நிராகரிப்பு அதிக சக்தி கொண்டது. நிராகரிப்புக் கொண்டிருக்கும் கரங்கள் ஒருவனை வன்முறையாளனாக்கவும் சாதனையாளனாக்கவும் ஒரே அளவிலான அக்கறையைக் கொண்டிருக்கிறது. என்னை அங்கீகரித்துக் கொண்டிருந்த ஒரே ஆத்மா அலட்சியப்படுத்திவிட்டதாக உணர்ந்தேன். எப்படியும் பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆழ வேரூன்றியது. எதையாவது செய்து என்னை நான் இளஞ்செல்வனிடம் நிரூபிக்க வேண்டும் என விரும்பினேன். ஆழ்ந்து யோசித்ததில் கையில் கிடைத்தது சமூக அக்கறை எனும் ஆயுதம். நான் திடீரென சமுக அக்கறை நிறைந்த ஒருவனாக பரிணாமம் எடுத்தேன்.
தமிழ்ச் சமூகத்தில் உறங்கி கிடக்கும் வீரத்தைத் தட்டி எழுப்புவதாகவும் மூடப்பழக்கங்களைச் சாடுவதாகவும் எனக்குள்ளிருந்து கவிதைகள் உதயமாகத் தொடங்கின. இப்படிப் புரட்சி கவிதை எழுதுபவர்களெல்லாம் ஏதாவதொரு பட்டப்பெயரை வைத்திருப்பதால் நானும் எனக்கான பட்டப்பெயரைத் தேடத்தொடங்கினேன். புரட்சி கவி, புரட்சி வீரன், புரட்சி இளைஞன் என பலவாறாக பெயரிட்டும் ஒன்றும் சரிவரவில்லை. என் பெயர் ‘நகர’ வரிசையில் தொடங்கியதால் பட்டப்பெயரோடு சேர்த்து உச்சரிக்கையில் ஓசை இன்பம் என் பெயரில் இல்லாதது அதற்கு முக்கியக் காரணம். பெரும் சோகத்தோடு புரட்சி என்ற வார்த்தையைக் கைவிட்டேன். ’நகர’ வரிசைக்குத் தோதாக எந்தப்பட்டப்பெயரும் இல்லாததால் ‘மகர’ வரிசைக்குத் தோதாகத் தேடி (அப்பாவின் முதல் எழுத்துக்கு ஏற்றார் போல) கிடைத்தது ‘மக்கள் கவிஞன்’ எனும் பட்டப்பெயர்.
‘மக்கள் கவிஞன் ம. நவீன்’ என்ற பெயரை ஒரு தரம் உச்சரித்தப் போது உடல் சிலிர்த்தது. செல்லும் இடமெல்லாம் ‘மக்கள் கவிஞர்’ எனும் அடைமொழியோடு என்னை அழைக்கப்போகும் திரளான மக்கள் கூட்டத்தை நினைக்கையில் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தது. பெயரை வைத்தால் மட்டும் போதுமா? அதை பிரபலப் படுத்த முடிவெடுத்தேன். அப்போது மலேசிய நண்பன் பத்திரிகையில் ஒரு சொல் கொடுத்து அச்சொல்லுக்குக் கவிதை எழுதும் போட்டி வாரா வாரம் நடந்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் கவிதைக்குப் பரிசும் கொடுத்தார்கள். அந்தப் போட்டிக்கு நானும் எழுதினேன் ‘மக்கள் கவிஞன்’ எனும் அடைமொழியோடு.
ஒருவேளை போட்டியில் வெற்றிபெற்றால் எனது பெயர் அதன் அடைமொழியோடு பிரபலமாகும் என நம்பினேன். மறுவாரம் வெறும் பெயரோடு பத்திரிகையில் என் கவிதை பிரசுரமானது. பரிசு கிடைக்கவில்லை. என் பட்டப்பெயர் இல்லாமல் கவிதையைப் பிரசுரித்த மலேசிய நண்பன் மேல் கோபம் வந்தது. இந்தத் தவறுக்கு முக்கிய காரணம் அப்பத்திரிகையின் ஆசிரியர் ஆதி. குமணனாகத்தான் இருக்கவேண்டும் என நம்பினேன். அன்றே ஆதி. குமணனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் நான் எத்தகைய மகத்தான கவிஞன் என்றும், அந்தப் பட்டப்பெயருக்கான காரணத்தையும் விரிவாக விளக்கி எழுதி அனுப்பினேன்.
அடுத்தவாரம் அதற்கு அடுத்த வாரம் என எனது கவிதைகள் வெறும் பெயரோடே வெளிவந்தன. நானே எனக்கு இட்டுக்கொண்ட பட்டப்பெயரை யார் நீங்கியிருப்பார் என இன்றுவரை தெரியவில்லை. பெரும் மனச்சோர்வுடன் என் பட்டப்பெயர் திட்டத்தை நான் கைவிட்டேன். ஆனாலும் என் ‘சமூக அக்கறை’ குறைந்தபாடில்லை. வேறொரு திட்டத்திற்குத் தயாரானேன்.
-தொடரும்