ஜப்பான் காலத்தில்
தாத்தா கட்டிய வேட்டி
கிடைத்தவுடன்
பாட்டி முதலில் அழுதாள்
அதன் நான்கு புறமும் முடிச்சிடப்பட்டு
முறுக்கிக் கிடந்தது.
மையத்தில் இருந்த பழுப்பு நிறத்தை
பாட்டி
தாத்தாவின் இரத்தம் என்றாள்
மிஞ்சிய உயிருடன்
மரண இரயிலிலிருந்து
தாத்தா கொண்டு வந்த
வேட்டியென முகர்ந்தழுதாள்
முடிச்சுகளை அவிழ்ப்பது பற்றி
அவளது கவலைகள் தொடர்ந்தன
நான் அவளுக்கு
ஒரு முடிச்சை அவிழ்க்க உதவினேன்
சுருண்டிருந்த நீள் முடியொன்று
காற்றில் அலை எழுப்பியது
முடியை முகர்ந்தவள்
அடுத்த முடிச்சுகள் அவிழ்வதை
தடுத்தாள்
பின்னர்
மையக் கறை
இரத்தத்துடையதா என
அழுவதை நிறுத்தாமல்
சாகும்வரை முகர்ந்திருந்தாள்.
(Visited 56 times, 1 visits today)