பகை எங்கிருந்து பிறக்கிறது என்பது எவ்வளவு ஆச்சரியமோ அதைவிட ஆச்சரியமானது பகையை மறப்பது. பகையை மறக்க அமைதியும் காத்திருப்பும் மட்டுமே தேவைப்படுகிறது. சில மாதங்களின் அமைதிக்குப் பிறகு நானும் சரவணனும் கை குலுக்கிக்கொண்டோம். கரங்களின் பிடி நட்பிற்கு ஆதரவாய் இருப்பதாக என்னைப்போல் அவனுக்கும் தோன்றியிருக்க வேண்டும். மெதுவாகப் புன்னகைத்தான். வயிற்றில் குத்தினான். நாங்கள் இணைந்ததைக் கண்டு கவலை அடைந்தவன் ‘அசோ’வாகத்தான் இருக்க முடியும்.
‘மகேந்திரன்’ என்பதுதான் அசோவின் உண்மையான பெயர். அவனைப் பார்த்தவுடன் பழைய நடிகர் அசோகன் போல இருந்ததால் ‘அசோ’ என செல்லமாகப் பெயரிட்டோம். அசோவை நாங்கள் முக்கியமான ஒரு செயலுக்குப் பயன்படுத்திக்கொள்வோம். அப்போது ரெஸ்லிங் உலகில் பரபரப்பாக இருந்த ரோக், ஆஸ்டின், திரிப்பல் எச் போன்றோரின் சண்டை நுணுக்கங்களை அவதாணித்து அதை பயிற்சி செய்துப்பார்க்க அசோவைத்தான் அழைப்போம். அசோ அழுதபடி வருவான். வரவில்லையென்றால் மறுநாள் பள்ளியில் அடிவிழும் என அவனுக்குத் தெரியும். அவனது தலையை கை இடுக்கு கால் இடுக்கு என பல வகையாக உள்ளே விட்டு நானும் சரவணனும் ஒரு ரெஸ்லிங் வீரனாக மாறியிருப்போம். எங்களின் கடைசி பயிற்சி ரிக்கிஷியினுடையது. ரிக்கிஷி வெற்றி பெரும் சமயம் தனது பிட்டத்தை எதிராளியின் முகத்தில் வைத்து தேய்ப்பான். தான் வாங்கிய எல்லா அடிகளை விடவும் ரிக்கிஷியின் அந்தச் செயல்தான் எதிராளிக்குக் சோர்வினைக் கொடுப்பவை. சரவணனும் நானும் மாறி மாறி ரிக்கிஷியாகி அசோவைக் கதர வைப்போம். இன்று ரெஸ்லிங் ஒரு அதியற்புத நாடகம் என உணர முடிந்தாலும் அதன் நாடகத்தன்மையில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. முதல் வாரம் முழுவதும் நானும் சரவணனும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியப் படியும் ஒருவரை ஒருவர் நிராகரித்த விதத்தையும் மாறி மாறி பேசிக்கொண்டோம். அது மனதுக்கு பெரும் தெம்பினைக் கொடுத்தது. ‘வேண்டுமென்றே செய்கிறான்’ என இருவரும் மனதிற்குள் குற்றம் சாட்டிய சம்பவங்களெல்லாம் இயல்பாகவும் எந்த வித உள்நோக்கமும் இல்லாமல் நடந்தவை என தெரியும்போது மனம் செய்யும் சூட்சுமமான வித்தை புரியத்தொடங்கியது. ஒன்று உடன் இல்லாதபோதும் அல்லது உணர முடியாதப் போதும், அந்த இல்லாத ஒன்று உருவாக்கும் கற்பனைகள் பாதகமானவை. கடவுள்போல. |
திறந்தே கிடக்கும் டைரி … 21
(Visited 56 times, 1 visits today)