பல நாட்களுக்குப் பிறகு இளஞ்செல்வனைப் பார்க்கச் செல்வது என்னவோ போல் இருந்தது. எனது இடைவெளி அவரிடம் என்னென்ன கேள்விகளை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அதற்கு நான் என்னென்ன பதில்கள் தர வேண்டும் என்றும் சிந்தித்தப்படி சென்றேன். வாழ்வில் திடீரென ஒருவர் காரணமில்லாமல் மறக்கப்படுவதும் பின்னர் நினைக்கப்படுவதும் எல்லா காலக்கட்டங்களிலும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. எனது வருகையை அலுவலக உதவியாளரிடம் கூறி சிற்றுண்டி சாலையில் காத்திருந்தேன். அப்போது காலைப் பள்ளி முடிந்துவிட்டாலும் இளஞ்செல்வன் ஏதோ வேலையாக இருந்திருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்துதான் வந்தார். அந்த வருகையும் எனக்கானதல்ல. எனக்கு முன் காத்திருந்த இருவரிடம் நெடுநேரம் உரையாடியபடி இருந்தார். எனது இருப்பு அவருக்கு எந்தவகையான அவசியத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது. அவர்கள் சென்றதும் என் பக்கம் திரும்பினார். நட்போடு புன்னகைத்தார்.
புதிதாக எழுதிய சில காதல் கவிதைகளைக் காட்டினேன். வாசித்துப் பார்த்து சாங்கியத்திற்கு ‘நன்றாக உள்ளது’ என்றார். ஏதோ சில கவிதை புத்தகங்கள் பற்றி கூறினார். அவை தன் வீட்டில் உள்ளன என்றும் ஒரு நாள் தான் அதை எடுத்து வந்து தருவதாகவும் கூறினார். அவரது இல்லம் எனக்கு பரிட்சம் இருந்ததால் நானே அவற்றை அவர் வீட்டில் வந்து பெற்றுக்கொள்வதாகக் கூறினேன். அதற்கு இளஞ்செல்வன், “நீங்க இப்ப வர வேண்டாம். நல்லா எழுத ஆரம்பிச்சப் பிறகு என் வீட்டுக்கு வரலாம்” என்றார். வாழ்வில் எனக்கு விழுந்த மிக மோசமான அறை அது.
அதற்குப் பிறகு நான் ஒன்றும் பேசவில்லை. அவமான உணர்ச்சி சூழ்ந்து கொண்டது. இளஞ்செல்வன் எனது மனநிலையை அறிந்து கொண்டவராகவும் தெரியவில்லை. அவர் எப்போதும் போல பேசிக்கொண்டிருந்தார். எனக்கு உடனே கண்ணாடியைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஏதோ காரணம் சொல்லி புறப்பட்டேன். அவர் மெர்ஸ்சடிஸ் பென்ஸ் காருக்குப் பக்கத்தில் இருந்த எனது சைக்கிளை எடுக்கும் போது மனதின் கனம் தாளாமல் கீழே விழுந்து விடுவேனோ என்றுகூட பயமாக இருந்தது. சைக்கிளை ஓட்டாமல் உருட்டிக்கொண்டே சென்றேன்.
வீட்டுக்குச் சென்றதும் முதல் வேளையாக கண்ணாடியைப் பார்த்தேன். விளக்கொளி இல்லாத என் அறையில் முகத்தைப் பார்க்க சிரமமாக இருந்தது. எழுத்தின் மேலும் இலக்கியத்தின் மேலும் வெறுப்பு ஏற்பட்டது. ஒருவர் வீட்டுக்குச் செல்ல எதிர்ப்பார்க்கப்படும் தகுதி, நான் கனவிலும் எண்ணாதது. அன்று முழுதும் யாரிடமும் பேசவில்லை. மிஞ்சிப்பேசினால் பல நாட்களாக இல்லாமல் இருந்த திக்குவாய் அதிகமாக ஆக்கிரமித்தது.
இளஞ்செல்வன் போன்ற உயரம் இல்லை; நிறம் இல்லை; தெளிவான பேச்சு இல்லை; மெர்ஸ்சடிஸ் வண்டி இல்லை. இப்படி என்னிடம் இல்லாதவற்றைப் பற்றியே அதிகம் எண்ணிக்கொண்டிருந்தேன். இனி இளஞ்செல்வனைப் பார்ப்பதில்லை என மனதிற்குள் முடிவெடுத்துக்கொண்டேன்.
-தொடரும்