மலேசிய இலக்கிய வியாபாரம் – எதிர்வினை

முன் எச்சரிக்கை : எழுத்தாளர் சங்கத்தலைவர் தனது மகனின் இயக்குனராகும் ஆசையை  நிறைவேற்றவே தொடர்ந்து இயக்குநர்களை மலேசியாவுக்கு  ‘சங்க பணத்தில்’ அழைத்து வருகிறார் என இக்கட்டுரையைப் படிக்கும்  யாரேனும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. எப்படி கொஞ்சம் கூட வெட்கம் நியாயம் இல்லாமல் தனது மனைவியின் நூலுக்கு மாணிக்க வாசக புத்தக விருதை கொடுத்து அழகு பார்த்தாரோ அப்படியே தன் மகனையும் இயக்குநராக்கில் அழகு பார்க்க நினைக்கிறார் எனவும் கருத்துகள் எழலாம். எழுத்தாளர் சங்கம் ராஜேந்திரனின் குடும்ப சொத்தாகிவிட்டதாக வருத்தம் அடையலாம். இது போன்ற எந்த சேதாரத்துக்கும் இந்த எதிர்வினை பொறுப்பேற்காது.


ஞாயிறு தினக்குரலில் என் எதிர்வினைக்கான இருவரின் பதிலைக் கண்டேன். ஒருவர் தோழர் இரா.மாசிலாமணி. அவரின் எதிர்வினை நேரடியானது. அந்த வகையில் அவருடன் உரையாடுவது ஆக்ககரமானது. மற்றொன்று எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரனுடையது. எனக்குத் தெரிந்து அவரின் வாழ்நாள் முழுக்க  உள்ள ஒரே எதிர்வினை இதுதான். எந்தக் கூட்டத்திலும் இதை மட்டுமே சொல்வார். நேரிடியாக விவாதத்திற்கு வராமல் , ‘நான் உன் பேச்சுக்கு வரல…’ என்பதுபோல பொதுவான தனது ஆளுமையைச் சொல்லிவிட்டுப் போவது. ஒருவகையில் இவ்விரண்டு கட்டுரைகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. மேலும் சிலவற்றைத் தெளிவு படுத்தும் அவசியம் உண்டு.

முதலில் நண்பர் இரா.மாசிலாமணியின்  விவாதத்தில் எடுத்துக்கொள்ளக் கூடிய சில விசயங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.

– விவாதத்திற்காகக் கூட சேரன் மனதைக் கொச்சைப் படுத்தக்கூடாது. ஆஸ்ட்ரோவின் வசதிக்கு சேரனுக்கு ஒரு கோடி ரூபாய் கூட கொடுக்கலாம்.
– நானும் பாலமுருகனும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களை நம்பியே இங்கு இருக்கிறோம். குறிப்பாக ஜெயமோகன் வல்லினம் நிகழ்வுக்கு மூன்று முறை வந்துள்ளார்.

அவர் கட்டுரையில் பதில் சொல்லத் தகுதி கொண்டவை இவை மட்டுமே. மற்றவை கொஞ்சம் கிண்டல்கள், தீர்ப்புகள். ஆனால், எதையுமே முதலில் முழுக்க அறிந்து ஆய்ந்து பகரவில்லை.

முதலில் சேரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் தர முன்வந்தது யார்? ஆஸ்ட்ரோவா அல்லது எழுத்தாளர் சங்கமா? ஆஸ்ட்ரோ என்றால் அதற்காகத் தனி எதிர்வினையும் தனிப்பார்வையும் உண்டு. (ஆஸ்ட்ரோ பிரிவிலிருந்துதான் யாராவது இந்த உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும்). ஆனால், இங்கு நான்  அப்பணம் எழுத்தாளர் சங்கம் தர முன்வந்தது என்கிறேன். அதன் அடிப்படையில் சும்மா வந்து திறந்து வைக்க ஒரு லட்சம் ரூபாய் தரலாம் என நீங்கள் நியாயப்படுத்தினால் நான் அதற்குமேல் உங்களிடம் உரையாட ஒன்றும் இல்லை. அண்மையில் எழுத்தாளர் சங்கம் 10 எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்தது . ஒருவருக்கு 300 ரிங்கிட். அதில் தொலைவிலிருந்து பல மூத்த எழுத்தாளர்கள் வந்திருந்தனர். மலேசிய எழுத்தாளனுக்கு விருதாகத்  தர 300 ரிங்கிட் போதுமானது; தமிழக சினிமாக்காரன் நிகழ்வை திறந்து வைக்க ஒரு லட்சம் ரூபாய். அப்படித்தானே? விவாதம் என்பது உண்மையை நோக்கிய பயணம். அதில் சேரன் மனம் புண்பட்டால் உண்மை அவர் தரப்பில் இல்லை என்பதுதானே பொருள்.

மற்றது, எனது நிகழ்வுக்கு ஜெயமோகன் மூன்று முறை வந்திருப்பதாகக் கணிப்பு சொல்லியுள்ளார். நான் மீண்டும் சொல்கிறேன். ஒரு எதிர்வினை எழுதுவதற்கும் உழைப்பு வேண்டும். இவ்வாறான தவறான கருத்தை திணித்தல் கூடாது. ஜெயமோகன் மூன்று முறை மலேசியா வந்துள்ளார். முதல் முறை அவர் வரும்போது வல்லினம் தொடங்கப்படக்கூட இல்லை. ‘கலை இலக்கிய விழாவும்’ இல்லை. அவர் சிங்கை வந்திருந்தார். நாங்கள் அவரை மலேசியா வரவழைத்து இலக்கிய கலந்துரையாடலை நடத்தினோம். இரண்டாவது முறை கூலிம் தியான ஆசிரமம் அவரை வரவழைத்தது. அப்போது அவர் இரண்டாவது கலை இலக்கியவிழாவில் கலந்துகொண்டு ‘நாவல்கள்’ குறித்து பேசினார். இதற்கிடையில் அவர் சுயமாக ஒரு குழுவினருடன் மலேசியாவைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் எந்த இலக்கிய நிகழ்விலும் கலந்துகொள்ள வில்லை. நான் சொன்ன தகவல் சரியா என விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்ளுங்கள்.

தோழர், எனது முந்தைய எதிர்வினையை மீண்டும் ஒரு முறை படிக்கக் கேட்டுக்கொள்கிறேன். அதில்,’நாம் தமிழ்நாட்டு எழுத்தாளர்களை, கலைஞர்களை அழைக்கும் போது அவர்கள் உழைப்பினை நாம் பெருவதால் அதற்கான கட்டணத்தை நாம் செலுத்த வேண்டியது கடமை. உதாரணமாக  இலக்கியப் பட்டறைகள்  , ஓர் அறிவுத்துறை சார்ந்த கலந்துரையாடல்கள், போன்றவற்றைச் சொல்லலாம்.’ எனக்குறிப்பிட்டுள்ளேன். இதுதான் என் நிலைபாடு. அவ்வகையில் ஜெயமோகன் மட்டுமல்ல, அறிவுத்துறை அல்லது இலக்கியப் பகிர்வுக்காக நாங்கள் அழைக்கும் யாருக்கும் அதற்குறிய வெகுமதியை வழங்குகிறோம். அதுவும் சேரன் வந்து நாவல் போட்டியைத் திறந்து வைப்பதும் ஒன்றா? அது அறிவின் தளத்தில் இயங்கும் செயல்பாடா?
உங்களுக்குப் புரியும் படி மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன் தோழர். என் வங்கி பணத்தைப் போட்டு நான் ஒரு விருந்தினரை அழைப்பது என் உரிமை. அவரை எங்கும் தங்கவைப்பேன். வல்லினம் ஒரு அமைப்பு அல்ல; ஒரு நிறுவனம். ஆனால், சங்கம் எனும் ஒரு அமைப்பு தனிப்பட்டவர் சொத்து இல்லை. அது பலரின் உழைப்பில் உள்ளது. எழுத்தாளர்களின் முகத்தைக் காட்டி பெறப்பட்ட பணம் உள்ளது. அந்தப் பணத்தை சுய தேவைக்காக செலவு செய்தால், அதை எதிர்க்காமல் இருக்க முடியாது. உங்கள் பணத்தை போட்டு நீங்கள் நமீதாவை அழைத்து வேண்டுமானாலும் இலக்கியத்தை வளருங்கள். எங்கள் பணத்தில் அல்ல.

இனி இராஜேந்திரனுக்கு,

மிக லாவகமாக சேரன் வருகை குறித்து பதில் சொல்லாமல் நழுவியுள்ளார். அதை மறைக்க தனது அறியபெரிய சாதனைகளையும் முன்வைத்துள்ளார். சரி அவர் சாதனைகளையே பார்ப்போம்.

சாதனை  1 : மலேசிய எழுத்தாளர்களைத் தமிழக எழுத்தாளர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற பலரின் ஆதங்கத்தால் அவர் பல முயற்சிகள் எடுத்தாராம். இப்போது அந்தப் பிரச்சனையே இல்லையாம். எல்லாவற்றையும் தீர்த்துவிட்டாராம்.

இது ஒரு பூடகமான (Abstract) மலுப்பல். முதலில் யார்  அங்கீகாரத்தைக் கேட்டது? அதை யாரிடமிருந்து இவர் பெற்றுக்கொடுத்தார். எழுத்தாளர்கள் என அவர் குறிப்பிடுவது யாரை? அவ்வாறு வேதனைப்பட்டவர்களின் பட்டியல் உண்டா? எவ்வகையில் அவர்கள் அங்கீகரிக்கப் பட வேண்டும் என கவலைப் பட்டனர்? மாலை போடப்பட்டா? நல்ல கதை.

மலேசிய இலக்கியங்கள் எப்போதோ தமிழகத்தில் வாசிக்கப்படத் தொடங்கிவிட்டன. சீ.முத்துசாமி, ரெ.கார்த்திகேசு போன்றோரின் சிறுகதைகளுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. பல நூல்கள் அங்கு பதிப்பிக்கவும் பட்டுள்ளன.  சில எழுத்தாளர்களின் பெயர்கள் சிற்றிதழ் சூழலில் அறிமுகமும் ஆகியுள்ளது. ஆனால், இலக்கியப் போக்கைத் தீர்மாணிப்பதும் முன்னெடுப்பதும் எப்போதும் தீவிரமாக இயங்கும் ஒரு சிறு குழுவினரால்தான். என்னதான் வெகுமக்களைச் சென்று அடைந்தாலும் எந்த தீவிர விமர்சகர்களாலும் கண்டுக்கொள்ளப் படாமல் போவதும் உண்டு. இதில் மலேசிய எழுத்தாளர், தமிழக எழுத்தாளர் என்ற பேதமெல்லாம் இல்லை. எவ்வித அறிமுகமும் இல்லாமலேயே இன்று மலேசியாவில் உள்ள முத்தமாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு’ தமிழகத்தில்  முக்கியத்துவம் பெருவது இந்த தீவிர வாசிப்பினால்தான். பல ஆண்டுகளாகக் கண்டுக்கொள்ளப்படாமல் மேடானிலும் மலேசியாவிலும் இருந்து அதை கதைச் சூழலாக வைத்து நாவல் எழுதிய  பா.சிங்காரம்  கண்டுப்பிடிக்கப்பட்டதும் தமிழகத்தின் விமர்சகர்களால்தான். அதேபோல இன்று தமிழக எழுத்துக்கு நிகராக கொண்டாடப்படும் ஈழ எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கத்துக்கும் ஷோபாசக்திக்கும் எந்த எழுத்தாளர் சங்கமும் வழிதடமெல்லாம் அமைக்கவில்லை.

இலக்கியவாசிப்பு என்பது ஒரு  பயணம். ஒரு வளர்ச்சிப்போக்கு.   மூளை இளைபாறலுக்காக திருப்பித்திருப்பி ஒரே தரத்திலான ஆக்கங்களை வாசிப்பதும் அதை கொண்டாடுவதுமாக இருந்தால் எந்த இலக்கியமும் வளராது. எப்போது இணையம் அதிக புலக்கத்தில் வந்ததோ அப்போதே பல ஆக்கங்கள் தமிழகம் சென்று சேர்ந்துவிட்டன. அதன் மூலம் அறியப்பட்ட ஒருவராக கே.பாலமுருகனைக் குறிப்பிடலாம். அரசிடம் அனுமதி பெற்று, அரசு விருந்தாளியாகச் சென்றால் யாரும் யாரையும் மதிக்கவே செய்வார்கள் . எல்லா கல்லூரிகளும் இடம்தரும்தான். அவர்கள் விரும்பாவிட்டாலும் உங்கள் அளப்பை கேட்கத்தான் வேண்டும். அவர்களுக்கு நீங்கள் நல்ல கதை எழுதியுள்ளீர்களா? சொத்தைக் கதை எழுதியுள்ளீர்களா என்பதெல்லாம் பிரச்னையே இல்லை. அது ஒரு சடங்கு. பத்திரிகையில் வாசகர் கடிதம் எழுதுபரும் , இலக்கிய அறிமுகம் இல்லாதவரும் உங்கள் இலக்கியப் பயணத்தில் கலந்துகொண்டதை அறிவேன். (ராஜேந்திரன் முதல் பயணம் முதல் அவருடன் தமிழகம் சென்றவர்களின் பட்டியலை வெளியிட்டால் குட்டு உடைந்துவிடும்.) நமது படைப்பை அங்கீகரிக்கிறார்களா? அதற்காக நாம் இங்கு செய்யும் முயற்சிகள் என்ன? என்பதே கேள்வி.
சாதனை 2 : படைப்பு வெற்றிபெற வேண்டுமானால், அது தமிழகத்தில் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட வேண்டும். அதன் மூலம் மலேசிய இலக்கியத்தை இன்னொரு தளத்தில் சேர்க்கிறாராம்.

தான் ஞாயிறு ஆசிரியராகப் பணியேற்றிருக்கும் பத்திரிகையிலேயே மலேசிய படைப்பாளியில் ஆக்கத்துக்குப் பதிலாக வைரமுத்துவின் தொடர்கதையை போட்டு வணிகத்தைப் பெருக்கும் ராஜேந்திரனின் உருவத்தை நினைவில் ஏற்றிக்கொண்டு இதை எழுத வேண்டியுள்ளது. ஒரு படைப்பு வெற்றிபெற வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட வேண்டும் என்பது மெத்த சரி. ஆனால் அது முதலில் மலேசியாவில் நடக்க வேண்டாமா? ஓர் இலக்கியச் சூழலில் பல்வேறு தரப்பட்ட படைப்புகள் குவிகின்றன. விமர்சனங்கள் விவாதங்கள் வழியே அவற்றில் ஒரு சில படைப்புகள் மேலெடுத்துவரப்படுகின்றன. இதுவே பொதுவான இலக்கியப் போக்கு. முதலில் இங்கு நம் ஆக்கங்களை வாசிக்க அவர் ஒரு வழியும் செய்யவில்லை. அவர்கள் வெளியிடும் நூல்கள் குறித்தே கலந்துரையாடல்கள் நிகழவில்லை. இதில் எந்தப் படைப்பை தமிழகத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார்? எழுத்தாளர் சங்க வெளியீடுகளையா? இதுவரை மலேசியாவில் வெளிவந்த எல்லா படைப்புகளையுமா? அல்லது அவர் வாசிப்பில் அவருக்குப் பிடித்த படைப்பையா? கொண்டு செல்லும் படைப்பின் பட்டியல் கிடைக்குமா?

சாதனை 3 : நாவல் போட்டியில் வெற்றிபெற்ற நாவல் ‘செந்தூரப்பூவே’ எனும் பெயரி நாடகமாக வந்ததாம்.
முதலில் நாவலுக்கும் அந்த நாடகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அந்த நாவலாசிரியரே சொல்லியுள்ளார். கதையில் அதிக மாற்றங்கள். நமது வாழ்வை நமது மண்ணில் படமாக்காமால் தமிழகத்தில் கொடுத்து சீரியலாக்கிவிட்டு சீரியஸ் எழுத்தாளர் போல பேசுகிறார் ராஜேந்திரன். இதில் தமிழகத்தோடு தொப்புள் கொடி உறவை புதுப்பிக்கிறாராம். தமிழகத்திற்குச் சென்று வணிகம் செய்பவர்களும், தமிழகத்தில் பெண் கொடுத்து பெண் எடுப்பவர்களும் கூட இந்த வசனத்தைச் சொல்லலாம் அல்லவா? மலேசிய சூழலில் வாழும் நாம் புதிய வாழ்வு முறையைக் கொண்டுள்ளோம். நமது வாழ்வை பிரதிபளிக்கும் நமது ஆக்கங்களை மலாயிலோ ஆங்கிலத்திலோ மொழிப்பெயர்த்து மலேசிய இலக்கியச் சூழலில் நமது அடையாளத்தை நிறுவ முடியாதவர் தமிழகத்தில் ஏதோ செய்துவிட்டதாகச் சொல்வதெல்லாம் கனவுகளில் தோன்றும் மகிழ்ச்சிதான்.

இறுதியாக ராஜேந்திரன், அவர்கள் தன் வளர்ச்சியில் சிலருக்குப் பொறாமை எனச் சொல்லியுள்ளார். அவர்கள்தான் தவறான விமர்சனங்கள் செய்து வருகிறார்களாம். என்ன ஒரு புத்திஜீவியான பேச்சு. ஒருவரை அதிகம் பேசவிட்டாலே அவரின் பலவீனங்கள் வெளிப்பட்டுவிடும் என்பது சரிதான். நீங்கள் வளர்ச்சியே அடையவில்லை என்கிறேன். இதில் என்ன பொறாமை. வளர்ச்சி அடைவதற்கான வழிகளையே சொல்கிறேன். அதையும் கேட்க மறுக்கிறீர்கள்.

முதலில் மலேசியாவில் குறிப்பிடத்தகுந்த படைப்புகளை மொழியாக்கம் செய்து பரவவிடுங்கள். தொடர்ச்சியான படைப்பிலக்கிய கலந்துரையாடல்களை ஏற்படுத்துங்கள். அதன் மூலம் நல்ல படைப்புகள் குறித்த விவாதங்களை நிறுவுங்கள். மலேசிய எழுத்தாளர்களை தமிழ்க்கற்கும் உயர்நிலை மாணவர்கள் அறியும் வகை செய்யுங்கள். நம் எழுத்து நம் நாட்டில் விவாதிக்கப்படவும் ஆய்வுக்குட்படுத்தவும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் நடத்தும் கவிதை பட்டறைகளுக்கு மறுவடிவம் கொடுங்கள். இன்றைய உலக இலக்கியப் போக்கை அறிந்தவர் மூலமாக அப்பட்டறைகளை நகர்த்துங்கள். இன்றைய தமிழக இலக்கியப் போக்கு குறித்த அறிமுகங்களை தகுந்தவர்கள் மூலம் இளம் தலைமுறையினருக்குக் கொண்டுச் செல்லுங்கள். போட்டிகள் மூலம் எழுத்தாளர்களை உருவாக்குவது ஒரு புறம் இருக்க, நல்ல வாசகர்களை , வாசிப்புக்கான சூழலை உருவாக்குங்கள்.  வைரமுத்துவையே கட்டி தொங்கிக்கொண்டிருக்காதீர்கள், ஆனால், இந்த முயற்சிகள் மூலம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் கவர்ச்சி உங்களுக்குக் கிடைக்காது. உங்களை ஒரு பெரிய தமிழ் தியாகி என்றெல்லாம் காட்டிக்கொள்ள முடியாது. அதனால் என்ன? வருங்காலத்தில் மலேசியத் தமிழ் இலக்கியம் செழிப்பாக இருக்கும்.

29.4.2012 – தினக்குரல்

(Visited 110 times, 1 visits today)

4 thoughts on “மலேசிய இலக்கிய வியாபாரம் – எதிர்வினை

  1. நல்ல இலக்கியமா? யார் கண்டுபிடிப்பது? இவர்களா? விளங்கிடும் மலேசிய இலக்கியம். இன்னமும் தம்மை ஒரு ஹீரோ/ஹீரோயினி’யாகக் காட்டிக்கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தான் (கதைவிடும் பரிசுத்த எழுத்தாளார்கள்) முதல் பரிசு கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். பல்கலைக்கழகமே செல்லாத படிக்காத மேதைகளின் அரிய பொக்கிஷங்களை, பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஆய்வுசெய்து பட்டம் பெற்று, சமூதாயத்தில் படித்தவர்களாகத் திகழும் ஒரு சில படித்த முட்டாள்களுக்கு, படித்து பட்டம் பெறாதவர்களின் எழுதெல்லாம் குப்பையாக தெரிகிற இச்சூழலில்,யார் கண்டுபிடிப்பது நல்ல எழுத்துக்களை? தமிழ் படித்த மேதாவிகள் தானே சில நிகழ்வுகளுக்கு தலமை ஏற்று நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்? இலக்கியப் புரிதல் இருக்கின்றதா இவர்களுக்கு!? இவர்கள் கொடுக்கின்ற அங்கிகாரமெல்லாம் யாருக்கு வேணும்!? நாம் செய்வதை, செய்துக்கொண்டே போகவேண்டியதுதான். இவர்களின் நூறு இருநூறு ரிங்கிட் தொகைகள் நமது இலக்கியத்திறனை நிலைநிறுத்திவிடுமா!? நகைச்சுவைதான்.
    ஒட்டுமொத்ததில் மிக அற்புதமான சொல்லப்பட்ட ஓர் எதிர்வினை இது. எல்லோருக்கும் சென்று சேரவேண்டுமென்பதே என் கோரிக்கை. வாழ்த்துகள் நவீன்.

  2. மிக அற்புதமான சொல்லப்பட்ட ஓர் எதிர்வினை இது.வாழ்த்துகள் நவீன்.

  3. தலைமைப் புலவரிடம் போய் சேர்ந்தான், முட்டாள். பழைய ஓலைகளில் எழுதி இருப்பதைப் படித்துச் சொல்ல வேண்டும். இதுதான் உன் வேலை, என்றார் புலவர். இவரிடம் குருடனைப் போல் நடித்தால் கடைசி வரையில் வேலையில் இருக்கலாம், என்று முடிவு செய்தான், முட்டாள். புலவர் ஓர் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். முட்டாளோ, ஒரு கண்ணை மூடிக் கொண்டு, ஒரு கண்ணை உருட்டிப் பார்த்து, கூஜா கோணியுடன் அம்மன் ஆலயம் சென்றார், என்று படித்தான். அட முட்டாளே! ராஜா ராணியுடன் அம்மன் ஆலயம் சென்றார், என்பதைத் தப்பும் தவறுமாகப் படிக்கிறாயே, உனக்கென்ன கண் குருடா? என்று கேட்டார் புலவர். புலவா! என் கண்கள் ஒன்றும் குருடு இல்லை! இதோ பார்! என்றபடி இரண்டு கண்ணையும் திறந்து காட்டினான், முட்டாள். என்னையா ஏமாற்றினாய்? உன்னை என்ன செய்கிறேன் பார், என்ற புலவர் இவனை இழுத்துச் சென்று இரண்டு கண்களிலும் சூடு போடுங்கள் என்று உத்தரவிட்டார். முட்டாளோ, நான் ராஜேந்திர சோழனின் குசுவாக்கும். எனக்கா சூடு என்று குரைத்தான். (பரமார்த்த குரு கதை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *