தமிழகத்து நாட்டாமைகள் – ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிக்கு பதில்

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி, ‘தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை’ எனும் எனது கட்டுரைக்கு எதிர்வினை எழுதியிருந்தார். அவருக்கு என் பதில்.

வணக்கம் ஸ்ரீவிஜி . தங்கள் கருத்துக்கு நன்றி. முதலில் உங்கள் வாசிப்பு இவ்வளவு மேலோட்டமானதாக இருப்பதைக் கண்டு வருந்துகிறேன். இதை உங்கள் அரசியல் பார்வையோடும் ஒப்பிடலாம்தான். என்ன செய்வது பல காலம் எழுதும் எழுத்தாளர்களுக்கே அது வாய்க்காத போது உங்களுக்கு இல்லாதது ஆச்சரியமில்லை. உங்களுக்குத் தெளிவு படுத்த வேண்டியது என் கடமை.

‘கலைஞர்கள் உருவாகிறார்கள் உயிரைக்கொடுத்து… ஆனால் ரசிகனை உருவாக்க முடியுமா? ஆஸ்ட்ரோ இல்லாத காலத்திலே, உள்ளூர் கலை வளர்ந்ததா? எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, நம்பியார் போல் பேசிதானே மேடையில் கலகலப்பூட்டினார்கள்.! எஸ்டேட்களில் தமிழ் திரைப்படங்கள் தானே காட்டப்பட்டது!’

ஆமாம் நீங்கள் சொல்வது மெய்தான். ஆனால், அப்போது உள்ளூர் தயாரிப்புகளைப் போட களம் இல்லாமல் இருந்தது. அசலான மலேசிய வாழ்வைச் சொல்லும் படைப்புகள் வராமல் இருந்தன. இப்போதும் ஒன்றும் பெரிதாக வந்துவிடவில்லைதான். ஆனால் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல்லாண்டு காலமாக திரைத்துரையில் புழங்குபவர்களே தமிழகத்தில் சொதப்பும் போது களம் இல்லாத நமது கலைஞர்களின் பலவீனம் ஆச்சரியமில்லை. இதை மாற்றியமைக்க தொடர்ச்சியான முயற்சிகள் வேண்டும். ஒரு கலைத்துறை எடுத்த எடுப்பிலேயே A விலிருந்து Nக்கு போவதில்லை. அது தொடர் நகர்ச்சி. ஒன்றின் தோள் மேல் மற்றொன்று ஏறியே அது வளரும். அந்தப் பரிணாமத்தில் விமர்சனங்கள், விவாதங்கள், எல்லாமுமே அதை வளர்ப்பதற்கான உரம்தான். இந்நிலையில் மலேசிய ஆக்கங்களை ஒளிபரப்புவதற்கான உருவாக்கப்பட்ட வானவில்லில் ஏன் தமிழக ஆக்கங்கள். மேலே நீங்கள் சொன்ன அம்சங்கள் மாறினால்தான் என்ன? இங்கு மற்றுமொரு விடயத்தை ஒட்டியும் விவாதிக்கலாம். ரசிகனை உருவாக்க முடியாது என்கிறீர்கள். முடியும் என்கிறேன் நான். வைரமுத்து, மேத்தாவை படித்த எத்தனையோ இளைஞர்களை நவீன கவிதை பக்கம் திருப்பியதுண்டு. சாண்டில்யனை மட்டுமே வாசித்தவர்கள் சாருவை வாசிப்பதுண்டு. எல்லாம் பயிற்சி. இசை கேட்பது. சினிமா பார்ப்பது. அவ்வாறு தீவிர தன்மையில் சென்ற பின்னர் அவன் மீண்டும் வணிக கலையை விரும்ப மாட்டான்.

‘தனிநபர் ரசனை என்பது, அரசியல் போலவா? இங்கே ஓட்டு போடு, அங்கே ஓட்டு போடு என்று விலாவரியாக விளக்கம் கொடுத்த பிறகு, சொல்கிறபடி புரிந்துக்கொண்டு ஓட்டு போட்டு விட்டு வருவதற்கு!?’

நீங்கள் பேசுவது கலை. நான் பேசுவது அரசியல். இதில் மலேசியத் தமிழர் பொருளாதார நிலை உள்ளது. இதன் மூலம் மலேசிய சினிமா துறை இன்னொரு தாவலை நிகழ்த்த முடியும். ஈரனிய சினிமா போலவும் லத்தின் அமெரிக்க சினிமா போலவும் நமது வாழ்வை இன்னும் ஆழமாக உலகமெங்கிலும் கொண்டு செல்ல முடியும். இதை ஒரு முழுநேர தொழிலாக வருங்கால சந்ததியினர் அமைத்துக்கொள்ள முடியும். இந்த அரசியல் மூலம் கலை வெளிப்பாடு சாத்தியம். இன்றைய போராட்டம் இன்றைக்கானதல்ல. வருங்கால சந்ததியனரின் வாய்ப்புகள் புதுப்பிக்கப்படும்.

‘கலைஞர்களின் ஆதங்கம் புரிகிறது, அதற்காக ரசனை உணர்வை, ஒரு ரசிகன் விட்டுக்கொடுக்க முடியுமா? மற்றவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப்பொருத்தவரை, தமிழ் நாட்டு இலக்கியங்களும் தமிழ் நாட்டு திரைப்படங்களுமே அதிகம் கவர்கிறது.’

தோழி, உங்களை யார் விட்டுக்கொடுக்கச் சொன்னது? நீங்கள் உங்கள் ரசனையை முழுமைப்படுத்த வேறு சேனல்களே இல்லையா? அல்லது, மலேசிய கலைஞர்களுக்காக ஒரு சேனல் தருவதால் உங்கள் ரசனைக்கு குறைச்சல் ஏற்படுகிறதா? இதில் முக்கியமான விசயம், உங்களை தமிழ் நாட்டு இலக்கியமும் திரைப்படமும் கவர்கிறது என்கிறீர்கள். அது உங்கள் கருத்துதான். உங்கள் ரசனைதான். இங்கு நான் சில கேள்விகள் கேட்கலாம். முதலில் தமிழக படைப்புகள்தான் கவர்கிறது என்றால் மலேசியப் படைப்புகளில் எத்தனை படித்தீர்கள்? எத்தனை நாவல்கள் படித்தீர்கள்? எத்தனை சிறுகதைகளைப் படித்தீர்கள்? அது குறித்து இதுவரை ஏதேனும் விமர்சனம் செய்துள்ளீர்களா? தமிழகப்படைப்பென்றால் உங்களை எந்தப் படைப்பு/ யார் படைப்பு கவர்கிறது? ஏன்? கேட்டால் ரசனை என்பீர்கள். அப்படி சொல்லி தப்பித்துக்கொள்ளலாம். நான் இதுவரை சில நாவல்களை ஒட்டி விமர்சனம் செய்துள்ளேன். மலேசிய நாவல்கள் அடங்கும். அது குறித்து மாற்று விமர்சனம் செய்கிறீர்களா? அவை தரமற்றவை எனச் சொல்ல உங்களிடம் எவ்வகையான உழைப்பு உண்டு? மலேசியாவில் மாற்று முயற்சிகள் செய்யும் கலைஞர்களின் ஆக்கங்களைப் பார்த்துள்ளீர்களா? அதன் சாதக பாதகங்களைப் பேச தயாரா? ‘மோசம்’, ‘நல்லா இல்ல’ எனும் ஒற்றை வரியைத் தவிர உங்களால் வேறெதுவும் விரிவாக பேச முடியுமா? முடியும் என்றால் நான் தயார். இன்றிலிருந்து மலேசிய இலக்கியம் குறித்து விவாதம் செய்வோம். என்னால் சர்வ நிச்சயமாக உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் வைக்கத் தகுந்த மலேசிய சிறுகதைகளைக் காட்ட முடியும். உங்களால் அதை இல்லை என மறுத்து ஏன் அது மோசமான கதை என எழுத முடியுமா? குறைந்த பட்சம் 5 நல்ல நாவல்களை என்னால் சுட்ட முடியும். அதை மறுத்து பேச தயாரா? தமிழக இலக்கியங்கள் உங்களைக் கவர்கிறதென்றால் எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை. எந்த படைப்பு. ஏன்? சும்மா போற போக்கில் மலேசியாவை மட்டம் என்றும் தமிழகம் சூப்பர் என்றும் சொல்லி புத்திஜீவிகள் போல காட்டிக்கொள்பவர்கள் வரிசையில் நீங்களும் இணைய நினைக்காதீர்கள் தோழி.

‘தயவுசெய்து, கலை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாடு, இனம் என்கிற பிரிவுக்குள் கொண்டுவரவேண்டாமே.! வல்லினம் நடத்திய, கலை இலக்கிய விழாவிலும், தமிழர்கள் ஒரு குடையின் கீழ் இணைவதே சிறப்பு, அவர்களை மலேசிய தமிழர்கள், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்கள், சிங்கை தமிழர்கள் என ஏன் பிரிக்கின்றீர்கள் என்றுதானே பேசப்பட்டது!? அந்த நிகழ்விற்கு, ஆதவன் தீட்சண்யா வரவில்லையென்றால், ஏன், நானே கூட வந்திருக்க மாட்டேனே.’

கலை என்ற விசயத்தில் நாடு, இனம் என்றுதான் பிரிக்க வேண்டியுள்ளது. காரணம் கலை வாழ்வைப் பேசுகிறது. எல்லா வாழ்வும் ஒன்றல்ல. தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மை தமிழர்களின் மனம் மலேசியாவில் உள்ள சிறுபான்மை தமிழ் மனதோடு ஒத்துப்போவதில்லை. இலக்கிய செயல்பாட்டில் ஆளுமைகளுடான உரையாடல் அவசியம். அவ்வாறு இருக்கையில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் வருவது சாத்தியமான விடயம்தான். நானும் மலேசிய இலக்கியம் குறித்து பேச லண்டன், சிங்கை சென்றுள்ளேன். அங்குச் சென்று பேசியது நமது நாட்டு படைப்பை ஒட்டிதான். தமிழகப் பயணங்களில், இலங்கை பயணங்களில் மலேசிய படைப்புகள் குறித்து பேசுகிறேன். அதே போல இங்கு வருபவர்கள் மலேசிய ஆக்கங்களை அறிந்து செல்கின்றனர். இது ஒரு வகை கருத்து பரிமாற்ற நிகழ்வு. இலங்கை தமிழன் மனம், மலேசிய தமிழன் மனம், தமிழகத் தமிழன் மனம் வெவ்வேறாவை. அது அரசியல், வாழ்வு, சமூக சிக்கலால மாறு பட்டுள்ளது. எனவே, ஒரு குடையின் கீழேல்லாம் எதையும் அடைக்க முடியாது. மற்றபடி வல்லினத்தில் எல்லா முயற்சிகளையும் மீறி நீங்கள் எதற்கு வந்தீர்கள் என்பது உங்கள் சிக்கல். உங்கள் தேர்வு. அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் ஒருவரை வைத்து அனைவரையும் எப்படி எடை போடுவது? அங்கு இருந்த வடையை சாப்பிடத்தான் வந்தேன் என்று சொல்பவர்களும் உண்டு. அதற்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது.

‘யாரையும் தரம் குறைப்பது நமது நோக்கமல்ல இங்கே ஆனால் கலை என்கிற வட்டதின் கீழ் இயங்கிக் கொண்டிருப்பனவற்றில் (இசை,சினிமா, இலக்கியம், ஓவியம்) ரசிகனை பிரம்பால் அடித்து வழிக்குக் கொண்டுவரமுடியாது என்பதுவே எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தொடர்ந்து போராடட்டும், கேட்பதெல்லாம் கிடைத்தால் மகிழ்ச்சியே ஆனால் இவர்களின் படைப்பை ரசிக்க ரசிகர்கள் பெருக வேண்டும் என்பதுவே எனது பிராத்தனை.’

யாரும் யாரையும் வழிக்குக் கொண்டு வர வேண்டியதில்லை. சினிமா என்பது ஒரு பொருளாதாரம் சார்ந்த பெரிய கலைத்துறை. அதற்கான வாய்ப்புகள் இருந்தால்தான் கிடைக்கும். என் கட்டுரையில் எங்குமே ரசிகன் மாற வேண்டும் சொல்லவில்லை. அல்லது பிரம்பால் அடிக்கவில்லை. எம் கலைஞர்களுக்கு களம் கொடு என்கிறேன். ராஜாமணி போன்ற தமிழக முதலாளிகள் இருக்கும் வரை மலேசிய கலைஞன் நிலை இதுதான் என்கிறேன்.

‘பாதகம் செய்பவரை கண்டால்
பயம்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா// இது கூட அங்குள்ளதுதான்.’

இப்போது அதனால் என்ன? ஒரு கட்டுரையை உங்களால் முழுமையாக விளங்கி கொள்ள முடியாமல் என்னத்த தமிழக படைப்புகளில் ரசித்தீர்கள்? நான் தமிழகப் படைப்புகளை ஒதுக்கித் தள்ள சொல்லவில்லை. நான் கொண்டாடும் தமிழகப் படைப்பாளிகள், ஈழப்படைப்பாளிகள், சிங்கைப் படைப்பாளிகள் எத்தனையோ பேர் உண்டு. அ.மார்க்ஸின் ஆளுமை, ஆதவனின் கவிதை வீச்சு, யோ.கர்ணனின் புதிய கதை சொல்லும் முறை, ஷோபாவின் அரசியல் விழிப்புணர்வு, ஜெயமோகனின் இலக்கியக் கூர்மை எல்லாவறையும் மதிக்கிறேன். ஆனால், நான் அங்கேயே நிர்க்க விரும்பவில்லை. இவர்களோடு இணைந்தே மலேசியப் படைப்பாளிகளைப் பார்க்கிறேன். ரெங்கசாமியின் நாவல்,  யுவராஜனின் சிறுகதைகள், பாலமுருகனின் கட்டுரைகள், சண்முகசிவாவின் இலக்கியக் கூர்மை என இரண்டையும் ஒரே தரப்பில் வைக்கிறேன். இவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் இயங்க வேண்டுமென விரும்புகிறேன். நான் சொல்ல வருவது இதுதான். உங்களுக்கு விளங்காததால் சுருக்கி இப்படி சொல்கிறேன்.

1. மலேசிய ஊடகங்களில் மலேசியத் தமிழனே தலைமை வகிக்க வேண்டும்.
2. இலக்கியம், ஓவியம், இசை பொறுத்த வரை ஓரளவு களங்கள் நமக்கு உண்டு. ஆனால், திரை துறை வளர அதற்கான களங்கள் விரிவாக்கப்பட வேண்டும்.
3. மற்றபடி தமிழக ஆக்கங்கள், இங்கு ஒளியேறுவதில் என்ன சிக்கல். அவர்கள் நம்மைக்காட்டிலும் முந்தியிருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவர்கள் அறிவை பெருவதிலும் பரிமாற்றம் செய்வதிலும் எந்தத் தடையும் இல்லை. ஆனால், நம்மை நாம் வளப்படுத்த நமது ஆக்கங்களை மேம்படுத்த என்ன செய்யப் போகிறோம்?

(Visited 159 times, 1 visits today)

7 thoughts on “தமிழகத்து நாட்டாமைகள் – ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிக்கு பதில்

 1. இங்கு வாழும் படைப்பாளிகளுக்கு ஒரு நேர்மையான களம் அமைத்துக்கொடுக்க இளம் கலைஞர்கள் எதிர் குரலை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். எத்தனை காலம்தான் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளைச் சமூகத்திடம் வெற்றிக்கரமாகக் கொண்டு போவதற்காக அதிகாரங்களிடமும் அரசியல்வாதிகளிடம் சோரம் போய் நிற்க வேண்டும்? தீர்க்கமான கூர்மையான அரசியல் பார்வை இருக்கும் ஒருவருக்கு இங்குக் கலை எனச் சொல்லப்படுவதன் இயங்குத்தளமும் பொருளாதார ரீதியில் அதனுடைய இருப்பையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

  மிக முக்கியமான சினிமா ஆளுமையான அடூர் கோபால கிருஷ்ணன் தன் நேர்காணலில் இப்படிக் குறிப்பிடுகிறார், “ கலை என்பது வணிக ரீதியிலும் வெற்றியைக் கொடுத்து அந்தக் கலைஞனை வாழ வைக்க வேண்டும்”. இந்தியாவைச் சேர்ந்த கலைஞராக இருந்தாலும் அதன் மீது மோகத்தை வளர்த்துக்கொள்ளாமல் தீவிரமாக உரையாடினால் அவர் சொல்ல வருவதன் அரசியலைப் புரிந்துகொள்ள முடியும். கலை என்பது படைக்கப்படுவதோடு அதன் செயல்பாடு முடிந்துவிடுவதில்லை.

  விமர்சனம், விவாதம், வணிக வெற்றி, அடைவு என அதன் விளைவுகள் நீளக்கூடியவை. “நல்லாருக்கு, நல்லாலை, என்ன இருக்கு அதுல” என மேலோட்டமாகச் சொல்லிவிட்டு போய்விடக்கூடிய எந்த மூன்றாம்தர செம்மையற்ற கருத்துகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவைத்தான் கலையும் இலக்கியமும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

  எந்தவொரு படைப்பையும் கொண்டாடுவதற்கும் மறுப்பதற்கும் நம்மிடம் விமர்சனமும் ஆழமான பார்வையும் இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஒரு வாசகனாக அதனையொட்டி விவாதிக்கவும் கலந்துரையாடவும் அவன் தயாராக இருக்க வேண்டும். காலம் காலமாக விமர்சனத்துறை வளர்ந்து வந்ததே இப்படித்தான். ஒரு கலையின் மீதான விமர்சனம் என்பது இரசனை அடிப்படையில் இருப்பதென்பதே எனக்கு ஒவ்வாத ஒரு விசயமாகப் படுகிறது. இருப்பினும் ஆரம்பகட்ட வாசகன் முதலில் தன்னுடைய இரசனையைக் கட்டமைத்துக்கொண்டு அங்கிருந்து ஒட்டுமொத்த பரப்பையே கவனிக்கத் துவங்குகின்றான். முதலில் நம்முடைய இசனை என்பது எத்தனை விரிவானது எத்தனை முயற்சிகளுக்குப் பிறகு உருவானது என்பதைப் பார்க்க வேண்டும்.
  மலேசியத்தன்மைமிக்க படைப்புகள் உருவாக வேண்டும் என மலேசியப் படைப்புக:ளின் மீது சமக்காலத்து விமர்சனம் வலுத்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு மேலோட்டமான மறுப்பை எதிர்க்கொள்ளும்போது இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா எனத் தயங்குகின்றேன்.

  கே.பாலமுருகன்

 2. விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி நவீன்.

 3. //சும்மா போற போக்கில் மலேசியாவை மட்டம் என்றும் தமிழகம் சூப்பர் என்றும் சொல்லி புத்திஜீவிகள் போல காட்டிக்கொள்பவர்கள் வரிசையில் நீங்களும் இணைய நினைக்காதீர்கள் தோழி.// சரி, அந்த பட்டியலில் நான் இணையவில்லை.

 4. ரெங்கசாமியின் நாவல், யுவராஜனின் சிறுகதைகள், பாலமுருகனின் கட்டுரைகள், சண்முகசிவாவின் இலக்கியக் கூர்மை என இரண்டையும் ஒரே தரப்பில் வைக்கிறேன். இவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் இயங்க வேண்டுமென விரும்புகிறேன்.marukka mudiyatha unmaiyana takavall navin kuruvathu…pantha pervalikaluku ivarkalin arumai teriyathu.tq navin.

 5. Hai Naveen.Excellent article.We need people like you for our next Tamil generation in Malaysia.Keep it up.

 6. அன்பின் நவீன், உங்களின் முயற்சிகள் கைகூடிவர வாழ்த்துக்கள்! நீங்கள் குறிப்பிட்ட இவர்களின் படைப்புகள் இணையத்தில் கிடைக்கின்றனவா?!
  ரெங்கசாமியின் நாவல், யுவராஜனின் சிறுகதைகள், பாலமுருகனின் கட்டுரைகள், சண்முகசிவாவின் இலக்கியக் கூர்மை.

  நன்றி!!
  முஹம்மத் ஹாரூன்
  சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *