தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை

கடந்த சில வாரங்களாகப் பத்திரிகைகளின் முதன்மைச் செய்திகளில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் நிலைபாடு குறித்த விமர்சனங்கள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. எப்போதோ எழுந்திருக்க வேண்டிய போராட்டம். ஆங்காங்கு மிக மெல்லிய குமுறலாய் இருந்த குரல்கள் இக்காலக் கட்டத்தில் ஒன்றிணைந்துள்ளது வரவேற்கத்தக்கதே. தொடர்ச்சியாக அச்செய்திகளை கவனிப்பதில் பல மலேசியக் கலைஞர்களிடமிருந்து எழும் உள்ளார்ந்த கேள்வியில் முதன்மையாக ஒலிப்பது ஒன்றுதான். ‘ஏன் இன்னமும் மலேசியக் கலை வெளியை தமிழகக் கலைஞர்களைக் கொண்டு நிரப்புகிறார்கள்?’

இந்தக் கேள்வியை சினிமா மட்டும் இல்லாமல், இசை, இலக்கியம் என பல்வேறு சூழல்களிலும் நுழைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.

தமிழக ஆதிக்கம்

முதலில் மலேசியத் தமிழனின் மனம் இன்னமும் தமிழக பிசுபிசுப்பின் ஈரம் காயாமல் இருக்கிறது. இலக்கியம், இசைத்துறை, சினிமா என எல்லாவற்றிலும் தமிழகத் தாக்கம் படிந்தே உள்ளது. பாடல் திறன் போட்டியென்றால் எஸ்.பி.பாலசும்பரமணியம் குரலிலும், உன்னிகிருஷ்ணன் குரலிலும் பாடுவது தொடங்கி மலேசியத் திரைப்படங்கள் எனக் கூறிக்கொண்டு தமிழகக் குப்பை படங்களைக் காப்பி அடிப்பது வரை இன்னும் நாம் திருந்தியபாடில்லை. நகைச்சுவைக் கலைஞர்களாக மலேசியாவில் கூறிக்கொள்பவர்களும் ‘அவ்வ்வு…’ என வாயை கூர்மையாக்கி வடிவேலுவாக மாறிவிடுவதும் இல்லாவிட்டால் வாயைக் கோணலாக்கிக் கொண்டு விவேக் போல பேசிக்காட்டுவதுமாகவே தங்கள் காலத்தை ஓட்டுகின்றனர். டெலிமூவிகளைப் பார்த்தாலும் இதே நிலைதான். எங்காவது அருவியிலும், பூங்காவிலும் டூயட் வைத்தும் காலாவதியான தமிழ்ப்பட வசனங்களைக் காப்பியடித்துமே படத்தை முடித்துவிடுகின்றனர்.

இதழியல் சூழலிலும் இந்த அசிங்கம்தான். குமுதம், ஆனந்தவிகடன், குங்குமத்தைப் பிரதானமாக வைத்துக்கொண்டு வண்ணத்திரை, பாக்யா, துக்ளக்கைத் தூவி விட்டால் ஒரு மலேசிய இதழ் உருவாகிவிடுகிறது.

ஊன்றி கவனிக்க வேண்டிய நிலை இது. இதை ஒட்டி சில சுய கேள்விகள் எழுப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. அதற்கு நேர்மையாகவும் பதில் சொல்லவும் வேண்டியுள்ளது.

முதலில் நம்மிடம் தனித்தன்மை இல்லை என்பது போன்ற ஒரு விமர்சனம் பரவலாகவே உள்ளது. ‘நாமெல்லாம் தமிழகத்தின் தழுவல்கள்.’ எனச் சொல்லிக்கொள்வதில் பலருக்கு இருக்கும் இன்பம் அலாதியானது. இது உண்மைதானா?

இதற்கு பதிலாக நாம் சில உதாரணங்கள் வழியே பதில் தேட வேண்டியுள்ளது. குமுதம் ,விகடன் ரக இதழ்கள் வந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில்தான் செம்பருத்தி, காதல், வல்லினம், உங்கள் குரலும் வருகின்றன/ வந்தன. டெலிமூவி எனும் பெயரில் தமிழகக் குப்பைகளைத் தொலைக்காட்சியில் சுறுக்கித் தரும் சூழலில்தான் இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களிடமிருந்து அசலான மலேசிய வாழ்க்கை வரத்தொடங்கியுள்ளது. ஆக, ஒன்றை நாம் இங்குத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். பல ஆளுமைகள் இயங்கும் தமிழகத்திலேயே அசலான ஒரு வாழ்வை , கலை இலக்கிய வெளியில் சொல்ல போதமைகள் இருக்கும் போது மலேசியச் சூழலில் அதன் வளர்ச்சி மிக மெல்லவே தொடங்கும். அதற்கான எல்லா அறிகுறியும் இப்போது தெரிகிறது.

தனித்தன்மையைக் காட்டுவதில் ஏற்படும் மெதுநிலைக்குப் பல காரணங்கள் இருந்தாலும் வாய்ப்பில்லாமை மிக முக்கியக் காரணமாகச் சொல்லலாம். இதே இடத்தில், ‘வாய்ப்பு கொடுத்தா மட்டும் என்ன கிழிச்சீங்க?’ என்ற குரலும் தலைதூக்கவே தொடங்கும்.

மேடையில்லாத ஆட்டம்

இங்கு நான் மலாய் கலை உலகையும் ஒரு முன்மாதிரியாகப் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி திகைப்படைய வைக்கக் கூடியது. சோர்வடைய வைக்கும் காட்சியமைப்பிலிருந்து இன்று மலாய் இயக்குநர்கள் பல தரமான ஆக்கங்களைத் தருகிறார்கள். சில திரைப்படங்கள் விருதுகளையும் வென்றுள்ளன. வளர்ச்சி என்பது திடுமென ஏற்படுவதில்லை; ஒரு நீண்ட பயணத்தில் ஒன்றின் தோளின் மீது மற்றொன்றாக ஏறி நின்று உச்சங்களை நோக்கி செல்கின்றன. இந்த உச்சம் அடையும் முயற்சியில் அபத்தமான வெளிபாடுகளும் ஆரோக்கியமற்ற கலை படைப்பும் வரலாம். அதுதான் அதன் விதி. அவ்வாறுதான் வரலாறு நமக்கு போதிக்கிறது. இங்கு மலேசிய கலை படைப்பாளிகள் தங்கள் பயணங்களைத் தீவிரப்படுத்த போதுமான வாய்ப்புகள் இருந்தாலே பல்வேறு தரபட்ட கலைஞர்களும் படைப்புகளும் வெளிவந்திருக்கும். அவ்வாறான வாய்ப்புகள் இங்கு வழங்கப்படுகின்றதா?

இந்தக் கேள்விக்கு வானவில் வருகைக்கு முன்பு – பின்பு என பகுத்துக்கொள்வோம். என் நினைவில் தொடக்கத்தில் மலேசிய கலைஞர்கள் இயங்க அரசாங்க தொலைக்காட்சியான 2 மட்டுமே வாய்ப்பை வழங்கியிருந்தது. ‘நாதஸ்வரா’ எனும் நிகழ்ச்சி பின்னர் ‘நாடாரியா’ என்று பெயர் மாற்றப்பட்டு பல உள்ளூர் கலைஞர்கள் வாரத்தில் ஒருநாள் வந்து அதில் முகம் காட்டுவார்கள். அதோடு தீபாவளிக்கு அவர்கள் முகங்களைப் பார்க்கலாம். தேர்தல் ஆண்டாக இருந்தால் கூடுதலான நிகழ்ச்சிகள் கிடைக்கும். இந்த நிலையைப் போக்கவே ஆஸ்ட்ரோ அலைவரிசையில் ‘வானவில்’ இணைந்தது. இதோடு மலேசியத் தமிழ் கலைஞர்களுக்கு விடிவுதான் என மகிழ்ந்தபோது அதன் தலைவராக தமிழகத்திலிருந்து ராஜாமணி என்பவர் தலைவராக வந்தார். இது பலருக்கும் அதிருப்தியாக இருந்த சூழலில் ஒரு நல்ல தொடக்கத்தில் புகுந்து குழப்பி இருக்கும் சூழலை கெடுத்துக்கொள்ளாமல் அனைவரும் அமைதி காத்தனர். அந்த அமைதி 16 ஆண்டுகளாக நீடித்து இன்று பெரும் வெடிப்பாகக் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இரண்டு முக்கியமான கேள்விகளை இப்போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் சந்திக்கக் கூடும். முதலாவது, ராஜாமணிக்கு பதிலாக வேறு திறமை வாய்ந்தவர்கள் உள்ளனரா? இரண்டாவது, முழுக்க உள்ளூர் நிகழ்ச்சிகளைப் போடும் அளவுக்கு மலேசியப் படைப்பாளிகளிடம் ஆக்கங்கள் வெளிவரும் வாய்ப்புகள் உண்டா?

கேள்விகள்

இதில் முதல் கேள்விக்கு நாம் ம.இ.காவைதான் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. சாமிவேலு தனது பதவி விலகும் கடைசி காலத்தில் அதை நீட்டிக்க அவர் சொன்ன ஒரே காரணம் தகுதியானவரைத் தேடிக்கொண்டிருப்பதுதான். அவர் தகுதியானவரைத் தேடி தேடியே மாதங்கள் பல கடந்தன. ஒருவர் தான் தலைவராக இருக்கும் காலத்திலேயே அடுத்த ஆளுமையை உருவாக்காமல் ‘அப்படி யாரையும் இன்னும் பார்க்கவில்லையே’ என சால்ஜாப்பு சொல்வது அவர் தலைவராக இருக்க தகுதியற்றவர் என்பதையே காட்டுகிறது. 16 ஆண்டுகளாக தலைமை பொறுப்பில் இருக்கும் ராஜாமணி தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரை அடையாளம் கண்டிருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யத்தவறியிருந்தால் அப்பொறுப்பிலிருந்து விலகுவதுதான் நியாயம். தலைமை இடத்தை தகுந்தவர்கள் நிரப்புவார்கள்.

இரண்டாவது கேள்விக்கு இப்போராட்டத்தை முன்னெடுப்பவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். இருதரப்புக்குமான ஒரு கலந்துரையாடல் வழி போதுமான காலக்கட்டத்தை ஒதுக்கி, எல்லா தயார் நிலைகளுக்குப் பின்பு ராஜாமணி பதவி விலகுவதும்; புதிய தலைவர் பொறுப்பேற்பதும்; அதே சமயத்தில் உள்ளூர் நிகழ்ச்சிகள் முழுக்க வானவில்லை அலங்கரிப்பதுமாகத் தொடங்கினால் சிக்கல் இருக்காது என்றே தோன்றுகிறது. போராட்டத்தை முன்னெடுப்பவர்களை அணுகி கேட்டபோது, ராஜாமணி தரப்பிலிருந்து எந்த கலந்துரையாடலுக்கும் ஒத்துழைக்க வில்லை என்றே தெரிகிறது. எல்லா மேட்டுக்குடிகள் போலவும் ராஜாமணியும் கள்ள மௌனத்தை ஆயுதமாக தரித்துள்ளார்.

MICCAF  (Malaysian Indian Creative Content Action Force)

நிலமை இவ்வாறு இருக்க, அண்மையில் ‘MICCAF’ (Malaysian Indian Creative Content Action Force) எனும் அமைப்பின் மூலம் போரட்டத்தை முன்னெடுக்கும் தரப்பினர் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உள்ளூர் இயக்குநர்கள் / தயாரிப்பாளர் பலரும் தங்கள் மன ஆதங்கங்களை இந்நிகழ்வில் பகிர்ந்துகொண்டனர். ‘MICCAF’ அமைப்பைச் சார்ந்தவர்களும் இந்தக் கூட்டத்தில் தங்கள் நோக்கங்களை மிக உறுதியாக முன்வைத்தனர். அவர்கள் கோரிக்கைகளை இவ்வாறு பட்டியலிடலாம்.

-வானவில் உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அலைவரிசையாக மாற்றப்பட வேண்டும்.

-எழுபது சதவிகித படைப்புகள் உள்ளூர் ஆக்கங்களாக இருக்க வேண்டும். (இந்த சட்டம் வானவில் பதிவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.) இது படிபடியாக வளர்ந்து 2013ல் முழுக்கவே உள்ளூர் படைப்புகள் இடம்பெற வேண்டும்.

-அதே போல வெள்ளித்திரையில் வாரத்தில் 2 டெலிமூவிகள் இடம்பெறவேண்டும். அதற்கான பண ஒதுக்கீடு ஒன்றுக்குத் தலா ஒரு லட்சம் வழங்கப்பட வேண்டும்.

-ஒரு மலேசியத் தமிழர் வானவில்லுக்குத் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்.

MICCAF அமைப்பினர் மற்றும் உள்ளூர் தயாரிப்பாளர்கள் கருத்து

இந்தக்கூட்டத்தில் சில உள்ளூர் தயாரிப்பாளர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தனர். அவற்றையும் இங்கு பதிவு செய்வது சூழலை அறிய உதவும் என நம்புகிறேன். மேலும் இனி எழப்போகும் கேள்விகளுக்கும் அவர்கள் பேச்சில் பதில்கள் இருக்கலாம்.

சிவகாமி (MICCAF உறுப்பினர்)

மலேசிய இந்தியர்களுக்கு முழுமையான ஒரு தொலைகாட்சி அலைவரிசை தேவை. இந்த விவகாரத்தில் அமைச்சர் ரயிஸ் யாதிம் அக்கறைக்காட்டி செயல்படுகிறார் என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ராஜாமணி போய்விட்டால் யார் அவ்விடத்தை நிரப்புவார்கள் என்பது போன்ற கேள்வி சிறுபிள்ளைத்தனமானது. இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மாற்று இருக்கிறது. எங்களின் இந்த முயற்சிக்கு பலமாக பின்னனியில் பலர் இருக்கிறார்கள். நாம் தனியர்கள் அல்ல. மிக விரைவில் ஆஸ்ட்ரோவில் கலைஞர் தொலைக்காட்சியும், ராஜ் தொலைக்காட்சியும் இணையப்போகின்றன. அப்படி இருக்கையில் 9 தமிழ் அலைவரிசைகளைக்கொண்ட ஆஸ்ட்ரோ ஒரு அலைவரிசையை மலேசிய இந்தியர்களுக்கு வழங்குவதில் என்ன சிக்கல்? ஆஸ்ட்ரோவை நாம் ஒன்றும் இலவசமாகப் பெறவில்லை. பணம் செலுத்தி ஏன் நாம் தமிழ்நாட்டு குப்பை நாடகங்களைப் பார்க்க வேண்டும். இது ராஜாமணியுடனான தனிப்பட்ட விரோதம் அல்ல. அவ்வாறு இதை குறுகிப்பார்க்க வேண்டாம். உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டாத அவர், தலைமை பொறுப்பில் இருக்க தகுதியற்றவர்.

எஸ்.டி.பாலா (மேடை நாடக இயக்குனர், MICCAF உறுப்பினர்)

நம்மைப் பிரிப்பதற்கான முயற்சிகள் நடக்கலாம். நாம் நமது நிலைபாட்டில் உறுதியாக இருப்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டும். உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காத ஊடங்கங்களின் மேல் ஏற்பட்ட ஏமாற்றத்தினால்தான் ஏற்கனவே நான் நாடகத்துறையை விட்டு விளகுவதாக அறிவித்திருந்தேன். பல காலமாக நாம் தனிப்பட்ட முயற்சியிலேயே இத்துறையில் நிலைத்திருக்கிறோம். ஆனால் ஆஸ்ட்ரோ நம்மைக் கலைஞர்களாக மதிப்பதும் இல்லை. ஒரு உதாரணமாக எந்திரன் இசை வெளியீட்டு நிகழ்வில் யோகி-பி பாதுகாவளர்களால் வெளியில் நிறுத்தப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டார். உள்ளூர் கலைஞர்கள் என்றால் ராஜாமணிக்கு இழிவுபோல. இன்று நமக்கு பத்திரிகை தோழர்களும் ஆதரவாய் உள்ளனர். நமக்கு முழுமையான தொலைக்காட்சி அலைவரிசை வேண்டும். அதற்கு நமது ஒற்றுமையை ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும். நம்பிக்கைக்குறிய இடத்திலிருந்து கிடைத்த தகவல் படி , 650 மில்லியன் உள்ளூர் நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. நமக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தி நமது மக்களுக்காக நாமே நமது வாழ்வை கலை வடிவில் பதிவு செய்வோம். ராஜாமணி பதவி விலகாவிட்டால் ஆஸ்ட்ரோ முன் உண்ணாவிரதம் எடுப்போம்.

என். எஸ். கிருஷ்ணா (இயக்குனர், தயாரிப்பாளர், MICCAF உறுப்பினர்)

ராஜாமணி ஊரை பார்த்து ஓடத்தான் வேண்டும். வானவில் தொடங்கி 14 வருடத்திற்குப் பின்பே உள்ளூர் குறும்படங்கள் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சில போராட்டங்களுக்குப் பின்தான். அப்போது 27 நாடகங்களுக்கு இருந்த வாய்ப்பு இப்போது 13ஆக குறைந்துள்ளது. இந்த செயல்கள் உள்ளூர் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை குழைக்கின்றது. நவம்பர் 2011 தொடங்கி ராஜாமணியுடன் இதுதொடர்பாக பேச முயல்கிறோம். அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித அசைவும் இல்லை. நமது நேரங்களைக் கடத்தி நம்மை பலவீனப்படுத்துவதே அவர்கள் நோக்கம். எங்களுக்கு தொலைக்காட்சி 2ன் மேல் எந்தப்புகாரும் இல்லை. அந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு ஒன்றைரை மணி நேரத்தை உள்ளூர் படைப்புக்கு ஒதுக்குகிறார்கள். இன்று ஏறத்தாள 5000 பேர் இத்துறையில் இயங்கிகொண்டிருக்கிறார்கள். ஆஸ்ட்ரோ போன்ற நிறுவனங்கள் முறையான வாய்ப்புகளை வழங்கினால் பலர் முழுநேர கலைஞர்களாக மலேசியாவில் வளர முடியும். புதிய வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்த இயலும். ஆனால், வானவில் அதை திட்டமிட்டு தடுக்கும். உதாரணமாக குழந்தைகளுக்குத் தமிழ் போதிக்க நம்மூரிலேயே நிறைய பேர் இருக்க, ஏன் பேராசிரியர் நன்னனை அழைக்க வேண்டும். தமிழ்நாட்டுக்காரர் ஆஸ்ட்ரோ தமிழ் பிரிவுக்குத் தலைவராக இருக்கும் வரை இந்த அசம்பாவிதம் தொடரும். அவ்வப்போது கிள்ளித் தரப்படும் வாய்ப்புகள் எங்களுக்கு வேண்டாம். புதிய இளம் தலைமுறையினருக்கு வானவில் ஒரு களமாக மாறவேண்டும். சிங்கப்பூரில் இயங்கும் வசந்தம் சென்ட்ரல் எனும் அலைவரிசை ஒரு சில மணித்துளிகள் தினமும் உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மிக விரைவில் 24 மணி நேர உள்ளூர் இயக்கங்களை ஒளிபரப்பப் போகிறது. நமக்கு விடிவு எப்போது? மிக விரைவில் ராஜாமணியுடன் சந்திப்பு நடக்க உள்ளது. அப்போது நமது குரல் ஒன்றித்து ஒலிக்க வேண்டும்.

மணிவண்ணன்

வானவில் உருவாகும் போது அதன் சட்டவிதிபடி 70 சதவிகித உள்ளூர் படைப்புகள் இடம்பெற வேண்டும் என இருந்தது. அதை அவர்கள் நிறைவேற்றாத பட்சத்தில் அரசியல் ரீதியாகவும் இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

ஜஸ்மின் (MICCAF உறுப்பினர்)

டத்தின் இந்திராணியின் முயற்சியால்தான் வானவில் தொடங்கப்பட்டது. முன்னால் பிரதமர் மஹாதீருக்கும் ஆனந்த கிருஷ்ணனுக்கும் அவர் மனுதாக்கல் செய்தபின்பே அவ்வலைவரிசை தொடங்கியது. அரசாங்கத்திடம் நாம் சுரண்டப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆய்வுகள் நடக்கின்றன. இதை நாங்கள் முன்னெடுக்கும் முன்பு நன்கு ஆராய்ந்தபின்பே இறங்கினோம். இது உணர்ச்சிவசப்பட்டு போடும் கூச்சல் அல்ல. ஆதாரப்பூர்வமாவும் நாளைய தலைமுறைகாகவும் சேர்த்தே அறிவு தளத்தில் இதை நகர்த்துகிறோம்.

கானா (நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்)

இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவையும் வழங்குகிறேன். நான் ஏற்கனவே ஆஸ்ட்ரோவின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்பாக அரசாங்கத்திடம் புகார் கடிதம் அனுப்பியிருந்தேன். இன்று இந்த எதிர்ப்பலை கூட்டாக கிளம்பியுள்ளது வரவேற்கத்தக்கது.

தொலைக்காட்சி 3 (TV3) முன்னாள் அதிகாரி

AC Nielson மேற்கோளைக்கொண்டு சொல்வதானால் தொலைக்காட்சி 3ல் முன்பு இந்திய நேயர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன். இன்று சீரியல்களால் அவ்வெண்ணிக்கைக் குறைந்துள்ளது. அரசாங்கத்தின் பல திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், அமுலில் உள்ளதும் இந்தியர்களுக்குத் தெரியாமலேயே போவது இந்த சீரியல் தொடர்களால்தான்.

இறுதியாக…

இவ்வாறு பல்வேறு கலைத்துறை சார்ந்தவர்களிடமிருந்து கருத்துகள் வெளிப்பட்டன. மலேசியாவுக்கு மிக அருகில் இருக்கும் சிங்கையில் இலக்கியத்திற்கும் கலைத்துறைக்கும் போதுமான களங்கள் அரசாங்கத்தாலேயே வழங்கப்படுகின்றன. மலேசியத் தமிழன் மட்டுமே கலை இலக்கியங்களில் இன்னமும் சொந்தப் பணத்தைப் போட்டு அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் விற்கவும் மூச்சுத்திணருகிறான். அதிக பட்சம் போனால், வருடத்தில் ஒரு முறை வரும் தைப்பூசத்தில் கடைப்போட்டு கூவி கூவி விற்கும் சாபத்தை மட்டுமே மலேசியக் கலைஞன் பெருகிறான். அவன் உழைப்புக்கான அங்கீகாரத்தை ஊடகங்கள் வழங்காவிட்டாலும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சுரண்டாமல் இருந்தாலே போதுமானது.

கலைஞனை கௌரவமாக நடத்தாத சமுதாயம் முதிர்ச்சியற்றது. இந்தப் போராட்டம் தொடரவேண்டும். கலைஞனுக்கு சுதந்திரம் தேவை. சுதந்திரம் என்பது செயலால் மட்டுமின்றி சிந்தனையாலும் வருவது. தமிழகத்து இரவல் மூளையை மலேசியத் தமிழன் அணிந்து செயல்படும் வரையில் அவன் அடிமைதான். நாம் நமது வாழ்வை இன்னும் தீவிரமாகப் பதிவு செய்ய தொடர்ந்த முயற்சிகள் தேவை.

அதற்கான களம் வானவில்லாக இருக்கும் போது அதை கெஞ்சிப்பெற வேண்டியதில்லை. பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது….

பாதகம் செய்பவரை கண்டால்
பயம்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

தகவல் உதவி : சிவா பெரியண்ணன்

(Visited 121 times, 1 visits today)

3 thoughts on “தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை

  1. கலைஞர்கள் உருவாகிறார்கள் உயிரைக்கொடுத்து… ஆனால் ரசிகனை உருவாக்க முடியுமா? ஆஸ்ட்ரோ இல்லாத காலத்திலே, உள்ளூர் கலை வளர்ந்ததா? எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, நம்பியார் போல் பேசிதானே மேடையில் கலகலப்பூட்டினார்கள்.! எஸ்டேட்களில் தமிழ திரைப்படங்கள் தானே காட்டப்பட்டது!

    தனிநபர் ரசனை என்பது, அரசியல் போலவா? இங்கே ஓட்டு போடு, அங்கே ஓட்டு போடு என்று விலாவரியாக விளக்கம் கொடுத்த பிறகு, சொல்கிறபடி புரிந்துக்கொண்டு ஓட்டு போட்டு விட்டு வருவதற்கு!?

    கலஞர்களின் ஆதங்கம் புரிகிறது, அதற்காக ரசனை உணர்வை, ஒரு ரசிகன் விட்டுக்கொடுக்க முடியுமா? மற்றவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப்பொருத்தவரை, தமிழ் நாட்டு இலக்கியங்களும் தமிழ் நாட்டு திரைப்படங்களுமே அதிகம் கவர்கிறது.

    தயவுசெய்து, கலை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாடு, இனம் என்கிற பிரிவுக்குள் கொண்டுவரவேண்டாமே.! வல்லினம் நடத்திய, கலை இலக்கிய விழாவிலும், தமிழர்கள் ஒரு குடையின் கீழ் இணைவதே சிறப்பு, அவர்களை மலேசிய தமிழர்கள், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்கள், சிங்கை தமிழர்கள் என ஏன் பிரிக்கின்றீர்கள் என்றுதானே பேசப்பட்டது!? அந்த நிகழ்விற்கு, ஆதவன் தீட்சண்யா வரவில்லையென்றால், ஏன், நானே கூட வந்திருக்க மாட்டேனே.

    யாரையும் தரம் குறைப்பது நமது நோக்கமல்ல இங்கே ஆனால் கலை என்கிற வட்டதின் கீழ் இயங்கிக் கொண்டிருப்பனவற்றில் (இசை,சினிமா, இலக்கியம், ஓவியம்) ரசிகனை பிரம்பால் அடித்து வழிக்குக் கொண்டுவரமுடியாது என்பதுவே எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தொடர்ந்து போராடட்டும், கேட்பதெல்லாம் கிடைத்தால் மகிழ்ச்சியே ஆனால் இவர்களின் படைப்பை ரசிக்க ரசிகர்கள் பெருக வேண்டும் என்பதுவே எனது பிராத்தனை.

    பாதகம் செய்பவரை கண்டால்
    பயம்கொள்ளல் ஆகாது பாப்பா
    மோதி மிதித்துவிடு பாப்பா
    அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா// இது கூட அங்குள்ளதுதான்.

  2. This is I suppose the sentiments our people has for India.A good example would be the holy pilgrimage or the punitha yathirai they make to the temples.Also the Tamils in Malaysia are culturally and religiously attached to the Indian soil;I dont know whether DNA has any effect on this?
    The attachement on Kumudam,Anantha Vigadan,Kungumam or any other Tamil magazines is no longer at the bookshelves of any Malaysian Tamil families;this is a good sign but the TV serials somehow conquered the Malaysians mind and made them Indians in thoughts and action.The local Tamil News paper namely Malaysian Nanban may loose its business should the cinema section were to be scrapped.Rajini and Vijay has taken a very important place in our youths daily activities is another factor should be checked as well.
    Astro Vanavil is really a culprit!The Vanavils management has to be replaced and Malaysian image should be created! Instead of giving educational programs the company is throwing all kind of unrelated programs which has made the Malaysian viewers more to Tamil Nadu!
    There are ample local talents in our midst and we can, not instantly but gradually localize the programs in Malaysian context. Looking back the history of Tamil schools and Tamil news papers in Malaysia than Malaya it was entirely on Tamil Nadus syllabus and the news were mostly on India!
    Now we dont see that anymore as we have our own news and syllabus catering the local needs.We do see Agilan,Bhathrasarathy and Kalgi in the writings of our senior writers but not with our young writers may be we need more magazines like Vallinam for local circulation to promote Malaysinized writings.

    Thank You.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *