சமாதானம் செய்வது உயிரை வதைக்கக்கூடியது. மௌனித்திருக்கும் ஓர் உயிரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் நான் கோபம் அடைந்துவிடும் அபாயம் நிகழும். எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரம் சமாதானம் செய்வதற்கான நிமிடங்களைச் சரியாகக் காட்டியபடியே இருக்கும். அந்த நிமிட முள் அதன் எல்லைகளுக்குப் பின், நகர்ந்ததே இல்லை. பணிவாக, தொனி குறைந்து, துக்கத்தின் கர கரத்த குரலில் வாடியிருக்கும் எனது ஆன்மாவில் பேய்களின் நிழல் படிய தொடங்கும். கோபம் கொண்டு என்னைப் பிரியும் ஒவ்வொருவருக்கும் என் ஆழ்மனம் முழுச்சம்மதத்தோடுதான் விடைக்கொடுக்கிறது. பிரிதல் என்பது சுதந்திரம்.
இந்த வரியை எழுதும்போது எப்போதும் மனதில் தோன்றும் யாருமற்ற வெறுமையின் சூன்ய ஒலி காதை அடைத்துக் கொள்கிறது. பிரிவுக்குக்கான துக்க முகங்களோடு அறிவும் மனமும் என்னை நாடகமாடவைத்த நிமிடங்களில் ஆன்மா மிக அமைதியாக அந்தப் பிரிவை எதிர்ப்பார்த்து நிழலாடுகிறது. என் மீது பதிந்திருக்கும் எல்லா அடையாளத்தையும் வீசி எரிந்துவிட்டு யாருக்கும் தெரியாத ஓர் ஊரில் மீண்டும் ஆடுகளோடு திரியும் ஒரு காட்சி எப்போதும் போல் இப்போதும் தோன்றுகிறது. அப்படி என்னை செய்யவிடாதது எது?
ஆணவம்தான்.
அவளை நான் சாமாதானம் செய்வதற்கு சகித்துக் கொண்டு போவதற்கும் காரணமாய் இருந்ததும் இதே ஆணவம்தான். ஆணவம் ஒரு பச்சோந்திபோல. எதன்மீது நிற்கிறதோ அதன் வர்ணம் பெற்றுவிடும். இறுதியில் ஆணவத்தை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதாக இருக்காது. பதினேழு வயதில் நான் தேடி வைத்துக்கொண்ட அவளின் சுமையை இறக்க முடியாமல் திரிந்த தினங்களில் என் அடையாளத்தைத் தொலைப்பதாக உணர்ந்தேன்.
ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சாப்பிட்டுவிட்டாயா எனக் கேட்பது, அவள் விருப்பப்படுவதை வாங்கித்தருவது, ‘தெம்மே’ என உட்கார்ந்துகொண்டு அவள் பேசுவதைக் செவிமடுப்பது, பள்ளி முடிந்த பின் அவள் சைக்கிள் வேகத்துக்கு என் மோட்டார்வண்டியையும் உருட்டிச்சொல்வது எனத்தொடங்கி நான் சண்டையிட்டதற்கு அவளிடம் பாவமன்னிப்புக் கேட்பதில் வந்து நின்றது. ஒவ்வொரு முறையும் சண்டையிட்டப்பின் அவளிடம் என் நியாயங்களை விளக்கிக்கொண்டிருப்பது என் முகத்தில் நானே காரி உமிழ்வதற்கு நிகராகப் பட்டது. ‘நவீனோட சரக்கு செம்ம அழகுடா’ என்ற நண்பர்களின் போற்றுதலை இழக்க விரும்பாமல் என் காதல் தொடர்ந்து கொண்டிருந்தது. எனக்கு நண்பர்களின் அந்த வார்த்தைத் தேவைப்பட்டது. யாரிடமும் இல்லாத ஒன்று என்னிடம் இருப்பது போன்று பாவனை செய்வதற்கும், நண்பர்களின் வயிற்றெரிச்சலை உசுப்பிவிடுவதற்கும் அவள் எனக்குத் தேவைப்பட்டாள்.
அவளைச் சமாதானம் செய்துகொண்டிருக்கும் அதே தருணத்தில் மனம் அவளைப் பிரிவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்துக்கொண்டிருக்கும். பிரிவு எப்படி நேர்த்தியாக அமைய வேண்டும் என்றும் யோசிக்கத்தொடங்கும். நான் அந்தப் பிரிவை ஏற்படுத்தியதாக இருக்கக் கூடாது. அவளாக விரும்பி ஏற்படுத்தியதாக இருக்க வேண்டும். ஒரு காதல் தோல்வியின் மென்மையான போர்வை என் உடல் முழுதும் படிய வேண்டும் என எதிர்ப்பார்த்தேன். அந்தப் போர்வை ஒருவகை பாதுகாப்பைத் தரக்கூடியது. மீண்டும் வேறொரு காதலையும் ஏற்படுத்த வல்லது.
-தொடரும்