படிவம் நான்கில் விளையாட்டு தினத்தின் போதுதான் முதன் முதலாக அந்தச் சண்டை வந்தது. அந்தச் சண்டை வந்திருக்க வேண்டாம். ஒரு வகையில் அர்த்தமற்ற பல சண்டைகள் உருவாகவும் நியாயமில்லாமல் பலரைக் காயப்படுத்தவும் அந்தச் சண்டைதான் காரணமாக அமைந்தது. ஏன் ஒருவனை அடிக்க வேண்டும்? ஏன் ஒருவனை காயப்படுத்த வேண்டும்? என்ற சாதாரண கேள்விகளுக்குக் கூட காரணம் கிடைக்காத சண்டைகள்.
எனது அனுபவத்தில் எல்லா செயலுக்கும் தேவைப்படும் சக்தி ஒன்றுதான். மூலத்தில் உறங்கி கிடக்கும் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றி இருக்கிறது. அந்த ஆண்டில் மிகச்சிறந்த கவிஞனாகப் பெயர் எடுக்க, நான் சேமித்து வைத்திருந்த சக்திகள் விரயமானது இந்த முதல் சண்டையின் தொடர்ச்சிகளால்தான்.
அப்போது அசைவம் உண்பதை நானும் சரவணனும் ஒரு தியானமாகவே செய்தோம். வாத்து, உடும்பு, காட்டுப் பன்றி, என ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. உண்ணும் போது மிருகமாகியிருந்தோம். உணவு ஒருவனை மன ரீதியாக விலங்காகவும் மனிதனாகவும் மாற்றுகிறது. நாங்கள் மிருகமாக இருப்பதை விரும்பினோம். எதில் இடித்தாலும் நோகாது என்ற கற்பனையான பலத்தோடு உடலை சுமந்து திரிந்தோம்.
விளையாட்டு தினங்களில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரிய அனுமதி இல்லை. மிக இரகசியமாகச் சில காதல் ஜோடிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்களே தவிர மற்றவர்கள் திடலிலும் அவரவர் குழு இல்லத்திலும் அமர்ந்திருப்பர். கழிவறையை பயன்படுத்தச் சென்ற ஓர் அந்நிய இன மாணவனை எங்கள் நண்பர்களில் ஒருவன் வம்புக்கு இழுக்க சட்டையில் சில காலணி அச்சோடு எங்களிடம் வந்து முறையிட்டான். நானும் சரவணனும் அமைதியாக இருந்தோம். சரவணனுக்கு எப்போதுமே கிருஸ்தவர்கள் மீது ஒரு வெறுப்பு இருந்தது. சற்று அதிகமாகவே கிருஸ்த இன மாணவர்களைக் கொண்டிருந்த அப்பள்ளியில் மிக ரகசியமாக தமிழ் மாணவர்களை அவர்கள் பறையர்கள் என அழைத்து வந்தனர். மொழியால் நாங்கள் ஒன்றிணைந்திருந்தோமே தவிர எங்களுக்குள் சிறு சிறு பிளவுகள் ஏற்பட்டிருந்தன. தமிழர்கள் பலமிக்கவர்களாக இருந்தக் காலக்கட்டதில் ஏற்படும் திமிர், பொறாமை, வஞ்சகம் என எல்லாமும் அக்காலக் கட்டத்தில் பரவியிருந்தது. பலவீனமான காலக்கட்டத்தில்தான் தமிழர்கள் இணைவார்கள் என எனக்கு அப்போதே புரிந்தது.
என் நினைவில் சரியாக இருந்தால், அந்த ஆண்டில்தான் அப்பள்ளிக்குப் புதிதாக இரு தமிழர்கள் ஆசிரியர்களாக வந்திருந்தனர். ஒருவர் குமாரசாமி மற்றவர் பிரகாஷ். நண்பர்கள் சிலர் ஏதோ நம்பிக்கையில் அவர்களிடம் சென்று முறையிட்டனர். ஒன்றும் நடந்தபாடில்லை. எங்களில் சில நண்பர்கள் துள்ளி குதித்தனர். ஆறேழு பேர் அடங்கிய நண்பர்கள் சென்று செம்மையாக வாங்கிக்கொண்டும் வந்தனர். எவன் ஒருவன் எதிராளியிடம் போராடுவதற்கு முன் பின்னால் திரும்பி பார்க்கிறானோ அப்போதே அவனுக்குத் தோல்வி உறுதி. அவன் பின்னால் யாரையோ நம்புகிறான். போனவர்கள் அனைவரும் பின்னால் திரும்பி பார்த்தவர்கள்.
அடிவாங்கி வந்தவர்களின் கூச்சல் அதிகமாக இருந்தது. தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என புலம்பினர். அதற்குள் அந்நிய மாணவர்களும் நெருங்கி வரத்தொடங்கியிருந்தனர். தொலைவில் இருந்த பப்பாளி மரத்திலிருந்த பிஞ்சு பப்பாளி பழங்களை வீசினர். எங்கள் நண்பர்களில் சிலர் விலகி ஓடினர். சிலர் தங்கள் மேல் படவில்லை என கேலியாகச் சிரித்தனர். நண்பர்களின் பயமும் தீவிரமின்மையும் அவர்களுக்கு மேலும் தெம்பைக் கொடுத்திருக்க வேண்டும். மிக அருகில் வந்து ஒரு நண்பனின் நெஞ்சில் கைவைத்துத் தள்ளியவன் ‘பூ…’ என்றான். (நன்கு கவனித்துப்பார்த்தால் இதைதான் நமது அரசாங்கமும் செய்கிறது.)
எனக்கு அறைவது பிடிக்கும். குத்துவதைவிட அறைவது எதிராளியின் ரோஷத்தைச் சீண்டிப்பார்க்கக் கூடியது. குத்துப் படுகையில் ஒருவன் வீழ்ந்துவிடுகிறான். ஓட நினைக்கிறான். நிலை தடுமாறுகிறான். அறைதல் அப்படியல்ல. அறை வாங்கியவன் ஓடுவதில்லை. மயக்கம் அடைவதில்லை. அறைந்தவனின் முகம் பார்த்து விழிபிதுங்கி நிற்பான். மீண்டும் தாக்கத் துணிவு எளிதில் வராது. தனது அச்சத்தையும் கௌரவத்தையும் ஒரு சேர காக்க முயலும்போது அடுத்த அறைவிடுவது கூனிக்குறுக வைக்கும்.
நான் கொடுத்த முதல் அறை பயங்கரமானது. எனது அறை மூலமாக அவனை மேலும் உசுப்பினேன். அவன் சுதாகரிப்பதற்குள் அடுத்த அறை. தொடர்ந்து பல அறைகள். அவன் நண்பர்கள் யாரும் என்னை நெருங்கவில்லை. சரவணன் திடீரென அவன் வயிற்றில் மிதிக்க, சுருண்டுவிழுந்தான்.
காக்க வேண்டியவர்கள், கடமையைச் செய்ய வேண்டியவர்கள் கைகளை விரிக்கும் போது பாதுகாப்பற்ற சமூகம் எதிர்ப்பதற்கும் அடிப்பதற்கும் எந்த வகையான தர்க்கங்களையும் நியாயங்களை கடைப்பிடிக்க வேண்டியதில்லை என உறுதியாக முடிவெடுத்தக் காலம் அது.
-தொடரும்