முதல் நாள்…
இரண்டாவது நாள்…
மூன்றாவது நாளுக்குப் பிறகு அவள் தனது நிழல்படம் கேட்பதை மறந்திருந்தாள். புகைப்படத்தை என்னிடம் கேட்டுப்பெறுவதைத் தாண்டி நாங்கள் உரையாட நிறைய விஷயங்கள் இருந்தன. நிழல்படம் குறித்தான பேச்சுகளை அவளே தவிர்த்தாள் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு பதிலாக நான் அதுவரை எழுதி சேமித்து வைத்திருந்த கவிதைகள் அடங்கியப் புத்தகத்தை அவளிடம் கொடுத்தேன். ஒரு தரம் வாசித்து வியந்தாள். சிலவற்றிற்கு அர்த்தம் கேட்டாள். என் அறிவை பிழிந்து புதிது புதிதாக அர்த்தங்கள் சொன்னேன். எனது சில கவிதைகள் அவளைக் கவர்ந்தது என உறுதியாகக் கூற முடியும். அதுபோல என் கவிதைகள் எல்லா பெண்களையும் கவரும் என தீர்க்கமாக நம்பினேன். எனக்குள் காதல் கவிதைகள் ஊற்றெடுக்கத் தொடக்கின. அவை பதினாறு வயதில் இருக்கும் அனைத்து அழகான பெண்களுக்கும் உடையவை.
பொய்கள் எனக்கு நெருங்கிய தோழனாக மாறியது. பேசும் மூன்று வாக்கியத்தில் ஒரு பொய்யாவது நிச்சயம் இருக்கும். கற்பனையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்த பொய் மிகப்பெரிய வாகனம். இல்லாத பெண்களுக்காகவும், இல்லாத வாழ்வுக்காகவும், இல்லாத சோகத்திற்காகவும் என்னை நான் எப்போதும் தயாராய் வைத்திருந்தேன். மிக விரைவில் நாங்கள் காதலிக்க ஆரம்பித்திருந்தோம்.
எங்கள் காதல் எனக்கு சந்தோசமாகவும் அவளுக்குத் துக்கமுமாகவுமே ஒவ்வொரு நாளும் வளர்ந்தது. நூலகம், சைக்கிள் நிறுத்தும் பகுதி, மரத்தடி என எங்கு அவளைப் பார்த்தாலும் சட்டென பின்னால் கால்சட்டைப் பையிலிருந்து கவிதையை உருவி வாசிக்கத் தொடங்கிவிடுவேன். ஏதோ சொல்ல காத்திருந்த அவளுக்கு எந்த இடமும் தராமல் எனது கவிதைகள் காலி இடங்களை நிரப்பிவிடும். கவிதை இல்லாத சமயத்தில் ஆகக் கடைசியாக என்னிடம் அடிபட்டவனைப் பற்றி பேசத்தொடங்குவேன். எதற்கும் அவள் பதில் கூறியதில்லை. அவளுக்குக் காதலிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏக்கமான பார்வைகளோடு நித்தம் நித்தம் என்னைக் கடந்தவளின் அதிர்வுகளை அறியாமல் வளர்ந்து வந்தன எனது காதல் கவிதைகள்…
காதல் கவிதைகள் வற்றாமல் பெருக்கெடுக்கும் அதிசயம் நிகழும் எனக்குள்ளான இடம் எப்போதும் கனத்துத் தொங்கும். இதை எழுதும் இந்த நிமிடம் கூட அந்த மன நிலையை மிகுந்த நுட்பத்தோடு உணர முடிகிறது. அந்தச் சமயங்களில் எனக்கு இருந்த ஒரே ஒரு நெருக்கமான வாசகர் குமரன் அண்ணன்.
“நல்லா இருக்குடா…வைரமுத்து கவிதை மாதிரி இருக்குடா…” எனும் அவரின் பாராட்டு எழுத மேலும் தெம்பினைக் கொடுத்தது. இன்று சிங்கப்பூரில் வேலை செய்யும் அவர் என்னைவிட ஒரு வயது மூத்தவர். அவர் வாசிக்கும் ஆங்கில நாவல்களும், பெரியாரியலும், விடுதலைப்புலிகள் தொடர்பான செய்திகளும் அந்தக்காலக்கட்டத்தில் எனக்கு அந்நியமாய் இருந்தன. வெல்லஸிலி மாரியம்மன் கோயில் தலைவரின் மகனான அவர், ஆரம்பத்தில் கோயில் அர்ச்சகராகப் பகுதி நேரமாகப் பணியாற்றி பின்னர் பெரியாரால், குடும்பத்தோடு ஒத்துப்போக முடியாமல் தனி ஒரு அறையில் தங்கியிருந்தார். லுனாஸ் எனும் ஒரு சிற்றூரில் தன்னந்தனியாக இருந்த அவர் எனக்கு ஏற்படுத்திய சிற்றிதழ் அறிமுகங்கள், பெரியாரியல், மார்க்ஸியம், ஓஷோ என எல்லாமுமே அப்போது பயன்படவில்லை.
என்னிடம் இருந்தவை காதல் கவிதைகள். சில நாட்களுக்குப் பிறகு அவள் மீண்டும் அழுத்தமாகக் கேட்டாள்.
“என் ஃபோட்டோ எங்க?”
‘கவிஞனாய் மட்டுமே
இருந்த நான்
முத்தமிட்டு முத்தமிட்டே
வர்ணம் கலைந்த உன் புகைப்படத்தால்
ஓவியனானேன்
முதன் முதலாய்’ என்றேன்.
இப்படி என்னிடம் இருந்தவை காதல் கவிதைகள் மட்டும்தான்.
-தொடரும்