியாரின் பார்க்காத பக்கங்களை முன்வைத்தது. அவரது பேச்சுக்குப் பின் தேநீர் நேரம். வெளிவந்தபோது இயக்குநர் வேலு பிரபாகரன் எதிர்க்கொண்டார். தனக்கு அ.மார்க்ஸ் கருத்தில் உடன்பாடில்லை எனக்கூறினார். நான், ‘ஏன்’ என்றேன். பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையை சிறிய வட்டமாகப் பார்க்க வேண்டாம் எனவும் அதுதான் அவருக்கு மூலம், அதனுள்தான் மற்ற பிற கருத்துகள் அடங்கியுள்ளன” என்றார். பின்னர் தன் கருத்தை அ.மார்க்ஸிடம் கூறினார். தேநீர் நேரத்துக்குப் பின்னர் நடத்தப்பட்ட விவாத அரங்கிலும் அந்த மாற்றுக்கருத்தை முன்வைத்தார். அதற்கு பதில் சொன்ன அ.மார்க்ஸ், முந்தைய தனது கருத்தில் இன்னும் உறுதியாக இருப்பதாகக் கூறி, ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை என யாரும் சொல்லலாம். ஆனால் அதனால் நடந்துவிடப்போவது என்ன? மனிதனின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாத வரை, எதிர்கால பயங்கள் அவனிடம் இருக்கும் வரை ‘கடவுள் இருக்கிறார்’ எனச் சொல்லும் கூட்டம் இருக்கவே செய்யும். சக மனிதனின் தேவைகளை பூர்த்திசெய்வது, பயங்களைப் போக்குவதுமே முதல் பணி. எனவேதான் பெரியார் தன்னை நாத்திகன் எனும் வட்டத்தில் அடைக்கவில்லை. தாராளவாதி எனச் சொல்லிக்கொண்டார்’ என்ற விளக்கத்துக்குப் பின் அரங்கு அமைதியானது.

இரவுணவில் மீண்டும் இயக்குநர் வேலு பிரபாகரன் எதிர்ப்பட்டார். “உனக்கு நான் ஒரு பரிசு தர நினைக்கிறேன்” என்றவர் அவர் அதிகம் விரும்பி வாசித்த நூலான ‘இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு’ என்ற நூலைக் கொடுத்தார். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன்.

இரவில் டத்தாரான் மெர்டெகா சென்றோம். கூட்டரசு பிரதேச தினம் வரவிருப்பதால் வானவேடிக்கை மிகப்பிரமாண்டமாக நடந்துக்கொண்டிருந்தது. சிவா, “உங்களுக்காக நாங்கள் ஏற்படுத்திய வரவேற்பு” என்றார். அதிக நேரம் தெரித்து பறக்கும் தீப்பொறிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். பின்னர் லிட்டல் இந்தியாவில் ஒரு வலம். நான் மறுநாள் பேசுபவர்களின் குறிப்புகளைத் தயார் செய்ய வேண்டும் என்பதால் நள்ளிரவு தாண்டியப்பின் கிளம்பிவிட்டேன்.

29.1.2012 – ஞாயிறு

மாநாட்டின் இறுதி நாள். இன்றும் சில முக்கிய ஆளுமைகளின் சொற்பொழிவு இருந்தது. ஆதவன் பேச்சுக்காகக் காத்திருந்தேன். அவரை அறிமுகம் செய்து வைக்கும்போது அவரது கவிதையைச் சொல்லியே அறிமுகம் செய்தேன். ஆதவன் பேச்சு ஒரு இறுக்கமான சூழலை தகர்த்தி அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. அவர் பேச்சில் சில பகுதிகள் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது.

களப்பிரர் ஆட்சி காலம் குறித்து அவர் பேசும்போது, “களப்பிரர் கட்டத்தை பார்ப்பனர்கள் தங்களுக்கு இருண்ட காலம் என்கின்றனர். களப்பிரர்கள் ஆட்சியினால், அதிகாரத்தையும் முற்றுரிமைகளையும் இழந்த அவர்கள் வரலாற்றை எழுதும்போது அவ்வாறு சொல்லிச்செல்கின்றனர். தனது பகுத்தறிவுப் பாரம்பர்யத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் வேதக்கருத்தியல்களை முறியடிக்கவும் தமிழ்ச்சமூகம் தொடர்ச்சியாக நடத்திவந்த போராட்டத்தின் ஒருபுள்ளியில்தான் களப்பிரர் ஆட்சி வந்தது.’ என்றார். ஆனால் அதிலிருக்கும் வன்மத்தை புரிந்துகொள்ளாத பிறரும் இருண்டகாலம் என்கிற கருத்தாக்கத்தையே வாந்தியெடுக்கின்றனர் எனக்கூறி செம்மொழி மாநாட்டில் கருணாநிதியும் அவ்வாறே குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். கூடவே கருணாநிதியைக் ‘கலைஞர்’ என அழைப்பதைக் குறித்துக் கேள்வி எழுப்பியல் அவையில் சின்ன சலசலப்பை ஏற்படுத்தியது.

அதே போல, கற்று சிந்திக்கத் தொடங்கிவிட்ட ஒரு சமூகத்தைச் சுரண்ட நவீன சாமியார்கள் எவ்வாறு புது அவதாரம் எடுத்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார். “உலகில் என்ன நடந்தாலும் நாம் அமைதியோடு இருக்க வேண்டும் என இந்த கார்ப்பரேட் குருஜிகள் போதிப்பது தமிழ் சமூகத்தைச் சொரணையற்றதாய் இருக்க வைக்கிறது. இவர்கள் சொல்லும் கடவுளற்ற ஆன்மீகம் உக்திகள் மனிதர்களை செயலற்றவர்களாக மாற்றுவதும் பகுத்தறிவுக்கு எதிரானதுதான் என்பதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.” என்றார். இப்படியான மூடத்தனங்களுக்கும் மோசடிகளுக்கும் இன்றைய அதிநவீன ஊடகங்கள் வழியே பரப்பப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற பகுத்தறிவு மாநாடுகள் நமது பொறுப்பை உணர்த்துவதாகப் பாராட்டினார்.

மலேசியாவில் இன்று இச்சிக்கல் குறித்து எதிர்ப்புக்குரல் கொடுக்க வேண்டிய அவசியம் உண்டு. அவர் பேச்சில் மிக முக்கியமாகத் தொட்ட இடம் அது. யோகா, தியானம் , தன்னையறிதல், தனக்குள்ளே புதையுண்டிருக்கும் ஆற்றல்களை தோண்டியெடுத்தல், போன்ற விளம்பரங்கள் மூலமும் ‘மதத்தை நாங்கள் போதிக்கவில்லை, மாறாக மதமற்ற கடவுள்ளற்ற ஓர் ஆன்மிக அனுபவத்தை வளங்குகிறோம்’ எனப் பேசி பெருகிவிட்ட கார்ப்பரேட் குருஜிகளுக்கு எதிராக தீவிரமாக உரையாடல் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

இரவு எட்டு மணியளவில் மாநாடு முடிந்ததும் விடைப்பெற்றேன். மறுநாள் வேலை. உடல், மூளை களைத்திருந்தது. மறுநாள் பினாங்கில் நடக்கவிருந்த பெரியார் சிலை திறப்பு விழாவுக்கு பேச்சாளர்கள் செல்வதால், நான் விடைப்பெற்றேன். பினாங்கு வரை செல்பவர்கள் அருகில் இருக்கும் ‘பூஜாங் பள்ளத்தாக்கை’ பார்க்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. பாலமுருகனிடம் அவர்கள் வருகையைச் சொல்லி வாய்ப்பிருந்தால் ஏற்பாடு செய்யப்பணித்தேன். பாலாவும் ஆர்வமாக இருந்தார்.

30.1.2012 – திங்கள் – 31.1.2012 செவ்வாய்

பினாங்கு பயணம் நண்பர்களுக்கு முக்கியமானது. சிலை திறப்புக்குப் பின் அ.மார்க்ஸ், ஆதவன், தேவா மூவரையும் பாலாமுருகன் தன்னுடன் அழைத்துச்சென்றிருந்தார். மறுநாள் ‘பூஜாங் பள்ளத்தாக்கு’ பினாங்கு தமிழர் பகுதிகளில் சுற்றியதில் ஓரளவு அச்சூழலை அறிந்திருப்பார்கள். மலேசியாவுக்கு வரும் ஒவ்வொருவரும் வடக்குப் பக்கம் சென்று பார்க்க வேண்டும் என நான் விரும்புவதுண்டு. அது அசலான நிலப்பகுதி. கோலாலம்பூர் முதலுலக நாடு போல ஒப்பனை செய்யப்பட்ட நிலப்பரப்பு என்ற எண்ணம் எப்போதுமே துறுத்தி ஓர் அந்நியத்தன்மையை மனதில் நிலைபெற செய்கிறது.

செவ்வாய் இரவு ஆதவன் தீட்சண்யா மட்டுமே கோலாலம்பூர் வந்தார். அ.மார்க்ஸும் தேவாவும் தொடர் சொற்பொழிவுக்காக ஈப்போ சென்றிருந்தனர். ஆதவன் மறுநாள் மலாக்காவில் பேசவேண்டியிருந்தது.

செவ்வாய் இரவில், கெடா பயணம் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். முற்றிலும் இரு வேறான சூழல் என கெடாவையும் கோலாலம்பூரையும் சுருக்கமாக ஒப்பிட்டார். வீட்டின் அருகில் ‘அவதார்’ எனும் தங்கும் விடுதியில் தங்க வைத்துவிட்டு விடைபெற்றேன். மறுநாள் மலாக்காவுக்கு நீண்ட பயணம் இருந்தது.

1.2.2012 – புதன்

மதியம் 3க்கு நானும் ஆதவனும் மலாக்கா கிளம்பினோம். Stamford College-ல் கலந்துரையாடல். அக்கல்லூரியின் முதல்வர் திரு. நாராயணசாமி அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஏறக்குறைய இரண்டரை மணி நேர பயணத்தில் அவ்விடத்தை அடைந்தோம். இடையில் வழக்கம்போல வழியை மறந்து சாகசமெல்லாம் காட்டி கண்டுப்பிடித்து அழைத்துச்சென்றேன்.

ஆதவனிடம் நெடுநேரம் பேச அப்பயணம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. ஆரியர் வருகை, பிராமணர்களின் சுரண்டல், சாதியத்தின் செயல்பாடு என அவ்வுரையாடல் நீண்டது. அடிப்படையாக எனக்கு இருந்த சந்தேகங்களைச் தெளிவு படுத்திக்கொண்டேன். எல்லாவற்றுக்கும் ஆதவன் விளக்கம் கூறியதோடு மேலும் அதுகுறித்து விரிவாக அறிய மேற்கோள் நூல்களை, அதன் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு வாசிக்கக் கூறினார். அதில் அருணன் எழுதிய ‘தமிழரின் தத்துவ மரபு’ எனும் நூல் அடிக்கடி இடம்பெற்றது.

ஏறக்குறைய ஐந்தரைக்குக் கல்லூரியை அடைந்தோம். நாற்பது பேர் குழுமியிருந்தார்கள். மலாக்காவில் அவ்வளவு பேர் கூடியிருந்ததே அதிகம்.

எல்லா அறிமுகங்களுக்குப் பின் ஆதவன் பேசினார். தனது இயல்பான பேச்சால் அரங்கினரைக் கவர்ந்தார். சுயவரலாறு எவ்வகையான இலக்கிய அந்தஸ்தைப் பெருகின்றது என விளக்கியவர், சுயவரலாறு எழுத வேண்டியத் தேவைகளையும் விவரித்தார். தமிழில், புலம்பெயர்வு இலக்கியம் மலேசியாவுக்கு எப்போது தமிழர்கள் முதன்முதலாகப் பினாங்குக்குப் பிடித்துவரப்பட்டனரோ அப்போதே தொடங்கிவிட்டது எனக்கூறி புலம்பெயர்வு என்பதை தான் எப்படிப் புரிந்துகொண்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

மலாக்காவில் நண்பர் சரவண தீர்த்தாவையும் அன்பரசனையும் சந்தித்தது சுவையான அனுபவம். மலாக்கா செட்டிகள் வாழும் இடத்தில் இரவுணவுக்குப் பின் விடைப்பெற்றோம். அன்று இரவுதான் பேராசிரியர் அ.மார்க்ஸும் தோழர் தேவாவும் ஈப்போவிலிருந்து வருவதால், அவர்கள் வருவதற்கு முன்னதாகப் போய்விட வேண்டும். களைப்பும் தூக்கமும் உடலை அழுத்திக்கொண்டிருந்தன. இரவு பதினோரு மணியளவில் விடுதியை அடைந்தோம். ஈப்போவிலிருந்து நண்பர்கள் வர அதிகாலை 1 ஆகும் என்பதால் ஆதவனை ஓய்வெடுக்கச் சொன்னேன். களைப்பு அவரை விடுதிக்கு வரும் முன்பாகவே உறங்குகிறோமா இல்லையா என்ற குழப்பமான மனநிலைக்குத் தள்ளியிருந்தது. அதிகாலை ஒரு மணிக்கும் தேவா தெளிவாக இருந்தார். மறுநாள் அவர்களுக்குச் சில பயணங்களை ஏற்பாடு செய்திருந்தேன். உறங்கி கண் விழித்தபோது அன்று இரவே தோன்றவில்லையோ என்ற குழப்பம் தோன்றியது.

2.2.2012 – வியாழன்

மறுநாள் ஓவியர் சந்துருவும் எழுத்தாளர் யோகியும் தோழர்களை அழைத்துக்கொண்டு பத்துமலையைச் சுற்றிக்காட்ட ஆயர்த்தமாயிருந்தனர். பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர் தந்தைப் பிறந்த இடமான ‘பத்து அராங்கை’ (Batu Arang) பார்க்க காத்தையாவுடன் சென்றிருந்தார். ஆதவன் மற்றும் தேவா பத்துமலைக்குச் சென்றிருந்தனர். நான் அவர்களை மதியம் சந்தித்தபோது ஷோப்பிங் செய்ய தயாராக இருந்தனர். எல்.ஆர்.டி ரயில் மூலமாக எங்கள் பயணம் தொடங்கி முடிந்தது.

பயணங்களின் பேச்சு சுவாரசியமானது. நண்பர்களிடம் மலேசிய இலக்கியச் சூழலை விவரித்தப்படி வந்தேன். தொடக்ககால முயற்சிகள், எழுத்தாளர் சங்கத்தின் உச்சமான கட்டம், ராஜேந்திரன் பொறுப்பெடுத்தவுடன் அதில் ஏற்பட்டுள்ள ஜனரஞ்சகத் தன்மை, தமிழகத்திலிருந்து இங்கு வரும் எழுத்தாளர்கள், கேள்விகளற்று அவர்களுக்கு சிஷ்யப் பிள்ளைகளாகிவிடும் மலேசிய எழுத்தாளர்கள் என அந்தப் பேச்சுத் தொடர்ந்தது.

அ.மார்க்ஸ் இன்ட்ராப் குறித்து அறிய ஆவலாக இருந்தார். எனக்குத் தெரிந்த விளக்கங்களைக் கூறினேன். இந்து மதம் எப்படி இங்கு சிறுபான்மை இனத்திற்கு ஒரு அடையாளமாக உள்ளது என்பதை அவர் உள்வாங்கிக்கொண்டார். மதத்தின் பெயரால் இந்தியாவில் நடக்கும் வன்முறைகள் குறித்து விளக்கினார். அதிகாரத்துக்கு எதிராக அவர்களின் செயல்பாடுகள் எந்தெந்த தளங்களில் இயங்குகிறது என விவரித்தார். பொதுவாகவே எழுதுபவர்கள் தங்கள் செயலூக்கத்தை எழுத்தில் மட்டுமே தொடங்கி முடித்துவிடுகின்றனர். அதை மீறி சமூகத்துக்கான செயல்பாடு, அதன் தேவைகள் , கடப்பாடு குறித்து மீண்டும் மீட்டுணர முடிந்தது.

ஆதவன் தீட்சண்யாவும் அ.மார்க்ஸும் விவரித்தப் பல்வேறு சம்பவங்களின் மூலம் சாதியம் எவ்வாறு இன்னமும் தமிழகத்தில் விரவிக்கிடக்கின்றன என அறிய முடிந்தது. ‘கொள்கை பற்றின் இறுதி வடிவம் பாசிசம்’ என்ற பெரியாரின் கூற்றை ஒட்டிக் கொஞ்ச நேரம் பேசினோம். எனக்கு அதில் சில கேள்விகள் இருந்தது. பயணம் நெடுகிலும் வெவ்வேறு விடயங்களைப் பேசினாலும் அந்த வரிகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தன. கொள்கைகளால் நிகழ்ந்த வரலாற்றுப் பேரழிவுகளின் ஓலம் ஒரு புறமும் கொள்கைகளால் மட்டுமே இயங்க முடிகிற மனதின் இயல்பு மறுபுறமும் என மறுபுறமும் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தன. அது தேவைதான். அதுதான் புதிய தேடலை ஏற்படுத்தும்.

இரவு நேர கெ.எ.சி.சி யில் கொஞ்சம் இளைப்பாறியப்பின்னர் அறைக்குச் சென்றோம். மறுநாள் அவர்களுக்கு இரண்டு காரியங்கள் இருந்தன. ஒன்று காலையின் விழுதுகள் நேரடி ஒலிபரப்பில் அவர்கள் பேச வேண்டும். மற்றது சிங்கை பயணம்.

3.2.2012 – வெள்ளி

‘விழுதுகள்’ எப்போதும் போல பிரமுகர்களுக்கு 15 நிமிடம் ஒதுக்கி தன் கடமையைச் செய்து முடித்திருந்தது. நன்றாக போக வேண்டிய உரையாடல் அறிவிப்பாளர் சுதாவினால் கெட்டது. ‘புனைவு’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்பதில்தான் அவர் கவனம். மிக முக்கியமான ஆளுமைகளைப் பற்றிய அறிமுக நிகழ்வு அர்த்தம் சொல்வதில் கழிந்தது.

சிங்கைக்குப் போக பேருந்து நிலையம் நோக்கி செல்கையில் ‘இன்ட்ராப்’ உதயகுமாரைப் பார்க்கலாம் என முடிவெடுத்து அவர் அலுவலகம் சென்றோம். வழக்கு விசயமாக நீதிமன்றம் சென்றிருந்தார். அது நானும் விரும்பிய சந்திப்பு. ஒருவகையில் அச்சந்திப்பு நண்பர்கள் மலேசியாவில் எதிர்க்கொண்டதில் அவசியமானதாக இருந்திருக்கும். சில கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், உதயகுமார் ஆய்வு ரீதியாகவும் ஆதாரப் பூர்வமாகவும் பேசக்கூடியவர். அவர் எடுக்கும் முடிவுகளுக்கு அவர் காட்டும் காரணங்கள் மறுக்க முடியாதவை. உலக/ மலேசிய அரசியலை கூர்ந்து பார்க்கும் அவரின் தெளிவும் முடிவும் மலேசிய இந்தியர்களுக்காகவே உருவாகுபவை. தொடர்ச்சியாக அவரைச் சந்திப்பதில் அவர் அவ்வப்போது வெளியிடும் தகவல்களும் ஆதாரங்களும் எந்த தினசரிகளிலும் காண முடியாதவை. ஒடுக்கப்படும் ஓரங்கட்டப்படும் பலரின் புகார்கள் உதயகுமாரிடம் குவிந்துகிடக்கின்றன.

வேறொரு முறை அச்சந்திப்பை ஏற்பாடு செய்வதாகக் கூறி தோழர்களை வழியனுப்பினேன்.

4.2.2012 – சனி

பேருந்து நிலையத்தில் நண்பர்களை ஏற்ற சிவாவும் வந்திருந்தார். சிவாவைக் கண்டவர்கள் உற்சாகமானார்கள். மறுநாள் ‘கலை இலக்கிய விழா’ இருந்ததால் நான் அவர்களைச் சிவாவிடம் ஒப்படைத்து விடைபெற்றேன். அந்த நிமிடத்திலிருந்து நாளைய நிகழ்வை ஒட்டிய எண்ணமே சூழ்ந்துகொண்டது.

5.2.2012 – ஞாயிறு

கலை இலக்கிய விழா இம்முறை இரண்டு அங்கமாகப் பிரிக்கப்பட்டது, இரண்டாவது அங்கத்தில் சிறப்பு வருகையாளர்கள் பேசினார்கள். அதன் படி தேவாவையும் அதில் பேச வைக்க விருப்பம் கொண்டிருந்தேன். இலங்கை – மலேசிய இலக்கிய இணைப்பு முயற்சிக்கு தேவாவின் பேச்சு ஒரு தொடக்கமாக இருக்கலாம் எனப்பட்டது. அவரும் மிகச்சிறப்பாகவும் சுருக்கமாகவும் இலங்கை இலக்கியத்தை அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸிடம் இலக்கியம்-அரசியல் எனும் தலைப்பினைக் கொடுத்திருந்தேன். மலேசிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தேவையான தலைப்பு எனத் தோன்றியது. வெற்று வார்த்தைகளின் கதகதப்பில் கனவு கண்டுக்கொண்டிருப்பவர்களுக்கு இலக்கியம் எதை செய்யக்கூடியது, அது எதை செய்துகொண்டிருக்கிறது என்பதை ஒட்டிய தெளிவு தேவைப்படுவதால் அத்தலைப்பு. அ.மார்க்ஸ் தனது இப்பயணத்தில் சந்தித்த மனிதர்கள் வழி தொகுத்த மலேசியச் சூழலின் அடிப்படையில் பேசினார். மலேசியாவை குறுகிய காலத்தில் கூர்மையாக கவனித்துள்ளார் என்றே தோன்றியது. மலேசியாவுக்கு வரும் தமிழக எழுத்தாளர்கள் இந்நாட்டு இலக்கியப் போக்கை மட்டம் தட்டுவது குறித்த தனது எதிர்வினையையும் பதிவு செய்தார். ஒவ்வொரு நாட்டுக்கான அரசியல், கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் சிக்கல்கள் இலக்கியத்தைப் பிரதிபளிப்பதால், தமிழக இலக்கியத்தோடு மலேசிய இலக்கியத்தை ஒப்பிடக்கூடாது என்றார். மேலும், ராயால்டி வழங்கப்படும் முறை தமிழகத்தில் இருந்தாலும், வல்லினம் நூல் விற்பதற்கு முன்பே ராயல்டியை வழங்கிவிடுவதைச் சுட்டிக்காட்டி வெகுவாகப் பாராட்டினார்.

தொடர்ந்து ஆதவன் பேசியபோது, சமகால அரசியலை எவ்வாறு அரசியலில் பேசுவது என தனது ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார். பேசி முடிக்கும் வரை அரங்கம் சிரித்துக்கொண்டே இருந்தது. என்னிடம் விடைபெருவதாகச் சொன்ன கல்லூரி மாணவர்கள் இறுதிவரை பேச்சில் கட்டுண்டனர். ஆதவன் மலாக்காவில் பேசும் போதும் கல்லூரி மாணவர்களே அதிகம் கவரப்பட்டனர். இளம் தலைமுறை இலக்கியத்தில் ஈடுபடுவதில் உள்ள அக்கறை அவருக்கு இருந்தது. அதை வழியுறுத்தவும் செய்தார்.

நிகழ்ச்சி முடிவுற்றதும் அறைக்குச் சென்றோம். சற்று நேரம் பேசினோம். சண்முகசிவாவும் வந்திருந்தார். தமிழக எழுத்தாளர்கள் மலேசிய எழுத்துகளை ஒப்பிடுவது ஒரு புறம் இருந்தாலும், மலேசிய எழுத்தாளர்கள் தங்கள் சக எழுத்தாளர்கள் குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசாததை குறிப்பிட்டு சற்று நேரம் பேசினோம். ‘ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது போன்றவர்கள் தங்களுக்கு இருக்கும் தமிழகத்தொடர்பால் தங்கள் படைப்புகளை அங்கே அறிமுகம் செய்கின்றனர். அவற்றை வாசிக்கும் ஒருவர், அதுதான் மலேசிய இலக்கியத்தின் அடையாளமாக எண்ணி, புறக்கணித்துவிடுகின்றனர். அவர்களை மீறி மலேசிய இலக்கியம் உள்ளதை இங்கு யாரும் விமர்சனங்கள் மூலம் முன்னெடுப்பதில்லை’ எனக்கூறினேன். அ.மார்க்ஸும் ‘குறுகிய காலம் தமிழகத்திலிருந்து இங்கு வருபவர்கள் மலேசிய இலக்கியத்தில் ஒன்றும் இல்லை எனச்சொல்வதெல்லாம் முறையற்றது’ என்றார். மறுநாள் அவர்கள் புறப்பட வேண்டியிருந்ததால் நான் புறப்பட்டேன். கலை இலக்கிய விழா முடிந்தவுடன் மனம் , மூளை எங்கும் விரவி பரவும் ஓர் அமைதி அப்போது வாய்த்திருந்தது. தனிமையில் இருக்கத் தோன்றியது.

6.2.2012 – திங்கள்

தேவாதான் முதலில் புறப்பட்டார். மலேசியாவில் இருந்தவரை அனைவரையும் சமமான ஒரு மன உணர்வில் வைத்திருந்தார். அதிகம் டென்சனான சமயங்களிலும், பரபரப்பிலும், அவர் பேச்சின் மூலம் சூழலை ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்தவர். ‘அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை’ என்பது போன்றதொரு பேச்சு. அவ்வாறான நண்பர்கள் மூலமே எப்போதும் மனநிலையை மிதமாகச் செலுத்த முடிகிறது. புறப்படும் நிமிடத்துக்கு முன்பான வெறுமையை நினைவுபடுத்தாமல் சட்டென அகன்றது போல இருந்தது அவர் பயணம்.

அதன் பின்னர் அ.மார்க்ஸையும் ஆதவனையும் விமான நிலையம் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு வந்தபோது தவறுதலாக அவர்களுக்குச் சேர வேண்டிய புத்தகப் பை ஒன்று என்னிடம் மாட்டியிருந்தது. பரபரப்படைந்து மீண்டும் பேருந்து நோக்கி ஓடினேன். பிரிவின் கையசைப்போடு திரும்பியப்பின் அவ்வுணர்வை சட்டென அகற்றும் இதுபோன்ற பரபரப்பு இயல்பாக மனதில் தங்கும் இதமான நினைவுகளைக் கொன்றுவிடுகிறது.

மீண்டும் காத்திருக்கும் பரபரப்பான வாழ்க்கைக்கே சென்று சேர்ந்துவிட மனதைத் தயார்செய்தும் விடுகிறது.

சம்பந்தப்பட்ட பதிவுகள் : http://aadhavanvisai.blogspot.com/2012/02/blog-post_22.html

(Visited 177 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *