பீர் பாட்டில்களின் எண்ணிக்கைக் குறைகிறது எனத் தெரிந்தவுடன் மாமா உஷாராகியிருந்தார்.
(மாமா அம்மாவின் தம்பி. அதற்கு முன் சபாவில் போலிஸ் அதிகாரியாக வேலை செய்தவர். தமிழர்களைக் கேவலாமாக பேசினார் என தனக்கு மேல் உள்ள அதிகாரியை துவசம் செய்துவிட்டு வேலையை ராஜினாமா செய்திருந்தார். அம்மா என்னையும் மாமாவையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசுவதுண்டு. கடந்த ஆண்டு மாமா இனிப்பு நீர் முற்றி இறந்தார்) அவருக்கு உணவகத்தில் பணிபுரிபவர்களின் மீது சந்தேகம் எழுந்தது. அத்தனை நாட்களும் அந்த உணவகத்தில் பீர் பாட்டில்களுக்குப் பொறுப்பாய் இருந்த ஒரு பணியாளரிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. மங்குகளைக் கழுவிக்கொண்டே பீர் பாட்டில்களை அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்து செல்கிற கண நேரத்தில் ஒன்றிரண்டு பீர் பாட்டில்கள் ஊழியர்களால் கடத்தப்படுகிற அபாயம் இருந்தது. நான் பீர் பாட்டில்களின் காவலன் ஆனேன்.
சிறிது நாட்களில் பீர் குடிக்க வருபவர்களுக்கு பாட்டில்கள் எடுத்துத் தருவது முதல் அதை திறந்து ஊற்றுவது வரையிலான வேலைகள் என் தலையில் விடிந்தன. அப்போது எனக்கு பீர் பாட்டில்களின் பெயர்கள் கூட அறிமுகம் இல்லை. இந்த லட்சணத்தில் வருபவர்கள் அவைகளுக்கு புனைப்பெயரெல்லாம் வேறு வைத்திருந்தார்கள். அவர்கள் பீர் கேட்கும் விதமும் என்னிடம் பேசும் விதமும் எரிச்சலை மூட்டும். அப்போது நான் முன் புறம் உள்ள முடியை மட்டும் முகம் மறைக்கும் அளவு நீளமாகவும் பின் மண்டையை ‘பொக்ஸ் கட்டிங்’ எனும் ஸ்டைலிலும் வெட்டி என் அழகை பேணி வந்தேன். குனியும் போதும் நிமிரும் போதும் முன்புற முடி பொத்தென சரிந்து காற்றில் பறந்து அழகு காட்டும். அதில் கை வைக்காமல் முகத்தை ஒரு சிலுப்பு சிலுப்பினால் மீண்டும் பத்திரமாக மண்டைக்கு மேல் சென்று அமர்ந்து கொள்ளும்.
இப்படி முடி சரியும் போதும் பறக்கும் போதும் வழக்கமாக உணவகத்திற்கு பீர் குடிக்க வரும் ஒரு கூட்டம் கூச்சலிடும். அடுத்த முறை வரும்போது இது இருக்கக்கூடாது என முடியைக் காட்டி கட்டளையிடும். நான் அவர்களிடம் எதிர்த்து ஒன்றும் பேசியதில்லை. அது அவர்களின் பகுதி. மேலும் சராசரியான இரண்டு பேரை சமாளிக்கவே நாய் பாடு பட வேண்டும்; அவர்கள் தடியர்கள்.நிச்சயம் என்னைத் துவைத்து காயப் போட்டுவிடுவார்கள். தினம் இரவு ஏழு மணியென்பது எனக்கு நரகமாகவே இருந்தது. எப்போது மணி பதினொன்று ஆகிறதென பார்த்துக்கொண்டே இருப்பேன். பதினொன்றானதும் எனக்குத் தூக்கம் வந்துவிடும். போட்டதை போட்டபடி போட்டுவிட்டு திரும்பிபார்க்காமல் கடையின் பரபரப்பினூடே மேலே ஓடிவிடுவேன். அங்கு எனக்காக வைரமுத்துவும் மேத்தாவும் காத்திருப்பார்கள்.
அன்று பிரச்சனை வித்தியாசமானதாக தொடங்கியது. என்னைக் கிண்டல் செய்யும் கூட்டத்தில் ஒருவன் ‘ஐஸ்ல வச்ச கிளாஸ எடுத்துவா’ என்றான். நான் ஒரு கிளாஸில் ஐஸ் கட்டிகளைப்போட்டு கொண்டு வந்து வைத்தேன். கேட்டவன் எகிறினான். ‘ஏய் ஐஸ் கிளாஸ்டா’ என்றான். எனக்கு அவன் கேட்டது புரியாததால் விழித்தேன். சட்டென தண்ணீர் கலக்குபவர் குளிர்சாதனப் பெட்டியில் கிடந்து சில்லிட்டிருந்த கிளாஸை எடுத்து வந்து அவர்கள் அருகில் வைத்து என்னை அந்த இடத்திலிருந்து நகர சொன்னார். அதோடு அவர்கள் கேலி ஆரம்பமானது. இப்போது அவர்கள் சொன்ன வார்த்தையெல்லாம் நினைவில் இல்லாவிட்டாலும் அவர்கள் மேல் கோபப்பட அவர்களின் வார்த்தைகளுக்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. சாதாரண அவர்களின் சிரிப்பும் கோபத்தை உந்தக்கூடியது.
ஒரு முறை ரஜினிகாந்தை நினைத்துக்கொண்டேன். ‘என்னடா’ என்றேன். அதில் ஒருவன் மெதுவாக எழுந்து ‘ஏய் என்னா பெரச்சனையா?’ என்றான். என் முகத்துக்கு நேராக அவன் மார்பு சில வெட்டுகாயங்களோடு நின்றது. உடனே ரஜினிகாந்த் காணாமல் போனார். அதன் பின் எவ்வளவு முயன்றும் ரஜினிகாந்த் வரவே இல்லை.
-தொடரும்