கடந்த வார தினக் குரலில் (31.3.2012) ‘வெட்கப்படுகிறேன்’ எனும் தலைப்பில் வந்த செய்தி கண்ணில் பட்டது. இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் தான் வெட்கப்படுவதாக மலேசியாவில் வந்து கூறியிருக்கிறார். எதற்காக சேரன் மலேசியாவில் வந்து வெட்கப்பட வேண்டும் என செய்தியை முழுக்க வாசித்தால் அதிர்ச்சி.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்திருக்கும் நாவல் போட்டிக்குச் சேரனை அழைத்திருக்கிறார்கள். அதில் கலந்து கொள்ள சேரன் ஏற்பாட்டாளர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார். ( இப்போதுள்ள நாணய மதிப்பு படி 6000.00 ரிங்கிட்) இங்கு வந்து பார்த்து சேரன் , மலேசியர்கள் தமிழை வாழ வைக்க போராடுகிறது என அறிந்து பணம் வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் தனக்கு ஏற்பாட்டாளர்கள் தர இருந்த 6000 ரிங்கிட்டை வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் ஏற்பாட்டாளர்கள் நெகிழ்ந்திருக்கலாம். தங்கள் தமிழ்த்தொண்டால்தான் சேரன் தன் மனதை மாற்றிக்கொண்டதாக ஆனந்தக் கண்ணீர் வடிக்கலாம். அதேபோல இயக்குநர் சேரன் ஏதோ பெரிய தியாகம் செய்துவிட்டவர் போல இனி மலேசியத் தமிழ்ச் சூழலில் மதிப்பிடப்படும் ஆபத்தும் உண்டு. ஆனால் இந்தச் சம்பவத்தை ஒட்டி என்னிடம் சில கேள்விகள் உண்டு.
கேள்வி 1 : மலேசியாவில் நடக்கும் இலக்கிய தொடக்க விழாவுக்கு தமிழகத்திலிருந்து ஓர் இயக்குநரை, நடிகரை அழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம்தான் என்ன? இயக்குநர்களை அழைப்பதைத் தவறு என சொல்லவில்லை. ஆனால், நாவல் போட்டிக்கு அவர்களை அழைக்க ஏன் மெனக்கெட வேண்டும்? நாவல் துறையில் பல ஆளுமைகள் இருக்க சினிமா சார்ந்தவர்களைக் குறிவைப்பது அவர்கள் மூலம் கிடைக்கும் இரவல் வெளிச்சத்துக்காகவா? உடனே எழுத்தாளர் சங்கத்திடமிருந்து இவ்வாரான பதில் வரலாம். அதாவது, நாவல் போட்டியில் வெற்றிபெரும் படைப்புகள் தமிழக இயக்குநர்களால் சீரியலாகவோ சினிமாவாகவோ ஆக்கப்படும் எனலாம். மங்கள கௌரியின் ‘மல்லிகை நிறம் மாறுவதில்லை’ஏனும் வெற்றிப்பெற்ற நாவல் ‘செந்தூரப்பூவே’ என சீரியலாக்கப்பட்ட லட்சணம்தான் தெரிகிறதே. நாவலுக்கும் சீரியலுக்கும் சம்பந்தமே இல்லை. அப்படி திரைப்படமாக்குவதுதான் நோக்கம் என்றால் அதை நமது உள்நாட்டு இயக்குநர்களைக் கொண்டே செய்யலாமே. நமது வாழ்வை பதிவு செய்யும் நாவலை உள்வாங்கி திரைப்படமாக்க நமது வாழ்க்கைச் சூழலை அறிந்த இயக்குநர்களால்தானே முடியும்?
கேள்வி 2 : சேரனுக்கு ஏன் ஒரு லட்சம் ரூபாய் தர ஒப்புக்கொள்ள வேண்டும்? சில காரணங்களுக்காக நாம் தமிழ்நாட்டு எழுத்தாளர்களை, கலைஞர்களை அழைக்கும் போது அவர்கள் உழைப்பினை நாம் பெருவதால் அதற்கான கட்டணத்தை நாம் செலுத்த வேண்டியது கடமை. உதாரணமாக இலக்கியப் பட்டறைகள் , ஓர் அறிவுத்துறை சார்ந்த கலந்துரையாடல்கள், போன்றவற்றைச் சொல்லலாம். அதுவும் அழைக்கப்படுபவர்கள் அத்துறையில் வல்லுனர்களாக இருந்தால். ஆனால், ஒரு துவக்க விழாவில் கலந்துகொள்ள விமான டிக்கெட் , தங்கும் விடுதி செலவுகளையும் கொடுத்து கையில் ஒரு லட்சம் ரூபாய் தர சங்கம் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்? அவ்வாறு தருவது யார் அப்பன் வீட்டு பணம் ? சங்கத் தலைவர் வீட்டு பணமா? இல்லை சங்கத்தில் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என பட்டியலைக் காட்டி பெற்ற நன்கொடை பணமா? இல்லை அரசாங்கத்திடம் பெற்ற பணமா? அது தலைவர் பணமாக இல்லாத பட்சத்தில் மக்கள் பணத்தை எப்படி பயன்படுத்த சம்மதிக்கலாம்? இதற்கும் சங்கத்திடம் சமாளிப்புகள் இருக்கும். சேரன்தான் அதை பெறவில்லையே எனலாம். பெறுவது பெறாதது இங்கு சிக்கல் இல்லை. நீங்கள் யார் பணத்தை தர சம்மதித்தீர்கள்? இதற்கு முன் வந்தவர்களுக்கு யார் பணத்தைக் கொடுத்தீர்கள்? மிக அண்மையில் நடந்து முடிந்த வாசிக்க வாருங்கள் நிகழ்வில் 10 எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்தீர்கள். ஒருவருக்கு முன்னூறு ரிங்கிட் என நினைவு. ஜொகூரிலிருந்து வரும் ஒருவருக்கு முன்னூறு ரிங்கிட் போக்குவரத்துக்கே சரியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டு சினிமா காரனுக்கு ஒரு லட்சம் மலேசிய எழுத்தாளனுக்கு 300 ரிங்கிட். நல்லா இருக்கிறது உங்கள் நியாயம்.
கேள்வி 3 : சேரன் அப்பணத்தை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குத் தர சொல்லியுள்ளார். அதை சொல்ல அவர் யார்? யார் பணத்தை யார் பங்கு பிரிப்பது? இதில் தமிழக இலக்கியம் வியாபாரமாகிவிட்டது என வேறு கூறியுள்ளார். அப்படியானால் அவர் தான் வருவதற்கு ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கு தன்னை விற்க தயாராக இருந்ததை எதில் சேர்த்துக்கொள்வது.
கேள்வி 4 : இது மலேசிய எழுத்தாளர்களைப் படைப்பாளிகளை நோக்கி கேட்கும் கேள்வி . நாம் இன்னமும் எத்தனைக் காலத்துக்குச் சுரண்டப்படுவதை அனுமதிக்கப்போகிறோம். இன்னமும் எத்தனை காலத்துக்கு தமிழகத்தை நோக்கி வாய்பிழந்து நிர்க்க போகிறோம். இப்போது மலேசிய திரைப்பட கலைஞர்கள் மத்தியில் ஒரு புரட்சி கிளம்பியுள்ளது. இனி தமிழகச் சீரியல்கள் வேண்டாம், மலேசிய படைப்பாளிகளுக்குத் தனி அலைவரிசை தாருங்கள் என ஆஸ்ட்ரோவிடம் கேட்க ஆரம்பித்துள்ளனர். நாம் எப்போது திருந்த போகிறோம்? எப்போது ஒரே கூட்டு மனநிலையில் இந்த சுரண்டலை எதிர்த்துக் கேட்க போகிறோம் ? இன்னமும் எத்தனை ஆண்டுகளுக்கு விருது கிடைப்பது தடைபடும் என கள்ள மௌனம் சாதிக்க போகிறோம்? இலக்கியத்தோடு சம்பந்தமே இல்லாத ஒரு சேரனுக்கு விமான டிக்கெட் முதல் கலந்துகொண்டு போவதற்கே ஒரு லட்சம் தர முடிகிற எழுத்தாளர் சங்கத்தால், ஏன் மலேசியப் படைப்பாளிக்கு அத்தகையதொரு கௌரவத்தை வழங்க முடியவில்லை?
நாங்கள் அதை செய்தோம் இதை செய்தோம் என்ற வரலாற்றுப் பதிலெல்லாம் வேண்டாம். இதை ஏன் செய்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் என்ன? அவர்களிடம் பதில் இருக்காது. இதுபோன்ற அடிமை சிந்தனையை ஏற்று நாவல் போட்டியை ஏற்றுக்கொள்வதா ? அல்லது தார்மீக எதிர்ப்பினைக் காட்ட நிராகரிப்பதா என எழுத்தாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மிக முக்கியமாக எழுத்தாளர் சங்கம் யாருடைய பணத்தை சேரனுக்குத் தர முன்வந்தனர் என கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
வைரமுத்துவாலோ, சேரனாலோ தனிப்பட்ட முறையில் சிலர் பெறப்போகும் நன்மைக்காக, இப்படி மக்கள் பணத்தைச் செலவிடத்தான் வேண்டுமா? உங்கள் வணிகத்துக்கு நீங்கள் முதல் போடாமல் தமிழ் இலக்கியம் என்ற பெயரில் மக்கள் பணத்தைச் சுரண்டுவது என்ன முறை?
(இது இவ்வார ஞாயிறு தினக்குரலில் வந்த கட்டுரை. வலைப்பூவில் சிலவற்றை இணைத்துள்ளேன். சுய சிந்தனை கொண்ட நண்பர்கள் உங்கள் எதிர்வினைகளை தினக்குரலுக்கு அனுப்பினால் நாம் இந்தச் சுரண்டலை தடுக்க முடியும். தமிழ்/ இலக்கியம் எனும் பெயரில் நடக்கும் ஊழலை தடுக்க முடியும்)
உங்களுடைய மற்ற கருத்துகள் சரி ஆனால் சேரன் கேட்டது எவ்வாறு லஞ்சமாகும்?
அவர் செலவழிக்கும் நேரத்திற்கான கட்டணம்.
நான் கல்லூரியில் பயின்ற காலத்தில், கல்லூரி சார்ந்த விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு கொடுப்பது வழக்கம். அதுபோலத்தான் இதுவும் என்று எனக்கு தோன்றுகிறது.