வன்முறைகளும் திமிரும் நிரம்பிய மனதோடுதான் மீண்டும் நான்காம் படிவத்தில் காலடி எடுத்து வைக்க முடிந்தது. மீண்டும் நண்பர்கள் கூட்டம். ஆசிரியர்கள் நான்காம் படிவத்தை ‘ஹனிமூன் இயர்’ என்றனர். அரசாங்கத் தேர்வு இல்லாத படிவம் அது.மூன்றாம் படிவ சோதனையில் தமிழில் மட்டும் ‘ஏ’ எடுத்திருந்தேன். தமிழ் ஆசிரியை வாசுகிக்கு என் மீது நல்ல மதிப்பு இருந்தது. (இவர் நான்காம் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு மட்டும் தமிழ்ப்பாடம் எடுப்பவர்)எனது தீவிர பிரச்சாரத்தில் அவர் என்னை எழுத்தாளன் என அடையாளம் கண்டு கொண்டிருந்தார். அதே போல புதிதாக தலைமையாசிரியரும் மாற்றம் கண்டிருந்தார்.
தமிழ் தலைமையாசிரியர். அவர் பெயரும் வாசுகிதான். சுங்கை பட்டாணிகாரர் என விசாரித்து அறிந்து கொண்டோம். குள்ளமாக இருந்தார். அவரது கைகள் வழக்கமான நீளத்தில் இல்லாமல் இடுப்போடு முடிந்து போயிருந்தது. முற்றிலும் வெள்ளை நரை. ஒரு தமிழர், இடைநிலைப் பள்ளிக்குத் தலைமையாசிரியராக வந்ததும் எங்களுக்குப் பெருமை பிடிபடவில்லை. இனி பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தோம். அடுத்த இனத்தவர்களால் தொந்தரவு ஏற்படும்போது ஒரு அம்மாவிடம் முறையிடுவது போல முறையிட்டால் பிரச்சனை தீர்ந்தது என நம்பினோம்.
புதிய தலைமையாசிரியைப் பேசினார். அவர் உரையின் முடிவில் எல்லாப் பள்ளியிலும் தமிழ் மாணவர்கள்தான் பிரச்சனைக்குரியவர்கள் என்றும் இந்தப்பள்ளியிலும் அந்த நிலை இருந்தால் முற்றிலும் அதை துடைத்தொழிக்கப் போவதாகவும் உறுமினார்.
நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எங்களுக்கென்று யாரும் இல்லாதது போல உணர்ந்தோம். சுற்றிலும் எங்களை அகற்ற வேண்டிய குப்பைகளாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு சமூகத்தினர் மத்தியில் வன்முறையோடுதான் வாழவேண்டும் என அறிந்து கொண்டோம். ஒரு சமூகம் தனக்கான பாதுகாப்பை அதை வழங்க வேண்டியவர்களிடமிருந்து பெற முடியாதபோது அதுவே தனக்கான பாதுகாப்பு வேலிகளை அமைத்துக் கொள்ளும் ஒரு ‘தீ’ எங்கள் அனைவருக்கும் பற்றியது. அந்த உணர்வை இப்போது வார்த்தைகளால் சொல்லமுடிகிறது என்றாலும் அப்போது எங்களிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. அடுத்த இனத்தவனிடம் பயப்படாமல் வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும் இருந்தது.
-தொடரும்