பொதுவாகவே எழுத்தாளர் சங்க செயல்பாடுகள் குறித்து என்னிடம் மாற்று கருத்துகள் உண்டு. தமிழ்ப்பள்ளிகள் தள்ளாடிக்கொண்டிருக்க சாமிவேலு ‘ஏய்ம்ஸ்’ பல்கலைகழகம் கட்டியது போல இலக்கிய செயல்பாடுகளில் நமது அடிப்படையான பலவீனங்களை களைய முயலாமலேயே அது தனது கால்களை அந்தரத்தில் வைத்துள்ளதாக எனக்குத் தோன்றுவதுண்டு.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எல்லா ரக எழுத்தாளர்களையும் சார்ந்து நிர்க்க நினைப்பதை தனது அறமாகக் கருதினாலும் அதனால் விளையும் பயன்கள் என்ன என்பதே நாம் முன்வைக்கின்ற முதல் கேள்வி.
மலேசிய இலக்கிய சூழலின் அடிப்படையான பலவீனம் என்பதை பின்வருமாறு பட்டியலிடலாம்:
– தமிழகம் போல ஓர் எழுத்தாளன்/பதிப்பகம் நூலை பதிப்பித்தப் பின் அதை நூலகத்தின் மூலம் நாடு முழுக்க விநியோகிக்க முடியாத நிலை.
– எழுத்தாளர்கள் உருவாவது ஒரு புறம் இருக்க, வாசகர்கள்/ வாசிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து போகும் சூழல்.
– எழுத்தாளன் இன்னமும் ஏழை முகத்துடன் தனது நூலை செல்வந்தர்களோ/ அரசியல்வாதிகளோ வெளியிட்டால்தான் போட்ட பணத்தை திருப்ப முடியும் என அவர்கள் முன் முதுகு வளையும் கேவலம்.
– இன்னமும் கல்வியாளர்களின் அளவு கோளின் படியே மலேசிய படைப்பிலக்கியங்கள் விமர்சிக்கப்படும் நிலை.
– இடைநிலை பள்ளிகளிலும், பல்கலை கழகங்களிலும் தமிழ் கற்கும் மாணவர்கள் அறவே இலக்கிய ரசனை இல்லாமல் இருப்பது/ அல்லது வேலைக்காக மட்டுமே இலக்கியம் கற்பது.
– தரமான படைப்புகள் இன்னமும் பரந்த வாசிப்புக்கு வராதது/ விமர்சிக்கப்படாதது.
இது மிக அடிப்படையாக நான் காணும் போதாமைகள். இவற்றில் சிலவற்றை எழுத்தாளர்கள் தத்தம் சுயம் சார்ந்து தீர்க்க முடிந்தாலும் சிலவற்றை இயக்கங்கள் மூலமே சாத்தியமாக்க முடியும். அவ்வாறான தீர்வை நோக்கிய முதல் அடியாகவே இன்றைய எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்வை பார்க்கத்தோன்றுகிறது.
மலேசிய தேசிய நூலகமும் – எழுத்தாளர் சங்கமும் இணைந்து இன்று நடத்திய ‘வாசிக்க வாருங்கள்’ எனும் நிகழ்வு நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. சில முக்கிய தொடக்கங்களை என்னால் இதில் அவதானிக்க முடிந்தது.
முதலாவது, எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை விற்பனை செய்ய இந்த நிகழ்வில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது புதுமை. அதுகுறித்த அறிவிப்புகள் முன்னமே பத்திரிகைகளில் வந்திருந்தன. ஐந்துக்கும் குறைவான கடைகளே இருந்தாலும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கூடும் இடங்களில் இதுபோன்ற வசதிகளை செய்துவைப்பது நூல்கள் சென்றடைய ஏதுவான வழியாகின்றது. இன்னும் திட்டமிட்டால், சென்னை புத்தகக் கண்காட்சி போல, குறைந்தது 50 கடைகளையாவது ஒரே இடத்தில் எழுப்பி வாசகர்கள் எழுத்தாளர்களிடம் நேரடியாக உரையாடும் ஒரு களமாக மாற்றலாம். தமிழகம் போல நம்மிடம் பதிப்பகங்கள் அதிகம் இல்லாத பட்சத்தில் எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்கும் ஒரு தினமாக அதை மாற்ற இயலும். இன்றைய இந்தத் தொடக்கம் இவ்வாறு வளர்ச்சியடையும் என நம்புவோம்.
இரண்டாவது, தேசிய நூலகத்தில் நிகழ்வினை ஏற்பாடு செய்தது. ஐ.எஸ்.பி.என் பதிவுக்குத் தேசிய நூலகத்திற்குச் செல்லும் போதெல்லாம் அங்குள்ள அதிகாரிகள் தமிழர்கள் நூலகத்தைப் பயன்படுத்துவதே குறைவு எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்நிலையில் தேசிய நூலகத்தை மையப்படுத்தி அங்கு பெரும் மாணவர் திரளை கூட்டியது ஒரு இடைவெளியை நீக்கியுள்ளது. இனி தொடர்ந்து தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடக்க இது தொடக்கமாகின்றது.
மூன்றாவதாக வாசிக்க வாருங்கள் என்ற நிகழ்வு. நான் பணியாற்றும் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாசிக்கும் வாரம் என ஏற்படுத்தி அதில் மாணவர்களைப் பள்ளியில் தங்க வைத்து புனைவுகளை வாசிக்கும் விதம் குறித்த பயிற்சிகள் வழங்கினோம். அதில் இளம் எழுத்தாளர்களான மணிமொழி, யுவராஜன், தோழி, தயாஜி, யோகி போன்றோரை அழைத்து மாணவர்களிடம் உரையாடும் நிகழ்வும் நடந்தது. எழுத்தாளன் எனும் ஒருவன் இந்த நாட்டில் இருக்கிறான் என மாணவர்களுக்கு அடையாளப் படுத்த வேண்டியுள்ளது. ஆனால் அது பள்ளி அளவிலான முயற்சியே. எழுத்தாளர் சங்கம் நடத்திய இந்நிகழ்வின் வழி இடைநிலைப் பள்ளி மாணவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். மேலும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் நாவலை விமர்சனம் செய்தவிதம் கல்வி ரீதியானது என்றாலும் தொடக்க முயற்சி என்பதால் அவர்கள் உள்வாங்கி வாசித்துள்ளார்கள் என்பதற்காகவே பாராட்டலாம்.
நான்காவது மலேசியாவில் பதிப்பிக்கப்படும் நூல்கள் தேசிய நூலகத்தால் வாங்கப்பட இந்நிகழ்வு வழி வகுத்துள்ளது. தகவல் மற்றும் தொலைதொடர்பு துணையமைச்சரான டத்தோ மெக்லின் டென்னிஸ் உரையில் அதற்கான சாத்தியங்கள் தெரிந்தன.
இவ்வாறு பல புதிய திறப்புக்கான முயற்சியாக இந்நிகழ்வு அமைந்தது. ஒருவேளை எழுத்தாளர் சங்கம் மூலம் ஊர் சுற்ற மட்டுமே இலக்கியம் பேசுபவர்களை கொஞ்ச காலம் மறந்து இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் புனைவு வாசிப்பு தொடர்பான பயிற்சியை தொடர்ந்து வழங்கினாலே ஆரோக்கியமான ஒரு தலைமுறை உருவாகும். பள்ளிக்கூடம் என்பது கல்வியைத் திணிக்கும் களமாகிவிட்டதொரு சூழலில் வெளியில் இருக்கும் அமைப்புகளும் தங்கள் பங்காக முறையாகத் திட்டமிட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்க்க பங்காற்ற வேண்டியுள்ளது. இப்போது பள்ளிகளில் பல்வேறு பொது அமைப்புகள் மூலம் நடக்கும் பட்டிமன்றம், அறிவியல் விழா, ஆங்கில முகாம் போன்றவை அதற்கு சிறந்த உதாரணம்.
சுருங்க சொல்வதென்றால், எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சிகளைவிட நல்ல இளம் வாசகர்களை உருவாக்கும் திட்டங்களை எழுத்தாளர் சங்கம் வகுத்து செயல்பட்டாலே மலேசிய இலக்கியம் புதிய பரிணாமம் எடுக்கும். நல்ல வாசகனே எழுத்தாளனாக உருவெடுப்பான். அதேபோல எழுத்தாளன் தான் உருவாக்கும் பிரதி பரந்த வாசகப் பரப்பை தடையில்லாமல் அடையும் சூழல் எழுந்தாலே படைப்பாளன் தன் சக்தி/கவனம் முழுவதையும் படைப்பிலேயே வைத்திருப்பான்.
இவ்விரு சாத்தியங்களையும் ஏற்படுத்த மலேசிய எழுத்தாளர் சங்கம் போன்ற வலுவான கட்டமைப்புள்ள இயக்கங்கள் செயல்பட வேண்டும் என்பதே ஆவல். அதற்கான அறிகுறி இந்நிகழ்வில் தெரிகிறது. எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.ராஜேந்திரனுக்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
மற்றபடி நிகழ்வின் சில அங்கம் குறித்த எதிர்வினை இருந்தாலும் , சங்கத்தின் ஆரோக்கியமான ஒரு முன்னெடுப்பின் முன் அவை பெரிதாகத் தெரியவில்லை. மனம் நிறைவாக இருக்கிறது.
வணக்கம்.
எதிர்காலச் சந்ததியினரை கருத்திற்கொண்டு எங்கள் பணிகளை ஆற்ற விழைந்து வருகிறோம்.
தங்களின் வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி.
அரசாங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மட்டும் புதிதல்ல. மலேசியத் தேசிய நூலகத்திற்கும் இது புது முயற்சிதான். இது நம் சங்கத்திற்கு ஒரு மைல்கல் நிகழ்ச்சியாகும்!
இனி தேசிய நூலகத்தில் தமிழ் வாழும் என்பதில் ஐயமில்லை!
நன்றி.
கே.எஸ்.செண்பகவள்ளி
இன்னமும் கல்வியாளர்களின் அளவு கோளின் படியே மலேசிய படைப்பிலக்கியங்கள் விமர்சிக்கப்படும் நிலை.// நவீன், இதுதான் ஒட்டுமொத்த இலக்கிய வளர்ச்சிக்கே சமாதி இங்கே. இன்னமும் படித்து பட்டம் வாங்கியவர் சொல்லிவிட்டால், அதுவே சிறந்த இலக்கியமாக பரிணமித்து விடுகிறது. வாழ்த்துகள். தொடருங்கள் உங்களின் சீரிய சிந்தனையை வரவேற்கிறோம்.