நான்காம் படிவம் வேறெந்த ஆண்டும் தராத பல புதிய அனுபவங்களைத் தந்த ஆண்டு. மனதின் பல கதவுகளைத் திறந்து விட்ட ஆண்டு. எனது கவிதை போக்கினை மாற்றியமைத்த ஆண்டு. வருட ஆரம்பத்திலேயே போட்டி விளையாட்டுகள் நடைப்பெறத் தொடங்கின. முதலில் சில வாரங்கள் பயிற்சிகளும் பின்னர் தீர்மானித்த ஒரு நாளில் போட்டி விளையாட்டும் நடைப்பெறும். இது போன்ற காலங்களில் ‘உருப்படாதவர்கள்’ என முத்திரைக்குத்தப்பட்ட மாணவர்களை (ஆண்களுக்கு மட்டுமே இந்த முத்திரை தேவை. பெண்களில் பெரும்பலோர் திடலில் களமிறங்கியிருப்பர்) ஆசிரியர்களும் தலைமை மாணவர்களும் தேடி அலைவர். திடலை போட்டி விளையாட்டுக்குத் தயார் படுத்தவும் ‘ரூமா சுக்கான்’ எனப்படும் அவரவர் குழுவின் இல்லத்தை அலங்காரப்படுத்தவும் இந்த உருப்படாதவர்கள் பயன்படுவார்கள். அந்த ஆண்டு எனக்கு என் குழுவின் இல்லத்தை அலங்கரிக்கும் பொறுப்பு.
வெட்டிக்கொடுக்கப்பட்ட சிறிய ரிப்பன்களை வரிசையாக ஒட்டவேண்டும். ஒட்ட வேண்டிய இடம் குழு இல்லத்தின் மேல் பகுதியானதால் ஒரு மேசை மேல் ஏறி நின்று என் பணியில் கண்ணாய் இருந்தேன். திடீரென ‘செலபன் டேப்’ (Sellotape) தீர்ந்துவிட எரிச்சலில் ‘செலபன் டேப்…செலபன் டேப்’ எனக் கத்தினேன். அடுத்த நிமிடம் ஒரு சிவந்த சிறிய கரம் தனது ஐந்து விரல்களிலும் கச்சிதமான அளவில் செலபன் டேப்பை ஒட்டியப்படி என்னை நோக்கி நீட்டியது. வேலை பரபரப்பில் அந்த விரல்களிலிருந்து ஒவ்வொரு செலபனாக எடுத்து இல்லத்தை அலங்கரித்து முடிக்க மும்முறமாய் இருந்தேன். இடையில் வேறு பகுதிக்கு ஒட்டும் போது மேசையை நகர்த்த வேண்டியிருந்தது. மெதுவாக கீழே குதித்தபோது அவள் எஞ்சிய செலபன்களை விரலில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தாள்.
என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். அவள் அழகி.
கடந்த ஆண்டு ஒரு பாலர் பள்ளியின் பரிசளிப்பு நிகழ்வில் நடனம் ஆடிய அவளை நிழல்படம் எடுத்தது நினைவுக்கு வந்தது. ‘ப்ளஷ்’ திறக்காமல் நிழல்படம் எடுத்ததால் அவள் ஒரு நிழலாக மட்டுமே அந்தப் படத்தில் இருந்தாள். ஆனால் அவள் நான் பயிலும் பள்ளியில் பயில்வது அந்த நிமிடம் வரை நான் அறியாதது. நேராக வந்து வகுப்பறையில் புகுந்ததோடு சாப்பிடுவதற்குக்கூட கெண்டீன் போகாத ரகம் அவள். ‘உங்கள நான் பாத்திருக்கேன். டான்ஸ் ஆடுனீங்க. படம் புடிச்சேன்’ என உளறினேன்.
அவள் என்னை ஒரு தரம் வியந்து பார்த்தாள். ‘உண்மையாவா…எங்க வீட்டுல என்னை யாரும் படம் பிடிக்கல. அந்தப் படம் கிடைக்குமா? பாத்துட்டு கொடுத்துடுறேன்,’ என்றாள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. ‘ஓ! ரொம்போ நல்லா படம் விழுந்திருக்கு,’ என்றேன். அவள் ஆவல் இன்னும் அதிகமானது. ‘அப்ப நாளைக்கே என்றாள்’. ‘சரி’ என்றேன்.
அதற்கு மேல் அவள் முன் நிற்க முடியவில்லை. உடல் மிகவும் பலவீனமாகிவிட்டதாகவும் கனமாகிப்போன மனம் உடலை பூமிக்குள் அமிழ்த்துவதாகவும் உணர்ந்தேன். வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாகப் படத்தைத் தேடி எடுத்தேன். ஒரு கறுத்த நிழல் மட்டும் அபினயத்தோடு இருந்தது. அன்று இரவு முழுவதும் அதையே பார்த்துக்கொண்டிருக்க மெல்ல கண்கள், உதடு, மூக்கு எனத் தெரிந்தது. என் கண்களுக்கு மட்டும்.
-தொடரும்