அம்ருதா நேர்காணல் (பாகம் 2) :ஒவ்வொரு எழுத்தாளனும் ஓர் இயக்கமாகவே செயல்பட வேண்டும்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமிழர்களுக்கான அரசாங்க வேலைவாய்ப்பு என்றிருக்கும்போது அங்குள்ள இளந்தலைமுறையினரது எதிர்காலம்தான் என்னாவது?

மலேசியத் தமிழர்களுக்கு அதிகம் கிடைக்கின்ற அரசாங்க வேலை என்றால் தமிழாசிரியர் பணிதான். உயர் பதவி என்றால் தலைமை ஆசிரியர் பணி. அதுவும் மிக விரைவில் அபகரிக்கபடும் அபாயம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய சூழலில் அரசாங்க வேலைகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் இளம் தலைமுறைகளுக்கு இல்லை. விவேகமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இது. சீனர்கள் அரசாங்க வேலைகளில் நாட்டம் செலுத்துவதில்லை. அதைப் பெற முயல்வதில்லை. அவர்கள் கவனம் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்தது. கூடுதலான கல்வி தகுதி ஒன்றே இனி வரும் தலைமுறைகளைக் காக்க ஒரே வழி. ஆனாலும் இந்நாட்டுக் குடிமகனாய் தகுதியான கல்வி பின்புலம் கொண்ட ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்காதபோது போராட்டங்கள் தொடர்கிறது. இதுபோன்ற அடிப்படை உரிமைக்கான போராட்டங்களைக் எடுத்துக்கொண்டுதான் ஹிண்ட்ராப் உருவாகியது.

ஹிண்ட்ராப்பின் சமூக உள்ளடக்கம் எது? அது தமிழ் மக்களின் எந்தப் பிரிவின் நலனை முன்னிறுத்தும் தன்மை கொண்டது? ஹிண்ட்ராப் அமைப்பின் வரலாற்றுத் தேவையை விளக்க முடியுமா?

ஹிண்ட்ராப் மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அதை தோற்றுவித்த உதயகுமாரை ஒரு நீண்ட நேர்காணல் செய்த அனுபவம் உண்டு. நேரடி பழக்கத்தினால் அவர் சிந்தனையும் செயல்பாடும் நேர்மையானது என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அரசாங்கத்தை அல்லது மேட்டுக்குடி மலாய் இனத்தைப் பொறுத்தவரை தமிழர்கள் அனைவருமே தலித்துகள்தான். அவ்வாறு கருத்தப்படும் ஒரு சமூகம் ஒட்டு மொத்தமுமாகத்தானே புறக்கணிக்கப்படும். அவ்வாறு புறக்கணிக்கப்படும் சமூகத்தினரின் குரலாகத்தான் ஹிண்ட்ராப் எழுந்தது. ஆனால் அவர்களில் போராட்டம் உணர்ச்சிமயமானது. உணர்ச்சிகள் எப்போதும் உச்சத்தில் இருப்பதில்லை. ஆனால் அரசியல் சிந்தாந்தம், கொள்கை அப்படி அல்ல. ஹிண்ட்ராபிடம் நான் காணும் பலவீனம் இது. அவர்களிடம் அடிப்படையான அரசியல் சிந்தாந்தங்களோ கொள்கைகளோ இல்லை. மதம் அல்லது இனம் சார்ந்த முன்னெடுப்பே அவர்களுடையது. வர்க்கம் சார்ந்த போராட்டம் குறித்து அவர்களிடம் ஓர் ஆழமான பார்வை இல்லை என்றே நினைக்கிறேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் மலேசியாவில் ஆங்காங்கு கோயில்கள் உடைக்கப்பட்டன. இது தமிழர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இச்சமயத்தில் கொதிக்கும் உணர்வுக்கு ஒரு வடிவம் கொடுப்பது போல ஹிண்ட்ராப் முன்வந்தது. மக்களின் உணர்ச்சிக்கு சட்ட வடிவம் கொடுத்தது. அவர்களை ஒன்றிணைக்க மையமாக இருந்தது.

இலங்கையின் மலைத் தோட்டங்களில் காலியாக ஒரு சதுரடி நிலம் இருந்தால் உடனே அங்கு புத்தர் சிலையை நிறுவுவதும் பின் சிலையைக் காக்க பாதுகாப்புப் படையினர் வந்திறங்குவதும் வழிபாட்டுக்காக சிங்களவர் வந்துபோவதுமாக அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகிறது. திட்டமிட்ட இந்த ஆக்கிரமிப்பைத் தடுத்துவிடுவதற்காக அந்தக் காலியிடத்தில் ஏதாவதொரு இந்துக்கோவிலை கட்டிவிடுகிற போக்கு மலையகத் தமிழர்களிடம் காணப்படுகிறது. மலேசியாவில் இப்படியான நெருக்கடி ஏதும் உண்டா?

எங்கள் அரசாங்கத்தை நீங்கள் என்ன நினைத்தீர்கள். வழிபாட்டு தலம் அமைத்து அதன் பின்னர் அவ்விடத்தை ஆக்கிரமிக்க அவர்கள் என்ன அத்தனை பலவீனமானவர்களா? ஒரு வரலாற்றுபூர்வமான சம்பவத்தைச் சொல்கிறேன்.

கோலாலம்பூரின் தெற்கே அமைந்து இன்றைய முதல் மலேசியாவின் கூட்டாட்சி நிருவாகத் தலைநகராகச் செயல்படுகிறது புத்ரா ஜெயா. 1999 முதல் செயல்படும் இது மலேசியாவின் திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட ஒரு நகரம். இதில் அரசு தலைமையகம், வீடுகள், கடைகள் அற்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து அரசு வேலைகளும் முடித்துக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிரதேசம் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த தோட்டங்களை அழித்து உருவாக்கப்பட்டது. அரசாங்க மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் தமிழர்கள் வாழ்விடங்களை தன் வசமாக்கி 1990க்குப் பிறகு மட்டும் 4 தோட்டங்களிலிருந்து மக்களை வெளியேற்றியது. இதில் பெராங் பெசார் எனும் தோட்டம் மிகப் பெரியது. தோட்டமக்களைக் குடியமர்த்த மலிவு அடுக்குமாடி வீடுகளைக் கட்டி அங்கு தள்ளப்பட்டனர். ஆனால், புத்ரா ஜெயாவில் நவீனமாக கட்டப்பட்ட வீடுகளில் பொதுத் துறையில் அதிகமாக வேலை செய்யும் மலாய்க்காரர்கள் சகல வசதிகளோடும் குடியமர்த்தப்பட்டனர். 1997 இல் உலகமே பொருளாதார சிக்கலில் திணறிக் கொண்டிருந்தபோது அப்போதைய பிரதமர் மகாதீர் அலட்சியமாகவும் பேராசையுடனும் புத்ராயெயாவை கட்டியெழுப்பினார். புத்ராஜெயாவின் முழு அமைப்பையும் பிரதமர் அலுவலகத்திலிருந்து காணும் வகையில் ஆணவத்தோடு இந்நகரம் எழுந்தது. இதன் கட்டடங்கள் முழுதும் இஸ்லாமியத்தை அடையாளப்படுத்தின. ஆண்டாண்டு காலமாய் அங்கு வாழ்ந்த தமிழர்கள் ஒரு குறுகிய வீடமைப்பில் இருந்து கொண்டு தங்கள் வாழ்ந்த நிலத்தை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கோயில்கள் கட்டி இடத்தை தனதாக்கும் சங்கதியெல்லாம் இங்கு செல்லாது. அவ்வாறு கட்டப்பட்ட எத்தனையோ கோயில்கள் புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன.

தமிழ்க் குடும்பங்களில் ஆண் பெண் உறவு நிலை எத்தகையதாய் உள்ளது? பெண்குழந்தைகள் பற்றிய பார்வை என்ன?

நான் ஒருதரம் லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றேன். அப்போது அவர்களிடம் சில வாக்கியங்கள் மனதில் அமைக்கச் சொன்னேன். ஏறக்குறைய இதே கேள்வியைதான் நான் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியிலும் கேட்டு வந்துள்ளேன். ‘அம்மா’, ‘அப்பா’ இவ்விரண்டு சொற்களுக்கும் வாக்கியம் அமைக்கப் பணிப்பேன். கூட்டத்தில் எண்பது சதவிகிதத்தினர் அம்மா என்ற சொல்லுக்கு அம்மா சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார் என்றும் அப்பா வரவேற்பறையில் நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார் என்றுமே எழுதுவர். அதாவது அப்பா எனும் ஆண் வீட்டின் வரவேற்பறையிலும் அம்மா எனும் பெண் வீட்டின் இறுதியில் இறுக்கும் சமையலறையிலுமே இருக்க வேண்டியுள்ளது. இதை நான் சொல்வதற்குக் காரணம் மலேசியாவில் தமிழ்ப் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள், கல்வி கற்கிறார்கள் என்பதெல்லாம் ஒட்டுமொத்தாய் நாட்டில் நாகரீக வளர்ச்சியில் விழிப்புணர்வில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. மலேசியா போன்ற பல்லினம் வாழும் நாட்டில் பெண்கள் வேலைக்குச் செல்வதும் கல்வி கற்பதும் நடைமுறையில் நிகழக்கூடியவைதான். மனரீதியாக நான் மேற்சொன்ன கதைதான் எல்லோர் மனதிலும் உண்டு. இது மலேசியாவில் மட்டும் அல்ல தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் உள்ளது போலத்தான் தோன்றுகிறது. ஆனால், பெண் குழந்தை ஆண் குழந்தை பேதமெல்லாம் இங்கு இல்லை. பெண் குழந்தைகளுக்கு எல்லா வகையான முக்கியத்துவமும் உண்டு.

பிறப்பு, இறப்பு உள்ளிட்ட வாழ்க்கை வட்டச் சடங்குகள் தனித்தன்மையுடன் கடைப்பிடிக்கப்படுகின்றனவா அல்லது பார்ப்பனமயமாகி விட்டனவா?

எல்லாவற்றிலும் பார்ப்பனத்தன்மைதான். ஹோமம், வாஸ்து, அதிர்ஷ்டக் கற்கள் என அனைத்தையும் வணிகமாக மாற்றி பலர் இங்கு லாபம் சம்பாதிக்கின்றனர். வீடு வாங்குவது முதல் திருமணம் என எல்லா இடத்திலும் பூனூல் போட்ட யாராவது ஒருவர் ஒலிப்பதை பரிதாபமாகக் கேட்டுக்கொண்டு நிற்கின்றனர். திராவிட இயக்கங்கள் இங்கு உள்ளன. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை. என்றாவது அவர்களைச் சில கூட்டங்களில் கறுப்புச் சட்டைகளோடு பார்க்கலாம். ஒரு உண்மை என்னவென்றால் பலர் தாங்கள் கடைப்பிடிப்பது பார்ப்பனிய நடைமுறை என அறியாதவர்கள். அவர்கள் இந்தச் சடங்குகளைக் கடைப்பிடிப்பதையே தனித்தன்மையானது எனக் கருதுகின்றனர்.

மலேசியாவில் பார்ப்பனத்தன்மை நுழையும் விதங்களில் ஒன்றை எழுதப்படாத வரலாற்றிலிருந்து நினைவு கூறலாம் என நினைக்கிறேன். சஞ்சிக்கூலிகளாகத் தோட்டங்களுக்கு அழைத்துவரப்பட்ட தமிழர்களுக்கு முனியாண்டியே முக்கிய வழிபாட்டுச் சிறுதெய்வமாக இருந்தது. தோட்டங்கள் தோறும் முனியாண்டி கோயில்கள் இருந்தன. அக்கோயில்களில் நல்ல வசூலும் கிடைத்தது. பெருதெய்வங்களின் கோயில்களுக்குக் கிடைப்பதைவிட முனியாண்டிக்கு நல்ல வசூலானது. அக்காலக்கட்டத்தில் கோயில்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஐயர்கள் முனியாண்டி கோயில்களில் நுழைய ஒரு சூசகம் செய்தனர். அதன்படி தலித்துகளின் சாமிக்கு அவர்கள் பூசாரிகளாக முனியாண்டியின் சாதியை உயர்த்தினர். விளைவாக கருப்பாக இருந்த முனியாண்டி வெளுப்பாக்கப்பட்டு முனீஸ்வரனானார். சாதி உயர்த்தப்பட்ட முனீஸ்வரனுக்கு பூசை செய்ய ஐயர்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றனவா? அவை எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன?

என் திருமணம் அவ்வாறுதான் நடைபெற்றது. சாதி மறுப்பு என்பதைவிட தாலி மறுப்பு திருமணம். தாலியிலேயே சாதியின் அடையாளத்தை வைத்துள்ளான் தமிழன். உண்மையான சாதி மறுப்பு என்பது தாலியை மறுத்தால் மட்டுமே நடக்கும். அல்லது தனித்தனி அடையாளங்கள் அல்லாமல் அதன் வடிவத்தை எல்லோருக்கும் ஒன்றானதாக மாற்றவேண்டும். மற்றபடி சாதிய அடிப்படையில் இல்லாவிட்டாலும் கழுத்தில் ஏறியபின் தாலி தானே தன் சாதியைச் சொல்லும். இது அடுத்த அடுத்த தலைமுறைக்கும் தொடரும். அதன்விளைவாக காலாகாலத்துக்கும் சாதிய அடையாளத்தைச் சொல்லிலிருந்து அழிக்க முடியுமே தவிர அது ஒரு நுண் கிருமியாய் அதே காத்திரத்துடன் படர்ந்து பரவும். ஒரு சிலர் மட்டுமே அதற்காகத் தயாராக இருக்கின்றனர். மலேசியாவில் ஐயா பெரு.அ.தமிழ்மணி போன்றவர்கள் அக்கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்க தங்களாலான முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அதன் ஒரு வளர்ச்சி நிலையாக 2012 ஜனவரியில் மலேசியாவில் நடக்கவிருக்கும் பகுத்தறிவு மாநாட்டைச் சொல்லலாம்.

அம்மாநாடு குறித்துச் சொல்லுங்கள்?

சாதிச் சங்கங்கள் பெருக்கெடுக்கும் இக்காலத்தில் இம்மாநாடு நடத்தப்படுவது அவசியம் எனக் கருதுகிறேன். இம்மாநாட்டுக் குழுவில் என்னாலான எளிய பங்கினை வகிக்கிறேன். பெரு.அ.தமிழ்மணி அவர்களின் முயற்சியால் இந்த மாநாடு அனைத்துலக அளவில் அடுத்த வருடம் ஜனவரியில் 27,28.29 நாட்களில் கோலாலம்பூரில் நடைபெருகிறது. கூடினோம் கலைந்தோம் என இல்லாமல் இம்மாநாட்டின் மூலம் தொடர்ச்சியாக நாடு தழுவிய அளவில் பெரியார் கொள்கைகளை பரப்பும் திட்டங்கள் உண்டு.

தீண்டாமை அல்லது சாதியப் பாகுபாடு கடைப் பிடிக்கப்படுகிறதா? இல்லையெனில் ஏன்? ஆமென்றால் எப்படி?

தீண்டாமை என்பது இல்லை. ஆனால் சாதியப் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. எப்பொழுது பூனூல் போட்டவன்தான் கருவறைக்குச் செல்லலாம் என்பது வழக்கமாக இருக்கிறதோ அப்போதே சாதியப் பாகுபாடு இருக்கின்றது என்றுதானே அர்த்தம். அதோடு திருமணங்களிலும் இந்தச் சாதியப் பாகுபாடு கடைப் பிடிக்கப்படுகிறது. என் வயதுக்கே நான் பல காதல்கள் சாதியத்தால் பிரிந்ததைப் பார்க்கிறேன். திருமணம் என்று வந்தால் மட்டும் ‘நீங்க என்ன ஆளு’ என கேட்கும் அயோக்கியத்தனம் நிகழ்கிறது. இப்போது அது சாதி சங்கங்கள் உருவாகும் வரை வளர்ந்துள்ளது.

தோட்டங்களுக்குள் கல்வி பயிலவும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்கும், மருத்துவத்தேவைகளுக்கும் என்னவிதமான ஏற்பாடுகள் இருக்கின்றன?

தோட்டப்புறங்களில் தமிழர்கள் அதிகம் வெளியேறிவிட்ட நிலையில் இக்கேள்விக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல்படுகிறது. ஆயினும் இருக்கின்ற சில தோட்டங்களில் இன்னமும் தமிழ்ப் பள்ளிகள் சில குத்துயிரும் குலைஉயிருமாக இருக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை தோட்டப் பள்ளிகளில் குறைவு. ஆனால் ஆசிரியர்களின் சேவைகளில் எந்தக் குறையும் இல்லை. நேரில் பல தோட்டப் பள்ளிகளுக்குச் சென்று வந்த அனுபவத்தில் இதை கூறுகிறேன்.

மலேசியத் தமிழர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் அல்லது அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்று எவற்றை குறிப்பிட முடியும்?

அண்மையில் நடந்த கலை இலக்கிய விழா 3-ல் நான் இது குறித்துப் பேசினேன். மலேசியத் தமிழர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்குப் பலரும் பல காரணங்களைச் சொல்லும்போது என் பார்வையில் ஒன்றுதான்படுகிறது. அது தமிழகத்தில் அ.மார்க்ஸ், கோவை ஞானி, எஸ்.வி.ஆர் போலவோ இலங்கையில் கைலாசபதி, கா.சிவதம்பி போலவோ கலை, இலக்கிய, அரசியல் சூழலில் ஆக்ககரமான கருத்துகளை முன்வைக்கும் புத்திஜீவிகள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள் மையமாக்கப்படுவதில்லை. அப்படி அவர்கள் மையமாக்கப்படும் சூழலில் இருந்தாலும் அதிகாரம் அவர்களை விலைக்கு வாங்கி விடுகிறது.

இக்கருத்து பலரையும் தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கியது. ஆனால் நான் இப்போதும் இதைத்தான் சொல்கிறேன். சமூக, அரசியல் சூழலில் நிகழும் மாற்றங்களை விமர்சனக் கண்ணோடும் மாற்றுப் பார்வையோடும் உரையாடலைத் தொடங்கும் மைய சக்திகள் மூலமே ஆரோக்கியமான இளைஞர் குழுவை உருவாக்க முடியும். அதுவே ஒரு சமூகத்தின் சக்தியாக மாறும். முன்னெடுக்கவும் எதிர்க்கவும்.

தமிழகம் போலவோ இலங்கை போலவோ மலேசியாவில் ஆரம்பத் தமிழ் கல்வியின் தரம் ஆழமாக இல்லை என்றாலும் சிந்திப்பதற்கும் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கும் வளைந்து போகாத முதுகெலும்புகள் முதலில் இருந்தால் அதுவே மகிழ்ச்சி.

மற்றொரு விடயம் உண்டு. அது இங்கு இன்னமும் எஞ்சி இருக்கும் தமிழ்ப்பள்ளி குறித்தது. ஆயிரமாக இருந்த தமிழ்ப்பள்ளிகள் சுதந்திரத்திற்குப் பின் 888 ஆக மாறி இப்போது 523 ஆக இருக்கிறது. தமிழ்ப்பள்ளிகளே தமிழ் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள முக்கிய இடம். தோட்டத்துண்டாடலுக்குப் பிறகு சிதறடிக்கப்பட்ட தமிழர்கள் மீண்டும் மீண்டும் ஒன்றினையை தமிழ்ப்பள்ளிகளும் கோயில்களும் தேவையானதாக உள்ளன. அவற்றை இழக்காமல் இருக்க தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கவேண்டும். ஆனால் இன்றைய நிலை வேறு. தமிழ்ப்பள்ளி கூலிக்காரன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளாகிவிட்டன. மேட்டுக்குடி எண்ணம் கொண்ட தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை வேற்றுமொழிப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். மலேசியத் தமிழர்களுக்காகப் போராடியதாகச் சொல்லப்படும் கோ.சாரங்கபாணியாக இருக்கட்டும், இளைய தமிழவேள் என அழைக்கப்படும் ஆதி.குமணனாக இருக்கட்டும் இவர்கள் இருவருமே தங்கள் வாரிசுகளைத் தமிழ் தெரியாமல்தான் வளர்த்தனர். அதே போல மலேசியாவில் உள்ள தமிழ் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும்கூட தங்கள் பிள்ளைகளை மழைக்கும் தமிழ்ப்பள்ளிகள் பக்கம் ஒதுங்க அனுமதிப்பதில்லை. ஊரானிடமெல்லாம் தமிழ், இனம், மானம் என பேசும் இவர்கள் தங்கள் கொள்கைகளைத் தங்கள் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்வதில் தோல்விகண்டவர்கள். அல்லது மொழியை, தங்கள் அரசியல் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டவர்கள். தமிழ்ப்பள்ளிகளின் வசதியின்மையே அவர்களின் புறக்கணிப்புக்குக் காரணம் என பலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். சீனர்கள் இது போன்ற காரணங்களைச் சொல்வதே இல்லை. அரசாங்கத்தை அவர்கள் நம்புவதும் இல்லை. தங்கள் ஒற்றுமை மூலமாகவே தங்கள் பள்ளிகளை மிகப்பெரிய அளவில் நிர்மாணிக்கின்றனர். அந்த ஒற்றுமை உணர்வு தமிழர்களிடம் இல்லை. தமிழர் அடையாளமும் தமிழ் மொழியும் நிலைக்கத் தமிழ்ப்பள்ளிகளின் இருத்தலின் அவசியத்தை உடனடியாக உணர்த்த வேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கும் பிரதிநிதிப்பவர்களுக்கும் உண்டு.

தாய்நாட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று ஒரு நிலை வருமானால் திரும்பி வருவதற்கு இசைவான மனநிலை அங்குள்ளதா? அல்லது, இவ்வளவு காலமும் உழைத்து உருவாக்கிய இந்த நாட்டைவிட்டு நாங்கள் ஏன் வெளிறே வேண்டும் என்கிற உரிமையுணர்வு மேலோங்கியுள்ளதா?

இந்நாட்டில் (மலேசியாவில்) பிறந்த ஒவ்வொருவரும் தங்களை மலேசியர்கள் என்றே உணர்கின்றனர். மூத்த குடியினருக்கு இதற்கு மாற்றான எண்ணம் இருக்கலாம். இதை நான் என் மனநிலையின் அடிப்படையில் வைத்து சொல்கிறேன் என்றும் நீங்கள் கருதலாம். அதுவும் உண்மைதான். நான் தமிழகத்தை என் தாய்நாடாக எண்ணவில்லை. மலேசியா நான் பிறந்த மண். என் மூதாதையர்கள் உருவாக்கிய நிலம். இங்கு எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. இல்லை என்று சொல்பவனின் தாடைகளை 16 வயதிலிருந்து உடைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்சம் பக்குவம் வந்துவிட்டதால் எதிர்குரலை அதே காத்திரத்தோடு எழுப்ப வேண்டியுள்ளது. இது என் குரல் மட்டுமல்ல. மலேசியத் தமிழர்களின் குரலும் இவ்வாறுதான் ஒலிக்கும்.

உங்களுக்கு முந்தைய மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் பேச்சுக் களமும் பேசும் பொருளும் எவையாக இருந்தன?

தமிழகத்திலிருந்து இங்கு சஞ்சிக்கூலியாக வந்தவர்களின் படைப்பிலக்கியங்கள் பெரும்பாலும் தமிழக மனநிலையிலேயே நின்று பேசின. பின்னர் அவை தோட்டப்புற வாழ்வை ஒட்டி இருந்தன. இன்று மலேசியாவில் முக்கியமாகப் பேசப்படும் நாவல்களை எடுத்துப் பார்த்தால் அவை தோட்டப்புற வாழ்வு, ஜப்பானியர் ஆட்சி, பால்மரக்காடு போன்றவற்றையே வெவ்வேறு தொணியில் சொல்கின்றன என்பது புரியும்.

என் வாசிப்பில் மலேசிய வானம்பாடி காலத்தில் (1977 – 1987) எழுதப்பட்ட கவிதைகள் பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை. இக்கருத்தை என் வாசிப்பின் அடிப்படையில் கூறுகிறேன். அதற்குப் பின்பும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மூலமாக மலேசியாவில் வைரமுத்துவையும் மேத்தாவையும் உருவாக்க அதனை வழிநடத்தியவர்கள் துடித்தனர்.

அக்கால கட்டத்தில் வெளிவந்த கவிதை தொகுப்புகளாகட்டும், அவ்வப்போது நடந்த புதுக்கவிதை திறனாய்வில் பரிசு பெற்ற கவிதைகளாகட்டும் அவை பெரும்பாலுமே வைரமுத்து, மேத்தா பாதிப்புகளில் மட்டுமே உருவானவை.  வைரமுத்து ரக வார்த்தை ஜால கவிதைகள் ஏராளமாக பரிசுகளை வென்று குவித்ததோடு அவ்வாறு எழுதுபவர்களே முக்கிய கவிஞர்களாக மலேசியாவில் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். கவிதை குறித்து ஒரு மொத்தமான பார்வையில் கருத்தை முன்வைக்க பெரும் தொகுதிகள் இன்னும் வரவில்லை. அதனால் வானம்பாடிக்கு முந்தைய கவிதை முயற்சிகள் குறித்து கருத்து சொல்ல தயக்கமாக உள்ளது.

சிறுகதைகளில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நல்ல எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். மற்ற இலக்கிய வடிவங்கள் போல் இல்லாமல் சிறுகதைக்கு மலேசியத் தமிழர்கள் அதிகம் முக்கியத்துவம் தருவதாகவே படுகிறது. தமிழகத்திலிருந்து இங்கு பணியாற்ற வந்த கு.அழகிரிசாமி போன்றவர்கள் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி ஒரு மையமாக இருந்துள்ளனர். மலேசியச் சிறுகதைகள் அக, புறச் சிக்கல்களை அதிகம் பேசுகின்றன. ஒவ்வொரு கால கட்டத்திலும் சிலரது கதைகள் உலக வாசகர்களின் கவனத்தை எட்டியுள்ளன. அவ்வகையில் எம்.ஏ.இளஞ்செல்வன், மா.சண்முகசிவா, சீ.முத்துசாமி, ரெ.கார்த்திகேசு போன்றோரின் சிறுகதைகள் மலேசியாவுக்கும் வெளியிலும் பரிசுகளைப் பெற்றும் பரவலாக வாசிக்கப்பட்டும் உள்ளன. சை.பீர் முகம்மது மலேசியச் சிறுகதைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்த தொடக்கக்காலத்தில் பெரும்பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தொகுத்த ‘வேரும் வாழ்வும்’ எனும் மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு முக்கியமானது.

அவர்களிலிருந்து மாறுபட்டு எதை புதிதாகச் சொல்ல வேண்டுமென்று உங்கள் தலைமுறை எழுத வந்தது?

இளம் தலைமுறையின் பாய்ச்சல் முதலில் கவிதையில்தான் தொடங்கியது. நான், சிவாபெரியண்ணன், சிவம், சீ.அருண் அவ்வப்போது புதிய சிந்தனையில் கவிதை புனைந்து கொண்டிருக்க, அகிலன் வெளியிட்ட ‘மீட்பு’ (2005) என்ற கவிதை நூலும் அதன் பொருட்டு நிகழ்ந்த மனுஷ்ய புத்திரனின் வருகையும் கவிதை குறித்த புதிய தெளிவினைக் கொடுத்தது. அப்போது நாங்கள் தொடங்கியிருந்த ‘காதல்’ இதழ் மூலமாக நவீன கவிதை மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் ‘காதல்’ இதழ் மூலமாக மலேசிய அரசியல் சூழலையோ, சமகால வாழ்வையோ தீவிரமாகப் பேச முடியவில்லை எனலாம். அதன் மனம் பெரும்பாலும் தமிழகத்தைச் சார்ந்திருந்தது. தீவிர அரசியலோடு எதிர் அரசியல், மையத்தை உடைப்பது, புனிதங்களைக் கேள்விக்கு உள்ளாக்குவது போன்ற புனைவுகள் வல்லினத்தில் தொடங்கின. பல்வேறு இலக்கிய அரசியல் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் வல்லினத்தில் முன்னெடுக்கப்பட்டன. சமூக செயல்பாடுகளையும் எழுத்தாளர்களின் மனப்போக்கையும் வல்லினம் பாராபட்சமின்றி விமர்சித்தது. அதன் விளைவாக வல்லினம் தொடங்கும்போது உடன் இருந்த பலர் இன்று இல்லை. வல்லினத்தின் போக்கு அவர்களை அச்சமுற வைக்கிறது. இதை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. எதிர்ப்பார்ப்பதெல்லாம் ‘mediocre’ இதழையும் ‘mediocre’ எழுத்தாளர்களையும்தான்.
வல்லினத்தில் நாங்கள் ஏற்ற முயற்சிக்கும் அக்கினிக் குஞ்சு அவர்களை எப்போது வேண்டுமானாலும் பொசுக்கும் என அறிந்தவர்கள் மௌனமாகி விடுகின்றனர். வல்லினத்துடன் இணைந்திருந்தால் கிடைக்கக்கூடிய விருதுகள் கிடைக்காமல் போய்விடும் என அஞ்சும் எழுத்தாளர்கள் ஆசிரியர் குழுவிலிருந்து விலகி விடுகின்றனர். ஆனால் இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஆக்ககரமான படைப்புகளை எழுதவரும் புதிய எழுத்தாளர்கள் பலர் வல்லினத்தில் உருவாகிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி.

நாவல்களில் அவ்வாறான புதிய போக்குகள் எதுவும் இளம் எழுத்தாளர்களிடையே நிகழவில்லை. கே.பாலமுருகனின் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எனும் நாவல் தோட்டத்திலிருந்து பட்டணம் பெயரும் வாழ்வை பேசுவதாகக் கேள்விப்பட்டேன். இன்னும் அந்நாவல் விற்பனைக்கு வரவில்லை. வாசித்துவிட்டுதான் சொல்லவேண்டும். சிறுகதைகளில் மஹாத்மன், பாலமுருகன், யுவராஜன் போன்றோர் புதிய முறையில் கதை சொல்லத் தொடங்கியுள்ளனர். இன்னும் பலர் புதிதாக வருவர் என்ற நம்பிக்கை உள்ளது.

படைப்பிலக்கியங்களுக்கான விமர்சனப் போக்கு எவ்வாறு உள்ளது?

மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. மலேசியாவில் மிக அபத்தமான ஒரு விமர்சனப் போக்கு உண்டு. அதாவது ஒருவர் நெடுங்காலம் எழுதிவிட்டால் அவர் எழுத்து நிச்சயமாக நல்ல இலக்கியமாகத்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்து பெரிய அங்கீகாரமெல்லாம் கொடுத்து விடுவார்கள். மீண்டும் மீண்டும் அவர் படைப்பிலக்கியம் முக்கியமானதாக நிறுத்தப்பட்டு விருதெல்லாம் கிடைக்கும். வேறெங்கும் இவ்வாறான கூத்து நடக்குமா எனத் தெரியவில்லை. அதேபோல ஒருவர் ஒரு இலக்கியத் துறையில் சிறந்திருந்தால் அவரது ஏனைய இலக்கிய முயற்சிகளும் முக்கியமானதாக முடிவாகிவிடும். பின்னர் அவர் மலேசியாவின் மிக முக்கிய திறனாய்வாளராகி விடுவார்.

காலம் காலமாக இந்த அபத்த நாடகம் நடந்து வருகிறது. எம்.ஏ.இளஞ்செல்வன் மலேசியாவில் சில நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆனால் அவரது நாவல்கள் வெறும் வாசகரின் மலிவான ரசனையைத் தூண்டும் பிரதிகள்தான். மலேசியாவில் புதுக்கவிதை தோற்றத்துக்கு அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. இந்த ஆளுமைகள் எல்லாம் சேர்ந்து அவர் நாவல்கள் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

அதேபோல ரெ.கார்த்திகேசு. அநேகமான ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள் (‘அந்திம காலம்’ பரவாயில்லை) வெறும் ஜனரஞ்சகப் பிரதிகள்தான். அவர் ஒரு பேராசிரியராக இருக்கின்ற காரணத்தாலும் சில நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார் என்பதாலும் அவர் ஆளுமை ஊதி பெரிதாகப்பட்டு அவர் நாவல்கள் மலேசியாவில் கொண்டாடப்படுகின்றன. அவரே இங்கு நடக்கும் நாவல் போட்டிக்கு நடுவராகவும் இருக்கிறார்.

ஆகக் கடைசியாக நடந்த அபத்த நாடகம் கோ.முனியாண்டி என்பவருடையது. 400 பக்கத்துக்கு அவரின் முதல் நாவல் வெளியாகியுள்ளது. அதை செறிவு செய்து எடுத்தால்கூட ஒரு கட்டுரை தொகுப்பாக வருமே தவிர நாவலாக இருக்காது. ஆனால் அவர் ஐம்பது ஆண்டு காலமாக ஒரு நாளிதழில் பணியாற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அது மிகச் சிறந்த நாவலாக பத்திரிகைகள் எவ்வித இலக்கிய வாசிப்பும் இன்றி பதிவிடுகின்றன.

நான் தொடர்ந்து இந்த அபத்தநிலை குறித்து எழுதியபடிதான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்து ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள் முக்கியமான இலக்கியப் பிரதிகள் அல்ல. அவை மசாலா சினிமா தனமானவை என முதலில் சொன்னவன் நான்தான். இவரது முதல் நாவலான வானத்து வேலிகள் 1980-இல் வெளியாகியுள்ளது. அதாவது நான் பிறப்பதற்கு முன்பே. அதன் தரம் குறித்து பேச மலேசியாவில் 29 வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதுதான் வருத்தம்.

கோ.முனியாண்டி நாவல் குறித்து நான் வைத்த விமர்சனத்துக்கு அவர், தான் ஐம்பது ஆண்டு காலமாக எழுதுவதாகவும், விடுதலைப் புலிகளுக்கு மலேசியாவிலிருந்து உதவியதாகவும், ஐம்பதுக்கும் மேல் பிற எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளை வெற்றிகரமாகச் செய்ததாகவும், இன்னும் என்னென்னவோ தகுதிகளைச் சொல்லி ஒரு எதிர்வினையாற்றினார். இவ்வாறுதான் ஒவ்வொரு எழுத்தாளர்களும் தங்கள் ஆளுமையை பூதாகரமாக்க அதை செய்தேன், இதை செய்தேன் எனக் கூறி படைப்பிலக்கியத்தின் தரத்தை அவர்கள் வீங்கிய சொற்களின் மூலம் அதிகப்படுத்த முனைகின்றனர். இனி இதுபோல நடக்க அனுமதிக்கக்கூடாது என நினைக்கிறேன். மலேசியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பிரதியையும் மறுவாசிப்பு செய்து அதற்கேற்ற இடத்தில் அதை நிறுத்த வேண்டியுள்ளது. அதேபோல மறைந்திருக்கும் நல்ல இலக்கியங்களை அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.

இச்செயல்பாட்டின் அடிப்படைக் காரணம் என்ன?

ஒருதரம் ஜெயமோகன் மலேசியா வந்திருந்தபோது மலேசியப் படைப்பிலக்கியம் குறித்த தன் கருத்தைக் கூறுகையில் அவை பலவீனமாக இருக்கின்றது என்றார். உடனே மலேசிய எழுத்தாளர்கள் பலர் கொதித்தனர். பல நல்ல படைப்புகள் இருக்கின்றன என்றனர். ஜெயமோகன் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் மலேசியா வரும் பல தீவிரமான எழுத்தாளர்கள் அவ்வாறு சொல்லக் காரணம் என்ன? முதலில் தமிழகத்திலோ அல்லது மலேசியாவிற்கு வெளியில் உள்ள எழுத்தாளர்கள் மத்தியிலோ கொண்டு செல்லப்படும் இலக்கியங்கள் எப்படிப்பட்டவை?

தமிழகத்தில் நடப்பதுபோன்ற பிரதிகள் மீதான விமர்சனங்கள் இல்லாதபட்சத்தில் வெறும் குப்பைகள் மட்டுமே அவர்கள் பார்வையின் முன் குவிக்கப்படுகின்றன. முதலில் மலேசியாவில் எழுதப்பட்ட படைப்பிலக்கியங்கல் மீது ஒரு மீள் வாசிப்பு நடந்து தரமான பிரதிகள் குறித்த தேர்வு இருக்குமாயின் அதன் அடிப்படையில் நாம் விவாதிக்க முடியும். எழுதுவதெல்லாம் இலக்கியமாகவும், அச்சானதெல்லாம் விருதுக்குத் தகுந்த பிரதியாகவும் ஆகுமெனில் எவ்வகையிலும் மலேசியத் தமிழ் இலக்கியத்தை தனித்து அடையாளம் காட்ட முடியாது. மாறாக அவை தமிழக ஜனரஞ்சக வரிசையில் மிக இயல்பாய் இணைந்து கொள்ளும்.

ஆனால் அவ்வாறான தீவிர வாசிப்பையும், அதைத் தொடர்ந்த விமர்சனத்தைச் செய்ய, அதற்கான உழைப்பைத் தர இங்கு எவரும் தயாராக இல்லை. மலேசியாவில் அனேக படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை முன்னிறுத்தவே காலம் முழுதும் உழைக்கின்றனர். ஒட்டுமொத்தமான தீவிர வாசிப்பில் குறிப்பிட்ட சில பிரதிகளை முதன்மைப்படுத்தியதில்லை. இங்கு நான் பேராசிரியர்களை கணக்கில் கொள்ளவில்லை. அவர்களின் இலக்கிய கருத்துகளை எந்தக் காலத்திலும் கவனத்தில்கொள்ள வேண்டியதில்லை. தீவிர எழுத்தாளர்களாய் தங்களை வரித்துக் கொள்பவர்களின் நிலைபாடுதான் கவனத்துக்குரியது. இந்நிலையில் நான் தொடர்ந்து மலேசிய நாவல்கள் குறித்து விமர்சிப்பதை ஒரு இலக்கியப் போக்கின் தேவையாகக் கருதி செய்கிறேன்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசிய இலக்கியத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்த முன்னெடுக்கும் செயல்பாடுகள் குறித்து கூறுங்கள். அம்முயற்சிகள் எந்த வகையில் பலனளித்துள்ளன?

தமிழகத்து எழுத்தாளர்களை ஏமாற்றும் செயல்பாடாகவே நான் எழுத்தாளர் சங்கம் தமிழகத்துக்கு அழைத்துச் செல்லும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் கூட்டத்தைப் பார்க்கிறேன். என்னால் இதை நிரூபிக்க முடியும். இலக்கியச் சுற்றுலா என்ற பெயரில் அழைத்து செல்லப்படுபவர்கள் பலர் படைப்பாளர்கள் அல்லர். அவர்களுக்கும் இலக்கியச் செயல்பாட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நான்கைந்து பேர் தற்கால இலக்கியப் போக்கை அறிந்தவர்கள். மற்றவர்கள் ஒரு சுற்றுலா போல தமிழக அரசு தரும் பணத்தில் இலவசமாக தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புகின்றனர். அரங்குகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஓரிருவர் மட்டுமே பதில் சொல்வதை வைத்தே அதை அடையாளம் காணலாம். எழுத்தாளர் சங்கம் தனக்கிருக்கும் வைரமுத்துவின் தொடர்பைக்கொண்டு கருணாநிதியின் தயவில் தமிழக அரசு பணத்தில் இவ்வாறான இலக்கிய மோசடி செய்கின்றது. அடுத்தமுறை அவர்கள் தமிழகம் வந்தால், ஒவ்வொருவராக நிறுத்தி அவர்களின் இலக்கிய அறிமுகம் குறித்துக் கேளுங்கள். அவர்கள் வாசிப்பைச் சோதியுங்கள். அதற்கு பின்பே அவர்களை உங்கள் அரங்குகளில் அனுமதியுங்கள். மக்கள் பணத்தை இப்படி பொழுது போக்கு குழுவுக்குச் செலவிடாதீர்கள்.

மலையகத்தமிழ் இலக்கியம் என்கிற புதிய வகைமையை இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் உருவாக்கியிருப்பதுபோல தமிழ் கலைஇலக்கியத்திற்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் கொடையாக எவற்றை முன்னிறுத்த முடியும்?

ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழக எழுத்தாளர்களை தங்கள் முன்மாதிரிகளாக மலேசிய எழுத்தாளர்கள் கொண்டிருப்பதால் அவ்வாறான தனித்துவமான படைப்பிலக்கியங்கள் குறைவு எனலாம். ஆனால் ரப்பர் காட்டின் பால்மனமிக்க சுவாசத்தை மலேசியத் தமிழ் இலக்கியத்தில்தான் வாசிக்க முடியும் என நம்புகிறேன்.

மலேசியாவில் தமிழல்லாத பிறமொழி இலக்கிய ஆக்கங்கள் எப்படியாக உள்ளன? இரண்டுக்குமிடையேயான ஊடாட்டமுள்ளதா?

சீன இலக்கியம் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் மலாய் இலக்கியத்தில் மிக நல்ல வளர்ச்சி உள்ளது. படைப்பிலக்கியம் மட்டுமல்லாமல் அவர்களின் கவனம் மேடை நாடகம், ஓவியம் என பல துறைகளிலும் பரவி இருக்கிறது. தவிர ‘டேவான் பாஹாசா’ எனும் அரசாங்க சார்புடைய அமைப்பின் மூலம் மலாய் இலக்கியம் மொழிபெயர்க்கப்பட்டும் பதிப்பிக்கப்பட்டும் பரந்த வாசகர்களைச் சென்று அடைகிறது. எனினும் இரண்டு இலக்கிய ஆக்கங்களுக்கும் இடையில் போதுமான தொடர்பு இல்லைதான். விமானம் ஏறி தமிழகம் போகும் எழுத்தாளர் சங்கத்துக்கு இதற்கெல்லாம் நேரமில்லை.

மலேசியத் தமிழர்களுக்கென செயல்படும் ஊடகங்கள் எவற்றைப் பேசுகின்றன? பேச மறப்பது எவற்றை?

மலேசியாவில் மூன்று நாளிதழ்கள் வருகின்றன. இரண்டு இந்திய வானொலிகள் உள்ளன. இது தவிர ‘வானவில்’ என்ற தனியார் தமிழ் அலைவரிசை இயங்குகிறது. இவை அனைத்தின் செயல்பாடுகளையும் மூன்றாகப் பிரிக்கலாம்.

ஒன்று அரசாங்க அடிமைகளாகச் செயல்படுவது. இது குறித்து அலட்டிக்கொள்ள ஒன்றும் இல்லை. உலகம் முழுதும் அவ்வாறு சில ஊடகங்கள் இருக்கவே செய்யும். ஆனால் இங்கு தனியார் ஊடகங்களும் ஏதோ அரசாங்க அடிவருடிகளாக பொய்யைப் பிரசுரிக்கும். மற்றது அரசியல் பேசுகிறோம் என்றும் போராடுகிறோம் என்றும் மலிவான அரசியலைப் பேசி இருக்கின்ற சிறுபான்மை இனத்தை இன்னும் பல்வேறு குழுக்களாகப் பிரிக்க முயல்பவை. இவற்றுக்கு எவ்வகையான சமூக அக்கறையும் கிடையாது. தாங்கள் சார்ந்த அரசியல்வாதியின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே இவை செயல்படும். கோபப்படும். போராட்டம் செய்யும். தலைவருக்கு எதிரி பத்திரிகைக்கும் எதிரி. ஒரு சந்தர்ப்பத்தில் தலைவர்கள் சமரசமாகிவிட்டால், பத்திரிகையும் நட்பாகிவிடும்.

மூன்றாவது முழுக்க முழுக்க ஜனரஞ்சகத்தை மட்டுமே பேசுபவை. இங்கே தமிழர்கள் வசிப்பிடங்கள் அழிக்கப்படும்போது அவ்வூடகங்கள் ‘ஆட்டம்நூறு வகை’ எனப் போட்டி நடத்தும்.

சுருங்கச் சொன்னால் தமிழர்களை எவ்வகையிலும் சிந்திக்க விடாமல் ஒரு கனவு உலகில் வைத்திருக்கவே இங்குள்ள ஊடகங்கள் உதவுகின்றன. தமிழ் அமைச்சர்களையும், தமிழ் இயக்கங்களையும் குறைசொல்வதில்தான் இவர்களின் தைரியமும் தார்மீகமும் இருக்கிறதே தவிர, எங்களை நாசுக்காக ஒடுக்கும் அரசை கேள்வி எழுப்ப எவ்வூடகத்துக்கும் குரல் இல்லை.

மலேசியத் தமிழ் இலக்கியத்தின்மீது தமிழகச் சூழலின் தாக்கம் எந்தளவிற்கானது?

மிக அதிகம். இன்னும் பல மூத்த எழுத்தாளர்கள் தங்களின் படைப்பிலக்கியங்களைத் தமிழக படைப்புலகின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். இந்தத் தாக்கமும் இரண்டு திக்கிலிருந்து நிகழ்கிறது. ஒன்று ஜனரஞ்சக இலக்கியம் மற்றது தீவிர இலக்கியம். ஜனரஞ்சக இலக்கியத்தின் தாக்கம் அதிகம். ரமணி சந்திரன், சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து போன்றோரை மட்டுமே வாசித்துவிட்டு இலக்கியத்தில் இயங்கும் பலரை நான் சந்தித்துள்ளேன். ஆச்சரியமாக இவர்கள் இங்குள்ள எழுத்தாளர் சங்கத்தால் பெரும் எழுத்தாளர்களாகப் போற்றப்பட்டு விருதெல்லாம் பெருகிறார்கள்.

தீவிர இலக்கியம் சார்ந்த வாசிப்பை இளம் தலைமுறையிடையே அதிகம் காண முடிகிறது. இன்னும் சொல்லப் போனால் தொடங்கும் போதே நல்ல இலக்கியங்களை வாசித்து முன்னகரும் இளம் எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியத்துக்கு உற்சாகம் தருகிறார்கள். ஆனால் இந்த வாசிப்பும் ஒரு சார்பானது என்றே நினைக்கிறேன். சில இதழ்கள் தங்கள் விற்பனைக்காக ஊதிக்காட்டும் எழுத்தாளர்களின் பிம்பங்களைக் கண்டு அவர்களே தமிழ் இலக்கியத்தின் பிதா மகன்கள் என பிதற்றித் திரியும் ஒரு கூட்டமும் இங்கு உண்டு. அவர்களை மீறி தீவிர அரசியல் பார்வையுடன், மாற்று விமர்சனங்களுடன், எதிர் அரசியலுடன் உரையாடும் எழுத்தாளர்களைப் பலரும் தவற விட்டுவிடுகின்றனர்.

தமிழகத் தாக்கம் இருப்பது இயல்பானது. இலங்கை இலக்கியம் மலேசியாவில் வாசிக்கக் கிடைக்காத நிலையில் தமிழக இலக்கியத்தையே பலரும் தங்கள் மேற்கோள்கள் போல பாவிக்கின்றனர். அவற்றின் சத்தான பகுதிகளை கிரகித்து மலேசிய சூழலுக்கொப்ப சிந்திக்கவும் செய்கின்றனர். சிலர் அவர்களின் நகல்களாகவும் பவனி வருகின்றனர். தமிழக எழுத்தாளர்களின் கருத்தையே தமது கருத்தாக எண்ணி, திணை மாற்றம் குறித்த எவ்வித பிரக்ஞையும் இன்றி அறிவை அடமானம் வைப்போர் அனேகமானோர்.

எழுத்து அல்லாத உங்களது பிற செயல்பாடுகள் எவை? அவ்வாறான செயல்பாடுகள் எதுவுமின்றி எழுதிக் கொண்டிருப்பது மட்டுமே போதுமானது என்கிற கருத்து பற்றி?

எழுத்து எனது மொத்த செயல்பாடுகளில் ஒரு பகுதிதான். 17 வயதிலிருந்தே இதழியல் சார்ந்து இயங்குகிறேன். இலக்கியம் சார்ந்த மாற்று முயற்சிகளுக்கு ஒரு களமாக ‘காதல்’ மற்றும் ‘வல்லினம்’ இதழ்களை உருவாக்கினேன். மாற்றுச் சிந்தனைகளை பதிவு செய்யவும் அதுபோன்ற சிந்தனை கொண்டவர்களை மலேசிய, சிங்கை சூழலில் ஒன்றினைக்கவுமே இதழியல் முயற்சிகளை முதலில் தொடங்கினேன். இன்று அது நண்பர் சிவா பெரியண்ணன் உதவியால் இணைய இதழாகத் தொடர்ந்து வருகிறது.

அதன் பின்னர் நூல் பதிப்பிக்கும் முயற்சிகளைத் தொடங்கினேன். நூல் பதிப்பித்து அதனை உலக எழுத்தாளர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் எண்ணம். இதற்காக எழுத்தாளர்களிடம் பணம் எதுவும் வாங்குவதில்லை. மாறாக ராயல்டி கொடுக்கிறேன். இது மலேசிய சூழலில் புதியது. ஆனால் இம்முறை பழக்கத்தில் வர வேண்டும் என்பதற்காகவும் நூல் பதிப்பிப்பது இலக்கியத்திற்கு செய்யும் பெரிய தியாகம்போல பாவனை காட்டும் சிலருக்கு பதில் சொல்லவுமே இம்முயற்சிகள்.

இதுதவிர ஓவியம், நிழற்படம், குறும்படங்கள், ஆவணப் படங்கள் போன்றவற்றிலும் வல்லினம் நண்பர்கள் துணையுடன் தொடர்ந்து எனது பங்களிப்பைச் செய்து வருகிறேன். அவ்வாறான கலைஞர்களுக்கு களம் அமைத்துத் தருகிறோம். அவர்களின் கலைப் படைப்புகளை மீண்டும் மீண்டும் பொதுக் களத்திற்குக் கொண்டுவந்து உரையாடல்களை நிகழ்த்துகிறோம். ஒவ்வொரு வருடமும் ‘கலை இலக்கிய விழா’ எனும் நிகழ்வின் மூலம் கலை இலக்கியச் செயல்பாடுகளைக் கூர்மையாக்குகிறோம். அவ்வகையில் இவ்வருடம் ‘வரலாற்றை மீட்டுணர்தல்’ எனும் நிகழ்வின் மூலம் மலேசியத் தமிழர்களின் வாழ்வை இலக்கியமாகப் படைத்தவர்களின் நூல்களை முன்னெடுத்து உரையாட அரங்கமைத்தோம்.

எழுதிக்கொண்டிருப்பது மட்டும் போதுமானதாக எனக்குப் படவில்லை. ஒவ்வொரு எழுத்தாளனும் ஓர் இயக்கமாகவே செயல்பட வேண்டும். அவனால் முடிந்த சிறிய நகர்ச்சியை தான் இயங்கும் கலை வடிவின் மீது செலுத்த வேண்டும். எனது செயல்பாடுகள் பரந்திருப்பது போல காட்சியளித்தாலும் ஒருவகையில் அவை அனைத்துமே மலேசிய கலை இலக்கியத்தை ஒரு மையமாக இறுகப் பற்றியவை.

பிறவகையான செயல்பாடுகள் எழுத்தியக்கத்தை உறிஞ்சி விடுகிறதென்று பொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டு உங்களுக்கு உடன்பாடானதா?

மற்றவை குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதழியல் முயற்சி அவ்வாறு செய்யக்கூடியது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது இதழியல் முயற்சியில் ஏற்படுகிற பணத் தேவை ஒரு வணிக மனதை நமக்குள் உருவாக்குகிறது. இலக்கியத்திற்கு அதுவும் சிற்றிதழ் சூழலுக்கு பணம் தர முன்வருபவர்கள் குறைவு. நிதி தேடுதல் மனதில் ஒரு பெரும் அலுப்பை எனக்கு ஏற்படுத்தியதுண்டு. இரண்டாவது காரணம், இதழியல் காரணமாக பணம் தேடும்போது மனம் நாம் இன்னமும் இலக்கிய சூழலுக்குள்ளே இருப்பதை உறுதி செய்கிறது.

எழுத முடியாமல் போனாலும் பிறர் எழுத்துகளை வெளிக்கொணர்வதை தனது விருப்பமாக்கிக் கொள்வதால் எழுதுவதற்கு மனம் மெனக்கெடுவதில்லை. ஒருவேளை இதழியலுக்காக இல்லாமல் பிற தேவைக்காக பணம் தேடும் மனநிலை படைப்பின் உற்சாகத்தைக் கெடுக்காது என நினைக்கிறேன். மற்றபடி இலக்கிய அரசியல் சூழலில் எதிர்வினையாற்றுவது, மாற்று கருத்துகளை பதிவிடுவது, சமூகம் நோக்கிய அரசியல் வெளிப்பாடுகள் எல்லாம் எழுத்தாளனுக்கு அவசியமானதுதான். அது அவனை மேலும் சமூகத்துடன் நெருக்கமாக்கும். உரையாடல் என்பது படைப்பிலக்கியத்தின் மூலமாக மட்டும்தான் நிகழவேண்டுமா என்ன?

இதுவரையான உங்களது எழுத்துக்கள் உங்களது சமூகத்தை எந்தளவுக்கு பேச முயன்றிருக்கின்றன? உங்களது எழுத்துக்களை உங்களது சமூகம் எவ்வகையாக எதிர்கொள்கிறது?

இதற்கு நான் பதில் சொல்வது கடினம் என நினைக்கிறேன். ஆனால் ஒன்றை என்னால் மிக உறுதியாகச் சொல்லமுடியும். சுரணையற்றிருந்த எழுத்தாளர்கள் கூட்டத்தில் அவை பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் உலுக்கி துருப்பிடித்த அவர்கள் பாகங்களை உதிர வைத்துள்ளது.

நீங்களும் உங்களையொத்த நண்பர்களும் முன்னெடுக்க விரும்பும் கலைஇலக்கியச் சூழல் எத்தகையதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

முதலில் புதிதாக இலக்கியத்தில் இயங்க வரும் தோழர்களுக்கு, நுண் அரசியல் பார்வை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். படைப்பிலக்கியங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அறிவுத் துறைகளை ஒட்டிய அறிமுகமும் எங்களுக்குத் தேவைப்படுகிறது. கோட்பாடுகள் சார்ந்த அறிவும் படைப்பினை புதிய திசைகளுக்கு நகர்த்தும் என நம்புகிறேன். இன்னமும் சொற்கள் தரும் கிலுகிலுப்புக்கு இங்கு அவசியம் இல்லை. எங்கள் வாழ்வின் பேசப்படாத பகுதிகள் பல உண்டு. அவற்றை படைப்பிலக்கியங்களில் பேச முனைய வேண்டும். சில விடயங்களை உரையாடலாக மாற்றவேண்டும். பலகாலமாக மௌனத்தால் ஒளித்துவைத்துள்ள பிற்போக்குத்தனங்களைத் திறந்த வெளியில் வைத்து கேள்விகள் எழுப்ப வேண்டும். புனிதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள சில ஆளுமைகள் செய்த சுரண்டல்களை மீண்டும் வரலாற்றிலிருந்து மீட்டு வந்து நிகழ்கால அரசியலில் பேச வேண்டும். இவை அனைத்திற்கும் தேவை விரிவான- பரந்த வாசிப்பு துல்லியமான அரசியல் பார்வை, சமரசமற்ற விமர்சனப்போக்கு. ஏதோ டீக்கடையில் அமர்ந்து வெற்று வசைகளை பொழிவது போலல்லாமல் அறிவுநிலையில் நின்று விவாதிக்கும் ஒரு இளையர் குழு. மீண்டும் மீண்டும் நான் சொல்ல வருவது ஒன்றுதான். தீவிர அரசியல் பார்வையை உருவாக்கிவிட்டாலே நல்ல இலக்கியங்கள் அந்த நிலத்துக்கானதாகப் பெருக்கெடுக்கும்.

நேர்காணல் : ஆதவன் தீட்சண்யா

(Visited 145 times, 1 visits today)

One thought on “அம்ருதா நேர்காணல் (பாகம் 2) :ஒவ்வொரு எழுத்தாளனும் ஓர் இயக்கமாகவே செயல்பட வேண்டும்.

  1. Very well analyzed.The caste system is there! I dont know by denying a Thali in wedding its going to leave us;only time has to tell us.Tamil radios has contributed significantly for the development of Tamil in some period of time.The Radios of Malaysia and Singapore has identified some potential writers namely Pa.Chandragandham,S.Vairakannu of Malaysia Pon.Sundararasu and Peru Neela Palivelan of Singapore.These writers made impact through their drama writings in radio,its a pity the writers of radio were not so much talked or recognized;should am not mistaken the late Re.Shanmugam has written more than 1000 radio dramas!Web magazines like Vallinam is really a eye opener to many.I hope the Editor and the writers of the magazine will continue their work for the new generation.

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *