இளஞ்செல்வன் இல்லாத வெறுமையைப் நிரப்பும் வகையில் குமரன் இருந்தார். பாராட்டுகளைத் தவிர வேறெதுவும் அவரிடமிருந்து வெளிப்படாதது உற்சாகமாக இருக்கும். ‘நல்லா எழுதுறடா’ எனும் அவரின் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் மூன்று நான்கு கவிதைகளாவது பிறப்பெடுக்கும். குமரன் அண்ணன் போலவே எல்லோரும் எனது கவிதைகளைப் பாராட்டுவார்கள் எனும் நம்பிக்கை அசைக்க முடியாமல் வளர்ந்தது. அதுவும் சமூகத்திற்குப் பல நட்கருத்துகளைச் சொல்லும் என் கவிதைகள் உடனடியாக அச்சில் ஏற வேண்டும் என முடிவெடுத்தேன். புத்தகம் பிரசுரிக்க ஐயாயிரம் ரிங்கிட் தேவை என முன்பு இளஞ்செல்வன் சொன்னது நினைவிற்கு வந்தது. அந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த அப்பாவிடம் சென்று உடனே ஐயாயிரம் ரிங்கிட் வேண்டும் என்றேன். அப்பா ஒரு முறை வியந்து பார்த்தார். காரணத்தைத் தெரிந்து கொண்டு, இன்னும் நிறைய எழுதி பேர் வாங்கினால் தருவதாகக் கூறினார். நான் எப்படிப் பேர் வாங்குவதென சிந்திக்கத்தொடங்கினேன்.
கவிதைகள் சிறியவை. பெரும்பாலான என் கவிதைகளை கூட்டத்தோடு கூட்டமாகவே பத்திரிகைகளில் பிரசுரித்தார்கள். எனவே பெரிதாக எதையாவது செய்வதென தீர்மானித்தேன். அப்போது என் கண்ணுக்குத் தெரிந்த வாசகிகள் அம்மாவும் அக்காவும்தான். அம்மா தொடர்கதைகளை விரும்பி படிப்பார். அக்காவுக்கும் மர்மக்கதைகள் படிப்பதில் ஆர்வம் இருந்தது. அக்காலக் கட்டத்தில் வானொலியில் ஒலிபரப்பாகும் மர்மதொடர் நாடகங்களையும் அம்மாவும் அக்காவும் செவிமடுத்து வந்தனர். மர்ம தொடரின் பலம் எனக்குப் புரிந்தது. நிறைய வாசகர்களைக் கவர்ந்து பேரெடுக்க மர்ம தொடர்க்கதை எழுதலாம் என முடிவெடுத்தேன்.
மர்மக்கதை எழுதுவதில் நிறைய குழப்பங்கள் இருந்தன. பலவாறாக யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. தற்செயலாக ஒருநாள் அக்காவின் அறையில் இருந்த ஒரு மர அலமாரியில் மர்ம நாவலைக் கண்டெடுத்தேன். எழுதியது யார் என்று நினைவில் இல்லை. ஆனால் புத்தகத்தின் தலைப்பு ‘பறக்கும் கூண்டில் பன்னீர் இளவரசி’. அந்த மர்ம நாவலைப் பலமுறை படித்தேன். எத்தனை முறை படித்தும் சுவாரசியம் குறையாமல் இருந்தது. அது போன்ற ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என முடிவெடுத்தேன். பல முறை எழுதிப் பார்த்தும் ஒழுங்காகக் கதை வராமல் தகராறு செய்தது. வேறு வழி கிடைக்கவில்லை. எதற்கு அது போன்ற ஒரு தொடர்கதை என்று அதையே தொடர்கதையாக எழுதிவிட்டேன்.
அப்போது மர்மக் கதைகளைப் பிரசுரித்த வானம்பாடிக்கு ‘பறக்கும் கூண்டில் பன்னீர் இளவரசியை’ முழுமையாக எழுதி என் பெயரிட்டு அனுப்பிவைத்தேன். ‘பறக்கும் கூண்டில் பன்னீர் இளவரசியை’ என்னை தவிர வேறு யாரும் படித்திருக்கமாட்டார்கள் என முழுவதுமாக நம்பினேன். பல மாதங்கள் காத்திருந்தும் பிரசுரம் காணாததால் வெறுப்படைந்து அடுத்த முயற்சியாக சிறுகதை எழுதலாம் என முடிவெடுத்தேன். என்ன சிறுகதை எழுதலாம் என யோசித்தபோது மீண்டும் மர அலமாரியின் நினைவு வந்தது. தொடர்கதைக்கு வழிகாட்டிய அலமாரி சிறுகதைக்கு வழிகாட்டாதா என திறந்தேன்.
கண்ணதாசனின் குட்டிக்கதைகள் முன்புறமே இருந்தது.