போலிஸ்காரர்களின் வருகையும் தண்டனைகளும் எங்களை பள்ளியில் இன்னும் நன்கு அடையாளப்படுத்திக்காட்ட உதவியது. தமிழ் ஆசிரியையைத்தவிர மற்ற அனைவருமே எங்களை அப்பள்ளியின் குப்பைகள் போலவே பார்த்தனர். குறிப்பாக கட்டொழுங்கு ஆசிரியர் எங்கள் பெயர் ‘ப்ளேக் ரெக்கோட்டில்’ பதிவாகிவிட்டது என்றும் அதனால் எங்களுக்கு அரசாங்க வேலை இனி கிடைக்காது எனவும் பயமுறுத்தியபடி இருந்தார்.
அரசாங்க வேலை எங்களுக்குக் கிடைக்காதது பற்றியெல்லாம் அப்போது கவலை இல்லை. ஆனால் ‘ப்ளேக் ரெக்கோட்’ என்ற வார்த்தை மட்டும் எங்களை அமைதி இழக்க செய்தது. ‘ப்ளேக்’ என்றால் கறுப்பு. எங்கள் பெயர் கறுப்பு பதிவேட்டில் பதிக்கப்பட்டிருக்கிற தென்றும், கறுப்பு பதிவேடு எப்படி இருக்கும் என்றும் கற்பனையில் ஆழ்ந்தோம். மிகப்பெரிய ஒரு கறுப்பு புத்தகத்தில் உட்புறமும் கறுப்பு ஏடுகள் படபடக்க எங்கள் பெயர்கள் பளிச்சென அதில் எழுதிவைக்கப்பட்டிருப்பதாய் தோன்றி பயமுறுத்தியது. அந்தக் கறுப்பு புத்தகத்தை எப்படியும் திருடிவிட வேண்டும் என முடிவெடுத்தோம். பின்னர் விசாரித்துப்பார்த்ததில் அப்படியொரு புத்தகம் இல்லை என்றும் பெயர்கள் அலுவலகத்தில் உள்ள கணினியில்தான் செலுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறினார்கள்.
இப்போது கணினியை எப்படி திருடுவது என்ற குழப்பம் வந்தது. கணினிக்கும் எனக்குமான தொடர்பு ஒரு திருடும் முயற்சியிலிருந்து தொடங்கியிருந்தது. கணினியைப் பற்றிய எந்த அறிவும் அப்போது இல்லை. திருடுவதற்கு அந்த அறிவும் தேவையில்லாமல் இருந்தது. எவ்வளவு திட்டமிட்டும் அலுவலகக் கணினியை எங்களால் நெருங்க முடியாமல் இருந்தது. அலுவலக ஊழியர் எங்கள் நண்பரானதால் அவர் உதவியோடு ஒரு தரம் அலுவலகத்தினுள் யாரும் இல்லாத போது நுழைந்தோம். அலுவலகத்தில் குமிந்துகிடந்த கணினிகளைக் கண்டு உண்மையில் நாங்கள் திருடவேண்டிய கணினி எது என்ற புதிய குழப்பம் அப்போதுதான் எழுந்தது.
அன்று இரவு நாங்கள் ஒன்று கூடினோம். ‘ப்ளேக் ரெக்கோட்’ என்ற வார்த்தை கொடுத்த பயம் எங்களுக்குக் குறைந்திருந்தாலும் கணினியில் அடங்கியுள்ள எங்கள் பெயரை அழிப்பது ஒரு சடங்குபோல ஒட்டிக்கொண்டிருந்தது. எந்தக் காரணமும் எழுப்பாமல் செய்தே தீர வேண்டிய கட்டாயம் சடங்குக்கு மட்டும்தான் வாய்த்திருக்கிறது. நாங்களும் சடங்கு செய்ய முடிவெடுத்தோம்.
மறுநாள் இரவு எங்கள் பள்ளி தீப்பிடித்துக்கொண்டது. அலுவலகத்தோடு சேர்த்து அதை ஒட்டியிருந்த ஆசிரியர் அறைகளும் வகுப்பறைகளும் பெரும் தீயில் பொசுங்கி கொண்டிருந்தன. தங்களின் பல நாள் உழைப்பு கருகி விட்டதாகவும்… வைத்திருந்த பொருள் பொசுங்கிவிட்டதாகவும்… ஆசிரியர்கள் விட்ட கண்ணீர் பற்றி அறியாமல் மூன்று மாடி கட்டடத்தை முழுதுமாய் விழுங்கியபடி பெரும் தீ எழுந்து நின்றது. என் வாழ்வில் நான் இறுதியாய் பார்த்த பெரும் யாகத் தீ அது.
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்…