அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாமா பீர் பாட்டில்கள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொறுப்பிலும் என்னைத் தவிர்த்தார். அதை அவர் தண்டனைக்கொடுப்பதாகக் கருதியிருக்கலாம். எனக்கோ அது பெரும் சுதந்திரம். அதன் பின்னர் காப்பி, டீ கலக்குவது ‘மீ கோரேங்’ பிரட்டுவது என எனது கவனத்தைத் திருப்பினேன். ‘மீ கோரிங்’கில் ருசி கூட்டுவதற்கான இரகசியங்களும், தேநீர் கலக்க வேண்டிய நுட்பமும் ஓரளவு புரியத்தொடங்கியது. சமைத்தல் என்பது மிக உன்னதப் பணியாக எனக்குத் தெரிந்தது. நான் செய்யும் ஒரு சமையலை யாரோ ஒருவன் நம்பி சாப்பிட்டுவிட்டு அதற்கு பணமும் தந்துவிட்டுப்போகும் போது ஏற்படும் பரவசம் எல்லாரும் போல எனக்கும் சில நாட்கள் மலர்ந்து பின் மறைந்து போனது.
மாமா என்னிடம் முன்பு போல் பேசுவதை தவிர்த்தார். அந்தச் சம்பவத்தில் என்னைக் காப்பாற்ற மாமா அவசரப்பட்டு அவர்களை அடித்து துரத்திவிட்டாலும் கடையைப் பொறுத்தவரையில் அது அவருக்கு நஷ்டக்கணக்கு. அவர்கள் கடன் வைக்காத பல மாத வாடிக்கையாளர்கள். மாமாவுக்கும் எனக்கும் மெல்லிய இடைவெளி விழுந்தது. அந்தக்கடையில் தேவையில்லாத ஒருவனாக நான் வலம் வரத் தொடங்கினேன். தேவையில்லாதவனாக ஓர் இடத்தில் இருக்கும் கொடுமை பிந்தைய நாட்களில் என்னை வாட்டியது. கடையில் நான் விரும்பும் வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். அதில் முக்கியமானது தேனீர் கலக்குவது.
தேனீர் கலக்குவது அதிலும் ‘தே தாரேக்’ கலக்குவது எனது முக்கிய பணியாக மாறியப்பின்தான் அந்த ஆயுதத்தை கண்டெடுத்தேன். தேனீர் கலக்குவது என் ஆயுதமானது. தூரத்தில் நின்று யாருக்கும் தெரியாமல் கல் எரியும் ஒரு கோழையின் ஆயுதம். தனியனாக நிற்கையில் மிரட்டப்படும் போது எனக்குக் கிடைத்த ஒரே ஒரு ஆயுதம்.
உணவகத்தில் வந்து ஒழுங்காக சாப்பிட்டுவிட்டு போனவர்கள் புனிதமாக வெளியேறினார்கள். தொடர்ந்து அதிகப் பிரசங்கித்தனமாகவும் அதட்டலான பேச்சு பேசுபவர்களுக்கும் தே தூள், சீனி, டின் பால் இவற்றோடு சுண்டுவிரல் நகத்தளவு எச்சிலையும் சேர்த்து கலக்கிக் கொடுத்தேன். (மிதக்கும் தே தாரேக் நுரையுடன் என் எச்சிலைக் குடித்து வளர்ந்த மனிதர்கள் இன்னும் லுனாஸில் உயிரோடுதான் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்). அது எனக்கு பெரும் மன அமைதியைக் கொடுத்தது. ‘டேய்…’ என மிரட்டலாக அழைத்தவனின் நாவில் என் எச்சில் ஏறி மிதித்து பலி தீர்ப்பது ஒவ்வொரு இரவும் உறக்கத்தைக் கொடுத்தது.
என் கையில் கிடைப்பதெல்லாம் ஆயுதமாகும் வித்தை நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆயுதம். அதில் ஆச்சரியம், நான் ஏந்தி நிர்ப்பது ஆயுதம் என்பதை யாரும் அறியவில்லை. இப்போதும்.
-தொடரும்