அலமாரியில் பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ந்தேன். அப்பாவும் கதை எழுதுவார் என அப்போதுதான் தெரிந்தது. ஒரு சிறிய டைரியில் குட்டி குட்டி கதைகள், விடுகதைகள், அறிஞர்களின் பொன்மொழி என எழுதியும் ஒட்டியும் வைத்திருந்தார். இடையிடையே ஜோக்குகளும் இருந்தன.
ஒருவன் நெடுநேரமாக மணி எங்கே என்று தேடிக்கொண்டிருப்பான். காலையில் வெளியில் சென்ற மணி இன்னும் திரும்பியிருக்க மாட்டான். இன்றைக்கு மணி வந்தால் இருக்கிறது பூசை என எஜமானன் கடுப்பில் இருப்பான். கதையின் முடிவில்தான் அவன் காத்திருந்த மணி ஒரு நாய் என்பது வாசகனுக்குத் தெரியும். அப்பா எழுதிய ஒரு கதை இவ்வாறுதான் இருந்தது. படித்தவுடன் பிடித்துப்போனது இக்கதை.
இதே போல் கண்ணதாசனின் குட்டிக்கதையில், ஒருவன் மண்சட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடுவான். திடீரென அவன் கீழே விழ மண்சட்டி சிதறும். பின்னர் வலியை மறந்து சிரிக்கும். அவன் காரணம் கேட்டதற்கு ‘நான் நேற்று மண்ணாக இருந்தேன், பிறகு மண்சட்டியாக மாறினேன், இப்போது மீண்டும் மண்ணாக இருக்கிறேன், நாளை மீண்டும் மண்சட்டியாவேன்… ஆனால் நீ?’ என்ற கேள்வியோடு கதை முடியும். அப்போது பெரிய தாக்கத்தை இக்கதை ஏற்படுத்தியது. கொஞ்ச நேரம் யோசித்ததில் கதை எழுதுவது எளிதானதாகப் பட்டது. அப்பாவின் குட்டிக்கதையையும் கண்ணதாசனின் கதையும் ஒன்றாக இணைத்து கலவை செய்தேன்.
மணிக்குக் காத்திருக்கும் எஜமானன், மணி (நாய்) வந்துவிட நாயை அடிக்க பானையை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். அப்போது கீழே விழ பானை சிதறி கண்ணதாசனின் வசனத்தைப் பேசும். ஏறக்குறைய இரண்டு பக்க அளவில் இருந்த இக்கதை வானம்பாடியில் குட்டிக்கதை என தலைப்பிட்டு வந்தது. அந்த வாரம் இரண்டு வானம்பாடிகள் வாங்கினேன். ஒன்றை வீட்டிலும் மற்றதை பள்ளியின் தமிழ்மொழிக்கழக பலகையிலும் ஒட்டினேன். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒருவராவது அந்தக் கதையைப் படிக்கும் படி செய்தேன்.
என் திறமையைத் தமிழ் ஆசிரியை வாசுகி நன்கு அடையாளம் கண்டிருந்தார். (தலைமையாசிரியரின் பெயரும் வாசுகிதான்). பலரின் ஊக்குவிப்பாலும் பாராட்டுதலாலும் இனி எழுதினால் சிறுகதைதான் என முடிவெடுத்தேன். சிறுகதைக்கு உள்ள மகத்துவம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. இப்படி முதல் கதையிலேயே காப்பியடித்த சிறுகதையால் நன்கு பிரபலமானது நானாகத்தான் இருக்கும்
-தொடரும்
thanx to u guys to give us such a wonderfull performance.lovee all this articles.I really enjoy reading it.well done.keep it guys.tc.
மிக்க நன்றி.தொடர்ந்து வாசிக்கவும்…
ம.நவீன்