இப்படித்தான் முடியும் எனத் தெரியும்
இருந்தாலும்
நீ கொஞ்சம் சொல்லியிருக்கலாம்
நான் நல்லவனென்று
ஒன்றும் அறியாதவனென்று
வன்மமும் கோபமும் தெரியாதவனென்று
நான் அப்படியல்லன்
ஆனால்
நீ அப்படி சொல்லியிருக்கலாம்
அதனால் என்ன
ஒரு பொய்யின் மூலமும்
ஒரு கற்பனை மூலமும்
நாம் சிரிக்கமுடியுமென்றால்
அதை தொடர்ந்து சொல்லியிருக்கலாம்
வாழ்வென்பது முக்கியமா என்ன
நாம் சிரிக்கவேண்டும்
நாம் சிரிக்கும்போது
அனைத்துமே சிரிக்கிறது
அனைத்துமே…
அதனால்
நீ கொஞ்சம் சொல்லியிருக்கலாம்
நூதமான
எனது கொலைகளை
நீ இரசிக்கப் பழகியிருந்தால்
இந்தப் பொய்கள் சாத்தியமாகியிருக்கும்
சூடு குறையாத இரத்தத்தை
நான் பருகும்போது
உதட்டில் எஞ்சியதை
முத்தத்தின் மூலம் நீ உறிஞ்சிருந்தால்
உன்னால் சிரிக்க முடிந்திருக்கும்
உலகின் கோடன கோடி குற்றவாளிகள்
இறக்கிறார்கள்
நிரபராதிகள் போலவே
நியாயங்கள் இல்லாத உதிரி வாழ்விடம்
நாம் இனி சிரிப்பது மட்டுமே சாத்தியம்
கேள்
பரபரத்த சாலையில்
அரிதாய் கிடைத்த பார்க்கிங்கிலிருந்து
நீ காரை நகர்த்தியே ஆக வேண்டும்
அது உனதல்ல.