சிற்றேடு இதழில் வந்த என் நேர்காணல் : சிங்கப்பூர் – மலேசிய இலக்கிய அடையாளமும் அதற்கான எதிர்ப்புகளும்!

சிற்றேடு

 

(இளைஞராகவும் துடிப்போடும் இருப்பதோடு அபாரமான இலக்கிய ஆற்றலும் உள்ள ம.நவீன் ‘காதல்’ மற்றும் ‘வல்லினம்’ என்ற இலக்கிய யுகமாற்றத்துக்குக் காரணமான இரண்டு இதழ்களை அவருடைய துணைவி மணிமொழியுடன் நடத்தியவர். மா,சண்முகசிவா இவரைக் கோபக்கார இளைஞர் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியன் நவீனை என்னோடு தொடர்புப்படுத்தினார். தமிழக இலக்கியத்தின் மொத்த வீச்சை அறிய சிங்கப்பூர், மலேசிய இலக்கியத்தையும் அறியவேண்டும். தமிழகத்தில் பலர் உதாசினப்படுத்தும் ‘வானம்பாடி’ இயக்கம் மலேசியாவில் ஒரு பாதிப்பைச் செலுத்தியது என்ற செய்தி கடந்த 50 ஆண்டு இலக்கிய வரலாற்றைத் தொகுத்துக் கொண்டிருக்கிற எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அங்குத் தமிழிலக்கியம் வளர்வதற்குப் பிரபலஸ்தர்களும் அதிகாரம் உள்ளவர்களும் தடையாக இருப்பது தெரிகிறது. அகில உலகத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சி என்பது அகில உலகத் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தது. தமிழர்கள் அழிவு தமிழர்களால்தான் என்பது இன்று ஈழத்தில் கருணா, டக்ளஸ் தேவாநனந்தா போன்றோர் மூலம் உலகத் தமிழர்களுக்குத் தெரிந்துள்ள சூழலில் சிங்கப்பூர் மற்றும் மலேசிய இலக்கிய இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும் எதிர்ப்பார்ப்புமுள்ள தமிழ் மாணவர்கள் பதற்றத்தோடு காத்திருக்கிறார்கள். இப்பின்னணிச் சிந்தனைகளுடன் நான் ம.நவீனிடம் மேலோட்டமாக நடத்திய நேர்காணல் இது –   தமிழவன்)

கேள்வி : மலேசியாவின் புது இலக்கியத்தை எவ்வாறு புரிந்து கொள்வது ?

பதில் : படைப்பாளி என்பவன் சுதந்திரமாக இருக்க வேண்டும். அவன் சிந்தனைகள் சுதந்திரமாக இருந்து படைப்பிலக்கிய வடிவத்தில் சுதந்திரம் இல்லையென்றால் ஒரு கட்டுக்குள் அடைக்கப்பட்டதாகவே இருக்கும். தொடக்க காலம் முதலே இந்தச் சுதந்திரமான இலக்கியச் செயல்பாட்டிற்காகப் புதுக்கவிதை திறனாய்வுகளை நாடு முழுதும் நடத்தினார்கள். அவ்வாறு ‘கடலோரக் கவிதைகள்’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்வு மரபுவாதிகளால் ‘கடலோரக் கழுதைகள்’ என விமர்சிக்கப்பட்டது. இவ்வாறான மரபு கிண்டல்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டே புதுக்கவிதையை ஒரு இயக்கமாகக் கொண்டு வந்தவர் எம்.ஏ.இளஞ்செல்வன். ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கெடா மாநிலத்தில் புதுக்கவிதை கருத்தரங்கு ஒன்றை முதன் முறையாகக்  நடத்தினார். அக்காலக் கட்டத்தில் அவரோடு இணங்கி புதுக்கவிதைக்காகச் செயல்பட்ட ஆதி.குமணன், அக்கினி, இராஜகுமாரன் போன்றவர்களால் ‘வானம்பாடி’ எனும் இதழ் 1972ல் முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் 1970ல் தொடங்கிய ‘வானம்பாடி’ என்ற  இதழ் இயக்கத்தின் பாதிப்பால் அந்தப் பெயரிலேயே பத்திரிகையை நிறுவி புதுக்கவிதைகளை முன்னெடுத்தனர். அப்போது இவர்களோடு சிங்கை இளங்கோவனும் இணைந்து செயல்பட்டார்.

கேள்வி : மலேசியாவில் வானம்பாடியில் இருந்த எழுத்தாளர்கள் யார்? என்ன செய்தார்கள் ?

பதில் : ஆதி.குமணன், இராஜகுமாரன், அக்கினி, இளங்கோவன், எம்.ஏ.இளஞ்செல்வன்  போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் ஆதி.குமணன் இப்போது உயிருடன் இல்லை. இளங்கோவன் நவீன மேடை நாடகங்களில் முக்கிய ஆளுமையாக இருக்கிறார். அக்கினி ஒரு தினசரியில் பணிப்புரிகிறார். ஆதி.இராஜகுமாரன் ‘நயனம்’ எனும் வார ஏட்டினை நடத்திவருகிறார்.  இவர்களில் ஆதி.இராஜகுமாரன் இளம் தலைமுறை எழுத்தாளர்களுடன் இணைந்து பயணிப்பது உற்சாகம் அளிக்கிறது. எங்களின் பல முயற்சிகளுக்கு அவரது ஆதரவு குறிப்பிடத்தக்கது.

கேள்வி : இவர்களின் செயல்பாடு எவ்வகையான பரிணாமத்தை எடுத்தது?

பதில் : ‘நவீன இலக்கிய களம்’ எனும் இயக்கம் பின்னர் செயல்பாடற்று போனது. இளஞ்செல்வன் தொடங்கிய புதுக்கவிதை திறனாய்வு ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால்’ தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. புதுக்கவிதையை மலினப்படுத்தியதில் எழுத்தாளர் சங்கத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் கவிதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல், கூட்டம் சேர்ப்பதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். கூட்டம் சேர்ப்பதற்காக அவர்களுக்குச் சினிமா அடையாளம் தேவைப்பட்டது. கைவசம் வைரமுத்து இருந்தார். அவர் ஒரு பாடலாசிரியர் எனும் அடையாளத்தை அகற்றி மாபெரும் கவியாக பிம்பத்தை ஊதி பெரிதாக்கினர். அவர் நூல்களை கூவி கூவி விற்றனர். இதன் மூலம் வானம்பாடிகளின் கூச்சலை காலம்தோறும் மாற்றமில்லாமல் நகர்த்தி வந்தனர். அதையே கவிதை என இளம் தலைமுறைக்குச் சொல்லினர். சினிமா வெளிச்சம் யாரிடமும் கேள்வியை எழுப்பவில்லை.

அதேபோல கவிதைகளை இளம் தலைமுறைக்கு அறிமுகம் செய்ய கவிஞரல்லாத, கல்விமான்களையே இவர்கள் பயன்படுத்தினர். கல்விமான்களும் உத்தி,  முரண், அங்கதம் என மீண்டும் தங்கள் புத்தகத்தில் கற்றதையே கூட்டத்தின் முன்னும் ஒப்புவிப்பார்கள். எதுகை மோனை, அடி, தொடை, சீரிலிருந்து தப்பியவன் இவர்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டும்.

இதற்கு எதிர்க்குரலாக நாங்கள் அப்போதே செயல்பட்டோம். ஒரு முறை புதுக்கவிதை திறனாய்வில், ஆத்மாநாம் கவிதை குறித்து பேச முயன்றேன்.

சிகரெட்டிலிருந்து

பிரிந்து செல்லும் புகைப்போல்தான் உறவுகள்…

என்ற எனக்குப் பிடித்த அவரின் கவிதையை வாசித்துக்காட்டும் போது ஒருவர் கேட்டார், ‘யார் அந்த ஆத்மாநாம்’ என்று. நானும் அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி அவர் தற்கொலை செய்துகொண்ட விடயத்தைக் கூறியதுதான் தாமதம். எப்படி ஒரு கவிஞன் தற்கொலை செய்துகொள்ள முடியும்? அவன் எப்படி உலகுக்கு புத்தி சொல்ல போகிறான் என ஒரே கூச்சல். என்னால் அவர்களுக்குப் புரியவைக்க முடியவில்லை. கவிதை என்பது மேடையில் வேகமாக முழக்கப்படக்கூடியதாகவும், கவிஞன் என்பவன் எல்லாவற்றையும் சாதிக்கும் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என விரும்பும் கூட்டத்துக்கு மத்தியில் கவிஞன் என்பவன் ஓர் எளிய மனிதன். அவன் வாழ்வினை நுட்பமாகப் பார்க்கக் கூடியவன்.அவன் தன் இயலாமையையும் பேசுவான் என்பதை எப்படி உணர வைப்பது? அதன் பின்னர் எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்வுகளுக்குச் செல்வதை விட்டுவிட்டேன். நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் மலினப்பட்டது வருத்தமாக இருந்தது. என்னைப் போலவே என் நண்பர்களுக்கும்.

கேள்வி : இந்நிலையை மாற்ற எவ்வகையான செயல்பாட்டில் இறங்கினீர்கள் ?

பதில் : ‘காதல்’ எனும் சிற்றிதழைத் தொடங்கினோம். இலக்கியம் இது போன்ற மனிதர்களால் கீழான நிலைக்கு எடுத்துச் செல்லப்படும் போது அதை எதிர்க்கொள்ள வழுவான சக்தி சிற்றிதழுக்குத் தானே உண்டு. உதிரிகளாக இருந்த எங்கள் குரல் இதழ் மூலம் குவிக்கப்பட்டது. ‘காதல்’ மூலம் இலக்கியத்தில் தீவிரமான சிந்தனை கொண்ட நண்பர்களை இணைக்க முடிந்தது. கூட்டத்தில் எதிர்வினையாற்றும் போது எளிதாக மறுக்கப்பட்ட எங்கள் குரல், இதழ் மூலம் இயக்கமாகச் செயல்படத்தொடங்கியபோது கவனிக்கப்பட்டது. இவ்விதழ்  தொடக்கத்திற்கு காரணம் மூத்தப் பத்திரிகையாளர் பெரு.அ.தமிழ்மணி. அவ்விதழ் மூலமாகவே மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் போன்றோரை மலேசியாவுக்கு அழைத்து வந்தோம். அவர்களுடனான உரையாடல் எங்களுக்கு நவீன இலக்கியம் தொடர்பான அறிமுகத்தை வலுவாக்கியது.

குறிப்பாக மனுஷ்ய புத்திரனுடனான உரையாடல் கவிதைகள் தொடர்பான நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. அந்த உரையாடல்கள் மனதுக்கு நெருக்கமானவை. அவற்றை மனதில் அப்படியே சேமித்துவைத்துள்ளேன். அது 2005/2006 களில் நிகழ்ந்த உரையாடல். இப்போது நான் இதற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நேரம் மனுஷ்ய புத்திரன் தனது இலக்கிய நிகழ்வில், பதாகை வைக்கிறார். அதில் வைரமுத்துவை ‘கவிபேரரசு’ என விளிக்கிறார். எனவே நான் எங்கு மனுஷ்ய புத்திரன் என கூறினாலும் அதை 2006க்கு முன்பு என கருத்தில் கொள்ளவேண்டும்.

கேள்வி : எழுத்தாளர் சங்கத் தலைவர் மரபு சார்ந்தவரா?

பதில் : அவர் எதைச் சார்ந்தவரும் அல்ல. அதிகாரத்தைச் சார்ந்தவர். அதன் மூலம் தமிழகத்துக்குக் கூட்டம் கூட்டமாக எழுத்தாளர்களை அழைத்துச் செலவதாகக் கூறிக்கொள்கிறார். இவர் அழைத்துப்போகும் ஐந்து ஆறு பேரைத் தவிர மற்ற யாருக்கும் இலக்கியம் குறித்த பரிட்சயம் இருப்பதாக நான் நம்பவில்லை. பலமுறை அங்கு நடக்கும் கேள்வி பதில் அங்கத்தில் மண்ணைக் கவ்விய சம்பவத்தையெல்லாம் நான் கேள்விப்பட்டதுண்டு. அந்த பயணத்தில் கலந்துகொண்ட யாருடனும் இதுகுறித்து நான் விவாதிக்கத் தயார். அவர்களின் இலக்கியப் பரிட்சயத்தை, வாசிப்பு ஆழத்தை, நேரடி விவாதத்தின் மூலமே மிக எளிதாக அம்பலமாக்க முடியும். அவர்கள் மலேசிய இலக்கியத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதாகக் கூறி சில பல்கலைகழகங்களுக்கும், தமிழ் மன்றங்களுக்கும் சென்று ஏற்கனவே தயார் செய்யப்பட்டு; பலமுறை பல கூட்டங்களில் வாசிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை தயார் செய்யப்பட்ட ஆய்வாளர்கள் மூலம் வாசிக்கவைப்பார்கள். நன்கு கவனித்தால் பல ஆண்டுகளுக்கு அதே தலைப்பையும், அதை வாசிப்பவர் அதே ஆய்வையும் முன் வைப்பார். பாவம் அவர் தன் வாழ்வு மொத்தத்தையும் அந்த எளிய ஆய்வுக்காய் செலவளித்திருப்பார் போல.

இதை தவிர நான் தனிப்பட்ட முறையில் சில நாடுகளுக்கு பயணம் செய்கிறேன். அங்குள்ள எழுத்தாளர்களுடன் உரையாடுகிறேன். அவ்வாறான சந்திப்புகளில் எழுத்தாளர் ஷோபா சக்தியின் நட்பு எனக்கு மிக முக்கியமானது. என் பயணத்தை இன்னும் தீவிரப்படுத்தியது எனலாம்.

கேள்வி : மலேசிய இலக்கியத்தின் நிலை பற்றி தொடர்ந்து சொல்லுங்கள் ?

பதில் : சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். இங்கு இலக்கியத்தை வளர்ப்பதாகச் சொல்லும் இயக்கங்களுக்கும் அதன் தலைமை பீடத்தில் உள்ளவர்களுக்கும் வரலாற்றில் தங்கள் பெயர்களில் பொன் எழுத்துகளால் பொறிக்க பெருத்த ஆவல். மலாய் போன்றோ, சீனம் போன்றோ தமிழ் ஒரு பொருளாதார மொழியாக மலேசியாவில் இல்லாத சூழலில் அவர்களால் அதை வைத்து கொஞ்சம்  பணம் பண்ணவும், தமிழ் புழக்கத்தில் உள்ள பிரதேசங்களுக்கு கழிவு விலையில் பயணிக்கவும் தோதாக இருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக செத்தபின்பும் தமிழ் கூறு நல்லுலகம் இவர்கள் பெயர்களை கொண்டாட வேண்டும் என்பதே மிக முக்கியமான நோக்கம். குறைந்த படசம் கோ.சாரங்கபாணி போன்றோ துன்.சம்பந்தன் போன்றோ பாட நூல்களிலாவது வருவதற்கு போராடுகிறார்கள். அதற்கு முதலில் கூட்டம் சேர்க்க வேண்டும்.

கூட்டம் எங்கு சேரும்? என்பது அடுத்தக் கேள்வி அல்லவா.

எங்கள் ஊரில் லியோனி பட்டிமன்றத்திலும் அல்லது கண்ணதாசன் விழாவிலும் சேரும். அங்குதான் பாட்டெல்லாம் பாடி குஜால் படுத்துவார்கள். ஆக தீவிர இலக்கியம் பேசும்போது இந்தக் கூட்டம் சேர்க்க முடியுமா? என்பதுதான் இங்குள்ள சிக்கல். அதற்கும் வழிகள் வைத்துள்ளார்கள். கிடைத்த ஸ்பான்சர்களைக் கொண்டு விருதுகளை ஏற்படுத்தி அவர்களுக்குக் கூஜா தூக்கும் எழுத்தாளர்களுக்கு வழங்குவார்கள். இந்த விருதுகள் அவர்கள் கையில் உள்ள எலும்புத்துண்டுகள். இதற்கு யாரெல்லாம் விலை போவான் ? யார் அங்கொரு காலும் இங்கொரு காலும் வைத்துள்ளான் ? என ஆராய்ந்து இந்த எலும்புத்துண்டை வீசுவார்கள். கௌவியவனை அடுத்த இலக்கியச் சுற்றுலாவில் பார்க்கலாம். இதன் மூலம் எதிர்ப்புக்கான குரலை முழுக்க நசுக்கிவிட்டு தலைமை பீடத்தை எலும்பை தின்ற வாய் புகழ்பாடும். இந்தப் பதிலைப் படிப்பவர்கள் , ‘இதெல்லாம் எங்கும் உள்ள நிலைதானே’ எனலாம். எனக்கும் புரிகிறது. பெரும்பான்மை இனமாக உள்ள தமிழகத்தோடு இச்சூழலை ஒப்பிடவே முடியாது. ஒரு சிறுபான்மை இனமாக தமிழர்கள் வாழும் மலேசியாவில் கொம்பை சீவுகிறேன் என மொண்ணைப் படுத்துபவனை மன்னிக்கவே முடியாது. அவ்வாறு செய்பவன்தான் கலை இலக்கியத்தின் வீரியத்தைக் கெடுப்பவன்; அதன் சாத்தியமான முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருப்பவன்.

நான் என் வாழ்நாளில் நல்ல இலக்கியப் படைப்புகளை வழங்காமல் போகலாம். நண்பர் சிலர் அறிவுருத்துவது போல இது போன்ற இயக்கச் செயல்பாட்டால் படைப்பிலக்கிய வெளிபாட்டிற்கான மன நிலையை இழக்கலாம். எனக்கு அதில் துளியும் கவலை இல்லை. நான் என் வாழ்நாளில் செய்ய நினைப்பதெல்லாம் தீவிர கலை இலக்கிய செயல்பாட்டிற்கான வெளியை மலேசியாவில் ஏற்படுத்துவது, அதற்குத் தடையாக இருக்கும் பகுதிகளை அடையாளம் காட்டுவதுமே. அதுதான் அடுத்த தலைமுறையினரின் பாய்ச்சலுக்கு உதவும்.

எங்களுக்கு எப்போதும் வழிகாட்டியாய் இருக்கின்ற எழுத்தாளர் சண்முகசிவா போன்றவர்களும் இதையே நினைக்கிறார்கள். ஆனால் இக்கருத்துகளை அவர்கள் இன்னும் பக்குவமாகவும் மனதை பாதிக்காத விதத்திலும் சொல்கிறார்கள். அதுவும் தேவைதான். நான் படைப்பிலக்கியம் செய்வதை விட , அது தீவிரமாக உருவாகும் ஒரு களத்தை, சிந்தனை போக்கை, சூழலை மலேசியாவில் உருவாக்குவதுதான் அவசியம் என கருதுகிறேன்.

கேள்வி : காதல், வல்லினம் போன்றவற்றில் சண்முகசிவாவின் பங்களிப்பு என்ன?

பதில் : காதலில் அவர் ஆலோசகராகச் செயல்பட்டார். அதில், அவரது எழுத்து ரீதியான பங்களிப்பு இல்லை. ஆனால் வல்லினத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. நான் சோர்ந்து போகும் தருணங்களில் தேடும்  கரங்கள் சண்முகசிவாவுடயது. அவருடன் எதையும் விவாதிக்க முடியும். கோபப்பட முடியும். அவரிடம் இருப்பது அணைக்கும் கைகள் மட்டுமே. எதிர்ப்புக் குரல் கொடுக்க நீ ஒருவன் போதாது இன்னும் நூறு பேரை உருவாக்குவோம்; அப்புறம் அது எளிதாக நடக்கும் என்பார். சொல்வதோடு மட்டும் அல்லாமல் ஆளுமைகளை உருவாக்கும் ஆற்றலும் அவரிடம் உண்டு.

கேள்வி : இலக்கிய விமர்சனங்களில் சண்முகசிவாவின் நிலை என்ன?

பதில் : சண்முகசிவாவின் நிலைபாடு இன்னும் ஆழமானது. ஆனால் அவர் தனது கருத்துகள் பலவற்றையும் இன்னும் எழுத்து ரீதியாக  பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறது. மேடைகளிலும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் அவரது விமர்சனங்கள் கூர்மையான வெளிப்பட்டுள்ளன. ஆனால் அவை கவனிக்கப்படாததாகவே உள்ளது. அல்லது கவனிக்கப்படாமல் இருப்பதற்காக மௌனம் சாதிக்கப்படுகிறது. பேசுவதை விட எழுத்தில் ஒன்றைப் பதிவு செய்தல் முக்கியமானது என்பதே என் நிலைபாடு. ஒருவேளை சண்முகசிவா வெளிப்படையாக மலேசிய படைப்பிலக்கியங்கள் குறித்து கருத்து சொல்வாறேயானால் அவரது பல நண்பர்கள் அடுத்த நாளே எதிரிகளாகிவிடுவார்கள். அதே சமயத்தில் அந்த விமர்சனம் மலேசிய இலக்கிய சூழலில் கவனிக்கப்படுவதாகவும், மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும். சண்முகசிவாவிடம் மட்டுமே அத்தகைய ஆளுமை உள்ளது. அவரது இலக்கியக் கருத்துகள் சட்டென வாசகனைச் சென்றடைவது அதிசயம்.

கேள்வி : தமிழ்நாட்டு சூழலும் மலேசிய சூழலும் எவ்வாறு மாறுபடுகின்றன?

பதில் : ஒப்பிடுவது கடினம். அங்குள்ள கல்வி சூழல், வாழ்க்கை சூழல், அரசியல் சூழல் இவற்றோடு மலேசியாவில் பல்லின மக்களோடு இணைந்து வாழும் மலேசியத் தமிழன் நிலை மாறுபட்டது. கவிஞர் சேரன், தமிழினி மாநாட்டில் இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளதை இங்கே நினைவு கூறுகிறேன். ஒவ்வொரு திணைக்குமான இலக்கியப் போக்குகளை அங்குள்ள மக்களின் வாழ்வைப் புரிந்து கொண்டே உள்வாங்க வேண்டும் என்ன சொல்லியிருப்பார். நியாயமான கருத்துதான். ஆனால், இதுவே இங்கு கடந்த காலங்களில் வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டு சாபமாகிவிட்டது.

முதலில் மூத்த எழுத்தாளர்கள் தமிழக இலக்கியங்களோடு இங்குள்ள இலக்கியங்களை ஒப்பிட விரும்புவதில்லை. அதற்கு மேற்சொன்ன காரணத்தைக்  காட்டுவார்கள். அது நியாயமானதும் கூட. இடுப்பை ஆட்டும் குழந்தையிடம் ‘அற்புதமாய் நடனம் ஆடுகிறாய்’ எனச் சொல்வது அப்போதைய குழந்தை மன வளர்ச்சிக்குச் சரியானதுதான். ஆனால் அதே அசைவை அக்குழந்தை வாழ்நாள் முழுக்க செய்யுமேயானால் அது நோய். குழந்தையின் வளர்ச்சியில் முழுமையில்லை.

விமர்சனத்தை ஏற்காத மனநிலைக்கு மலேசிய எழுத்தாளர்கள் வந்ததுதான் அதன் அசம்பாவிதம் . மலேசியாவில் விமர்சன மரபு என்பதே இதன் மூலம் இல்லாமல் போனது. எல்லா விமர்சனங்களும் தனிப்பட்ட சாடலாக எடுத்துக்கொள்ளப்பட்டன. கார்த்திகேசு போன்ற மீடியகோர் எழுத்தாளர்கள் மட்டுமே தங்கள் விமர்சனங்களை காத்திரம் இல்லாமல் செய்தனர்.  விமர்சனம் என்பதை ஒரு வடிகட்டல் நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். வடிகட்டல் என்ற வார்த்தை பலருக்கும் உவப்பில்லாததாக இருக்கலாம். ஆனால் மலேசியாவில் அதன் தேவை அதிகம்.

மலேசிய இலக்கிய வரலாற்றில் யாரும் எளிதில் புகுந்துகொள்வது சுலபம். தமிழகத்தில் ராஜேஸ் குமார், ரமணி சந்திரனை எங்கே வைக்க வேண்டும் என தெரியும். சுஜாதா, பாலகுமாரன் எழுத்துகளுக்கான இலக்கிய மரியாதை என்னவென்பதும் தெரியும். ஜெயகாந்தன்,  ஆதவன் தீட்சண்யாவின் இடம் என்ன என்பதையும் அறிந்திருப்பார்கள். வெகுமக்கள் மத்தியில் அந்த அறிமுகம் இல்லாவிட்டாலும் எழுத்தாளர்கள் மத்தியில் இதற்கான தெளிவு உண்டு. ஆனால் மலேசியாவில் எழுத்தாளர்களிடமும் அந்தத் தெளிவு இல்லாததே  கவலை. எழுதப்படுவது அனைத்தும் இலக்கியமாக இங்கு கொண்டாடப்படுகிறது. எழுதியது யார் என்பதே இங்குள்ளவர்களுக்குக் கவலை.

ஒரு சின்ன உதாரணம் சொல்லலாம். மலேசியாவில் 50 ஆண்டுகாலமாக எழுதும் கோ.முனியாண்டி என்பவர் ‘இராமனின் நிறங்கள்’ எனும் நாவலை எழுதி வெளியிட்டார். ஏறக்குறைய 400க்கும் மேல் பக்கம் கொண்ட அந்நாவல் பரபரப்பாக வெளியீடு கண்டு , அரசியல்வாதிகளால் போற்றப்பட்டு ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அந்நாவல் தொடக்கத்தில் ‘வல்லினத்தில்’ பதிப்பிக்க கோ.முனியாண்டி கேட்டுக்கொண்டிருந்தார். நாவலைச் செம்மைப் படுத்தும் செயல்பாட்டில் அவர் ஒத்துழையாமை இருந்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் அந்நாவல் குறித்து நான் ஒரு விமர்சனம் எழுதினேன். குறைந்த பட்சம் மலேசியாவின் 50வது சுதந்திர தின ஆண்டைக்கூடத் தவறாக எழுதியுள்ள அந்த எழுத்துக்குவியலைப் பற்றிய எதிர்வினைக்குக் கோ.முனியாண்டியிடம் வந்த பதில் இவ்வாறு தொடங்கியது…’குரங்குக்கு நிகரான நிறத்திலும் குணத்திலும் உள்ளவனான நவீன்…’.

அவரின் இந்தக் கோபத்துக்கான காரணத்தை இவ்வாறு புரிந்துகொள்ளலாம்.

ஒன்றாவது : மலேசியாவில் இலக்கிய விமர்சன சூழல் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளது. ஆனால் அதை தீவிரமாகத் தொடங்க வேண்டியுள்ளது.

இரண்டாவது : ஒரு படைப்பாளி ஒன்றை எழுதி வெளியிட்டவுடன், உடனே அவனது சர்வீஸைப் பொறுத்து அது கொண்டாடப்படுகிறது. எழுத்து ஒரு அனுபவம் சார்ந்ததாக கருதப்படும் மனநிலையை இது காட்டுகிறது. எழுத்தாளர்களும் ஏதோ எழுத்து என்பது அரசாங்க உத்தியோகம் போல, ‘என் சர்வீஸு என்ன தெரியுமா?’ என்பது போலவே பேச்சைத்தொடங்கி ஆண்டுகளையும், எழுதிய பிரதிகளின் எண்ணிக்கையையும் சொல்லி பயமுறுத்துகிறார்கள்.

மூன்றாவது : எழுத்தாளர்கள் எவ்வகையான இலக்கிய பரிட்சயமும் இல்லாத அரசியல்வாதிகளில் அங்கீகாரம் போதும் என நினைக்கிறார்கள். அதுவே ஊடகங்களில் அவர்கள் முகம் வர உதவும். அல்லது அறைகுறை வாசிப்பில் பிரதியைப் புகழும் நண்பர்களின் கருத்து அவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. அவர்கள் தங்கள் கனவிலிருந்து மீள விரும்புவதில்லை. கனவு காண்பது இன்பமானதுதானே.

ஆக, மலேசியாவில் எழுதப்பட்ட படைப்புகள் மீள் வாசிப்புக்குள்ளாக்கப்பட்டு விமர்சிக்கப்படுதல் அவசியம். அதன் மூலமே தரமான படைப்புகளை முன்னெடுக்க முடியும். அதுவே உலகம் முழுக்க விரிந்திருக்கும் தமிழ் வாசகர் மத்தியில் மலேசிய இலக்கியம் குறித்த ஓர் ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்.

கேள்வி : அப்படியானால், மலேசியாவில் இன்று விமர்சன போக்கின் நிலை வளர்ந்துள்ளது என சொல்லலாமா?

பதில் : வளர்ச்சி என சொல்வதைவிட தரமான வாசிப்பின் பின்புலத்தில் ஓர் இலக்கியப் பிரதி குறித்த தெளிவான கருத்தை சொல்லும் சூழல் இளைஞர்களிடம் உருவாகியுள்ளது. இன்றைக்கு எழுத வரும் இளம் எழுத்தாளர்கள் மிக இயல்பாகவே தீவிர வாசிப்பிற்குள் நுழைகிறார்கள். அந்நிலையிலிருந்து ஒரு படைப்பை உள்வாங்குகிறார்கள். அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.  அது குறித்து பேசுகிறார்கள். சுயவிமர்சனமும் செய்துகொள்கிறார்கள்.  இது தொடக்கம்தான். மலேசியாவில் சிற்றிதழ் சூழல் இதை சாத்தியப்படுத்தியது எனலாம்.

கேள்வி : வல்லினம், சிங்கப்பூரில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தியது ?

பதில் : முதலில் அங்குத் தீவிரமாக இயங்கும் எழுத்தாளர்களின் நட்பை ஏற்படுத்தியது. சிங்கை இளங்கோவனின் தொடர்பு கிடைத்தது இதில் மிக முக்கியமானது. அவர் குறித்து நிறைய கூறலாம். நான் வியக்கும் ஆளுமை. கொண்டாடப்பட வேண்டிய கலைஞன். அவரது மேடை நாடகங்களும் , மேடை நாடக அனுபவங்களும் மலேசிய சிங்கை இளைஞர்களிடம் இன்னும்  சென்று சேரவேண்டும்; சேர்க்கப்பட வேண்டும்.

சிங்கையில் பலரும் வல்லினத்தில் பங்களித்ததோடு, ஒரு குழுவினர் அதன் தாக்கத்தால் ‘நாம்’ எனும் இதழை உருவாக்கினர். அதே போல மலேசியாவில் கே.பாலமுருகனும் ‘அநங்கம்’ எனும் சிற்றிதழை நடத்தினார். மலாக்கா மாநிலத்தில் ஏ.தேவராஜன் ‘மௌனம்’ எனும் சிற்றிதழை நடத்திவருகிறார்.

யாரும் இதழை நடத்தலாம். இதழ் என்பது ஒரு ஜடப்பொருள். ஆனால் சிற்றிதழை நடத்துபவர்களுக்குக்  குறைந்த பட்சம் அரசியல் பார்வையும் சமரசமற்ற சிந்தனையும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை வணிக இதழாகவே கருத வேண்டியுள்ளது. நாம் வெளியிடும் கருத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதை நமது செயல்பாடுகள் மிக எளிதாகக் காட்டிவிடும். இலக்கியத்திற்குச் சேவை ஆற்றுவதாகத் தொடங்கப்பட்ட சிற்றிதழ் முயற்சிகள் இவ்வாறான சிக்கலில் உள்ளதை உணரமுடிகிறது.

‘மௌனம்’ சிற்றேடு கவிதையை முன்னெடுத்து வந்தபோது அதன் தீவிரத்தில் அதிகமும் மகிழ்ந்த நாங்கள், பின்னாளில் அதன் அபத்தச் செயல்பாட்டால் விமர்ச்சிக்கவும் வேண்டியுள்ளது. ‘எல்லாரும் நமக்கு வேண்டும்; யாரையும் பகைத்துக்கொள்ளாமல் சமத்தாக இதழ் நடத்தனும்’ என நினைப்பவர்கள் பேசாமல் சமரச சன்மார்க்க சங்கத்தில் இணைந்து சேவையாற்றலாம். அவர்களுக்கு சிற்றிதழ் தேவையில்லை. மனுஷ்ய புத்திரன் சொல்வது போல அதை ஓர் அடையாள அட்டையாக பயன்படுத்த வேண்டுமானால் உபயோகிக்கலாம்.

சந்திப்பு : தமிழவன்

 

 

 

 

 

(Visited 595 times, 1 visits today)

One thought on “சிற்றேடு இதழில் வந்த என் நேர்காணல் : சிங்கப்பூர் – மலேசிய இலக்கிய அடையாளமும் அதற்கான எதிர்ப்புகளும்!

  1. Parattukkal Navin.Very clearly highlighted the Malaysian situation.It is sad people like KO.Muniandy couldnt take criticism but in return he has to brand you as something!how to forgive this sort of 50 years writing heroes who has no ethics.As for Dr.Shanmugasiva I dont really see any impact on him in any may be thats his nature could be!The impact on cinema is very strong in Malaysia/Singapore context that contributes the crowd for Lyoni and Kannathasan Kalai Vilas.As for Illakkia Kalai Vilas one has to have the basic knowledge of Tamil and the interest for Illakkiam;what is the interest level among Tamils for Tamil language and its literature?
    It was the late Athi.Kumanan marketed for Mr.Vairamuthu.His Malaysian Nanban invited him for many of his functions and they praised each other at the most of the political functions in the name of Illakkia Vuraiyadal….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *