இன்று வரை எழுதுவதற்கான உந்துதல் ஏற்படும்போதெல்லாம் அதை முறியடிப்பது போலதான் ஒவ்வொரு சந்தர்ப்பமும் வாய்த்துவிடுகின்றது. அவற்றை மீறியே எழுத்து பற்றி யோசிக்கவும் செயலாற்றவும் வேண்டுயுள்ளது. சிறுகதை வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் பொங்கிய காலம் அது. வாரப்பத்திரிகைகள் மாத இதழ்கள் ஞாயிறு பக்கங்கள் என ஒன்றுவிடாமல் தேடித்தேடி சிறுகதைகள் வாசித்தேன். அன்றைய ஞாயிறு பத்திரிகைகளில் என் பெயர் அடிக்கடி இடம் பெற சிறுகதைகளைப் பற்றிய கருத்துகளை வாசகர் கடிதமாக எழுதி அனுப்புவேன். ஒவ்வொரு வாரமும் எனது பெயருடன் கருத்து கடிதம் வருவது மனதுக்கு இன்பமாக இருக்கும். இப்படி இன்பமாகப் போன என் எழுத்து வாழ்வில் மற்றுமொரு இடைவெளி விழுந்தது.
இந்தச் சம்பவம் எனக்குத் துள்ளியமாக நினைவில் உண்டு. இடைநிலை பள்ளியில் நாங்கள் இறுதியாக இறங்கிய வன்முறை இது. அப்போதெல்லாம் காலையில் மணியடித்தவுடன் தேசியகீதம் பாடலும் தொழுகையும் ஒலிபரப்பாகும். எல்லா மாணவர்களும் இசையைக்கேட்டவுடன் நின்ற இடத்திலேயே நிற்க வேண்டும். முதல் நாள் நான்காவது வகுப்பறையில் (பெர்டாகாங்கான்) தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டிருந்தனர். தொழுகையின் போது அம்மாணவர்களைத் மறு தாக்குதல் செய்ய வேண்டும் என சரவணன் முடிவெடுத்திருந்தான்.
தேசியகீதம் பாடத்தொடங்கும் போதே அம்மாணவர்கள் நின்ற இடத்தில் குழுமினோம். தொழுகை ஆரம்பித்தது. நான் அம்மாணவர்களைக் கோபப் படுத்தும் விதமாக …………. மஹா பூத்தோ என்றேன். அவர்கள் பார்வை என் பக்கம் கோபமாகத் திரும்பியது. ‘என்ன முறைக்கிறாய்’ என சரவணன் தொடங்க. கலவரம் ஆரம்பித்தது. எங்கள் தாக்குதலை முன்னமே அறிந்திருந்த அம்மாணவர்கள் சிறிய கத்திகளை தயார்செய்து வைத்திருந்தனர். பின்னனியில் தொழுகை ஒலியோடு வன்முறை மேலும் உக்கிரமாக அரங்கேறியது.
வன்முறை போன்ற சுதந்திரம் இல்லை. ஒவ்வொரு படைப்பாளனும் வன்முறையாளன்தான். இதுவரைக்குமான சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் சன்னம் சன்னமாக தகர்ப்பதிலிருந்து வன்முறை கிளர்த்தெழுகிறது. ஓர் ஆளும் வர்க்கம் தனது வசதிக்கேற்ப கட்டமைத்துள்ள சட்டத்தின் மையத்தை நோக்கி எட்டி உதைக்கும் போது ஏற்படுக்கிற கிளர்ச்சியை படைப்புக்கான சக்தியாக நான் நினைக்கிறேன். அன்றும் அதுதான் நடந்தது. எங்களின் நியாயத்தை நிலைநாட்ட நாங்கள் போராடிக்கொண்டிருக்கையில் கட்டொழுங்கு ஆசிரியர் குறுக்கிட்டார். ஏற்கனவே மதவாதியாக நாங்கள் அடையாளம் கண்டிருந்த அவர் தனது தகுதிக்கு மீறி தானும் ஒரு மாணவன் போல எங்களைத் தாக்கத் தொடங்கினார். அதிகாரம் தலைவிரித்தாடும்போது அதை ஒடுக்குவதுதானே முறை. மொத்தமாக ஆறு பேர் இணைந்து அவரைத் தாக்கினோம்.
அடுத்த சில நிமிடங்களில் வெற்றுடலோடு போலிஸ் முன்னிலையில் நின்று கொண்டிருந்தோம்.
(குறிப்பு : 17 வயதிலேயே போலிஸை ரொம்பவும் நெருக்கத்தில் பார்த்துவிட்டதால் சிலர் போலிஸில் ரிப்போர்ட் செய்தும் தொலைபேசியில் மிரட்டியும் பாவலா காட்டும்போது என் மயிர் கூட அசைவதில்லை.)
-தொடரும்